கறி

ஆடி, தீபாவளி பொங்கலுக்கு மட்டும்தான் கறி, நடுவுல எப்போதாவது குக்கு நோய் கண்ட கோழிக ஆரம்பத்துல சொணங்கலாத் தெரிஞ்சவுடனே, கீழத்தெரு கனி கிட்ட கொடுத்து கொதவளையத் திருகி வாங்கியாந்துருவா அம்மா,  

குப்பைமேட்டுத் தென்னைமரத்துக்குக் கீழ சணல் சாக்கு விரிச்சி வெடுக்கு வெடுக்குன்னு ஒவ்வொரு ரோமமா பிடுங்கியெடுக்க மொழுக்கட்டின்னு ஆகிடும். 

இப்படி அற்ப ஆயுசுல போகவச்சிட்டோம்னு வருத்தப்படுவாளோ? இல்லைன்னா முட்டை வரத்து இல்லாமப் போச்சோன்னு நினைப்பாளோ என்னவோ, தீயில வாட்டி உடம்பு முழுக்கா மஞ்சளை அப்பி அந்தக் கோழிய குளிக்க வைக்கிறதுலயிருந்து துண்டு துண்டா நறுக்கிப் போட்டு மண் ஒலமுடி நிரப்புற வைக்கும் வாய் ஓயாம வசவுகளை நிறுத்துனதில்லை. அது ஏன்னு இப்போ வரை புரியவும் இல்லை. அதுவும் அந்தப் பித்தப்பையை தனியாப் பிரிச்சி எடுக்குறது மலைபோல காரியம் அம்மாவுக்கு.அந்நேரம் யாரும் பேச்சுக் கொடுக்கக்கூடாது. ஏன்னா கொஞ்சம் விட்டுவச்சாக்கூட குழம்பு மொத்தமும் கசக்குமுங்குற பயம் ரொம்பவே. ஒரு வழியா எடுத்துப்போட்டு அக்கடா ன்னு நிமிந்து உட்கார்ந்தது கண்ணை விட்டு மறையலை இத்தனை வருஷமானாலும்.

 தாளிக்கிற கரண்டியில ஈரலை மட்டும் எடுத்துப் போட்டு, வதக்கி  அஞ்சாறு பிள்ளைகளுக்கும், நாக்குல தேன் நக்கக்கொடுத்தது கெணக்கா, இத்தூணுண்டு இத்தூணூண்டா பிச்சியெடுத்து ஊட்டிவிடுவா. அதுக்குப் பெறகு கறிக்கொழம்புக்குன்னே வறுத்தெடுத்த மசால்களை தாய்ப்பாட்டி அம்மியில அரைச்சி வழிச்சியெடுத்து வந்து, ஒன்னுபோல வெட்டியெடுத்த வேலிக் கருவேலங்கட்டைகளை, மண் அடுப்புல திணுச்சி அடுக்கிப் பத்தவச்சான்னா, மதமதன்னு நெருப்பு எரிய முன்ன உட்கார்ந்து தள்ளி  விட்டுட்டே இருப்பா. அசையாமக் கிடக்குற குளத்து நீருல சடசடன்னு பெய்ற ஆலங்கட்டி மழைக்கு குதியாட்டம் போட்டு குமிழ் குமிழாப் பொடச்சி அடங்குற மாதிரி, கொதிக்கிற குழம்பு வாசனை, பொடிசுகளை பக்கத்துல இழுத்து குத்தவைக்கச் சொல்லும்.

ஒரு பக்கம் அரிசி வெந்து சோறுக்குத் தயாராகும். அதுக்குள்ளயும் புகை அடுப்புல ரசத்துக்கு கூட்டுமானம் நடக்கும்.

இதுக்கு மத்தியில தூக்குவாளி மூடியில, குழிக்கரண்டி குழம்பு கோதி , புள்ளைகளுக்கு ஊத்திக் கொடுத்து, அதுக உஷ்ஷூ உஷ்ஷுன்னு ஊதிக்குடிக்கிறதை ரசிச்சிப் பார்ப்பா.

 “கறி வெந்துருச்சா கண்ணு”  

“இந்தத் கறி வேகலை, இன்னொன்னு குடு பார்க்கேன்” என்பதாக நாட்டாமைத் தீர்ப்புக்குள்ள நாலு கரண்டி சட்டியிலயிருந்து குறைஞ்சி போகும்.

அழாதகுறையா இதெல்லாம் சொல்லி முடிச்சிட்டு “இப்போ என்னன்னா வாரத்துக்கு ரெண்டு நாளு கவுச்சி சேர்க்கலைன்னா நாக்குச் செத்துப்போன மாதிரி இருக்கு” ன்னு தோழி சொன்னதை ம்ம் கொட்டித்தான் கேட்க வேண்டியதிருக்கு, என்ன செய்ய…

எல்லாந்தான் மாறிப்போச்சு, இது மட்டுமென்ன அதிசயம்னு சொல்லிட்டு வாய மூடிட்டு நகர்ந்து வந்துட்டேன்.

Author

Related posts

வழி நடத்தும் நிழல்கள்

நல்லாச்சி – 12

அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு