கதிரை வைத்திழந்தோம்

நூல் : கதைச் சிற்பி சரத்சந்திரர்
ஆசிரியர் : சு. கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம்: நல்லநிலம்
முதல் பதிப்பு: டிசம்பர், 2014

காதலில் தோல்வியுற்ற ஆண் – இந்த சொற்சேர்க்கையைக் கேட்டவுடன் நம் மனதில் எழும் தோற்றம் என்னவாக இருக்க முடியும்? கொஞ்சம் தாடியோடு கலைந்த தோற்றத்தில் குடியில் ஆழ்ந்த ஒரு வாலிபர், கூடவே ஒரு நாயும் உண்டுதானே? அந்த தோற்றத்தை தேவதாஸ் எனும் பாத்திரம் வழியாக உருவாக்கியவர் சரத்சந்திர சட்டோபாத்தியாயா எனும் மகத்தான
கலைஞன். அவரது வாழ்க்கை வரலாறு தமிழில் ’கதைச் சிற்பி சரத்சந்திரர்’ எனும் பெயரில் வெளியாகியுள்ளது.

காதலில் வெற்றி எது, தோல்வி எது என்ற கேள்வி கிட்டத்தட்ட கோழியிலிருந்து முட்டையா, முட்டையிலிருந்து கோழியா என்பது போன்ற முடிவில்லா சுழல் கேள்வி என்றுதான் கொள்ள வேண்டும். லௌகீக வாழ்வில் காதலின் வெற்றி என்பது திருமணத்தில் முடிவது என்றுதான் நினைக்கிறோம். ஆனால் காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் எத்தனை சதவீதம் இணையர்களால் வாழ்வின் இறுதிவரை அந்த ஈர்ப்பினை, நேசத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது என்று கணக்கெடுத்துப் பார்த்தால் அது மிகவும் சொற்பமான எண்ணிக்கையாகவே இருக்கும். எனவே திருமணத்தில் முடியாத, நிறைவேறாத காதல்களே காவியக் காதலாகவோ அல்லது குறைந்தபட்சம் எண்ணி ஏங்கவைக்கும் கனவுகளாகவோ நீடிக்கின்றன. அதன்படி பார்த்தால் திருமணத்தில் இணையாத காதலையே வெற்றிகரமான காதல் என்று சொல்லவும் முடியும்.

அந்த வகையில் சரத்சந்திரரின் வாழ்வில் இருந்திருக்கக் கூடிய ஒரு காதல் சாத்தியத்தை மிக மென்மையாக திறந்து காட்டுகிறது இந்நூல். இது ஒரு வாழ்க்கை வரலாற்று நூல் என்பதால் வம்பு நோக்கம் எதுவுமில்லாது, மிக லேசாக ஆனால் தவிர்க்க இயலாத உணர்தலாக அக்காதலை இந்த நூலில் கோடிட்டுக் காட்டுகிறார் நூலாசிரியர். வங்காளத்தில் விதவைகளின் மீதான அடக்குமுறை மிக மிக அதிகம் என்பதாலோ என்னவோ அங்கிருந்துதான் சதி ஒழிப்பு, விதவை மறுமணச் சட்டம் போன்ற சட்டங்களுக்காக குரலெழுப்பிய சமூகப் போராளிகளும் அதிகம் உருவானார்கள். அச்சட்டங்கள் உருவாகுவதற்கு முந்தைய கட்டுப்பெட்டியான வங்காளத்தில், ஒரு இளம் விதவை(பூப்பெய்துவதற்கு முன்பே விதவையானவர்) கவிதைகள் எழுதுகிறார். இலக்கியம் பேசுகிறார். அவற்றின் ஊடாக அண்ணனின் நண்பரோடு மனதால் நெருக்கம் அடைகிறார். இருவருமே சமூகத்தின் விதிமுறைகளின்படி அக்காதல் தவறானது என்பதை உணர்ந்தே இருக்கின்றனர். காதலை உணர்ந்தவுடன் பதறி, கடுமையான ஆசார அனுஷ்டானங்களுக்குள்
தன்னை புதைத்துக் கொண்டார் அப்பெண்மணி. மாறாக சரத்சந்திரரோ நாடோடியாக சுற்றத் தொடங்கினார்.

மகத்தான அன்பு அருகில் ஈர்ப்பது மட்டுமல்ல, அது தொலைவுக்கு விரட்டியும் தள்ளும் எனும் வரி சரத்சந்திரரது புகழ்பெற்ற ‘ஸ்ரீகாந்த’ நாவலில் இடம்பெற்றுள்லது. இவ்வரிகளின் மூலம் அவரது உண்மை அனுபவமாகவே இருக்கக்கூடும் என்கிறார் நூலாசிரியர். சரத்சந்திரர், அப்போதைய பிரிட்டிஷ் நிர்வாகத்தில் இருந்த பர்மாவின் ரங்கூனுக்கு வேலை தேடிச் செல்லவும் துணிந்ததன் பின்னணியே அவர் மனதில் உமியில் நீறும் கனல் போல் கனிந்து கொண்டிருந்த அன்புதான் என எண்ணவும் இடமிருக்கிறது. அவருடன் நெருங்கிப் பழகிய சில இலக்கியவாதிகளும், வாசகர்களும் சரத்சந்திரரின் நிறைவேறாக் காதலின் ஏக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

