”வாக்குகள் துள்ளி வருகின்ற வாயினில்
நாக்கைச் சுருக்கல் நலம்
இந்த நாக்கு பிறந்ததிலிருந்து நம்மிடம் கூடத்தான் இருக்கிறது..ஆனால் அதைக் கட்டுப் படுத்தவில்லை எனில் அதல பாதாளம் தான்..அதுவும் இளமையில் தறிகெட்டு ஓடும்… ஏனெனில் உடலில் ஓடும் ரத்தம்… அதில் உள்ள உணர்வுகள் தரும் திமிர்…அந்த இளமைத் திமிரில் தான் போனது என் வாழ்வு…”
கொஞ்சம் அமைதியடைந்திருந்த நிலையில் ஷர்மியம்மா சொல்ல ஆரம்பிக்க என் கண் முன் விரிந்தது அவர் கதை..
சர்மிஷ்டை கொஞ்சம் துள்ளித் தான் காட்டில் ஓடினாள்.. மனதில் வீறிட்டு எழுந்த கோபத்துடன்… காரணம் தேவயானி.. அவள் அவளுக்கு முன் ஓடிக் கொண்டிருந்தாள்..
சர்மிஷ்டை யார்? அழகு ஆள்பலம் செல்வம் ஒருங்கே பெற்ற விருபாஷ மகாராஜாவின் புத்திரி…அரச குலம் அசுரகுலம் தேவயானி யார் கேவலம் அவர் தந்தையின் குருவின் புதல்வி.. தந்தையின் குரு சுக்ராச்சார்யார்.. பெரியவர் தான்.. பல வித்தைகள் கற்றவர் தான் .. இருந்தாலென்ன அழகாய் தோற்றத்தில் பெண் பெற முடிந்தது.. குணத்தை அழகாக்க முடியவில்லையே…
என்ன சொன்னாள்?
”உன் அப்பா ஒரு பிச்சைக் காரன்…. என் தந்தையிடம் கையேந்துபவர்…”
”அடியேய்.. நீ அந்தண குலமடி.. நீ அப்படிச் சொல்லாதே மன்னிப்புக் கேள்..”
”என்ன கேட்பது..என் அழகில் நீ சற்று மாற்றுக் குறைவு தான் என் பொன்னிறம் உனக்கிருக்கிறதா என்ன.?.”
”தேவயானி …”
அவள் சலங்கை மணிகள் கீழே சிதறிவிழுந்தாற்போலச் சிரிக்க சர்மிஷ்டையின் கோபம் எல்லை மீற ”அடியே உன்னை என்ன செய்கிறேன் பார்..”
தேவயானி ஓட.. ஓட ஓட… சென்றது ஒரு கிணற்றின் அருகில்
”சர்மி.. என்னை என்ன செய்யப் போகிறாய்”
ஒரு கணம் சர்மிஷ்டைக்குப் பாவமாய் இருந்தது..ஆனால் இளமையின் திமிர் கண்ணை மறைத்தது.. ஒன்றும் செய்ய வேண்டாம் பயமுறுத்தலாம்…
”உன்னை உன்னை”..என அருகில் செல்ல தேவயானியும் காலைத் தத்தித் தத்தி வைத்துப் பின்னால் செல்ல அது விளிம்பில்லாக் கிணறு…
டபக்க்.
கிணற்றினுள் விழுந்தது தேவயானி மட்டுமில்லை சர்மிஷ்டையின் வாழ்க்கையும் தான்..
எட்டிப் பதட்ட மனதுடன் பார்த்தால் ஆழமான கிணறு.. ”ஹச்சோ என்னசெய்வேன்?”
”தேவயானி இரு ஆட்களை அழைத்து வருகிறேன்..”
ஓடினாள் சர்மிஷ்டை..
திரும்பி தோழிகள் காவலர்களுடன் வரும்போது காலம் கடந்துவிட்டிருந்தது.. தேவயானி கிணற்றின் மேல் அம்பால் செய்யப்பட்ட குடத்தில் .. கூட இருந்தது யார் அந்த வாலிபன்?… மன்னரின் உடை… எல்லை மீறிய இளமை ததும்பும் உடற்கட்டு. கூடவே நிமிர்ந்து இவளைப் பார்த்து வெறுப்பை உமிழும் கண்களுடன் தேவயானி..
”வாடி வா சர்மி..இவர் யார் தெரியுமா யயாதி…”
வணங்கினாள் சர்மிஷ்டை..
”எனக்கு வணக்கம் செய்..ஏனெனில் நான் யயாதி மன்னனின் மனைவி”
அதற்குள்ளாகவா?. வினாக்கள் விழியில் அம்புகளாக வெளிவர சிரித்தாள் தேவயானி…கனன்ற அடுப்பில் கட்டைகள் வெடிக்கும் போது ஏற்படும் ஒலி போல…
”ஆம் அவரும் ஒப்புக்கொண்டார்..இன்னொன்றும் சொல்கிறேன் அடிமையே…”
”அடிமையா நானா?”
”ஆம்.. நீ எனது பணிப்பெண் ஆகப்போகிறாய் ..என் தந்தையிடம் சொல்லி உன்னைக் கேட்கப் போகிறேன் ”என்றாள் தேவயானி..
சொன்ன வண்ணம் சரிமிஷ்டை பணிப்பெண் ஆனாள்..விருபாக்ஷ மகாராஜாவின் கெஞ்சலினால் நாட்டு மக்களின், அசுரகுல நன்மைக்காக…
**
”கொஞ்ச நஞ்சம் துன்பம் அனுபவிக்கவில்லை..எக்கச்சக்கமாகத் தான் நிர்மலா ”என்றார் சர்மிஷ்டை
என் கண்களில் ஆற்\று வெள்ளம் எப்போது புலம் பெயர்ந்தது தெரியவில்லை..
