நுரையீரலில் இரத்தக்குழாய் அடைப்பு – Pulmonary embolism: (PE) எவ்வாறு ஏற்படுகிறது?
சாதாரணமாக நினைத்த ஒரு காய்ச்சல், நோயாளியை ஐசியூவில் கொண்டு சேர்ப்பதில் முடியுமா?
சந்தோஷமாக ஆரம்பித்த விமானப்பயணம் உயிருக்கு ஆபத்தாகுமா? ஆகலாம்.. எப்படி? எனப் பார்ப்போம். இவற்றுக்கெல்லாம் காரணம், கால்கள் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்பதுதான். கால்கள் சும்மா இருப்பதற்கும், நுரையீரலில் இரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்ன? நிச்சயமாக இருக்கிறது.
இரத்தக்குழாய் அடைப்பைப் பற்றிப் பார்க்குமுன், இரத்த ஓட்டத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
கால்களில் இருந்து இதயம் வரை, இரத்தம் வந்து திரும்பும் வழியைப்பற்றி முதலில் ஓர் எளிய விளக்கம்:
காலில் இருந்து இரத்தம் மேலே பயணிக்கத் தொடங்குகிறது.
நம் கால்களில் உள்ள இரத்த நாளங்கள் (veins) தசை (muscles) மற்றும் வால்வுகள் (valves) உதவியுடன் இரத்தத்தை மேலே, இதயத்துக்கு சுத்திகரிப்புக்காக அனுப்புகின்றன.
ஈர்ப்பு விசை (gravity) கீழே இழுக்கும் போதும், இந்த வால்வுகள் இரத்தம் மீண்டும் கீழே போகாமல் தடுக்கின்றன.
இனி, இந்த நிகழ்வு எவ்வாறு படிப்படியாக நடைபெறுகிறது எனக்காணலாம்.
1.கால்களில் இருந்து கார்பன் டை ஆக்ஸைடு கலந்த இரத்தம் சிறு சிரைகள் மூலம் பெரிய சிரைகளைச் (femoral, iliac veins) சேர்கிறது.
2. சிரைகளின் வழியே அந்த இரத்தம் இதயத்திற்குச் செல்கிறது.
3.அங்கிருந்து இரத்தம் நுரையீரலுக்கு (lungs) அனுப்பப்படுகிறது (pulmonary artery வழியாக).
4.நுரையீரலில் இரத்தம் ஆக்சிஜனைப் (oxygen) பெறுகிறது, கார்பன் டை ஆக்சைடு வெளியேறுகிறது.
5.ஆக்சிஜன் நிறைந்த இரத்தம் pulmonary veins வழியாக இதயத்தின் இடது பக்கத்திற்குத் (left atrium) திரும்புகிறது.
6.பின்னர் அது left ventricle வழியாக கால்கள் உட்பட, உடல் முழுவதும் மீண்டும் பம்ப் செய்யப்படுகிறது.
தசை இயக்கத்தின் பங்கு:
கால்களின் தசைகள் (muscles) இயங்கும் போது (உதாரணம்: நடப்பது, கால்களை அசைப்பது), அவை சிரைகளை அழுத்தி, இரத்தத்தை மேலே இதயத்தை நோக்கி தள்ளுகின்றன. இதை “muscle pump” என்று சொல்கிறோம்.
இந்த பம்ப் வேலை செய்யும் போது, வால்வுகள் இரத்தத்தைக் கீழே செல்லாமல் தடுக்கின்றன.
இந்நிகழ்வை,
1.→ தசைகள் அழுத்தும் போது இரத்தம் மேலே தள்ளப்படும்
2.→ வால்வுகள் இரத்தத்தைக் கீழே திரும்ப விடாது
3.→ இதயத்திற்குச் சென்று நுரையீரலில் ஆக்சிஜன் பெற்று மீண்டும் உடலுக்கு வருகிறது.
என்ற மூன்று நிகழ்வுகளைக்கொண்டு, எளிதாக நினைவில் கொள்ளலாம்.
வழக்கமான செயல்களான நடப்பது, கால்களை அசைப்பது, உடற்பயிற்சி போன்றவை இந்த venous return-ஐ மிகுந்த அளவில் மேம்படுத்துகின்றன. இதனால், இதயத்துக்கும் நுரையீரலுக்கும் வேலை குறைவாக இருக்கும். ஆனால், இதில் ஏதாவது இடையில் மாறினால் அல்லது தடைபட்டால் அதுவே பிரச்சனை ஆகிறது.
பிரச்சினையை ஏற்படுத்தும் ஒரு சில காரணிகளாவன:
•நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பது (பயணம்- முக்கியமாக நீண்டதூர விமானப் பயணம், புற்றுநோயால் பாதிப்பு, வெகுநாட்கள் மருத்துவமனையில் படுத்திருப்பது)
•அறுவை சிகிச்சை அல்லது காயம் (Any major surgery) அதனால் கால்களை அசைக்காமல் வைத்திருப்பது.
•சில மருந்துகள் (உதா. ஈஸ்ட்ரஜன், ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை)
•கர்ப்பம், குழந்தை பிறந்த பின்னான காலம்.
•ஏதோ ஒரு காரணத்தால் கால்கள் அசைவின்றி இருக்கும் நிலை (immobility)
•காய்ச்சல் (viral fever, chickenpox), புற்றுநோய் போன்ற சில நோய்கள்.
. இரத்தம் உறைபாட்டில் கோளாறு
மேலே குறிப்பிடப்பட்ட காரணங்களோடு நீர்ச்சத்துக் குறைபாடும் இணைகிறது.
நுரையீரலில் இரத்தக்குழாய் அடைப்பின் (P.E) அறிகுறிகள்
•திடீர் மூச்சுத் திணறல்
•மார்புவலி (மூச்சு இழுக்கும் போது அதிகரிக்கும்)
•வேகமான இதயத் துடிப்பு
•இருமல், சில நேரங்களில் இரத்தம் வெளிப்படும்.
•சிலருக்கு மயக்கம், குறைந்த இரத்த அழுத்தம்
மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை/ மருத்துவமனையை அணுகவும். இது ஒரு மருத்துவ அவசர நிலை ஆகும். உடனே கவனிக்கத் தவறினால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.
நுரையீரலில் இரத்தக்குழாய் அடைப்பு ஏற்படாமல் தடுக்க ஒரு சில வழிமுறைகளைப்பின்பற்றலாம். அவையாவன,
• நீண்ட பயணங்களில் கால்களை அடிக்கடி அசைக்கவும். முடிந்தவரை எழுந்து நடக்கலாம்.
• அறுவை சிகிச்சைக்குப்பின் விரைவில் நடக்கத் தொடங்கவும்
• தேவைப்பட்டால் மருத்துவர் அறிவுரைப்படி இரத்தத்தை நீர்க்கச்செய்து அதனால் கட்டிகளைக் கரைக்கும் உறைவுத்தடுப்பு மருந்துகளை (prophylactic anticoagulants) எடுத்துக்கொள்ளலாம்.
• போதிய நீர் அருந்துவது முக்கியமானது. காய்ச்சல் இருக்கும் நேரங்களில் நிறைய திரவ ஆகாரம் முக்கியம்.
. உடல் எடைக் கட்டுப்பாடு அவசியம். உடலில் எடை அதிகரிக்க அதிகரிக்க உடலுக்கான பயிற்சிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் நடைப்பயிற்சியைக்கூட நிறுத்தி விடுகின்றனர். இதனால் கால்களின் இரத்த ஓட்டம் தடைபட்டு பிரச்சினைகள் ஆரம்பித்து, விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம்.
1 comment