இலக்கியத்தின் ஒரு அங்கம் கவிதை. கவிதைகள் மனிதனின் சிந்தனைகளை வனமிக்கதாக்குகிற, மகிழ்ச்சியான தருணங்களின் உற்சாகங்களைக் கூட்டுகிற ஒரு கலை வடிவம். பெரும்பாலும் அழகை, காதலை வெளிப்படுத்துவதாக மாறிவிட்ட கலையாக மாறிவிட்ட அதன் சுபாவம் என்பது எதார்த்தத்தில் எதையும் அழகுறச் சொல்வது என்பதாகும்.
இஸ்லாத்தில் கவிதைக்கு ஒரு வரவேற்பு உண்டு. இஸ்லாமிய உலகின் மிகப்பிரசித்தி பெற்ற “புகாரீ” நபிமொழித் தொகுப்பில்
إنَّ مِنَ الشِّعْرِ حِكْمَةً
“உண்மையாகவே கவிதைகளில் சிலது நுட்பமானது” என்ற நபியவர்களின் சிலாகிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. நயமான பேச்சு குறித்தும் நபியவர்களுக்கு இதே போன்றதொரு சிலாகிப்பு உண்டு.
إنَّ مِنَ البَيانِ لَسِحْرًا
“பேச்சில் சிலது வசியம் செய்கிறது”
முஹம்மது நபி ﷺ அவர்கள் கவிஞர்களுக்கு பெரும் அங்கீகாரம் தந்து பிரார்த்தித்த தருணங்கள் உண்டு. அரசவைக் கவிஞர்கள் போல நபித்தோழர்களிலும் கவிஞர் படை உண்டு. ஹஸ்ஸான் இப்னு ஸாபித், கஅப் இப்னு மாலிக், கஅப் இப்னு ஜுஹைர், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலியல்லாஹு அன்ஹும்) போன்றோர் இதில் பிரபலமானவர்கள். முஹம்மது நபி ﷺ அவர்களின் மனைவி ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களே ஒரு கவிஞர் தான்.
முஹம்மது நபி ﷺ அவர்கள் சொன்னதாக அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் சொன்ன செய்தி
الشعرُ بمنزلةِ الكلامِ، فحَسَنُه كحسنِ الكلامِ، وقبيحهُ كقبيحِ الكلامِ
“கவிதைக்கு பேச்சின் தரம் தான். நல்ல கவிதை, நல்ல பேச்சைப் போல. கெட்ட கவிதை, கெட்ட பேச்சைப்போல”. இது தான் கவிதை குறித்த இஸ்லாமியப் பார்வை.
பயண களைப்பு தீரவோ அல்லது பயணங்களின் உற்சாகத்தைக் கூட்டவோ பாடல்கள் கேட்கிற பழக்கம் இன்று நிறைந்திருப்பதைப் பார்க்கலாம். அதிலும் குறிப்பிட்ட இசையமைப்பாளர் அல்லது குறிப்பிட்ட பாடலாசிரியரின் பாடல்களைக் கேட்கும் இரசனை உண்டு. ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பயணிப்பதற்கு இத்தனை பாடல்கள் என்று இன்றைய தலைமுறை கணக்கு வைத்துக் கொள்கிற பாடல் பிரியர்கள் உண்டு. ஒரு பயணத்தில் ஷரீத் இப்னு ஸுவைத் எனும் நபித்தோழருடன் முஹம்மது நபி ﷺ பயணிக்கும் போது, “உமக்கு உமைய்யத்துப்னு அபிஸ் ஸல்த் உடைய கவிதைகள் தெரியுமா?” என்று கேட்க “ஆம்” என்பார். “பாடு” என்பார்கள் முஹம்மது நபி ﷺ. ஒரு கவிதை படிப்பார். “ம்” என்பார்கள். “தொடரு” என்று அதற்கு அர்த்தம். இன்னொன்றைப் படிப்பார். “ம்” என்பார்கள். தொடருவார். இப்படி ஒரே பயணத்தில் 100 கவிதைகள் படிப்பார்கள் அந்த நபித்தோழர். முஹம்மது நபி ﷺ விரும்பிக்கேட்ட அந்த கவிஞர் உமைய்யா முஸ்லிம் இல்லை. சொல்லப்போனால் அவர் முஹம்மது நபி ﷺ க்கு எதிராக களம் கண்டிருக்கிறார் என்பது வரலாறு.
அரபுகளுக்கு வாளால் வெட்டுப்படுவதை விட சொல்லால் காயப்படுவது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிலும் இலக்கிய நயமான கவிதைக்கு அவர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது. அதனால் கவிதையை தனது சீருரைப் பிரச்சாரத்தில் ஆயுதமாகவே முஹம்மது நபி ﷺ பயன்படுத்தினார்கள்.
