லட்டு

மருத்துவர் சரவணக்குமார்  பின்னங்கால்களைத் தூக்கிப் பார்த்தார். லட்டு வலி தாங்கமுடியாமல்  கத்தினான்.தலையைத் திருப்பிக் கடிக்க முயன்றான் . கூம்பு வடிவிலான அந்தப் பிளாஸ்டிக்கை மட்டும்  அவனது தலையில் பொருத்தமால் இருந்திருந்தால் மருத்துவரின் விரல்கள் துண்டாகியிருக்கும்.அது பாதுகாப்புக் கவசமாக  உதவியது.

 சரவணா, நாய்க்குக் கூடவா பக்கவாதம் வரும்? என் குரல் தழுதழுத்தது.

 நாயும் மனுசங்க மாதிரிதான்டா. மனுசனுக்கு வரக்கூடிய  எல்லா வியாதிகளும் வரும். 

 அப்படின்னா  லட்டுவால  நடக்கவே முடியாதா?

 இப்ப எதுவும் சொல்லமுடியாதுடா.IVDD( Intervertebral Disc Disease) யா இருக்குமோன்னு தோனுது.MRI எடுத்துப் பார்த்தாதான் சரியா தெரியும்.

 அதென்ன IVDD ?

 இந்த மாதிரி முதுகு நீளமா இருக்கிற  நாய்களுக்கு வயதானாலோ , அல்லது எடை அதிகமாக இருந்தாலோ தண்டுவடத்தில் பிரச்னை வர நிறைய சான்ஸ் இருக்கு. 

 எதனால இப்படியெல்லாம் வருது?

 தண்டுவடத்தில் ஒரு மூட்டுக்கும் இன்னொரு மூட்டுக்கும் நடுவில கெட்டியா பசைமாதிரி ஒரு ஜவ்வு இருக்கும்.  ஓடும்போதும் குதிக்கும்போதும் இதுதான் ஸ்பிரிங் மாதிரி நாய்களுக்கு உதவும். லட்டு எங்கயாவது எக்குத்தப்பா வி்ழுந்திருப்பான். ஜவ்வுப் பகுதியில உள்காயம்  வந்திருக்கும். அது கொஞ்சம் கொஞ்சமாக பரவி தண்டுவட நரம்புச்செல்களை செயலிழக்கச் செஞ்சிடும்.அதனாலதான் மூளையிலிருந்து பின்னங்காலுக்குச் செல்லக்கூடிய எந்தக் கட்டளைகளும் அதுக்குப் போய்ச் சேரல.

 அடக்கொடுமையே! இப்படியெல்லாம் கூட நாய்க்கு வியாதி வருமா.

 இந்த மாத்திரைகளைத் தரேன்.அப்படியே கொடுக்காத.சாப்பாட்டுல கலந்து கொடு. 

 இந்த மாத்திரையெல்லாம் எதுக்குடா?

 வலியைக் குறைக்கிறதுக்காக ஒரு பெயின் கில்லர் மாத்திரை. இன்னொரு மாத்திரை பதற்றத்தைக் குறைக்கறதுக்காக.

 நானும் சரவணக்குமாரும்  பன்னிரண்டாம் வகுப்பு வரை  கள்ளக்குறிச்சி அருகே வடக்கநந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தோம். இரண்டு முறை முயன்றும் என்னால் +2 படிப்பைத் தாண்ட முடியவில்லை.அதன் பிறகு என்  தந்தை விட்டுச் சென்ற அரிசி ஆலைத் தொழிலைக் கவனிக்கத் தொடங்கினேன்.அவன் தேர்ந்த கால்நடை மருத்துவரானான்.தற்போது மாதாவரம் அரசு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத்தில் பேராசிரி்யராகப் பணிபுரிகிறான்.

 லட்டு தாங்கித் தாங்கி நடப்பதைப்  பற்றி   அவனிடம் நேற்றே அலைபேசியில் கூறியிருந்தேன்.ரொம்ப டிலே பண்ணாதடா. அடுத்த பஸ்ஸை பிடிச்சு  சென்னைக்குக் கூட்டிட்டு வா. என்றான்.அதிகாலை ஆறு மணிக்கே அவன் வீட்டுக்கு வந்துவிட்டேன்.

