மம்தானியின் எழுச்சி அதிவிரைவாகவும் மேல்நோக்கியும் மடமடவென வளர்ந்தது. டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட அமெரிக்க அதிகார வர்க்கத்தில் பலர், மம்தானி யார் என்பதைப் புரிந்துகொள்ள முயல்கின்றனர். நவம்பர் 4ஆம் நாள் தேர்தலில் நியூயார்க்கின் ஜனநாயகக் கட்சியின் மேயர் வேட்பாளராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மம்தானி.
அவர் பாலஸ்தீன விடுதலைக்காகக் களத்தில் நிற்கிறார் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். 2002-ல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு இந்திய உச்சநீதிமன்றம் மோடிக்கு “தூய்மையான சான்றிதழ்” அளித்திருந்தாலும், நரேந்திர மோடியை மம்தானி படுகொலைக்குக் காரணமாக குற்றம் சாட்டுகிறார் என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
தேர்தல் நேர்காணலில், மேயர் வேட்பாளர்களிடம் இந்தியப் பிரதமர் நியூயார்க்கில் மற்றொரு பேரணியில் கலந்து கொள்ள உதவுவீர்களா என்று கேட்கப்பட்டது. அனைவருமே ஒற்றைக் குரலில் இல்லை என்றே பதிலளித்தார். தான் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மோடியை ஒருபோதும் சந்திக்க விரும்பமாட்டேன் என்று மம்தானி வலியுறுத்திக் கூறினார்.
இந்த வருடம் செப்டம்பரில் மோடி 75-வது வயதை அடைவார். பாஜக பொறுப்பாளர்களுக்கு அவரே விதித்த ஓய்வு வயதை மதித்தால் வருகிற செப்டம்பரில் அவர் ராஜினாமா செய்யலாம். அப்படி மோடி ராஜினாமா செய்தால் மம்தானி சந்திக்கும் சூழலே ஏற்பட வாய்ப்பில்லை.
மம்தானியின் விமர்சகர்கள் (மற்றும் பல ஆதரவாளர்கள்) அவர் ஜனநாயகக் கட்சியின் முக்கிய முகமான ஆண்ட்ரூ கியூமோவைத் தோற்கடித்து, கட்சியின் அமைப்பைத் தகர்த்தார். எவ்வாறு அல்லது ஏன் என்பதை முழுமையாகப் பிறர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. கியூமோவின் மேல்தட்டு ஆதரவாளர்களில் புரூக்ளின் நகரைச் சேர்ந்த சியோனிஸ்ட் யூதர்கள் உள்ளனர். அவர்கள் மம்தானியைத் தோற்கடிக்க 25 மில்லியன் டாலர்களைத் திரட்டியதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் தற்போது அதிகரித்து வரும் யூத வெறுப்புக் குற்றங்கள் உட்பட, வெறுப்பால் நேரும் குற்றங்கள் மம்தானியைத் தொந்தரவு செய்கின்றன. அவற்றைத் தடுக்கும் வழிகளைத் தேடுகிறார். இதைத் தடுக்க, நகர மேயர் பட்ஜெட்டை 800 சதவீதம் உயர்த்துவேன் என அவர் உறுதியளித்தார்.
எனினும், டிரம்ப் அவரை “கம்யூனிஸ்ட் பைத்தியம்” என்று அழைத்துள்ளார், உகாண்டாவிலிருந்து புலம்பெயர்ந்தவர் என்றும் சிறுமைப்படுத்த முன்றுள்ளார்.
33 வயதேயான மம்தானி என்கிற இந்த இளைஞருக்குப் படுகொலை மிரட்டல்கள் வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மம்தானியின் நோக்கும் செயலும் மதச்சார்பற்றது. அவரது குடும்பம் முற்போக்கானது. இந்து – முஸ்லிம் கலப்பில் உருவானது. அப் பாரம்பரியத்தைப் புரிந்து கொள்வது இந்த நேரத்தில் அவசியமாகிறது.
