நாள் – 5

சொன்ன மாதிரியே சபரி பைப்புக்கடியிலயே தூங்க, தண்ணி அவன் மூஞ்சிலயே விழுந்து எழுப்ப, அவனும் கமருதீனும் சரியா வந்து டாங்கிய வச்சு தண்ணி பிடிச்சானுங்க.

இங்குட்டு சபரிகிட்ட கனி “யப்பா டேய் நந்தினி கிட்ட கொஞ்சம் பாத்து பேசுங்கடா, அவளுக்குள்ள ஒரு சந்திரமுகி எப்பவும் அலர்ட்டா இருக்கு… தட்டுனா வெளிய வந்துரும்”னு வார்னிங் குடுத்துச்சு.

அலாரம் அடிக்க, எல்லாரும் எந்திரிச்சு வெளிய வந்தானுங்க. ஆனா சுபி மட்டும் இழுத்து போத்திட்டு தூங்கிட்டு இருந்துச்சு. ஆளாளுக்கு வந்து கூப்ட்டானுங்க. கனி வந்து “யம்மா தாயே எந்திரிச்சு வந்தேன்னா, பாட்ட போட்டு ஆடிட்டு பாத்திரத்த அடுப்புல வப்பேன்”ன்னு கெஞ்ச, “அட என்னங்கடா ஒரு பவர முழுசா யூஸ் பண்ண விடுறாய்ங்களா”ன்னு மனசே இல்லாம சுபி வெளிய வந்த உடனேயே “மனசிலாயோ” பாட்ட மார்னிங் சாங்கா போட்டானுங்க.

கிச்சன் ஏரியால கெமி அந்தப் பக்கமா நின்னுட்டு இருக்க, இந்த பக்கமா பாருவும், வாட்டர் லெமனும் உக்காந்து சாப்ட்டுட்டு இருந்தானுங்க. பாருவுக்கு கெமி மேல வன்மன் குறையல. திண்ணையில உக்காந்து ஜாடையா பேசுற கிழவி கணக்கா வாட்டர் லெமன் கிட்ட வன்மத்த கக்குச்சு.

பாரு: அண்ணே, மனுஷங்க எப்டியெல்லாம் இருக்காங்க பாருங்க

வாட்டர் லெமன்: ஆமா, கலை சூன்ய பொம்மை மாதிரி இருக்கான், வியானா நட்டு கழண்ட மாதிரி இருக்கு, அப்சரா எங்க இருக்குண்ணே தெரியல, ஆனா நான் நெறைய மாதிரி இருப்பேம்மா…உனக்கு இப்போ யாரு மாதிரி தெரியனும்பா நான்? அமிதாப் பச்சன் மாதிரி செஞ்சு காட்டவாமா? இங்க பாரும்மா..

பாரு: யோவ், நிறுத்துறியா? நான் ஒண்ணு சொன்னா அதுக்கு பதிலுக்கு பதில் சொல்லக்கூடாது. தலைய மட்டும் ஆட்டு

வாட்டர் லெமன் தலைய ஆட்ட

பாரு: இப்போ என்ன அந்நியன்ல வந்த எருமை மாடு மாதிரி பெர்பார்ம் பண்ணிட்டு இருக்கியா?

வாட்டர் லெமன்: நீதான தலைய மட்டும் ஆட்டுன்னு சொன்ன

பாரு: ஓ அத பாலோ பண்றியா நீயீ! சரி கேளு, இங்க பாத்தியா பாரு கைய பொராண்டி விட்டு ரத்தக்கட்டாக்கி விட்டுருக்கு…இந்தா தலைய மட்டும் ஆட்டாம அப்பப்போ ம்ம்ம், ஆமா, அப்டியா? குட், அப்டிதான் பண்ணனும், நீ பண்ணது சரி, வெரி பேட் இப்டியெல்லாம் சவுண்டு குடு…

வாடர் லெமன்: அப்டியா?