இந்தச் செய்தியினைப் படித்த பிறகு சரத்சந்திரரின் படைப்புலகை இன்னமும் நெருக்கமாகப் புரிந்து கொள்ள முடியும். அவரது கதைகளில் முதன் முதலாகப் பிரசுரமான ’படோதீதி’ தொடங்கி பல்வேறு கதைகளில் விதவைகளின் காதல் பேசுபொருளாகி உள்ளது. ‘நிறைவேறாத அன்பின் வேட்கையே மகத்தான அன்பின் உயிர்’ எனும் வரி பத்தநிர்தேஷ் எனும் கதையில் வருகிறது. இப்படி எண்ணற்ற கதைகளில் விதவைகளின் காதலைப் பற்றி, அவர் பேசினாலும், அவற்றைத் திருமணத்தில் முடிவடைவதாக அமைக்கவே இல்லை. சரத்சந்திரர் -ஓர் எழுத்தாளராக மட்டும் தன்னை குறுக்கிக் கொண்டுவிடவில்லை. தேச விடுதலைக்காக காங்கிரஸ் பேரியக்கத்தில் சேர்ந்து உழைத்திருக்கிறார். தேசபந்து சித்தரஞ்சன் தாசுடனான அவரது நெருக்கமே அவரை காங்கிரஸ் இயக்கப் பொறுப்புகளை ஏற்க வைத்தது.

ஹௌரா மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்ததோடு மேலும் சில பொறுப்புகளையும் காங்கிரஸில் ஏற்றுப் பணி செய்துள்ளார். காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தாலும் வங்காளப் புரட்சிகர இயக்கங்களுக்கும் சரத்சந்திரரே வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார். அவர் எழுதிய ‘பத்தேர் தாபி’(வழிக்கு உரிமை) எனும் நாவல், வங்கத்து தீவிரத்தன்மை கொண்ட போராளிக் குழுக்கள் அனைத்திற்குமான வேத புத்தகமாகவே கருதப்பட்டது. நேதாஜி சுபாஷுடனான நெருக்கம், பொதுவுடைமைவாதிகளுடன் கொண்ட தொடர்பு என சரத்சந்திரரின் அரசியல் பார்வை பன்மைத் தன்மை கொண்ட ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஹௌரா நகரசபை காங்கிரஸ் வசம் இருந்த போது, அங்கிருந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கான சங்கம் கட்டப்பட்டது. அவர்களின் உரிமைகளுக்கான போராட்டம் வலுத்தபோது, அதனை வழிநடத்திய தலைவர்களை சரத்சந்திரர் ஊக்குவித்து வந்தார். போராட்டம் தீவிரமடைந்து, அத்தலைவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, உடனடியாக போராட்டத்தை நல்லபடியாக முடித்துவைக்காவிட்டால், நகரசபை நிர்வாகத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிடவும் முடிவு செய்தார். அவரது தீவிரமே அப்போராட்டத்தில் தொழிலாளர்களின் உரிமையைப் பெற்றுத்தந்தது.

பல்வேறு புரட்சிக்குழுக்களின் உறுப்பினர்களுக்கும் ஆதர்சமாக விளங்கிய ‘பத்தேர் தாபி’ நாவலை சரத்சந்திரர் எழுதிய விதத்தையும், அந்நிய ஆட்சியில் அத்தகைய தீவிரமான படைப்பை பதிப்பித்த விதத்தையுமே ஓர் அத்தியாயமாக்கி இருக்கிறார் நூலாசிரியர். அந்த அத்தியாயம் ஒரு சாகசக் கதையினைப் போல் இருக்கிறது. அந்த சாகசக் கதையில் அரசுத் தரப்பிலிருந்து சரத்சந்திரருக்காக செய்யப்பட்ட அனைத்து சமரசங்களும் அவரது இலக்கிய அந்தஸ்திற்கான அங்கீகாரமே ஆகும். பிரிட்டிஷ் கல்வி பயின்று அவ்வரசின் அங்கமாகவே பணிபுரிந்த போதும், வங்காளிகள் தங்கள் மொழியின் மீதும், தங்களது இலக்கியவாதிகள் மீதும் கொண்டிருந்த பற்று வியக்க வைக்கிறது. ஆனால் வங்கத்திற்கு நிகரான செழுமையான இலக்கியவளம் கொண்டிருந்த தமிழகத்தின் அன்றைய நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் ஏக்கப் பெருமூச்சுதான் வருகிறது. வாராது வந்த மாமணியைப் போன்ற பாரதியை பாதுகாக்கவோ பராமரிக்கவோ இங்கு எந்த அரசு அதிகாரிக்கும் மனம் இருந்திருக்கவில்லை.