அவரது பெற்றோர் அவருக்கு குவாமே நகுருமாவை (Kwame Nkrumah) மனதில் வைத்துதான் பெயரிட்டுள்ளார்கள். ஆஒரிக்காவின் கானாவை பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் இருந்து விடுதலைக்கு இட்டுச் சென்ற போராளி தான் குவாமே நகுருமா. முற்போக்கு இடதுசாரி அரசியல் தலைவர். ஆனால் 1966 இல் சீனாவுக்கு அவர் பயணம் செய்த வேளையில், மேற்கத்திய ஆதரவுடன் நடந்த இராணுவப் புரட்சியால் அவர் தூக்கியெறியப்பட்டார். என்குருமா, பாட்ரிஸ் லுமும்பா, கென்னத் கவுண்டா, ஜூலியஸ் நைரரே ஆகியோருடன் சேர்ந்து, பின்காலனிய காலத்தில் ஆப்பிரிக்காவிலும் அதற்கு அப்பாலும் மக்களுக்கு வழிகாட்டியாக, உத்வேகமாகத் திகழ்ந்தார். தெற்காசியர்கள் அவரை உண்மையான நண்பராகக் கண்டனர். ஜவஹர்லால் நேரு அவரை ஒரு தோழராக அரவணைத்தார். மார்ட்டின் லூதர் கிங்கின் அமைதி – எதிர்ப்புக் கோட்பாட்டுக்கு அவர் ஆதரவாக இருந்தார்.
சோரான் மம்தானி கம்பாலாவில் பிறந்தவர். அவரது தந்தை குஜராத்தி ஷியா முஸ்லிம் வம்சாவளியைச் சேர்ந்தவர். அவரது தந்தையான மஹ்மூத் மம்தானி காலனியம், இன மோதல்கள், புலம்பெயர்வு ஆகிய துறைகளில் ஆய்வுகள் செய்து ஒரு அறிஞராக வளர்ந்தவர். மஹ்மூத் மம்தானி காலனியம், சமூகம் குறித்து சிறந்த புத்தகங்களை எழுதியுள்ளார், அவற்றில் “நல்ல முஸ்லிம், கெட்ட முஸ்லிம்” மிகவும் பாராட்டப்பட்ட ஒன்றாகும். அவரது மகனின் போக்கைப் புரிந்து கொள்ள, அவரது தந்தையின் அறிவார்ந்த தேடலைப் பற்றியும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது. மஹ்மூத் மம்தானியின் நூல்கள் அனைத்துமே நான் வாசித்திருக்கிறேன். என் நூலகத்தில் அவை உள்ளன என்பது எனக்குப் பெருமிதமே.
“நல்ல முஸ்லிம், கெட்ட முஸ்லிம்” புத்தகத்தில், மம்தானி இஸ்லாமிய அரசியல் எழுச்சியைப் பற்றி விவாதிக்கிறார். மேலும் ஒசாமா பின் லேடனின் தாக்குதலுக்குப் பின் அமெரிக்காவில் முஸ்லிம்கள் எப்படி அதனை எதிர்கொண்டார்கள் என்பதையும் அவர் விவரிக்கிறார். அதனைத் தொடர்ந்து எழுந்த கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்கிறார்.
“நல்ல” முஸ்லிம்கள் மதச்சார்பற்றவர்களாக அல்லது மேற்கத்தியர்களாக, “கெட்ட” முஸ்லிம்கள் அடிப்படைவாதிகளாக தீவிரவாதிகளாகப் பிரிக்கப்படுவதை அவர் கடுமையாக நிராகரிக்கிறார். அவரது பார்வையில், இஸ்லாமிய அரசியல் மேற்கத்திய உலகுடனான நவீன சந்திப்பில் இருந்து உருவாகியது. அதன் மையத்தில் உள்ள பயங்கரவாத இயக்கம், வியட்நாமில் அமெரிக்காவின் தோல்விக்குப் பிறகு Proxy War எனும் புதிய ஆயுதத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து உருவானது என்கிறார்.
இந்தப் புத்தகம் இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்த இன்றைய கருத்துகளுக்குப் பொருத்தமானதாகவும் உள்ளது. மேற்கத்திய நாடுகளால் “முல்லாக்கள்” ஆளும் ஈரான் அவதூறாகப் பேசப்படும் இவ்வேளையில், 5,000 ஆண்டு பழமையான நாகரிகம் அது என்கிறார்.
