ப்ரிட்டிஷ் அரசவம்சம் உலகின் இரண்டாவது தொன்மையான ராஜவம்சம் ஆகும். உலகெங்கும் உடல்பருமன் பிரச்சனை பெரிதாகிக்கொன்டு இருக்க, ப்ரிட்டிஷ் ராஜவம்சத்தின் தொல்மரபுகள் அவர்களை நோய், நொடி அண்டவிடாமல் காக்கிறது.
இயற்கையான உணவுப் பழக்கம்
ராஜவம்சத்துக்கு ப்ரிட்டன் முழுக்க எஸ்டேட்டுகள் உண்டு. மன்னர் சார்லஸுக்கு அரிய பன்றிவகைகள் மேல் ஆர்வம் அதிகம். எங்கேயும் கிடைக்காத ஹெரிடேஜ் ப்ரீட் பன்றிகளை ஃப்ரீ ரேஞ்ச் ஆக தன் எஸ்டேட்டில் வளர்த்து வருகிறார். கோழிகளும் ஃப்ரீ ரேஞ்ச் ஆக அங்கே வளர்கிறது. எந்த உரமும், பூச்சிக்கொல்லியும் போட எஸ்டேட்டில் தடை உள்ளது. முழுக்க இயற்கை உரம், ஆர்கானிக் முறையில் அங்கே வளரும் காய்கறிகளும், பன்றி இறைச்சியும், முட்டைகளும் தான் ராஜவம்சத்தின் உணவு.
சார்லஸ் வளர்த்து வரும் கரும்பன்றி வகையின் பெயர் டேம்வொர்த் (Tamworth). முழுக்க கருப்பாக இருக்கும் ஒரே ப்ரிட்டிஷ் பன்றி இதுதான். அழிந்துவிட்ட காட்டுப்பன்றி இனத்தின் வம்சாவளி. கருப்பாக, குண்டாக இருக்கும் இதன் இறைச்சி அதன் கொழுப்பு காரணமாக பொதுமக்களால் தவிர்க்கப்பட, அதில் இருந்து கிடைக்கும் பேகன் மற்றும் ஹாமை சார்லஸ் விரும்பி சாப்பிடுவார்.
பாரம்பரிய உணவு விதிகள்
அரச வம்சம் இன்று உண்ணும் ரெசிபிகள் எல்லாம் அவர்கள் எள்ளுப்பாட்டி விக்டோரியா காலத்தவை. எத்தனை மணிக்கு சாப்பிடவேண்டும், மெனுவில் என்ன இருக்கலாம் என்பது எல்லாமே அந்த தொல்ரெசிபிகளில் இருந்துதான் தீர்மானம் ஆகும். ஒரு நாளைக்கு ஐந்து வேளை அரசவம்சத்துக்கு உணவளிக்கபடுகிறது. ஆனால் எல்லாமே மிக சிறிய சைஸில் உள்ள உணவுகள். தட்டில் சிறிய அளவுகளில் வைக்கப்படும் உணவுகளைத் தவிர எக்ஸ்ட்ராவாக அவர்கள் கேட்கமாட்டார்கள்.
பூண்டும், வெங்காயமும் அரசவம்சத்தவர் சாப்பிடக்கூடாது. காரணம் உலகத் தலைவர்களைச் சந்திக்கையில் ராணியிடம் இருந்து பூண்டு, வெங்காய வாசம் வரக்கூடாது என்பதால்தான். ராஜவம்சத்துக்கு வரும் மருமகள்கள் வெங்காயம் சேர்க்கக்கூடாது என்பதால் முதலில் திண்டாடிவிடுவார்கள். அவர்களுக்கு மட்டும் சிறிய அளவுகளில் வெங்காயம் எப்போதாவது சேர்க்கப்படும்.
