நாள் – 1

விடியக்காலை 3 மணி. பெட்டுல புரண்டுட்டு இருந்தாரு வாட்டர் லெமன். (என்னன்னு கேட்டா எழவு அதுவும் ஏதாச்சும் படத்துல வர சீனோட ரீக்கிரியேஷன்னு சொன்னாலும் சொல்லுவாப்ல.) அந்த நேரமா பாத்து இந்த FJ பய வந்து “அண்ணே கொஞ்சம் ஒருக்களிச்சு படுண்ணே…குறட்டை சத்தம் கூரைய பிய்க்குது”ன்னு சொல்லிட்டுப் போனான். எங்கயோ ஆரம்பிச்சு வாட்டர் லெமன் டாக்டரா? இல்லையா?ன்னு ஒரு விவாதத்துக்கு போயிட்டானுங்க. (இதென்னடா 3.50க்கு டாக்டர்களுக்கு வந்த சோதனை) சும்மா இல்லாம கெமிய பிடிச்சு கொதறுனாப்ல வாட்டர் லெமன். அப்டியே கட் பண்ணா கக்கூஸ் ஏரியாவுல

கெமி: ஆமா கக்கா போனா எப்டி கழுவுறது?

நந்தினி: அது ரொம்ப ஈசி….கப்ப எடுத்து வாளிக்குள்ள விட்டு மோந்து, அப்டியே அத…

கெமி: அட கெரகமே…தண்ணி இல்லாம எப்டி கழுவுவ?

நந்தினி: நாந்தான் போகவே இல்லயே

கெமி: அட போங்கடி….

அது ஓண்ணுமில்ல, நம்ம பிக்கி தண்ணிய ரேஷன்ல குடுக்குறாரு….அதான் மோஷன் போறதுல இவனுங்களுக்கு பிரச்சனையா இருக்கு.

வெளிய லான் ஏரியால நம்ம ரட்சகன் ப்ரவீன் காந்தி “ஆனாலும் கடவுள் படைப்புல பெண்கள் ரொம்பத்தான் பொறாமையும், பேராசையும் பிடிச்ச ஆளுங்க”ன்னு சலம்ப…நந்தினி நர்த்தனம் பிடிச்சது…ரட்சகனுக்கு அனத்தம் பிடிச்சது. நந்தினி “அதென்ன பொண்ணுங்க மட்டும்”ன்னு ஒரு சைடு கிக்கடிக்க…”அதாவது பெண்கள் தான் ஆண்களின் உந்து சக்தி…பெண்கள் மேல எனக்கு ரொம்பவே பக்தி, அதனாலதான் மொதப் படத்துல பவர் பவர்ன்னு பெண்களுக்கு பாட்டு போட்டேன்”ன்னு பட்டுன்னு காதப் பிடிச்சுக்கிட்டு உக்கி போட்டாப்ல ரட்சகன். இதையெல்லாம் தூரமா நின்னு பாத்துட்டு இருந்த காரக்குழம்பு கனி “பின்னாடி கழுவ தண்ணி இல்லாதப்பயே உங்களுக்கு இவ்வளவு வியாக்யான பேச்சு வருதுல்ல”ன்னு மனசுல நெனச்சுட்டு தண்ணி பக்கெட்டோட உள்ள போச்சு.

இங்க உள்ள லிவிங்க் ஏரியால நம்ம வாட்டர் லெமன் தூக்கம் கலஞ்சு எந்திரிச்சு வந்து “இந்தாப்பா ப்ரவீனு, என்னய குறட்டை விடுறேன்னு சொல்லிட்டு நீ என்னடான்னா குறட்டைல குச்சி குச்சி ராக்கம்மா பாட்டயே வாசிக்கிறியே?”ன்னு விளையாட்டா சொல்ல. “நானும் கூட குறட்டை விடலாம் ஆனா விதை நீ போட்டது….ஏன்னா குறட்டைய மொத ஆரம்பிச்சது நீ”ன்னு ப்ரவீனு விரல நீட்ட… வாட்டர் லெமன் ஹீட்டர் லெமனா மாறி கண்ட மேணிக்கு கத்த பதிலுக்கு ப்ரவீனு மேணி கண்டக்கு கத்த, கத்துறதுக்கு ஆள் பத்தலன்னு கெமியும் சேந்துக்குச்சு. கடைசில இந்த வாட்டர் லெமன் டாக்டரா, ஆக்டரா இல்ல குறட்ட விடுற ட்ராக்டரான்னு ஒரு முடிவுக்கே வர முடியாம முழிச்சுட்டு இருந்தானுங்க.

