நல்லாச்சி -7

This entry is part 8 of 12 in the series நல்லாச்சி

தங்கம் ரப்பர் சங்கு என
விதவிதமாய் அணிந்த வளையல்கள்
அலுத்துப்போய் விட்டனவாம் பேத்திக்கு
புதிதாய் ஆசை துளிர்விட்டிருக்கிறது
கண்ணாடி வளையல்கள் மீது

கலகலவெனச்சிரிக்கும் அவற்றின் மகிழ்ச்சி
அணிந்தோரையும் அடுத்தோரையும்
தொற்றிக்கொள்வதாய்ச்சொல்லும்
பேத்தியின் குதூகலம்
நல்லாச்சியையும் தொற்றிக்கொள்கிறது
ஆடைக்கேற்ற வண்ணங்களில்
பேத்தியின் பூங்கரங்களில்
அழகழகாய் அடுக்கி அழகு பார்க்கிறாள்
‘எந்தங்கத்துக்கு எல்லாக்கலரும் எடுப்பாத்தான் இருக்கும்’
வளையல்களைத்தடவி முத்திக்கொள்கிறாள்
அவ்வீட்டினுள் நிறைந்தேயிருக்கிறது வளையோசை
மூடுபனியென

கள்ளன் போலீஸ் விளையாட்டின்போது
போலீசாயிருக்கும் பேத்தியின் கைகளில்
திருடன் எப்பொழுதும் அகப்படுவதேயில்லை
போலீஸ் வரும் தகவல்
க்ளிங்கென ஒரு தந்தியைப்போல்
முன்னரே சென்று சேர்ந்து விடுகிறது அவனுக்கு
உளவாளி யாரென துப்புக்கொடுப்போர்க்கு
ஒரு நெல்லிக்காய் சன்மானமாம்
தனக்குத்தெரியுமென எவ்விக்குதிக்கின்றன வளையல்கள்
அதன் மொழி புரியாத பேத்தி
இன்னும் ஆக்ரோஷத்துடன் அலைமோதுகின்றாள்
புரிந்துகொண்ட நல்லாச்சியோ
வாளாவிருக்கின்றாள்
என்ன செய்ய
நெல்லிக்காய் அளவுக்கே
கண்ணாடி வளையல்களையும் பிடித்திருக்கிறதே அவளுக்கும்

Series Navigation<< நல்லாச்சி -8நல்லாச்சி -9 >>

Author

Related posts

வழி நடத்தும் நிழல்கள்

நல்லாச்சி – 12

அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு