மீலாது நபி – கருணை நாயகன் பிறந்த நாள்

வரலாற்றின் பக்கங்களைத் திருப்பினால், கி.பி. 570 ஆம் ஆண்டில், அரேபியப் பாலைவன நகரமான மக்காவில், ஒரு புதுமையான விடியல் எழுந்தது. உலகின் இருள் சூழ்ந்த காலத்தில், மனிதகுலத்திற்கு வழிகாட்டியாக, அன்பின் தூதராய், நபி முகம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறந்தார். அந்த நாள் இன்றும் மீலாது நபி என்ற பெயரில் உலக முஸ்லிம்களின் இதயங்களில் ஒளிர்கிறது.

அந்நாளைய அரபு சமூகம் அடிமைத்தனம், பெண்களிடம் அவமதிப்பு, இன-இனம் பிரிவினை, வன்முறை, மது, சூதாட்டம் போன்ற அநீதிகளால் நிரம்பியிருந்தது. ‘கஅபா’ என்றழைக்கப்படும் இறைஇல்லத்தில் நூற்றுக்கணக்கான சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அநீதியும், அடக்குமுறைகளும், ஆதிக்க மனப்பான்மையும், சாதீய அடிமைத்தனங்களும் நிறைந்திருந்த சூழலில் பிறந்தார் அல்-அமீன் – நம்பிக்கையின் மனிதர் என்று மக்காவாசிகளால் அன்புடன் அழைக்கப்பட்ட முகம்மது நபியவர்கள்

பிறப்பதற்கு முன்பே தந்தையை இழந்த அவர் ஆறு வயதில் தன் தாயையும் இழந்தார். தாத்தா அப்துல் முத்தலிப், பின்னர் மாமா அபூ தாலிப் ஆகியோர் இவரை வளர்த்தனர். மேய்ப்பும் வணிகமும் செய்து வாழ்ந்த அவர், தனது நேர்மை, நெறியால் “அல்-அமீன்” (நேர்மையானவன்) என்று அழைக்கப்பட்டார். 25-வது வயதில் மதிப்பிற்குரிய வணிகத் தலைவி ஹதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்.

அவரது 40-வது வயதில், மக்காவிற்கருகிலுள்ள ஹிரா குகையில், வானவர் ஜிப்ரீல் (அலை) மூலமாக ஈக இறையான அல்லாஹ்வின் முதல் வெளிப்பாடு அவரை வந்தடைந்தது. அதன்பின் 23 ஆண்டுகள் தொடர்ந்து வெளிப்பாடு (வஹீ) கிடைத்தது. அந்த இறை வசனங்களால் குர்ஆன் உருவாகியது. மனிதர்களின் வாழ்க்கையை மாற்றும் பேரொளி பிறந்தது.

  • தவ்ஹீத் – ஒரே இறைவன் அல்லாஹ் மட்டுமே வழிபடத்தக்கவர்.
  • சமத்துவம் – இன, மொழி, நிறம் எதுவும் மனிதரைப் பிரிக்காது.
  • சமூக நீதி – அடிமைத்தன ஒழிப்பு, பெண்களுக்கு மரியாதை, வர்த்தகத்தில் நேர்மை.
  • அன்பும் கருணையும் – அனாதைகள், ஏழைகள், அண்டைவர்கள், விலங்குகள் என அனைவர் மீதும் இரக்கம்.

மேற்கண்ட அனைத்தும் மனௌடம் தழைக்க வந்த மாபெரும் மனிதரான நபிகள் பெருமானாரால் போதிக்கப்பட்டது. இஸ்லாம் என்ற மார்க்கத்தைப் பரப்பும் முய₹இயில் சொல்லொணாத் துயரங்க்களுக்கு ஆட்பட்டபோதிலும், தன் எதிரிகளிடமும் கருணையை வெளிப்படுத்திய நபிகளாரின் வாழ்க்கை அனைவருக்குமான முன்மாதிரி. மைக்கேல் ஹர்ட் எழுதியிருக்கும் உலகின் மிகச்சிறந்த 100 மனிதர்கள் பட்டியலில் நபி பெருமானாருக்கு முதலிடம் கிடைத்திருப்பதிலிருந்தே அவரது வாழ்க்கை எத்துனை மகத்துவம் மிக்கதென்பதைச் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்.

12ஆம் நூற்றாண்டிலிருந்து நபிகளாரின் பிறந்த தினம் எகிப்திலும், பிறகு பல முஸ்லிம் நாடுகளிலும் பரவலான கொண்டாட்டமாக மாறியது. இன்று உலகம் முழுவதும் அது பரவலாகக் கொண்டாடப்படுகிறது

இன்றைய உலகம் போர்கள், இனவெறி, வறுமை, அநீதி எனக் கலங்கும் வேளையில், நபி (ஸல்) அவர்களின் வாழ்வு ஒரு திசைமாற்றுக் கண்ணாடி போல நிற்கிறது.

  • சமாதானம் தான் உண்மையான வெற்றி.
  • நேர்மையே வாழ்வின் அடித்தளம்.
  • அன்பும் கருணையும் இறைவனுக்குப் பிடித்த வழி

என்பதே நபிகள் நாயகத்தின் அணுகுமுறையாகவும், தோழர்களுக்கான உபதேசமாகவும் இருந்தது

மீலாது நபி என்பது வெறும் கொண்டாட்ட நாளல்ல. அது, நபி வாழ்ந்த வாழ்க்கையே மனிதகுலத்துக்கான வரைமுறை” என்பதை நினைவூட்டும் தருணம். அவரின் போதனைகள், குர்ஆனின் ஒளியோடு இணைந்து, இன்றும் நம் வாழ்வை வழிநடத்துகின்றன.

Author

Related posts

நாள்: 21

நாள்: 20

நாள்: 19