 லட்டு எப்போதும் முயல்போலத் துள்ளிக் குதிப்பவன். கடந்த இரண்டு நாள்களாகவே தனியாக ஒதுங்க ஆரம்பித்தான்.எனக்கு உதவமாட்டாயா? என்பது போல பரிதாபமாகப் பார்த்தான்.அவனுக்குப் பிடித்த கோழிக்காலைத்தான் உணவாக   கொடுத்தேன். ஆனால்  முகர்ந்துகூடப் பார்க்கவில்லை.

 ஏன்டா செல்லம். என்ன ஆச்சு.என அவன்  தலையில் ஆறுதலாக  தடவியபோது  என்  ஆட்காட்டி விரலைக் கடித்துவிட்டான்.எனக்கு ரத்தம் கொட்டியது.கோபம் தலேக்கேறியது. ஓங்கி  அடித்தேன்.அவன் கண்கள் கலங்கியது. முகத்தைக் கவிழ்த்துக்கொண்டான்.

 சே. பாவங்க. தலையில அடிக்காதீங்க சீதா சொன்னாள்.நல்லவேளை. ரேபிஸ் வாக்சின்   போட்டது  நல்லதாப் போச்சு.  சீதாவிடம் சொன்னேன்.

 நான் அடித்தவுடன் விரக்தியில் முன்கால்கள் இரண்டையும் விரித்துப் படுத்தவன்தான்.  தொடர்ந்து இரண்டு மணி நேரமும் அப்படியே சிலைபோல்  இருந்தான்.

 லட்டு ஏன் இப்படி இருக்கான். இப்படியெல்லாம் கடிக்கமாட்டானே.விநோதமா இருக்கேடி.சீதாவிடம் கேட்டேன். தெரியலங்க. எனச் சொல்லிவிட்டு  கார்த்திகாவைப் பள்ளிக்கு அனுப்ப மும்மரமாக இருந்தாள்.

ஏதோ சாப்பிட்டது அவன் உடம்புக்கு ஒத்துக்கொள்ளவில்லைப்போல .என்றுதான் முதலில் நினைத்தேன். பிறகுதான் விபரீதம் புரிந்தது.லட்டு நடக்கும்போது ஒரு முதியவர் போல் பின்னங்கால்களைத் தாங்கித் தாங்கி நடந்தான். 

முதன்முதலில் லட்டு என் வீட்டிற்கு வந்தபோது ஒரு மாதக்குட்டி.எனக்கு இருக்கும் கடன்பிரச்னைக்கு லட்டுவை வளர்ப்பது என்பது ஒரு ஆடம்பரச் செலவு.இருக்காதா ?ஒரு மாதக்குட்டியாக வாங்கும்போதே இதன் விலை ரூபாய் பத்தாயிரம். அதுவும் ஐந்து வருடங்களுக்கு முன்பே. இப்போது இந்த ஷிட்ஸு வகை நாயின் விலை முப்பதாயிரம் என்கிறார்கள்.
அது மட்டுமா? ரேபிஸ் வாக்சின், இதயத்தில் பூச்சி வளராமல் இருக்க தடுப்பு மாத்திரைகள். பார்வா வைரஸ் தடுப்பூசி. இன்னும் நிறைய மருத்துவச் செலவுகள். இது போதாதென்று முடிவெட்டக் கூட அநியாயத்துக்கு செலவு ஆகிறது. வெட்டாமல் விட்டுவிடலாம்தான். ஆனால் மூன்று மாதத்திற்குள் சடை சடையாய் வளர்ந்து கண்களையே மறைத்துவிடுகிறது.ஒழுங்காக காட்டமாட்டான். யாராவது கத்தரிக்கோலை அருகில் கொண்டுவந்தால் அவரது விரல் காலியாகிவிடும்.மயக்க ஊசி போட்டுத்தான் வெட்டமுடியும். அதனாலே 1500 ரூபாய் செலவாகிறது.

பெயருக்குத்தான் நான் அரிசி ஆலை முதலாளி. நான் படும் பாடு எனக்குத்தான் தெரியும்.என் அரிசி ஆலையை விற்றுக் கடனை அடைத்து மீதிப் பணத்தைப் பேங்கில் டெப்பாசிட் போட்டுடணும். அது கார்த்திகா திருமணத்துக்கு உதவும்.எஞ்சி் இருக்கிற காலத்தில் நிம்மதியாக ஓய்வு பெறவேண்டும்.என்று அடிக்கடி நினைப்பேன்.