விருந்துகள் மற்றும் பிடித்த உணவுகள்
விருந்தினர்கள் இல்லாத தனிமையில் ராணி இரவு உணவை டிவி முன் அமர்ந்து, சோபாவில் அமர்ந்தபடி தான் உண்பார். அவருக்கு பிஷ் அன்ட் சிப்ஸ் (fish and chips) விருப்ப உணவு. சந்தையில் அவர்களுக்கென்று மீன்வாங்க தனி பணியாளர் உண்டு. லண்டன் மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் ஃப்ரெஷ் ஆக வந்ததும் அவருக்குத் தகவல் வரும். முன்னுரிமை அவருக்குத்தான். இருப்பதிலேயே சிறந்த மீன்களாக வாங்கி வருவார். மீனின் தோலை அகற்றி, முட்கள் ஒன்று கூட இல்லாமல் பின் ஊசியால் லாவகமாக அகற்றி, மீனை பிரெட் கிரம்ப்ஸில் தோய்த்து பொறிப்பார்கள். அத்துடன் எஸ்டேட்டில் விளைந்த ஸ்பெசல் உருளைக்கிழங்கை சன்னமான துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொறித்து எடுத்தால் பிஷ் மற்றும் சிப்ஸ் தயார்.
பண்ணையில் வளர்ந்த இளம் செம்மறி ஆட்டின் மேல் உப்பு தடவி ஓவனில் வைத்து எடுத்து, பண்ணையில் வந்த ஃப்ரெஷ் ஆன க்ரீமிலும், சீஸிலும் செய்த சாஸைத் தொட்டுக்கொள்ள கொடுப்பார்கள். சிறிய துண்டுகள் தான் வழங்கப்படும்.
ராணி போப்பை சந்திக்க வாட்டிகன் சென்றபோது அவருக்கு போப் பாஸ்டாவும், தக்காளி சாஸும் வழங்க, ராணி அதை உண்ண மறுத்துவிட்டார்.
உள்ளூர் வணிகர்களுக்கு ஆதரவு
ஆண்டுக்கு ஒருமுறை ஸ்காட்லாந்தில் உள்ள கோட்டைக்கு விடுமுறையாக அரசவம்சத்தவர் செல்வார்கள். அப்போது அருகே இருக்கும் கிராமத்தில் இருக்கும் பேக்கரிகள், இறைச்சிக் கடைகளில் தான் அனைத்து உணவும் வாங்கப்படும். ராணிக்கு பிரெட் கொடுக்கச் சொல்லி அந்த ஊர் பேக்கரிக்கு தனி அரச கட்டளை உள்ளது. சாசேஜ் கொடுக்கும் கடைகளிலும் அப்படித்தான். அந்தக் கடைகளுக்கு இது மிகப்பெரிய கௌரவம். ராணிக்கு ஸ்பெஷலாக எதுவும் கொடுப்பதில்லை, ஆனால் ராணி உண்ணக்கூடிய தரத்தில் தான் கடையில் அனைத்துப் பொருட்களையும் விற்பதாகச் சொல்கிறார்கள். ஸ்காட்லாந்து சிறு வணிகர்களை ஊக்குவிக்க இம்முறை கையாளப்படுகிறது.
கட்டுப்பாடுடன் கூடிய இனிப்புகள்
ஐஸ்க்ரீம் எல்லாம் பண்ணையில் கிடைக்கும் முட்டை, க்ரீம், பிளம்ஸ், சர்க்கரையை வைத்து ராணியின் கிட்சனிலேயே தயாரிப்பார்கள். ஆனால் இரு ஸ்பூன் ஐஸ்க்ரீம் தான் வழங்கப்படும்.
உடல் ஆரோக்கியம்
அரசவம்சம் உடற்பயிற்சிக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ராஜவம்சத்தவர்கள் செய்வதுபோல் போலோ ஆடுவது, குதிரை ஏற்றம், மீன் பிடித்தல் முதலான விளையாட்டுக்களை ஆடுவார்கள்.
பொது இடங்களில் கட்டுப்பாடுகள்
ராணியை விட கோடானுகோடி பணம் இருந்தும் பில்கேட்ஸ் அவ்வப்போது சியாட்டில் நகர பர்கர் கடைகளில் வரிசையில் நின்று பர்கர் வாங்கி உண்பார். ராஜவம்சத்தால் அப்படி எதுவும் செய்யமுடியாது. ஒருமுறை இத்தாலியில் ராணி படகில் போகையில் எதிரே சில இளைஞர்கள் படகில் திடீர் என வந்து ராணியிடம் ஐஸ்க்ரீமை நீட்டினார்கள். மரியாதை கருதி ராணி அதை வாங்கிக்கொண்டாலும், உடனே அந்த ஐஸ்க்ரீமை காவலர்கள் ராணியிடம் இருந்து வாங்கிவிட்டார்கள்.