பாரம்பரிய முறையில் இரு பலகாரங்கள்

கருப்புக் கவுனி அரிசி இனிப்பு! 

தேவையான பொருட்கள்:

கருப்புக் கவுனி அரிசி 1கப் 250 கிராம்,

சீனி 1 கப் 250 கிராம்,

தேங்காய்ப்பூ 3/4 கப்,

நெய் 3 டீ ஸ்பூன்,

உப்பு ஒரு சிட்டிகை.

செய்முறை :

கருப்புக் கவுனி அரிசியை நீரில் நன்கு களைந்து 4 கப் நீர் ஊற்றி மூடி, 8-10 மணி நேரம் நன்கு ஊற வைக்கவும். பெரிய குக்கர் உள்ளே நீர் விட்டு பாத்திரம் வைத்து அதில் ஊற வைத்த கவுனி அரிசியைப் போட்டு, ஊற வைத்த தண்ணீரையே 1 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் என்ற அளவில் வைத்து பாத்திரத்தின் மேல் மூடி போட்டு, குக்கரை மூடி 7- 8 விசில் வரும் வரை விட்டு நன்கு குழைய வேக வைத்து எடுக்கவும். வெந்த அரிசி குழைந்து இருக்கிறதா? எனப் பார்த்துவிட்டு குழைய வேகவில்லை எனில் இன்னும் இரு விசில் வரை, வேக வைத்து எடுக்கவும். குழைந்த அரிசியை ஒரு மத்து வைத்து லேசாகக் கடைந்து கொள்ளவும். வெந்த அரிசி ஒன்றும், பாதியுமாக இருப்பது போல கடையவும்.

அடுப்பில் வைத்து, ஒரு கப் சர்க்கரை,(உங்களுக்கு அதிக இனிப்பு வேண்டும் எனில் மேலும் 1/4 கப் சேர்க்கவும். சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்க்க விருப்பம் எனில், மண், தூசி நீக்கி பாகு வடிவில் சேர்க்கவும்) சிட்டிகை உப்பு சேர்த்துக் கிளறவும். சர்க்கரை கரைந்து எல்லாம் ஒன்றாக வரும் போது 3/4 கப் தேங்காய்ப்பூ சேர்த்து, 3டீ ஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறவும். மேலே சிறிது தேங்காய்ப்பூ சேர்த்துப் பரிமாறவும். இந்த இனிப்புக்கு ஏலக்காய்ப் பொடி, முந்திரி, திராட்சை தேவையில்லை. கவுனி அரிசியின் இயல்பான தனி மணமும், அலாதி சுவையுமே இந்த இனிப்பின் சிறப்பம்சம்.

இந்தக் கவுனி அரிசி இனிப்பு, செட்டி நாட்டுப் பாரம்பரிய இனிப்புகளில் ஒன்று. எல்லா விருந்து, விசேஷங்களில் தவறாமல் இருக்கும். இந்தக் கருப்புக் கவுனி அரிசி நார்ச்சத்தும், புரதமும், விட்டமின் சி, மற்றும் antioxidants, நிறைந்தது. இந்தத் தீபாவளிக்கு ஆரோக்கியமான ஒரு இனிப்புடன் கொண்டாட வாழ்த்துக்கள்!

ரிப்பன் பகோடா / ஓலை பகோடா / நாடா பகோடா

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி 3 டம்ளர்,

பொட்டுக்கடலை மாவு 1 டம்ளர், (பொட்டுக்கடலையைப் பொடித்துச் சலிக்கவும்)

மிளகாய் வற்றல் 15,

பூண்டு பல் 10

வெண்ணெய் 1டேபிள் ஸ்பூன்,

பெருங்காயத் தூள் 1/2 டீ ஸ்பூன்,

உப்பு தேவையான அளவுக்கு,

எண்ணெய் பொரிக்க தேவையான அளவு,

செய்முறை:

புழுங்கல் அரிசியைக் களைந்து, 3மணி நேரம் ஊற வைத்து மிக்சி/ கிரைண்டரில் நைசாக அரைத்து எடுக்கவும். மிளகாய் வற்றலைப் பொடி செய்து, பூண்டு சேர்த்து, சிறிது நீர் விட்டு மைய அரைத்து மாவில் சேர்க்கவும். பெருங்காயத்தூள், வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து சூடான எண்ணெயில் ரிப்பன் அச்சு போட்டுப் பிழிந்து நன்கு வேக விட்டு எண்ணெய் ஓசை அடங்கியதும் ரிப்பன் பகோடாவை எண்ணெய் வடித்து எடுத்து வைக்கவும். பச்சரிசியில் செய்வதை விட ருசி கூடுதலாக, நன்கு கரகரப்பாக இருக்கும்.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.. 

Author

  • சுயதொழில் முனைவோரான இவருக்கு, பல்வேறு உணவுகளை ருசித்துப் பார்ப்பதிலும், சமைத்துப் பார்ப்பதிலும் ஆர்வமுண்டு. சமையலில் சிறு வயதிலிருந்தே இருக்கும் மிகுந்த ஆர்வம் காரணமாக, பல்வேறு சமையல் போட்டிகளில் பங்கேற்று சிறந்த செஃப்களிடமிருந்து பாராட்டுதல்களும், பரிசுகளும் பெற்றுள்ளார். லாக் டவுன் நேரத்தில் “தாளிக்கும் வாசம்” என்ற பெயரில் யூட்யூப் சானல் தொடங்கி, தற்சமயம் சமையல் சம்பந்தமாக தொடர் வீடியோக்கள் பதிவு செய்து வருகிறார். வெளிநாட்டினருக்காக தனிப்பட்ட சமையல் வகுப்புகளும் எடுத்து வருகிறார்.

Related posts

கொங்கு வட்டாரவழக்கு – 11: பொழையாக்குப்பா

வழி நடத்தும் நிழல்கள்

நல்லாச்சி – 12