விடிஞ்சு வெளிச்சம் வந்ததும் “எங்க ஏரியா உள்ளா வராத”ன்னு மார்னிங் சாங்க், வார்னிங் சாங்கா ஒலிக்க எல்லாரும் சலங்கை ஒலி கமல் மாதிரி கால உதறிட்டு ஆடுனானுங்க. ஆனாலும் இந்த அலப்பறையில எந்த அல்லலும் இல்லாம நம்ம கலையரசன் தூங்குனான். பின்ன மெல்ல எந்திரிச்சு வெளிய வந்தான். சூன்யம் வைக்குறவன்னு சொன்னானுங்க…ஆனா ஆளே சூன்ய பொம்மை மாதிரிதான் இருக்கான். என்ன பண்ண காத்திருக்கானோ!

ஸ்டோர் ரூம் தொறந்துச்சு எல்லாரும் ஓடிப்போயி சிப்ஸ் பாக்கெட்ட அள்ளிப் போட்டுட்டு வந்தானுங்க. வெளிய சபரி யோகா பண்றேன்னு கைய தூக்கி கம்பிய பிடிச்சு கீழ இழுக்குற மாதிரி ஏதோ வித்யாசமா பண்ண, அந்தப்பக்கமா போன FJ, சபரிக்கு முன்னாடி சப்பணங்கால் போட்டு உக்காந்து பிட்டு பட போஸ்டர பாக்குறா மாதிரி பாத்துட்டு இருந்தான். கெமியும் சபரிய இமிட்டேட் பண்ணிட்டு இருந்தா.

அப்றம் பிக்பாஸ் எல்லாத்தையும் லிவிங்க் ஏரியாவுக்கு வர சொன்னாப்ல. தண்ணி பிரச்சனைய கவனிக்க ஒரு சூப்பர்வைசரையும், அவனுக்கு ஒரு ஹெல்ப்பரையும் செலெக்ட் பண்ணா சொன்னாரு. இதுல பாத்தீங்கன்னா வீட்ல உள்ள ஆளுங்கள Big Boss super deluxe, Bog Boss நார்மல் housemates ன்னு லாட்ஜ் ஓனர் மாதிரி பிரிச்சு வச்சுட்டானுங்க. Super deluxe ல இருந்து சூப்பர்வைஸர், Normal House-ல இருந்து ஹெல்ப்பர். இவனுங்களுக்கு வேலை என்னன்னா, சைரன் விளக்கு எரியும் போது 10 செக்கண்டுக்குள்ள தண்ணி டாங்கிய கொண்டு போயி தண்ணி பிடிக்கனும். சரி யார செலெக்ட் பண்ணலாம்னு பேசிட்டு இருந்தப்போ

ரட்சகன்: “இதுல லேடிஸ் வேணாம்னு நெனைக்கிறேன்”

 சுபிக்ஷா: “அதென்ன பெண்கள் இதெல்லாம் செய்ய மாட்டாங்களா இல்ல செய்யக்கூடாதா?

ரட்சகன்: அதில்லம்மா வெயிட்டு ஜாஸ்தியா இருக்கும்

சுபிக்ஷா: அத நாங்க முடிவு பண்ணிக்கிறோம்

(பலூன் அக்காவோட கலந்தாலோசிக்கிறாங்க)

ரட்சகன்: என்னம்மா முடிவு பண்ணியாச்சா? யாரு வறீங்க?

சுபிக்ஷா: ம்ம்ம்….நீங்களே பண்ணுங்க…லேடிஸ் வேணாம், அதான் எங்க முடிவு

ரட்சகன்: வாழ்க்க நாடகமா….

கடைசியா கமருதீன் சூப்பர்வைஸர், சபரி ஹெல்ப்பர்.

அங்கிட்டு பாத்ரூம்ல மாவுசட்டிக்குள்ள விழுந்த தோசைக்கரண்டி மாதிரி உடம்பெல்லாம் என்னத்தையோ பூசிக்கிட்டு வாட்டர் லெமன் நின்னு மூஞ்சிய முக்கி எதயோ பண்ண சூன்ய பொம்ம கலையரசன் அந்தாளுக்கு மைக்கு பிடிச்சுட்டு நின்னான். (கருமத்த)

ஒரு சில ஆளுங்க வாட்டர் லெமன பத்தி பொரணி பேசிட்டு இருந்தானுங்க. இடையில கர்ணன் பாட்டுக்கு சிவாஜி மாதிரி பெர்பார்ம் பண்ணி இன்னுமா நீங்க பிக்பாஸ் பக்குறீங்கன்னு இன் டைரக்டா கேட்டாரு நம்ம வாட்டர் லெமன் ஸ்டார். கானா வினோத்து “ சிவாஜி இருந்திருந்தா செருப்பால அடிச்சிருப்பாரு”ன்னு ஒரு unparliamentary வார்த்தைய விட்டான்.

இதுக்கிடையில குடிக்கிற தண்ணி பாட்டில்கள பிக்பாஸ் அனுப்பி விட்டாப்ல. அப்பப்போ ஸ்டோர் ரூம் கதவுல டக்கு டக்குன்னு கேக்குமாம். அப்போ டக்குன்னு உள்ள போயி தண்ணி பாட்டில எடுக்கனுமாம். இல்லன்னா தண்ணி பாட்டில் கிடைக்காதாம். என்னங்கடா டேய்!

முக்கியமான கட்டம். நாமினேஷன். ஆனா super deluxe ஆளுங்கள்ள 50% ஆளுங்க மட்டும் நாமினேஷனுக்கு போனா போதும். சோ அங்க இருந்து ரம்யா, துஷார், சுபிக்ஷா இந்த 3 பேரும் நாமினேஷன்ல இல்ல. ரட்சகன், கானா வினோத்து, பலூன் அக்கா, கமருதீன் இவங்க நாமினேஷன்ல கலந்துக்கனும்.

ஆளாளுக்கு உள்ளா போயி நாமினேட் பண்னதுல வியானா, ஆதிரை, அப்சரா, ரட்சகன், ப்ரவீன், வாட்டர் லெமன் & சூன்ய பொம்ம இவனுங்க இந்த வார நாமிநேஷன்ல இருக்கானுங்க.

அப்றம், இந்த Super Deluxe ஆளுங்க ஏறக்குறைய ஹயாத் ஹோட்டல்ல தங்க வந்த ஆளு மாதிரி இருக்கலாமாம். அதாவது அவனுங்களுக்கு மார்னிங் சாங்க் இல்ல, அவனுங்க வேலை எதுவும் செய்ய தேவையில்ல, கெத்து காட்ட தடையில்ல, ரட்சகனுக்கு அறிவில்ல, பிக்பாஸ் வீட்டுல கொசு இல்லன்னு ஏகப்பட்ட இல்ல. ஆனா ஹயாத் ஹோட்டல் ஹவுஸ் கீப்பிங்க் மாதிரி Normal housemates-க்கு எல்லா வேலையும் இருக்கு. Super Deluxe ஆளுங்கள அலுங்காம குலுங்காம பாத்துக்குறதுதான் இவனுங்க வேல. ஆறுதலா ஓண்ணு, கேப்டன்சி பந்தயத்துல இவனுங்க மட்டுந்தான் கலந்துக்க முடியும். ஆமா…பெரிய ஜனாதிபதி தேர்தல்!

அப்றம், இருக்குற நேரத்த ஓட்ட ஒரு நாள் கூத்துன்னு ஒரு டாஸ்க்க சொல்லி இந்த வீட்ல ஒரு நாளைக்கு மேல தாங்க முடியாத ஆளு யாருன்னு ஸ்டிக்கர் ஒட்டனுமாம், அதும் ஒரு ஆளுக்கு 3 ஸ்டிக்கர் தான் ஒட்டனுமாம். வாடர் லெமன், வியானா, துஷார், சூன்ய பொம்ம, ரட்சகன் இவனுங்க அந்த மானகெட்ட ஸ்டிக்கர மெடலா வாங்கிக்கிட்டானுங்க. இதோட மொத நாள் கூத்து முடிஞ்சது. நாளைக்கு பாக்கலாம்.

Series Navigationநாள் – 2 >>

Author

Related posts

நாள்: 20

நாள்: 19

வரலாற்றில் பொருளாதாரம்: – 8