வெயில் ஆதிக்கத்தில் பல இல்லங்களில் உலை கொதிக்கும் கந்தக பூமி எங்கள் ஊர். தீபாவளி என்பது ஒருநாள் பண்டியாக இல்லாமல், ஒரு தொடர்ச்சியான கொண்டாட்டமாகக் கொண்டாடித் தீர்க்கும் சிவகாசியில் பிறந்தவள் நான்.
தீபாவளிக்கு முந்தையநாள் சந்தையெல்லாம் களைகட்டும். சாலையோரங்களில் மழைக் காளான்களாய் புதுக்கடைகள் பல முளைத்திருக்கும். ஆனால்.. தீபாவளி கொண்டாடப்படும் காரண நாயகனான நரகாசுரன் அன்றி.. எங்கள் மனதில்.. தீபாவளி நாளில் அவதரிக்கும் நரகாசுரன் யார் தெரியுமா? மழை! (அது அடாத விடாத மழையானாலும் சரி.. இளையராஜா இசையாய் தூறும் சாரல் மழையானாலும் சரி..) ‘தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும் சிவகாசிக்காரர்களுக்கு மழை எதிரியா?’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆம்.. தீபாவளி மழை எங்களுக்கு வேண்டாத விருந்தாளி.
அது ஏனோ, தீபாவளிக்கும் மழைக்கும் நகமும் சதையும் போல.. அப்படியொரு பந்தம் உண்டு..!!
சிறு வயது முதலே.. நடு இரவில் கோலம் போடும் நேரம் தொட்டு.. மறு இரவில் மத்தாப்பு குப்பை பொறுக்கும் வரை.. எங்களின் ஒரே முறையீடு ‘கடவுளே.. இன்னிக்கு ஒரு நாள் மழை வரக்கூடாதுப்பா’ என்பதாகவே இருந்திருக்கிறது. பட்டாசு கையிலெடுக்கும் நேரமெல்லாம் எங்களை வீட்டிற்குள் விரட்டியடிக்கும் மழையை விரட்ட, அந்தக் கடவுளன்றி வேறு ஆயுதம் எங்களின் கையிலேது.
அதற்காக மழை வந்தால் ‘வீட்டிற்குள் அடைந்திருப்போம்’ என்று நான் சொல்லவில்லை. அம்மாவிடம், பலகாரம் போல, திட்டும் அடியும் வாங்கிக்கொண்டு.. வருணனுக்குப் போட்டியாகக் குடை பிடித்து.. பத்தி அணையாது பாதுகாத்து.. சரவெடி முதல் சரமாரியாக பட்டாசுகள் பற்ற வைத்த தீபாவளி வெறியர்கள் நாங்கள்.
வீட்டுக்கு நாலு வெடி தான் வாங்கித்தருவார்கள். ஆனால் நாங்கள் பத்துப் பேர் கூடி கூட்டாம்பட்டாசாக வெடித்துத் தள்ளிய போது.. எது யார் வீட்டுப் பட்டாசு என்று அறியாமல் சண்டையின்றி கொண்டாடி மகிழ்வோம். ஆனால் ‘நீதான லட்சுமி வெடி வச்ச.. நீயே இதப் பொறக்கு’ என சேற்றில் அமிழ்ந்திருக்கும் பட்டாசுக் குப்பைத் தாள்களைப் பொறுக்கும் சூழலில்.. ஒரண்டையிழுத்து விடும் ஓரகத்தியாகிவிடும் இதே மழை.
சகதியில்.. அணுகுண்டு வைத்து வெடிப்போம். அது பன்னீர் தெளிப்பது போல எங்களின் உடை மீது தெறித்த சகதி கண்டு வெடித்துச்சிரிப்போம்.
பிடித்த மழை, கால் கடுக்க.. நான் போட்ட கோலத்தைக் கரைத்த நாட்களில் அசுரனாகவும்.. நாங்கள் வைத்த ராக்கெட், தடம்புரண்டு.. அடுத்த வீட்டக்கா ஓலையில் ஏறிய போது.. மழையின் ஈரத்தில்.. தீ பற்றாமல் தப்பித்த சமயங்களில் வருண பகவானாகவும் உருமாறியதுண்டு.
சமயத்தில்.. அம்மா செய்த, மற்றும் பக்கத்து வீட்டிலும் பகிர்ந்தளித்த பலகாரங்களைக் கொறித்தவாறு.. விளம்பரங்களுக்கு மத்தியில் ஆங்காங்கே ஒளிபரப்பாகும் புதுப்படங்களைப் பார்த்தவாறு… வெறிக்காத மழையை வெறித்துப் பார்த்திருப்போம். ஓய்வெடுக்க மழை ஒதுங்கும் ஒரு சில நிமிடங்களில். ஓராயிரம் மகிழ்ச்சிகளை வீதியில் அரங்கேற்றி ஓய்ந்திடுவோம்
தீபாவளி நாளில்.. அழையாத விருந்தாளியாக இருந்தாலும்..மழை ஒவ்வொரு வருடமும் அலுக்காமல் வந்து கொண்டிருந்தது. ஆனால் பாருங்கள்.. ஒருவருடம் மட்டும் விடுப்பெடுத்துக் கொண்டது. மாமியார் வீட்டிற்கு வரும் மருமகள் போல.. வந்த நாளிளெல்லாம் வசை பாடிய அதே மழையை.. வராத ஓர் பொழுதில்.. ‘நாங்கள்லாம்.. தீபாவளியப்ப வர்ற மழையப்ப என்னல்லாம் செய்வோம் தெரியுமா…?’ என நினைத்து நினைத்து பிள்ளைகளிடம் நெஞ்சாரப் புகழ்ந்து கொண்டாடினேன் .
ஆமாம்… நீங்கள் எப்படி..? மழையெல்லாம் தீபாவளியாகக் கொண்டாடுவீர்களா.. அல்லது தீபாவளியன்று வரும் மழையை மகிழ்ந்து கொண்டாடுவீர்களா…?