கொஞ்சம் கவனமாகப் பார்த்தால், பனிப்போருக்குப் பிந்தைய மேற்கத்திய எதிர் இலக்குகள் அனைத்தும் முற்றிலும் மதச்சார்பற்ற நாடுகளாக இருந்தன — ஈராக் முதல் லிபியா, அல்ஜீரியா முதல் சிரியா, லெபனான் முதல் யேமன் வரை. மதச்சார்பற்றவராக இருந்தால் கண்டனம், இல்லையென்றாலும் கண்டனம்.
மம்தானி ருவாண்டாவில் இன வன்முறையைப் பகுப்பாய்வு செய்வதற்கு ஒரு முக்கியமான தொடக்கப் புள்ளியையும் தனது எழுத்தின் வழியே வழங்குகிறார். “நெய்தர் செட்டிலர் நார் நேட்டிவ்: தி மேக்கிங் அண்ட் அன்மேக்கிங் ஆஃப் பர்மனென்ட் மைனாரிட்டீஸ்” என்ற புத்தகம், நவீன அரசு 1648-இல் வெஸ்ட்ஃபாலியா உடன்படிக்கையுடன் தொடங்கவில்லை, மாறாக 1492-இல் உருவானது என்று வாதிடுகிறது: இது ஸ்பெயினில் இருந்து யூதர்களும் முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்ட ஆண்டு. இது ஐரோப்பியர்களின் அமெரிக்க காலனியாக்கத்துடன் ஒத்துப்போனது.
குவாமே மம்தானியின் தாய் மீரா நாயர், ஒரு முற்போக்குத் திரைப்பட இயக்குநர். அவரது திரைப்படங்களில் சில, மாற்று சினிமாவின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகின்றன. “மான்சூன் வெட்டிங்”, “மிசிசிபி மசாலா”, “தி நேம்சேக்” ஆகியவை பரவலாகப் பேசப்பட்டவை. ஒன்று உகாண்டாவின் குடிசைப் பகுதி வாழ்க்கையைப் பற்றியது. மீராவின் திரைப்படங்கள், துடிப்பான கதைசொல்லல், பண்பாட்டுச் செறிவு, அடையாளம், புலப்பெயர்வு, மனித உறவுச் சிக்கல்களுக்குப் பெயர் பெற்றவை. பெற்றோரின் தாக்கம் அவரது மகனின் அரசியலில் தெளிவாகத் தெரிகிறது.
அவரது வெற்றி இன்னும் பாராட்டத்தக்கது, ஏனெனில் பாலஸ்தீன விடுதலைக்குத் தனது உறுதியான ஆதரவில் இருந்து மம்தானி சற்றும் பின்வாங்கவில்லை. அவரது கட்சி தெளிவாக இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் போதிலும் அவரது குரல் தனித்து ஒலிக்கிறது.
மம்தானியின் வெற்றிக்கு மற்ற காரணிகளும் உள்ளன. நியூயார்க்கைப் பற்றிய அவரது அணுகுமுறை, ஃப்ராங்க் சினாட்ராவின் “மேலே உயர வேண்டும்” என்ற சுயநலத் தேடலில் இருந்து வேறுபடுகிறது. சான்றாக, சோரன், சாகிர் லுதியான்வியின் மும்பையைப் பற்றிய கவலையில் இருந்து ஓர் உரையாடலைத் தொடங்கிறார் – “சீன் ஓ அரப் ஹமாரா, ஹிந்தோஸ்தான் ஹமாரா/ ரெஹ்னே கோ கர் நஹி ஹை, சாரா ஜஹான் ஹமாரா.” (உலகின் தொலைதூர மூலைகள் எனக்கு சொந்தமானவை, நான் அதன் வீடற்ற குடிமகன்.)
சாகிரைப் போலவே, மம்தானி “இரவில் உழைப்பவர்களுடன்“ தன்னை அடையாளம் காண்கிறார். “பகலில் அவர்கள் தங்கள் உழைப்பின் பலனை அனுபவிக்க முடியும்.”
“தொழிற்சாலையில் எட்டு மணி நேரப்பணி அல்லது கேப் (கார்) ஓட்டுவது என்ற உழைப்பானது EMI/Bills செலுத்துவதற்கு, குடும்பத்தை பசியாற்றுவதற்கும், விளக்குகளை எரிய வைப்பதற்கு, உங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு போதுமானதாக இருக்க வேண்டும்.”
1 comment