திருவோணத் திருநாளும் வந்நல்லோ..

ஆவணி மாதம் (சிங்க மாசம்) ததும்பும் போது, வானில் திருவோணம் நட்சத்திரம் பரவி ஒளிரும் நாளை, மக்கள் “திருவோணம்” என மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இந்த நாளில் வீடுகளின் வாசற்படிகளில் பூப்பறித்துக் கோலங்கள் விரிய, உள்ளங்கள் மகிழ்ச்சியால் நிரம்புகின்றன. அன்னையின் அன்பு போலவும், கடவுளின் கருணை போலவும், திருவோணம் மனித வாழ்வை இனிதாக்கும் ஆன்மீகத் திருவிழா ஆகும்.

மகாபலி அரசனின் கதையின்றி திருவோணத்தைச் சொல்ல முடியாது. உலகையே தானம் செய்ய முனைந்த அவனது உள்ளம், “தர்மம்” எனும் சொல்லின் உயிர்மெய்யாக விளங்கியது. வாமனன் வந்தபோது, மூன்று அடிகள் நிலம் கேட்டார். இரண்டு அடியில் பூமியும் விண்ணும் அளந்ததும், மூன்றாவது அடியை வைக்க மகாபலி தன் தலையைத் தாழ்த்தினான்.
இறைவன் காலடியில் பணிந்த மகாபலி – “தியாகம்” என்ற சொல்லின் சிலையாக என்றும் நிலைத்தான். அவனது தாராள உள்ளத்தால் ஈர்க்கப்பட்டு, ஆண்டுதோறும் திருவோண நாளில் மக்களைக் காண வருகிறான் எனும் நம்பிக்கை இன்றளவும் வாழ்கின்றது.

திருவோணக் காலையில் வீடுகள் மண்வாசனை நிரம்பி, தண்ணீர் தெளித்துத் துடைத்து, வண்ணக் கோலங்கள் விரித்து, விளக்கேற்றி, இறைவனை வணங்குவர். அன்றைய நாளில் எல்லோரின் உள்ளமும் சுத்தமான பந்தலாகி, அன்பு மலர்கள் மலர்கின்றன.

“பசி தீர்த்தல் புனிதம்” என்கிறார் நம் முன்னோர். அந்த வார்த்தை போல, திருவோணம் நாளில் அன்னதானம் மிகப் பெரிய புண்ணியமாகக் கருதப்படுகிறது. சோற்றுக் கிண்ணம் நிரம்பும் போது, பசியால் வாடும் முகங்களில் மலர்கின்ற சிரிப்பு, அந்த நாளின் உண்மையான மகிழ்ச்சி. ‘காடு விற்றேனும் ஓணம் உண்ணனும்’ என்றொரு பழமொழி கேரளத்தின் இன்றும் பழக்கத்தில் உண்டு. திருவோண நாளில் விருந்திற்காக (ஸத்ய) இருக்கும் நிலங்களை விற்றாவது சாப்பிட வேண்டுமென்ன்னுமளவுக்கு ஓண ஸத்ய மலையாளிகளின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது.

திருவோணப் பருவம் என்றாலே சுவை நிறைந்த சாப்பாடு மனதை வருடும். நெய், பருப்பு, சாதம், சாம்பார், அவியல், அப்பளம், கூட்டு, இஞ்சிப்புளி, காலன், ஓலன், இனிப்பான பாயசம் – எல்லாம் அன்போடு பரிமாறப்படும். விருந்தினருடன் கூடி உண்ணும் அப்பண்டிகை உணவு, பசியை மட்டும் போக்குவதில்லை; அது உள்ளங்களில் ஒற்றுமையையும் விதைக்கிறது.

திருவோண நாளில் குடும்பங்கள் ஒன்று கூடுகின்றன. அந்நாளில் பிரிந்திருந்தவர்களும் வீட்டிற்குத் திரும்புவர். பிள்ளைகள் தாய் மடியைத் தேடி வருவது போல, மனிதர்கள் தங்கள் சொந்த வேர்களைத் தேடி அன்றைய தினம் கூடி அமர்கின்றனர். அந்தக் கூட்டத்தில் சிரிப்புகள் ஒலிக்க, பாசங்கள் பாய, பழைய சின்னச் சின்ன விரிசல்கள் கூட மறைந்து விடுகின்றன. “சேர்ந்து வாழ்ந்தால் சுமை குறையும்” என்ற பழமொழி, திருவோணக் களியாட்டத்தில் உயிர்ப்படைகிறது.

இன்றைய பிஸியான உலகிலும், திருவோணத்தின் நினைவுகள் மக்கள் உள்ளத்தில் காற்றாய் வீசுகின்றன. ஊரைவிட்டு நகரம் சென்றவர்களும், வெளிநாடுகளில் வாழ்பவர்களும் கூட, அந்த நாளில் தாய்நாட்டை நினைத்து உறவுகளைத் தேடுகின்றனர். திருவோணம் – நமக்குள் உறங்கிக் கிடக்கும் “மனிதநேயம்” என்ற முத்தினை மினுமினுக்கும் விதமாக உள்ளது.

திருவோணம் என்பது ஒரு தினம் மட்டும் அல்ல; அது ஒவ்வொரு உள்ளத்திலும் ஒளிரும் நன்னெறியின் தீபம். தர்மம், தானம், அன்பு, ஒற்றுமை – இவை அனைத்தும் மலராக மலர்கின்ற தோட்டமே திருவோணம்.

Author

Related posts

நாள்: 20

நாள்: 19

வரலாற்றில் பொருளாதாரம்: – 8