தீபாவளி

தீபாவளி என்பது தீப ஒளித் திருநாள் என்பதாகும். குடும்பங்கள், உறவுகளோடு ஒற்றுமையாகக் கொண்டாடும் பண்டிகை ஆகும். தீபாவளிப் பண்டிகை குறித்து இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

நரகாசுரனை கிருட்டிணர் அழித்த நாள்தான் தீபாவளியாகக் கொண்டாடப்படுவதாக சொல்கிறார்கள்.

தீபாவளிப் பண்டிகை வருவதற்கு முன்பாகவே மக்கள் கொண்டாடத் துவங்கி விடுகின்றனர். சிறுவர்கள் பட்டாசு வெடிக்க ஆரம்பித்து விடுவார்கள். சில நாட்கள் முன்பாகவே புத்தாடைகள் அவரவர் வசதிக்கேற்ப வாங்கி விடுவது வழக்கம். அது போலவே பெரும்பாலான வீடுகளில் லட்டு, அதிரசம், குலோப் சாமுன் போன்ற இனிப்பு வகைகளும், முறுக்கு, தட்டை போன்ற கார வகைகளும் தயார் செய்து விடுவார்கள். இன்றைய சூழலில் பெண்களும் வேலை நிமித்தம் காரணமாக கடைகளில் பலகாரங்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது.

தீபாவளிப் பண்டிகை பொதுவாகவே சிறுவர் சிறுமிகளுக்கான பண்டிகை என்றால் அது மிகையாகாது. மற்ற பண்டிகைகளில் இல்லாத ஒரு சிறப்பு பட்டாசு வெடிப்பதாகும். நீதிமன்றம், அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்தாலும் பட்டாசுச் சத்தம் எல்லா ஊர்களிலும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. காலை எழுந்ததும் குளித்து விட்டு, புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடிக்கிறார்கள். உறவுகள், நண்பர்கள் வீடுகளுக்குப் பலகாரங்களைப் பகிர்ந்து அளிப்பதும் தொடர்கிறது.

இதில் மேலும் குறிப்பிடத்தக்க அம்சம் என்பது வெளியூரில் வேலை செய்வோர் பல்வேறு சிரமங்களைக் கடந்து, சொந்த ஊருக்கு வருகிறார்கள். தீபாவளியை உறவுகளோடு மகிழ்ச்சியோடு கொண்டாடி விட்டு, மீண்டும் வேலைக்குத் திரும்புவார்கள். தீபாவளி அன்று வெவ்வேறு இடங்களில் இருக்கும் உறவுகள், நண்பர்களுக்கு கைபேசி வழியாக தீபாவளி வாழ்த்துக்களை மகிழ்வோடு பரிமாறிக் கொள்வார்கள். தீபாவளிப் பண்டிகை தரும் மகிழ்ச்சியால் மற்ற பண்டிகைகளை விடத் தீபாவளிக்கு இளைஞர்கள், சிறுவர்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. மேலும் புதிதாகத் திருமணமான தம்பதிகள் தலைத் தீபாவளி கொண்டாடுவது சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை எல்லா வகைகளிலும் சிறப்பானது.

பண்டிகைகளில் சிறந்த பண்டிகையான தீபாவளிப் பண்டிகையின் சிறப்பை உணர்ந்த மக்கள், அடுத்த தீபாவளி எப்போது வரும் என்று எதிர்பார்ப்பது ஒவ்வொரு ஆண்டும் தொடர்கிறது. பண்டிகையின் பாரம்பரியத்தைக் காப்போம். முன்னோர்கள் வழிகளைப் பின்பற்றி உறவுகளோடு இணைந்து பண்டிகைகளைக் கொண்டாடி மகிழ்வோம்.

Author

Related posts

நாள்: 21

நாள்: 20

நாள்: 19