பாரு: என்ன போட்டு பொரட்டி எடுத்து காயத்த ஏற்படுத்திட்டு, எங்கிட்டயே வந்து சாப்டுறியான்னு கேக்குறா? என்ன எகத்தாளம் இருக்கனும்

வாடர் லெமன்: ம்ம்ம்

பாரு: யோவ் இதுக்குதான் நீ அப்டியான்னு கேக்கனும்….அவ பாத்தியா காதுலயே வாங்காத மாதிரி நடிக்கிறா

வாட்டர் லெமன்: அப்டிதான் பண்ணனும்

பாரு: அடங்கொய்யால…ஒழுங்கா பேசுறத கேளு. வந்துர்ராய்ங்க, செஞ்சதையும் செஞ்சுப்புட்டு சாப்டுறியா தூங்குறியான்னு…முகமூடி போட்ட மூஞ்சியோட

வாட்டர் லெமன்: ஆமா…குட்

பாரு: இவன கூட்டு சேத்ததுக்கு நடு ரோட்டுல போயி தண்ணி லாரிக்கு முன்னாடி நிக்கலாம்…டேய் சபரி நீயாச்சும் கேளுடா

சபரி கிட்ட சொன்னதுக்கும் அவன் பெருசா ரியாக்ட் எதும் பண்ணாம

சபரி: நீ ஐஸ் வை…ஏன் வாட்டர் லெமன்…ஐஸ் வச்சா சரியாகும்ல. நீங்க டாக்டர் தான, அவளுக்கு கொஞ்சம் ஐஸ் வைங்க

வாட்டர் லெமன்: சரிம்மா, பாரு உன்ன போல ஒரு அறிவாளிய பெத்ததுக்கு இந்த நாடு பெருமை கொள்ளும்

சபரி: என்னண்ணே இது?

பாரு: ஐஸ் வைக்கிறானாமாம்….என் நிலமைய பாத்தியா?

ஆனா கெமியோ “நீ என்னத்தையாச்சும் ஒளறிட்டே திரி”ன்னு அது பாட்டுக்கு பசங்க கூட பாங்க்ரா ஆடிட்டு இருந்துச்சு. பார்வதிக்கு பொறுக்காம “பாத்தீங்களா என்ன ஒரு ஊக்கம்னு. ஊருக்குள்ள ஒரு பார்வதிய பொளந்துட்டு எவ்வளவு ஜாலியா ஜாலிலோ ஜிம்கானா பாடிட்டு இருக்காய்ங்கன்”னு பொலம்பிட்டே திரிஞ்சிச்சு.

ஜெயில் சும்மாவே இருக்கேன்னு பிக்கி வந்து “இதெல்லாம் எதுக்கு பிபிக்குள்ள தண்டமா சுத்துது?”ன்னு நெனைக்கிற ஆள செலெக்ட் பண்ணுங்க, ஜெயிலுக்கு அனுப்புவோம்”ன்னு சொன்னாப்ல. அப்டி பாத்தா பிக்கியத்தான் தூக்கி உள்ள போடனும்.  இவனுங்களுக்குதான் யாரையாச்சும் கைகாட்டனும்னா கரகமே ஆடுவானுங்களே, ஆளாளுக்கு சிலர சொல்ல, ரட்சகன் காந்தியையும், வினோத்தையும் சொல்லுச்சு பாரு அப்றம் அதப் போட்டு கெமி பொரட்டி எடுத்த காயம் சுருக்குன்னு வலிச்சு நியாபகப்படுத்த “நைட்டானா போத்திக்கலாமா, நான் கொஞ்சம் மாத்திக்கலாமா?”ன்னு கேக்க, “ரைட்டு ஏதோ கண்டெண்டு சிக்கப்போகுது போலன்னு பிக்கியும் சந்தோஷமா “உண்மைக்கான வெகுமதி…அதுதான் உனக்கு அனுமதி”ன்னு சொன்னாப்ல. “கெமியால என் உயிருக்கு ஆபத்து நேரலாம்னு இன்டர்போல்ல இருந்து இன்பர்மேஷன் வந்திருக்கு…என்னய பொரட்டுனதப் பாத்தீங்கள்ல. உயிர் பயத்துலயே உயிர் போயிருமோன்னு பயமா இருக்கு. அதனால இவள தூக்கி ஜெயில்ல போடுங்க சார்”ன்னு பெட்டிஷனப் போட்டுச்சு. அதையும் கெமி பெருசா கண்டுக்கல. கடைசியில வியான்னாவும், வினோத்தும் கைதிகளா ப்ரொமோட் ஆனாய்ங்க.