இப்படியெல்லாம் நினைக்கக்கூடிய ஆள் இல்லை நான்.கடுமையான உழைப்பாளி.மூட்டைத்தூக்குவதற்கு வேலையாள் வரவில்லையென்றால் கூட நானே 50 அரிசி மூட்டைகளையும் தூக்கி லாரியில் ஏற்றுவேன்.சென்ற வருடம் இருதயத்தில் அடைப்பு என்று இரு ஸ்டென்ட்களை வைத்தார்கள் . அதன் பிறகுதான் என் தன்னம்பிக்கை குறைய ஆரம்பி்த்தது .உடல் வலிமையும் முன்பு போல இல்லை.கடந்த வாரம் மழை வரப்போகிறதே என வேக வேகமாக களத்திலிருந்த நெல் எல்லாவற்றையும் பலகையைக் கொண்டு குட்டான் போட்டு குவிக்க முயன்றேன்.மேலும் கீழுமாக மூச்சு வாங்கியது.நீண்ட நாள் சர்க்கரை வியாதி எனக்கிருப்பதால் தீவிர இருதய வலி வந்தாலும் அதை உணரமுடியாது .என கடந்தமுறை மருத்துவமனைக்குச் சென்றபோது பயமுறுத்தினார் இருதய மருத்துவர்.

அரிசி ஆலையை மாத குத்தகைக்கு விட்டுவிட்டு ஓய்வெடுக்கலாம்தான். ஆனால் இந்தச் சின்ன அரிசி ஆலையை யார் குத்தகைக்கு எடுப்பார்கள் ? கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள எல்லா அரிசி ஆலைகளையும் நவீனப் படுத்திவிட்டார்கள். வேலையாட்களுக்கு அங்கு வேலை செய்வதே பிடித்திருக்கிறது.எளிதாக இருக்கி்றது என்கிறார்கள்.அது மட்டுமல்ல.கருப்பு அரிசி, பழுப்பரிசி,எந்திரத்தால் ஜலிக்க முடியாத சிறு கல். போன்ற எல்லாவற்றையும் கம்ப்யூட்டர் முறையில் பிரித்தெடுக்கிறார்கள். அரிசியை வெள்ளையாகப் பாலிஸ் செய்கிறார்கள். விலையும் மலிவாகத் தருகிறார்கள். ஆறு மாதக் கடனுக்கெல்லாம் அரிசியை விற்கிறார்கள்.என்போன்ற குறு அரிசி ஆலைத் தொழிலுக்குத்தான் தலைவலியே.இவர்களோடு போட்டி போட முடியவில்லை.தொழில் முன்பு போல இல்லை.



+2 இன்னொரு முறை எழுதி தேர்ச்சி பெற்றிருக்கலாம் என நினைக்காத நாளே இல்லை.வேலைக்குப் போயிருந்தால் இப்படிச் சிரம்ப்படத் தேவையல்லை.பார்ப்போம்.எவ்வளவு நாள் ஓடுதோ இந்த வாழ்க்கை. ஓடற வரைக்கும் ஓடட்டும்.

என் தாய் மாமா பாலுவால்தான் லட்டு பயல் என் வீட்டிற்கே வந்தான். அமெரிக்காவில் அவர் வளர்க்கும் அதே மாதிரி “பொம்மி” நாய்க்குட்டிதான் வேண்டுமென்று ஒற்றைக் காலில் தவமிருந்தாள் கார்த்திகா. வாட்சப்பில் அவரிடம் வீடியோ காலில் பேசும்போதெல்லாம் தொந்தரவு செய்தாள். மாமாவால் தப்பமுடியவில்லை.

ஐந்து வருடங்களுக்கு முன்பு லட்டுவை ஒரு விளையாட்டுப் பொம்மைப் போல வாங்கிக் கொடுத்துவிட்டு மாமா ஹாயாக அமெரிக்கா போய்விட்டார்.இப்போது யார் லட்டுவிடம் மல்லுகட்டுவது?

-&-

லட்டுவுக்கு தொடர்ந்து இரண்டு நாள்கள் மாத்தி்ரைகளைக் கொடுத்தேன். எந்த முன்னேற்றமும் தெரியவில்லை.முற்றிலும் செயலிழந்து போனது.தர தரவென இழுத்துக்கொண்டேதான் பின்னங்கால்களை நகர்த்தினான். அவன் பரிதாபமாக பின்னால் திரும்பித் தன் கால்களைப் பார்க்கும்போதெல்லாம் ஏதோ ஒரு துக்கத்தை உணர்ந்தேன்.

