வாசிப்பு சவால்கள்

பல ஆண்டுகளாகப் பெற்றோர்களிடம் இருந்து எழும் கேள்வி “தமிழ்ல நல்ல படங்களுடன் குழந்தைக்குக் கொடுக்க புத்தக பரிந்துரை தாருங்கள்” என்பது. இதற்கு பதில் சொல்வது மிகவும் சிக்கலான தர்மசங்கடமான விஷயமாகிவிடுகின்றது. இந்த புத்தகம் யாருடன் சரி சமமாகப் போட்டியிடப்போகின்றது எனில் வண்ண வண்ண வழவழப்பான காகிதங்களுடன் ஆங்கிலத்தில் வெளிவரும் புத்தகத்துடன். மற்றொரு போட்டியாளரும் உண்டு. தொலைக்காட்சிகளில் நவீனத் தொழில்நுட்பத்துடன் வெளிவருகின்ற கார்ட்டூன்களுக்கு இணையாகவும் இதனை கொடுக்க வேண்டி இருக்கின்றது. தேடிப்பிடித்தால் சில புத்தகங்கள் கிடைக்கும். ஆனால் அது போதுமா? கண்டிப்பாக போதாது. தமிழ் புத்தகங்களுக்குள் நுழைய நினைக்கும் குழந்தைகளுக்குக் கதவு மூடப்படுகின்றது. ஆங்கிலத்திற்குப் போய்விட்டால் திரும்பத் தமிழ் வாசிப்பிற்குக் கொண்டுவருவதும் சிரமமே.

ஒரு குழந்தை கடந்த ஐந்து வருடங்களாக என்னுடைய கதைகளைப் படித்து அவ்வப்போது உரையாடி வருகின்றாள். இந்த கொரோணோ காலத்திற்கு இடையில் சந்தித்தபோது லாக்டவுன் நாட்களில் ஆங்கில நூல்களைத் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்துவிட்டாள் என்று அவளுடைய பெற்றோர் மகிழ்ந்தனர். “அடுத்த என்ன தமிழ் புத்தகத்தினை வாசிக்க இருக்கின்றாய்? என்ன என்ன வாங்கத் திட்டம்?” என்று கண்காட்சியில் கேட்டேன். தமிழில் இனி வாசிக்கும் எண்ணமே இல்லை என்றார்.

இவற்றைச் சுட்டிக்காட்டுவதன் நோக்கம் இன்னும் ஏராளமான தரமான நூல்கள் தமிழில் குழந்தைகளுக்காகவும் சிறுவர்களுக்காகவும் வரவேண்டும் என்பதே. கடந்த பத்து ஆண்டுகளில் ஏராளமான புதிதாகச் சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கு எழுத வர ஆரம்பித்துள்ளனர். ஓர் ஆரோக்யமான மாற்றம். கண்டிப்பாக இது போதாது. இன்னும் இன்னும் நிறைய நபர்கள் எல்லாத் துறைகளிலிருந்தும் வர வேண்டும். அப்போது ஒரு பன்முகத்தன்மை தானாக விளையும். நாம் குழந்தைகள் ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள் என்கின்றோம், தனி ரசனை கொண்டுள்ளவர்கள் என்கின்றோம். ஆகவே அவர்களுக்கான பலதரப்பட்ட புத்தகங்களைத் தரும்போதே ஓரளவிற்கு எல்லோர் ரசனைக்கும் புத்தகங்கள் கொடுக்க இயலும். புத்தக வடிவமைப்புகள் இப்போது போதிய புதிய முயற்சிகளை (ஆங்கிலத்தில் சர்வசாதாரணமாக செய்பவற்றை) இன்னும் நம்மால் செய்ய முடியவில்லை.அங்கிருந்து வரும் குரல் “போதிய வாசிப்பு இல்லை, நிறையப் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தால், நிறையப் புத்தகங்களை வாங்க ஆரம்பித்தால் நிறையப் புது முயற்சிகளைச் செய்யலாம்” என்கின்றார்கள். நிறைய முதலீடு தேவைப்படுகின்றது. குறைந்த அளவில் அச்சிட்டால் இன்னும் விலை அதிகமாகும். அது பெரிய விவாதிக்க வேண்டிய பகுதி. எல்லாமே வாசிப்பில் வந்து நிற்கின்றது.

