You are hereஈற்றிலை - 01-10-2012

ஈற்றிலை - 01-10-2012


By panbudan - Posted on 10 January 2012

தேதி: : 
Tuesday, January 10th, 2012

 

தருமன் நல்லவரா ? கெட்டவரா ?

தருமரும் சராசரி மனிதர். அவரிடம் நல்ல குணம் மற்றவர்களை விடக் கூட இருந்தது. குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடினால் தருமர் மற்றவர்களைக் காட்டிலும் மேலே நிற்கிறார்.

தருமனை விதுரன் வந்து சூதுக்கு அழைக்கிறார். தருமர் பேசும் அறங்கள் பாருங்க


அரசச் சிறப்பு, பராக்கிரமம், பலம், சேனை, அழகு, வெற்றி , குடி பிறப்பின் மேன்மை, மானம், செல்வம் பெருமை, வம்சம், இன்பம், ஓளி, நற்குணம், ஒழுக்கம், புகழ், கல்வி இது எல்லாமே அழிஞ்சு போய்டுமே சித்தப்பா. இப்படி வஞ்சனையா சூதாடக் கூப்புடறானே அந்த துரியோதனன். நம் குருகுலத்துக்குத் தகுமா.? மனக்கவலையில் தானே மாட்டிக்கொள்ளும் வகை அல்லவா இந்தச் சூதாட்டம். இப்படிக் கள்ளச் சூது ஆடறதுக்கு மொடாக் கள்ளை அப்படியே குடிச்சுட்டலாமே? பெரும் ஞானிகளும் முனிவர்களும், ரிஷிகளும் மாபதகச் செயல் என்று இந்தை சூதை ஒதுக்கி வைத்திருக்கிறார்களே. அப்படிப்பட்ட சூதுக்கு என்னை ஏன் இந்தச் சகுனி அழைக்கிறான். அப்படின்னு எல்லாம் பேசறார்.


பாஞ்சாலி சபதத்துல

.........
எண்ணங் கலங்கிச் சிலசொல் உரைப்பான்;
'மன்று புனைந்தது கேட்டுமிச் சூதின்
வார்த்தையைக் கேட்டுமிங் கென்றன் மனத்தே
சென்று வருத்தம் உளைகின்ற தையா!
சிந்தையில் ஐயம் விளைகின்ற தையா!
நன்று நமக்கு நினைப்பவ னல்லன்;
நம்ப லரிது சுயோதனன் றன்னை. 126

'கொல்லக் கருதிச் சுயோதனன் முன்பு
சூத்திர மான சதிபல செய்தான்!
சொல்லப் படாதவ னாலெமக் கான
துன்ப மனைத்தையும் நீ அறி யாயோ?
வெல்லக் கடவர் எவரென்ற போதும்
வேந்தர்கள் சூதை விரும்பிட லாமோ?
தொல்லைப் படுமென் மனந்தெளி வெய்தச்
சொல்லுதி நீஒரு சூழ்ச்சிஇங்' கென்றான். 127

 

அந்த துரியன் இப்படிப் பண்றானே, எங்களுக்கு நல்லது பண்றவன் இல்லை அந்த சுயோதனன். ஏற்கனவே எங்களைக் கொல்ல திட்டம் போட்டவன். அவனால நாங்க பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்ல ஐயா... வேந்தர்கள் சூதை நாடிடலாமா ? அது தவறில்லையா?

யாரு சொல்றது இதெல்லாம் ? பின்னாடி சூதுக்கு ஒத்துக்கிட்ட அதே தருமன் தான். விதுரன் சொல்றாரு, " தருமா எத்தனையோ நீதிய எங்கண்ணன் எடுத்து சொன்னான். அந்த புத்தி கெட்ட துரியோதனனாவது கேக்கறதாவது. என்ன என்னப்பா செய்யச் சொல்ற. நான் வெறும் அம்பு. தூதுவன். இதுல உனக்கு எது நல்லதுன்னு படுதோ அதைச் செய்" யுன்னு சொல்லிடறார்.

நாம ஒண்ணு புரிஞ்சுக்கனும். தருமனுக்கு எதுவுமே முக்கியம் இல்லை. தாயோ தந்தையோ அண்ணன் தம்பி... யாவையும் விட தருமமே முக்கியம்.