اهجُ قريشًا، فإنه أشدُّ عليهم من رشقِ النَّبلِ
குரைஷிகளுக்கு மறுப்பு கொடுங்கள். அது அவர்கள் மேல் அம்பு பாய்ச்சுவதை விட சிரமமானது.
குர்ஆன் கவிதை குறித்து காரஞ்சாரமாக கருத்து சொல்லியிருப்பதாக விவரமில்லாமல் சிலர் பேசிவிடுவதுண்டு. எந்த ஒன்றையும் உபயோகப்படுத்தும் முறையை வைத்து தான் கருத்து சொல்ல முடியும். கவிதை எனும் கலை பெரும்பாலும் இறைசிந்தனைக்கு எதிராகவே பயன்படுத்தப்படுவதால் அப்படியொரு சாடலை திருக்குர்ஆன் முன்வைத்ததாக திருக்குர்ஆனின் விரிவுரையாளர்கள் அனைவரும் கருத்துச் சொல்கிறார்கள்.
திருக்குர்ஆனின் செயல் வடிவமான முஹம்மது நபி ﷺ அவர்களின் வாழ்க்கை தான் இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தீர்ப்பாக அமையும் என்கிற வகையில் இதற்கான தீர்வு கவிதைக்கு எதிரானதில்லை என்பதே!. ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலியல்லாஹு அன்ஹு) 120 வயது வரை வாழ்ந்தார்கள். பின்னாளில் 60 ஆண்டுகள் முஸ்லிமாகவும், அதற்கு முன்பு 60 ஆண்டுகள் இஸ்லாத்திற்கு எதிராகவும் இருந்திருக்கிறார். ஆனால் அவர்களின் கவி படைக்கும் ஆற்றலை விட்டு விட்டு வர இஸ்லாம் வலியுறுத்தவில்லை. அவ்வாற்றலை தங்களுக்கு சாதகமாக முஹம்மது நபி ﷺ பயன்படுத்திக் கொண்டார்கள்.
கவிதை வாசிக்கும் கவிஞர்களை உற்சாகப்படுத்த கரகோஷம் எழுப்புவதும், விசிலடிப்பதும் இன்றைய கால வழக்கம். முஹம்மது நபி ﷺ உடைய தோழர்களுக்கு அவர்களின் பிரார்த்தனை தான் உற்சாகப்படுத்தும். ஹஸ்ஸான் இப்னு ஸாபித் எனும் நபித்தோழருக்கு இப்படி பிரார்த்தனை செய்வார்கள்:
أجب عنِّي، اللَّهمَّ أيِّدهُ بِروحِ القدُس
“ம்… அப்படித்தான் பதில் கொடு. யா அல்லாஹ்! இவருக்கு தூய ஆத்மாவான ஜிப்ரீலை (அலைஹிஸ் ஸலாம்) துணையாக்கி வலுப்படுத்து!”. சொல்லப்போனால் இந்த ஹஸ்ஸான் (ரலியல்லாஹு அன்ஹு) விற்கு இறைவனைத் தொழும் பள்ளியிலேயே ஒரு மேடை அமைத்து கௌரவித்தார்கள். அம்மேடை மீதேறி நின்று தான் ஹஸ்ஸான் (ரலியல்லாஹு அன்ஹு) எதிரிகளுக்கு பதில் கவிதைகளைப் படிப்பார்கள்.
லபீத் இப்னு ரபீஆ எனும் கவிஞர் அவர் பின்னாளில் இஸ்லாமை ஏற்றிருந்தாலும் அவர் முஸ்லிமாகும் முன்பு படித்த கவிதைகளை வைத்து நபித்தோழர்கள் விவாதிப்பதுண்டு. லபீத் ரலியல்லாஹு அன்ஹு வின் ஒரு கவிதையின் கண்ணி உயரிய உண்மையைப் பேசியதாக முஹம்மது நபி ﷺ கமெண்ட் செய்துள்ளார்கள்.
பெரும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களாக மின்னிய அனைவரும் கவிதைகள் இயற்றியுள்ளார்கள். சிலருக்கு அப்படி கவிதைத் தொகுப்பே உண்டு. அந்த வகை திரட்டுகளுக்கு “தீவான்” என்று பெயர். இஸ்லாமிய உலகில் ஒரு பெரும் கூட்டம் வழிகாட்டியாகக் கொண்டிருக்கிற இமாம் ஷாஃபியீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுக்கு தீவான் வகையிலான கவிதைத் திரட்டு உண்டு.
இஸ்லாமிய ஸூஃபி மரபினரிடம் கவிதைகள் பாடலாக படிக்கப்படுகின்றன. இந்த நிகழ்வுகளுக்கு “ஸமா மஜ்லிஸ்” என்றோ, “கவாலி” என்றோ சொல்லப்படுகிறது. பிரபலமான ஸூஃபி கவிஞரான இமாம் ரூமீ (ரஹிமஹுல்லாஹ்) மஸ்னவி ஷரீஃபை இலக்கிய உலகில் வாசிக்காத யாராவது இருப்பார்களா?. நீதி போதனைக் கதைகளுக்கு கவி உருவம் தந்து அசத்திய பெருமை இமாம் ரூமீ (ரஹிமஹுல்லாஹ்) வின் மஸ்னவீ உடையது.