கிச்சன்ல கனி, ப்ரவீன், ஆதிரையெல்லாம் பேசிட்டு இருந்தாங்க. “உணவு பற்றாக்குறையா இருக்கு இந்த சுபி வந்து சிக்கன் சப்பாத்தி கேட்டு உயிர வாங்குது”ன்னு சொல்ல, “சிக்கன் குழம்புல உப்ப அள்ளி போட்டுட்டானுங்க. கேட்டா தெரியாம கனியும், ப்ரவீனும் மாத்தி மாத்தி உப்பு போட்டாங்கன்னு நாடகத்த போடுவோம்னு சொல்லி உப்ப அள்ளி கொட்டிட்டானுங்க. அது மாதிரியே எல்லாருக்கும் முன்னாடி ட்ராமவ அரங்கேற்றம் பண்ணாய்ங்க. சுபிய கூப்ட்டு செக் பண்ண சொன்னா அது செக் பண்ணிட்டு “டேய் நானே மீனவப் பொண்ணு, கடலை விட இந்த குழம்புல உப்பு அதிகமா இருக்கேடா”ன்னு கண்ண மூட, வியான்னா வந்து வாயில வச்சுட்டு “உப்பு ஓகே காரந்தான் கண்ணுல தண்ணி வர வைக்குது”ன்னு சொன்னதும்….பிக் பாஸ் சம்ஸ்தானமே ஆடிப்போயிருச்சு. கனிக்கே “நாம உப்பு போட்டோமா இல்ல தப்பா மொளகாப் பொடியப் போட்டோமா?”ன்னு குழப்பம். ஆனாலும் அந்த உப்பு போட்ட சிக்கன் குழம்பையும் சப்பு கொட்டி சாப்ட்டானுங்க சூப்பர் டீலக்ஸ் ஆளுங்க. அதுக்கப்பறமும் இந்த சண்ட போடுற ட்ராமவ ப்ரவீன், கனி, ஆதிரை கண்டினியூ பண்ணாங்க. ஆனா திங்குற சோத்துல உப்பள்ளி போட்டு என்ன சாதிச்சானுங்கன்னு தெரியல. அப்பறம் பிக்பாஸ் கனிய உள்ள கூப்டாப்ல ஆனா என்ன ஏதுன்னு சொல்லாம விட்டுட்டானுங்க.

கேப்டனுக்கான ஃபைனல் டாஸ்க்.

3 பேரும் உள்ள போனானுங்க. கருப்பு கோமணம் மாதிரி ஒரு துணி, ஒரு மாஸ்க், ஒரு யூனிபார்ம் மூணும் இருந்துச்சு. துணிய சூஸ் பண்ணா பேசக்கூடாதாம், யூனிபார்ம சூஸ் பண்ணா அதோடயே சுத்தனுமாம், மாஸ்க் போட்டா மாஸ்க்கோட இருக்கனுமாம். தேவப்பட்டா சீசன் முழுக்க இப்பிடியே இருக்க வேண்டி வரும்னு சொன்னான்ய்ங்க.

துஷார் துணி எடுத்து கட்டிட்டான் பேசாமையே ஜெயிப்பாண்டா இந்த துஷார்னு சொன்னான்

வெள்ளை கலர் யூனிபார்ம் மாதிரி நடுநிலையா இருப்பேன்னான் ப்ரவீன்

முகத்தயே காட்டாம எல்லாத்தையும் நாலு காட்டு காட்டுவேன்னு சொல்லுச்சு ஆதிரை.

இதெல்லாம் ஒரு விளக்கமாடா?

வெளிய வந்தானுங்க. துஷார சூஸ் பன்ணானுங்க. ஆனா பிக்கி அவன வாய் துணிய கழட்ட சொல்லிட்டு மத்த ரெண்டு பேரும் அப்டியே சுத்துங்கன்னு சொல்லிட்டாப்ல.

புது கேப்டன அள்ளி தூக்கி கொண்டு போயி ரூம்ல விட்டானுங்க. “எது நடந்தாலும் நீ தைரியமா இரு….ஆனா என்னய மட்டும் எப்டியாச்சும் காப்பாத்திருடா”ன்னு பிக்கி ஆசீர்வாதம் பண்ணாப்ல. ஆனா ஆதிரைக்கு இந்த ரிசல்ட் ஒப்புதலா இல்ல. இருக்குற எல்லாரையும் “நீ வாயேன்”னு கூப்ட்டு பொலம்பிட்டு இருந்துச்சு. இன்னும் அது தண்ணி டாங்கி கிட்ட மட்டும்தான் பொலம்பல. அப்பறம் பொறுக்க முடியாம மாஸ்க்க கழட்டி எறிஞ்சிருச்சு. பிக்கி வையப்போறாருன்னு சொன்னதுக்கு “அவனதான் தேடிட்டு இருக்கேன், இது ஒரு தீர்ப்பாடா? மூஞ்சிய காட்டிட்டு சுத்துனாலே இங்க அட்டென்ஷன் இல்ல, இதுல மூஞ்சிய மூடிக்கனுமாம். நீயே சொல்லு நான் மூஞ்சிய காட்ட வேணாமா?”ன்னு துஷார் கிட்ட கேக்க, “நீ எத சொன்னாலும் எல்லார்கிட்டயும் மூஞ்சிய தான காட்டுறன்”னு கமருதீன் மைண்ட் வாய்ஸ் எங்க இருந்தோ கேட்டுச்சு.

ஆனா பாரு கலை கிட்ட “இது ஒரு கேம், ஸ்போர்டிவா எடுத்துக்காம பிக்கியவே வையுறா இவ. நான் கூடத்தான் வேலை பாக்க மாட்டேன்னு சொன்னேன். ஆனா அது மேட்டரே டோட்டலா வேற. அவளுக்கு தலையாக முடியலன்னு கடுப்புடா கலை”ன்னு அவங்கிட்ட அளந்து விட்டுட்டு இருந்துச்சு.

வியான்னாவும், வினோத்தும் ஜெயிலுக்கு போனாய்ங்க. கொஞ்ச நேரம் ஆச்சு, வெளிய உக்காந்திருந்த எல்லாரும் ஒண்ணு சேர உள்ள பாத்தாய்ங்க….

அங்க நந்தினிக்குள்ள இருந்த சந்திரமுகி வெளிய வந்து ஆடிட்டு இருந்துச்சு. ஆபீஸுல டார்ச்சர் அனுபவிக்குற ஜூனியர் பையனுக்கு ஆபீஸ் பார்ட்டியில சரக்க ஊத்தி விட்டா இருக்குற CEO மொதக்கொண்டு எல்லாரையும் செஞ்சு விடுவான்ல! அதப் பண்ணிட்டு இருந்துசு நந்தினி. எவன் என்ன சொல்லி ட்ரிக்கர் பண்ணாணோ தெரியல….”ஏய், என்னங்கடா நடிக்கிறீங்களா? ஏய் கெமி என் அன்ப சந்தேக்கபடுறியா? உன் சட்ட பேண்டு நல்லாயிருக்குன்னு சொன்னா உடனே உன்ன வந்து கட்டிப்பிடிக்கனுமா? ஏய் கனி, நேத்து கக்கூஸ்ல எனக்கு ஆறுதல் சொல்லிட்டா நீ பெரிய அன்னை தெரசாவா? டேய் நான் அன்பானவள், அடங்காதவள், அசராதவள்டா. வம்புல வேணா நீங்க ஜெயிக்கலாம், ஆனா அன்புல நாந்தான் வின்னர்ன்னு சொல்லி முடிச்சுட்டு. ஆமா எங்க இந்த கலையரசன் “வாடா, நீ ஒரு ஷக்தி குட்டி டா….ஜெயிக்கபோவது யாரு….நீதான். டேய் கதவ தொறங்கடா நான் வெளிய போறேன்ன்னு கத்திட்டு இருக்க..இந்தப் பக்கம் பாரு “இதான் சான்ஸு இவளுக்கு ஆறுதல் சொல்லி ஒரு ஆக்டப் போடுவோம்”னு அவ பக்கம் நகர, துஷார் வந்து பாருவ தடுக்க “தள்ளிப் போயிரு அது உனக்கு ரொம்ப நல்லது”ன்னு பெர்பார்ம் பண்ணிட்டு இருந்துச்சு.

அப்பறம் நந்தினி வெளிய போயி தனியா உக்கந்துச்சு. அங்க துஷார் வர,

துஷார்: என் அக்கா எனும் கோவிலை காக்க மறந்துட்ட பாவியடி கிளியே

நந்தினி: என்னய உனக்கு புரியுதாடா…இங்க அன்பு இல்லடா…வன்மமா இருக்காய்ங்க

துஷார்: என்ன தொட்டாலும் பாத்தாலும் தோஷமடி கிளியே…

நந்தினி: என்னால இங்க இருக்க முடியாதுடா…என் அன்ப களங்கப் படுத்துறானுங்கடா

துஷார்: எனக்கேழேழு ஜென்மத்திலும் மோட்சமில்லை கிளியே

நந்தினி: தம்பி, இந்தப் பிரச்சனையில நீ என்னய விட ரொம்ப அழுகுற…இல்லாத கிளியப் பாத்து பாட்டுப் பாடுற…ரொம்ப ஃபீல் பண்ற…எங்கூடா நீயும் வெளிய வரியா?

துஷார்: அக்கா, வெளிய போயி உடம்ப நல்லா பாத்துக்க. நான் இங்க இருந்து என் உடம்ப நல்லா பாத்துக்குறேன்.

இப்டி பேசிட்டு இருக்கும் போதே திடீர்னு “ஏய் என்னடா எட்டிப் பாக்குறீங்க? கண்டெண்ட் வேணுமா? இப்ப என்ன மயி****க்கு டா வந்து நிக்குறீங்க”ன்னு நந்தினி சொன்னதுக்கும், அங்க பாரு வந்து நிக்கவும் சரியா இருந்துச்சு. “ஆகா, இப்ப நகந்து போனோம்னா இவ நம்மள சொன்ன மாதிரி ஆயிரும். அப்டியே சிலை மாதிரி மூவ்மெண்ட் இல்லாம நிப்போம்”னு நின்னுச்சு.

அப்பறம் பாரு, நைஸா நந்தினி பக்கத்துல உக்காந்து அத சமாதானப் படுத்திட்டு இருந்துச்சு “நீ மருந்தெல்லாம் சரியா சப்டுறியா இல்லையா? அடிக்கடி டாக்டர போயி பாரு…வேணும்னா நம்ம கிட்ட ஒரு டாக்டர் இருக்கான்…வாட்டர் லெமன்னு பேரு…அவங்கிட்ட தெரபி போறியா?ன்னு அக்கறையா விசாரிக்க, “நீ உண்மையா இருக்க…இப்டியே இரு”ன்னு நந்தினி சொன்னதும் “அப்பாடி இவகிட்ட இருந்தே நல்ல பேரு வாங்கிட்டேன் இது போதும்”னு சொன்னதும். “அப்ப நீயும் வெளிய வரியா?”ன்ற மாதிரி நந்தினி பாத்துச்சு.

பிக்கி நந்தினிய கூப்ட்டாப்ல. “நான் வெளிய போகனும்”னு சொன்னதும் மொத சந்தோஷப்பட்டது பிக்கியாத்தான் இருக்கும். பேருக்குக் கூட “இன்னும் கொஞ்ச நாளு இருந்தாத்தான் என்ன?”ன்னு கேக்காம, “சைடு கேட்டு வழியா வெளிய கிளம்பு…போறப்ப கதவ நல்லா சாத்திட்டுப் போ”ன்னு சொல்லிட்டாரு. விஜய் சேதுபதி வந்து என்ன வெளக்கு வைக்குறாருன்னு பாக்கலாம்.

Series Navigation<< நாள் – 4நாள் – 6 >>

Author

Related posts

நாள்: 21

நாள்: 20

நாள்: 19