”இன்னும் இருக்கிறது..”
*
சர்மிஷ்டை ஹஸ்தினாபுரத்தில் பணிப்பெண்ணாக இருந்தாலும் நிம்மதி..அப்பா என்ன சொன்னார்..தியாகம்… இது தியாகமில்லை…தந்தையின் சொல்லை… குலத்தை…க்காக்க தனயனுக்கு மட்டுமல்ல பெண்ணுக்கும் உரிமை உண்டு..அது தான் செய்தாள்
தேவயானியின் சொல்லம்புகள் வேலை வேலை எனத் துன்புறுத்தல்கள்… எறும்பினும் கீழாய் அரசகுமாரியான , செல்வச் செழிப்பில் வளர்ந்த தன்னை நசுக்கினாலும் பொறுமை காத்தாள்..காரணம் அவள் மனதில் இருந்த அன்பு..
யயாதிக்கும் உறுத்தல் இருந்திருக்க வேண்டும்.. சாயா வனத்தில் முனிவர்களுக்காக இவள் பணிவிடை புரிய அமர்த்தப் பட்டிருக்கும்போது கிடைத்த பொழுதில் ஓவியம் வரைவது அவள் வழக்கம்..
அப்படி அவள் மனதில் யயாதி மன்னரைப் பற்றி நினைவு மின்னல் பூத்த ஒரு பொழுதில் ஓவியம் ஒன்று வரைந்தாள்..மன்னரின் அழகில் கால்பகுதிகூட வரவில்லையே என மறுகியவாறு இருந்தாள்
எதிர்பாராவிதமாய் ஒரு மழை நாளில் சாயாவனத்தில் சந்திப்பு நிகழ்ந்தது சர்மிஷ்டைக்கு
”சர்மி”
”யார்?”
நிமிர்ந்தால் யயாதி மன்னர்.. தேவயானியின் கணவர்…
”சொல்லுங்கள் என்ன செய்யவேண்டும் மன்னவா?”
”செய்வதற்கு நிறைய இருக்கிறது.. தேவயானியின் வார்த்தைக் கீறல்கள் என் இதயத்தை ரத்தம் செய்ய வைக்கின்றன”
”மன்னிக்க மன்னா..அவரவர் தேடிக் கொண்ட விதி அதில் தப்ப முடியாது –” என்றாள் சர்மிஷ்டை..” என்னிடமும் மூலிகை எதுவும் இல்லை…”
”இரு பெண்ணே..இது உன்னறையா… உன்னையாவது ஒழுங்காய் வைத்திருக்கிறாளா என் சகதர்மிணி…”. யயாதியின் விழிகள் சுழல அகப்பட்டது சுருட்டி வைத்திருந்த ஓவியங்கள்..
பிரிக்க .”.அடடே மான்களின் மூக்குரசல்..ஆஹா வேப்பங்கிளையில் ஆடும் குருவி…. அட மஞ்சள் பூவில் சுழலும் வண்டு..இது என்ன..?”
சர்மிஷ்டை நடுங்கினாள்..அவள் அரசரை வரைந்த சுமாரான ஓவியம்..
பேச்சு எதுவும் வரவில்லை மன்னரிடமிருந்து..
”என்னை மன்னியுங்கள்..அவ்வளவாக வராத ஓவியம்”
”அழகே நீயே ஒரு ஓவியம் நீ வரைந்த ஓவியம் எப்படி அழகில்லாமல் இருக்கமுடியும் ” என்றபடி சர்மிஷ்டையின் கரம்பிடித்தார் யயாதி..
*
”பின்?” – ஆவலுடன் கேட்டேன் நான்..
”பின் என்ன?”.. சிரித்தார் சர்மியம்மா..” என்ன கன்னிகா என் கதை வேண்டும் என்றாயே தெரிந்ததா?”
கன்னிகாவின் கண்கள் பனித்தன..”தெரியும்..ஆனால் உங்களைத் திமிர் பிடித்தவர் என்று தான் எல்லாரும் தவறாகச் சொன்னார்கள்..நீங்கள் எல்லாரிடமும் வஞ்சகமில்லாமல் அன்பை வாரி வழங்குபவர் எனத் தெரியும்..நான் சும்மா”
“அப்புறம்?” என்றேன் நான்
”அப்புறம் நீ மயங்கும் புரு பிறந்தான்.. என் தொல்லைகள் வளர்ந்தன.. தேவயானிக்குத் தெரியாமல் தப்பி இங்கு வந்து வளர்க்கிறேன்..பார்த்தாயா ராஜ்யாதிபதியின் நிலைமை..இங்கு முனிவனைப் போல…”
”இல்லை அம்மா இல்லை.. நான் முனிவனில்லை.. நான் ராஜ மாதாவின் மகன் ..எனக்கு ராஜ்யம் வேண்டாம்..உங்களுக்கு மரியாதைவேண்டும்.. இப்போதே சென்று…” புருவின் குரல்..பின்னால் நின்றிருந்தார்..எப்போது வந்தார்?
”இல்லை புரு.. என் மனம் திறந்ததற்குக் காரணம் என்னவெனில்”
”ஒரு காரணமும் அறியவேண்டாம் அம்மா” என்றார் புரு..என்னவர்.”.இவளை ஆனை மங்கலத்தில் விட்டு விட்டு அப்படியே அஸ்தினா புரம் செல்கிறேன்..”
எனக்குப் பக்கென்று ஆகி இருதயம் புறாச் சிறகுகளைப் போல படபடத்தது..
(தொடரும்)