பாடப்புத்தகம் தாண்டிய வாசிப்பு வேண்டும் என்று வலுவாகப் பேசி வருகின்றோம். இந்தக் குரல் எல்லா இடங்களிலிருந்தும் வருவது மகிழ்வளிக்கின்றது. ஆனால் குரல்களின் அளவிற்கு முன்னேற்றம் நடக்கின்றதா என்றால் கண்டிப்பாக இல்லை. இந்த வாசிப்பில் பெரும் கவனத்தினை இந்த ஒட்டுமொத்தச் சமூகம் செலுத்தாவிட்டால் பல்வேறு சிக்கல்களை வரும்காலத்தில் சந்திக்க நேரும். ஆழமில்லாத, கவனமில்லாத, எதையும் ஆழமாக அலசாத ஒரு சமூகத்தை வாசிப்பின்மை உருவாக்கிடும். ஒரு வலுவான ஆக்கப்பூர்வ விமர்சனச் சமூகத்தைக் கட்டமைக்க வாசிப்பு மிக அவசியமாகின்றது.

பலமுனைகளிலிருந்து இதற்கு முயற்சிகள் தேவை. வெகு நிச்சயமாக இது கூட்டு முயற்சியினால் மட்டுமே சாத்தியம். குழந்தைகளுடன் என்றும் இருக்கும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இதற்கான பல்வேறு வடிவங்களில் திட்டங்கள் தேவை. வகுப்புகளில் வாசிப்பினை உற்சாகப்படுத்தும் உத்திகள் தேவைப்படுகின்றது. பள்ளிகளில் அதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டியுள்ளது. பள்ளிகளில் இருக்கும் நூலகத்தினை செம்மைப்படுத்த வேண்டியுள்ளது. நூலக பயன்பாட்டினை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. பாடத்திட்டத்திற்குள் வெளி நூல்களை வாசிக்க இடமளிக்க வேண்டியுள்ளது. நூதனமான திட்டங்கள் கொண்டு புத்தக உலகின் நுழைவு வாயிலில் அவர்களை நிற்க வைக்க வேண்டியுள்ளது. எது சரி எது தவறு என்று தெரிந்துகொள்ள இந்த வாசிப்பு அவசியமாகின்றது. தனக்கு வரும் செய்திகள் எல்லாம் சரியா, இட்டுகட்டியவையா என்று தெரிந்துகொள்ளவேனும் வாசிக்க வேண்டியுள்ளது.

பெற்றோர்கள் முன்பைவிட தங்கள் குழந்தைகள் தமிழ்ப் புத்தகங்கள் வாசிக்கவேண்டும் என்ற விருப்பம் அதிகரித்துள்ளது. ஆனால் தங்கள் குழந்தைகள் வாசிக்க வேண்டும் என நினைக்கும் முன்னர் தானும் புத்தகங்களுடன் இருக்க வேண்டாமா? குழந்தைகள் வார்த்தைகளை விட வாக்கியங்களைவிடக் கண்களால் உள்வாங்குவதையே பற்றிக்கொள்கின்றனர். ஆசிரியர்கள் வாசித்து அவர்கள் பார்ப்பதே இல்லை. ஆசிரியர்களின் கைகளில் புதிய புத்தகங்களை அவர்கள் பார்ப்பதே இல்லை. புத்தகங்கள் மீதான காதலையும் அன்பினையும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் நினைத்தால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். சரி, வாசிக்க ஒரு பற்றுதல் வந்துவிட்டது அடுத்து? நூல்களைத் தேடிச் செல்வார்கள். அவர்கள் அப்படி வரும்போது நூல்கள் தயாராக இருக்கவேண்டும். இந்த இரண்டு வேலைகளும் – வாசிக்க வைத்தல் & தரமான நூல்களைத் தயாரித்தல் – இரண்டுமே மிகக் காத்திரமாக நடைபெறவேண்டும்.

வாசிக்க வைத்தல் எதோ பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் மட்டுமல்ல. அது சமூக கடமை. அரசும் பள்ளிக்கல்வித்துறையும் பொதுச் சமூகமும் எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் குழந்தை நேயர்களும் குழந்தை செயல்பாட்டாளர்களும் கதை சொல்லிகளும் எல்லோருமே ஒன்றிணைந்து இந்தப் பணியைச் செய்ய முற்படவேண்டும். இது காலத்தின் கட்டாயம். மொழியைக் காக்கவும், வேகமாக ஓடும் குழந்தைப் பருவத்தை நிதானமாக்கவும், செழுமையான கனவுகளை விதைக்கவும் மிக மிகக் கட்டாயமாகின்றது. கூட்டாக நகர்த்துவோம்.

Author

Related posts

நாள்: 21

நாள்: 20

நாள்: 19