தீவான், கஸீதா, மவ்லித், கஸல், ஷிஅர் என கவிதைகளுக்கு பல வடிவங்களைத் தந்ததற்குப் பின்னால் இஸ்லாம் கவிதை அல்லது இலக்கிய வடிவத்திற்கு எதிராக இருந்ததாக யாராலாவது வாதிக்க முடியுமா?.
தமிழ்நாட்டில் முஹம்மது நபி ﷺ அவர்களின் பிறப்பு குறித்து பேசுகிற ஒரு கவிதைத் தொகுப்பின் பெயர், ஸுப்ஹான மவ்லித். அக்கவிதையை இயற்றியவர் யார் என்பதில் ஒரு தெளிவில்லை என்றாலும் அக்கவிதைத் தொகுப்பின் ஈர்ப்பில் இன்று வரை தமிழ் முஸ்லிம்கள் அத்தொகுப்பிற்கு பெரும் முக்கியத்துவம் தருகிறார்கள். “மிம்பரின் கம்பர்” என கவிக்கோவால் பாராட்டப்பட்ட “தேங்கை” ஷரஃபுத்தீன் மிஸ்பாஹி எனும் அறிஞர் அழகுத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அரபு மொழியில் நபியை புகழ்ந்து இயற்றப்பட்ட பல காவியங்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
இப்படியான கவி வடிவம் வெறும் பொழுது போக்குக்காக முஸ்லிம்கள் பயன்படுத்தவே இல்லை என்பது தான் இதில் மிகவும் கவனிக்கத்தக்க அம்சம். உலகின் எந்த ஒரு அம்சத்தையும் மார்க்கத்தின் வழிக்கேற்ப மாற்றிக் கொள்வதில் இந்த மார்க்கத்தின் முன்னோடிகள் அடிபிசகவில்லை. அப்படித்தான் கவிதையும். இஸ்லாமிய வரலாறுகளைச் சொல்வதில் இந்த ருசிகரமான இலக்கிய அம்சத்தை செறிவாக பயன்படுத்திக் கொண்டனர். உலகம் முழுக்க குறிப்பாக தென்னிந்தியாவில் தங்களுக்காக தீன்வழி உபகாரம் செய்த பெருமக்களைப் போற்றிப்பாடுகிற வகையில் அவர்களின் வரலாறுகளை “மவ்லித்” எனும் பெயரில் தொகுத்திருக்கிறார்கள். அவர்கள் இறந்த நாளில் அவர்களின் வரலாறுகளை சொற்பொழிவுகளாகவும், மவ்லித் பாடலாகவும், தமிழ் கீதங்களாகவும் பாடி அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து உணவு சமைத்து ஊருக்கே பங்கிட்டுப் பரிமாறி மகிழ்கின்றனர். இதற்கு கந்தூரி சோறு என்று பெயர்.
ஏர்வாடி இப்ராஹீம் பாதுஷாஹ், நாகூர் ஷாஹுல் ஹமீத் நாயகம், முஹ்யித்தீன் ஆண்டகை, அஜ்மீர் காஜா நாயகம், ஹஸன், ஹுஸைன், ஃபாத்திமா நாயகி (ரலியல்லாஹு அன்ஹும்) இப்படி இன்னும் பல உலகம் போற்றும் பெருந்தகைகளுக்கு மவ்லிதுகள் உண்டு. மவ்லித் என்பது பிறப்பு சரித்திரம் உட்பட அவர்களின் பெருமை பாராட்டுகிற கவிதையின் ஒரு அம்சம். ஒரு நூறாண்டுக்கு முன்பு புராணம், சரித்திரம், மாலை போன்ற பெயர்களில் தமிழிலேயே இவர்களின் நினைவு தினங்களில் வாசிக்கப்படும்.
இப்படி தன் வாழ்நாளில் சுப, துக்க நிகழ்வுகள், மார்க்க விழாக்கொண்டாட்டங்களில் படிக்கும் பாடல் அம்சமாகவும், வரலாறு சொல்லியாகவும், சீர் திருத்த கருத்துக்களின் அழகியல் வடிவமாகவும், பொய் கலவாத அற்புதங்களின் நளின ரூபமாகவும் என கவிதையை ஓர் இரத்த ஓட்டமுள்ள அம்சமாக தலைமுறை தலைமுறையாக முஸ்லிம்கள் பார்க்கையில் முஸ்லிம்களுக்கு கலைப் பார்வை இல்லை என்ற குற்றச்சாட்டு அபத்தமாகப்படவில்லையா?.