பாகல்பூர் எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த சரத்சந்திரரால் கல்கத்தா நகரில் விருப்பமுடன் பொருந்தி வாழ முடியவில்லை. கல்கத்தாவில் சொந்த வீடிருந்தும் கூட அவர் மனம் கிராமத்து வாழ்க்கையையே விரும்பியது. எனவே தன் மூத்த சகோதரியின் ஊருக்கு அருகிலிருந்த சாம்தாபேர் எனும் கிராமத்தில், ரூப நாராயண் ஆற்றின் கரையில் ஒரு சொந்த வீடு கட்டிக் கொண்டு குடி போன செய்தி இந்நூலில் வருகிறது.

1923-26ஆம் ஆண்டுவாக்கில் கட்டப்பட்ட அந்த வீட்டிற்கான செலவு 17ஆயிரம் ரூபாய். அந்த காலகட்டத்து விலைவாசியைக் கணக்கில் கொண்டு பார்த்தால் இது பெரும்பணம்தான். வீடு கட்ட அஸ்திவாரத்திற்காகத் தோண்டும்போது அங்கிருந்து நீரூற்றுக் கிளம்பி அது ஒரு குளமாகிவிடுகிறது. இப்படி ஒன்றல்ல, இரண்டு குளங்கள் உருவாகிவிடுகின்றன. வங்காளிகள் மீன் பிரியர்கள் என்பதால் குடும்பத்துக்குத் தேவையான மீன் கிடைக்கும் என்று மகிழ்கிறார்கள். மீண்டும் அந்நிலத்திலேயே வேறொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கு ஒரு மாடி வீடு கட்டப்படுகிறது. வீட்டைச் சுற்றி பூந்தோட்டம், காய்கறித் தோட்டம், மாட்டுக் கொட்டில் போன்றவை அமைகின்றன. இவையெல்லாம் போக நெல் பயிரிடவும் கொஞ்சம் இடம் இருந்திருக்கிறது.

சரத்சந்திரரின் கிராமத்து வாழ்க்கை, அவர் ஹோமியோபதி மருத்துவம் பயின்று கிராம மக்களுக்கு உதவியது, என பல்வேறு விஷயங்களையும் விரிவாக நூலில் வாசிக்கலாம். அதே நேரம் ஒரு காணி நிலம், அதில் துய்ய நிறத்தில் ஒரு மாளிகை, ஒரு கேணி, பத்துப் பன்னிரெண்டு தென்னை மரங்கள் என மிக எளிய கனவைக் கொண்டிருந்த பாரதிக்கு அதில் எதுவுமே சாத்தியமாகவில்லை எனும் நிலையை ஒப்பிட்டுக் கொள்ளாதிருக்க முடியவில்லை. கிட்டத்தட்ட இருவருமே சமகாலத்தவர்கள்.

இனி பிரபுக்களின் காலம் முடிந்துவிட்டது, இனி மக்களே கவிகளையும் கலைஞர்களையும் ஆதரிக்க வேண்டும் என்று ஆர்ப்பரித்தவனை மீண்டும் எட்டயபுரம் ஜமீன்தாருக்கு சீட்டுக்கவி எழுத வைத்தது நம் தமிழ்ச் சமூகம். வங்கத்து சகோதரர்கள் சரத்சந்திரர், ரவீந்திரர், நஜ்ரூல் போன்ற இலக்கியவாதிகளை எவ்வளவு தூரம் கொண்டாடியிருக்கிறார்கள் என்பதை படிக்கும் போதெல்லாம் காலத்தோடு மனிதர்கள் தொடர்ந்து ஆடும் தொடர்ச்சியான சூதாட்டத்தில் கதிரை வைத்திழந்தோம் என்று நம்மை நொந்து கொள்ளாதிருக்க முடியவில்லை.

“உலகில் கொடுத்துக் கொண்டேயிருந்தவர்கள், ஆனால் பதிலாக எதையும் பெறாதவர்கள்; ஏமாற்றப்பட்டவர்கள், பலங்குறைந்தவர்கள், கொடுமைக்குள்ளானவர்கள் – இவர்களும் மனிதர்கள்தாம். இவர்களுடைய கண்ணீரை மற்ற மனிதர்கள் பொருட்படுத்தவில்லை… இவர்களுடைய வேதனைதான் என்னைப் பேச வைத்தது” என்று பிரகடனம் செய்தார் சரத்சந்திரர்.

அன்னைக்கு பலம் குறைந்த சவலைக் குழந்தையின் மீதுதான் அதிகமான அன்பிருக்கும். அது போலவே அவர் வாழ்ந்த காலத்தில் அங்கீகாரம் பெற்றிராத மனித உறவுகளைப் பற்றியும், அவற்றின் பொருட்டு துயருற்றோர் பற்றியுமே அதிகம் எழுதியிருக்கிறார் சரத்சந்திரர். அது ஏன் என்பதை, அவரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது நம்மால் உணர முடிகிறது. இலக்கிய வாசகர்கள் தவறவிடக்கூடாத ஓர் அருமையான நூல் இது.

Author