'தந்தையும் வரப்பணிந் தான்;-சிறு
தந்தையும் தூதுவந் ததைஉரைத் தான்,
சிந்தை யன்றினி இல்லை'-எது
சேரினும் நலமெனத் தெளிந்து விட்டேன்,
முந்தையச் சிலைரா மன்-செய்த
முடிவினை நம்மவர் மறப்பது வோ?
நொந்தது செயமாட் டோம்;-பழ
நூலினுக் கிணங்கிய நெறிசெல் வோம். 131


இதுவரைக்கும் பேசிய வீரப் பேச்சு சட்டுன்னு மாறிடுச்சு. பெரியப்பா வர சொல்றார். சித்தப்பா வந்துக் கூப்புடறார். இனி நான் வரமாட்டேன் சொல்ல முடியுமா? ஒரே அந்தர்பல்ட்டி. சரி பீமா உன் கருத்து என்னன்னு கேட்க பீமன்
உர்ர் உர்ருன்னு. அவனுக்கும் துரியோதனனுக்கும் ஏழாம் பொருத்தமில்லையா ? சரியா திட்டறான். வளரும் பகையை சூது கொண்டு அல்ல, முளையிலேயே போரிட்டு அழிக்கனும். அண்ணா உனக்கு நான் சொல்ல வேண்டுமா. அப்படினு பீமன் பேச தருமன் " பீமா என்ன பேச்சு பேசற நீ? முன்னாடி இராமன்னு ஒருத்தன் இருந்தான் தெரியுமா? அவன் என்ன செஞ்சான் தெரியுமா? அப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டா அதை மறுத்து பேச மாட்டான். நீ என்னடான்னா பெரியப்பா சொல்லியனுப்ப சித்தப்பா வந்து கூப்ட அவங்க ரெண்டு பேரையும் மதிக்க மாட்டேங்கிறே " அப்படின்னு ஒரேபோடு. அதுக்கு மேல பீமனாலும் பேச முடியல.தருமர் எல்லார் கிட்டயும் ஒபினியன் கேட்டார் அர்சுனன், நகுலன் தங்களுக்கு விருப்பமில்லை. ஆனால் அண்ணன் சொல்லுக்கு நாங்கள் பணிவதாகச் சொல்கிறார்கள்.

சகாதேவனிடம் கேட்கிறார்.

" அண்ணா.. யார் வந்து அழைத்தது "
" பெரியப்பா சொல்லி நம் சித்தப்பா அழைத்திருக்கிறார் "
" அண்ணா தவறாக என்ன வேண்டாம். யார் வந்து அழைத்தது "
" நம் பெரியப்பா சொல்லி சித்தப்பா தான் தேரில் வந்தார். என்ன சகாதேவா கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்கிறாய் "
" மன்னியுங்கள் அண்ணா, அழைத்தது பெரியப்பாவோ தேரில் ஏறி வந்தது சித்தப்பாவோ இல்லை"
" பின் யார் தான் அழைத்தது ?"
சகாதேவன் சொல்கிறான்.

" விதி முன்னின்று செலுத்த , அது சித்தப்பனின் பக்கத்தில் உட்கார்ந்து இங்கு வந்திருக்கிறது. விதி வெளியே நமக்காக காத்திருக்கிறது "

எல்லார் சொன்னதையும் கேட்டு விட்டு தருமர் மறுபடி சொல்றார் பாருங்க

" நியாய வழியில் சென்றால் நமக்கு என்றுமே புகழ் தான். நம் மீது மாறாத அன்பு கொண்டிருக்கும்(??) பெரியப்பா சொல்லி அழைத்திருக்கும் போது நாம் போகாமலிருந்தால் நமக்கு மிகப் பெரிய பழி வந்து சேரும். ஆகவே நாம்
போகிறோம் "

அண்ணன் கட்டளையை மீறி யாருக்குமே பழக்கமில்லையே. அவ்ளோ தான். எல்லாரும் பொட்டிப் படுக்கைக் கட்டி தயாராய்ட்டாங்க.

எடுத்துரைப்ப,இளைஞர்களுந் தங்கை கூப்பிக்
'முன்றினிலே ஏற்றிவைத்த விளக்கைப் போலக்
குவலயத்திற் கறங்காட்டத் தோன்றி னாய் நீ!
வென்றிபெறுந் திருவடியாய்!நினது சொல்லை
மீறிஒரு செயலுண்டோ?ஆண்டான் ஆணை
யன்றிஅடி யார்தமக்குக் கடன்வே றுண்டோ?
ஐயனே!பாண்டவர்தம் ஆவி நீயே! 143

துன்பமுரும் எமக்கென்றே எண்ணி நின்வாய்ச்
சொல்லைமறுத் துரைத்தோமோ?நின்பா லுள்ள
அன்புமிகையா லன்றோ திருவுளத்தின்
ஆக்கினையை எதிர்த்துரைத்தோம் அறிவில் லாமல்
மன்பதையின் உளச்செயல்கள் தெளியக் காணும்
மன்னவனே!மற்றதுநீ அறியா தொன்றோ?
வன்புமொழி பொறுத்தருள்வாய் வாழி,நின்சொல்
வழிச்செல்வோம்,''எனக்கூறி வணங்கிச் சென்றார். 144


உலகத்துக்கு வெளிச்சம் காட்ட தோன்றிய உத்தமனல்லவா நீ அண்ணே. பாண்டவர்களின் ஆவி அல்லவா. உங்களை மீறி ஏதேனும் செய்வோமா நாங்கள். உங்களுக்கு துன்பமேற்படும் வகையில் உங்களை மறுத்துப் பேசினோம் என்று நினைத்துக்கொள்ளாதே அண்ணே. உம் அடிமை நாங்கள். இங்கயே சாசனம் எழுதிக் குடுத்துட்டாங்க. உன் அடிமை நாங்கள் நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ அப்படின்னு. உன்மேலுள்ள அன்பினால் சொன்னோம். மற்ற படி உன்னை எதிர்த்து பேசியது எங்களின் அறிவின்மையே. நீ அறியாத தர்மமா. எங்கள் சொல் பொறுத்து நீ வழி நடத்து. அவ்வழி நாங்கள் நடப்போம்னு எல்லாரும் அவர் பின்னாடி அப்படின்னு கிளம்பி நின்னுட்டாங்க.

இங்க ஏன் தருமன் ஒத்துக் கொண்டார் ? தந்தை அழைப்பை மகன் மறுக்கக் கூடாது என்பது மட்டுமல்ல. இயல்பிலேயே தருமனுக்கு சூதில் நாட்டம் உண்டு. மேலும் அரச தர்மப் படி சூதுப் போரோ அல்லது ஏதேனும் பந்தயமோ, அழைப்பை மறுத்தல் என்பது அவமானப் படுத்தலுக்குச் சமம். அல்லது தோல்வியை ஒப்புதலுக்குச் சமம். இதில் தருமன் தவறேதும் இருக்கிறதா ? இருக்கலாம் சூதில் உண்டான நாட்டம் தவறு தானே ?

 

தருமருக்கு சூதில் இயல்பிலேயே நாட்டம் உண்டு என்பது எதை வைத்து சொல்லப்படுகிறது? அவர் முன்பு சூதாடியிருக்கிறாரா? இல்லை சூது பிரியம் என சொல்லியிருக்கிறாரா? இது வியாசர் எழுதியதில் உண்டா அல்லது வில்லி எழுதியதிலா? தருமர் சூதுக்கு போவது என்பதற்கு இன்னோர் கதை சொல்லுவார்கள். வியாசர் தருமனிடம் நீ உன்னுடைய சகோதரர்களோடு சண்டையிடாது அதனால் குலம் அழியும் என்று எச்சரித்து அனுப்பினாராம். அதன் படி என்ன வந்தாலும் சண்டை பிடிக்ககூடாது என்றிருந்த தருமன் இதற்கு ஒத்துக்கொள்ள அதனாலே குலம் அழிந்தது.

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <p> <span> <img> <div> <pp_img> <pp_media> <h2> <h3> <h4> <h5> <h6> <br> <blockquote> <table> <tbody> <tr> <th> <td>
  • Insert images and media with <pp_img> or <pp_media>. See formatting options for syntax.

More information about formatting options

CAPTCHA
சிரமத்திற்கு மன்னியுங்கள் நண்பர்களே! சில வாரங்களாக ஸ்பேம் பின்னூட்டங்கள் அதிகரிப்பதால் இந்த சோதனையை சேர்த்துள்ளோம்.
Image CAPTCHA
Enter the characters shown in the image.