சரவணக்குமாரை மீண்டும் தொடர்பு கொண்டு பின்னங்கால்கள் செயலிழந்ததைச் சொன்னேன்.

எங்க.. வாட்சப் வீடியோகாலில் காட்டு. என்றான்.

கண்டிப்பா சர்ஜரி பண்ற மாதிரிதான் இருக்கு.
ஸ்பைனல் சர்ஜரிக்கு அப்புறம்தான் நடக்கமுடியுமா இல்லையான்னு சொல்ல முடியும்.

சர்ஜரிக்கு எவ்வளவு ஆகும்டா.

எப்படியும் இரண்டு லட்சம் ஆகும்டா. கவர்மென்ட் ஆஸ்பத்திரியில யாரும் சர்ஜரி பண்ணமாட்டாங்க. என் ப்ரண்ட் ஒருத்தன் ப்ரைவேட் கிளினிக் மயிலாப்பூர்ல வச்சிருக்கான். நான் ரெபர் பண்றதால கொஞ்சம் டிஸ்கவுன்ட் தருவான். எப்படி இருந்தாலும் ஒன்றரை லட்சமாவது ஆகும். பணத்தை ரெடி பண்ணிக்கோ.என்றான்.

கடன் பிரச்னை பூதாகரமாக நினைவுக்கு வந்தது. இருக்கற பணப்பிரச்னையில நாய்க்கு வேற சர்ஜரி பண்ணனுமா? இதெல்லாம் தேவையா எனக்கு? ஆயிரம் இரண்டாயிரம்னா பரவாயில்லை. ஒன்றரை லட்சம். எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தபோது கூட ஒன்னே கால் லட்சம்தான் செலவு ஆச்சு. ஒரு மனுசனோட உயி்ரும் ஒரு நாயோட உயிரும் ஒன்றாகுமா?

ஒரு நாய்க்கு ஒன்றரை லட்சம் செலவு செய்யனுமா? பணத் திமிர் ,கொழுப்பு. என்று அம்மா கண்ணாபின்னான்னு கத்துவாங்க என்ற பதற்றம் அதிகரித்தது.இதெல்லாம் ஒரு பிரச்னையா. ஏழைகள் எத்தனைப் பேர் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் சிரமப்படுகிறார்கள். என்னமோ சொத்து எல்லாத்தையும் ஏழைக்குத் தானம் செய்யற மாதிரி நான் ஏன் இப்படித் தத்துவம் பேசறேன்?லட்டுவுக்குக் கடன் வாங்கிச் செலவு செய்ய மனசு வரல. அதானே உண்மை?

இது ஒரு சாதாரண நாய்தானே? என் மனம் கல்லானது.தீர்க்கமாக யோசித்துஅந்த முடிவுக்கு வந்தேன்.

கொஞ்சம் கூட வலியே தெரியாமல் லட்டுவைக் கொல்றதுதான் சரி. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா.வேற வழி தெரியல .என்று கெஞ்சினேன் சரவணக்குமாரிடம்

சில நொடிகள் யோசித்தான். பிறகு சொன்னான்..

சரி.உன் ஊர்லயே இருக்கிற வெர்ட்னரி ஆஸ்பிடல்ல செஞ்சிடலாம். அங்க போயிட்டு டாக்டர்கிட்ட போனைக் கொடு. நான் அவர்கிட்ட விவரத்தைச் சொல்றேன். கவலைப்படாத.

-&-

எப்படியும் நாளைக்கு மதியம் லட்டுவை சாகடிக்கப் போறோம். அவனுக்கு மட்டன் எலும்புன்னா ரொம்ப பிடிக்கும். நாளைக்குக் காலையில சீக்கிரமாப் போய் வாங்கிட்டு வாங்க. என்றாள் சீதா .

நீ வேறடி. அவன்தான் எதுவுமே சாப்பிட மாட்டேங்குறானே.

எப்போதும் கார்த்திகாவின் அருகில்தான் லட்டு படுப்பான்.லட்டுவைக் கொல்லப்போகும் விசயம் அவளுக்குத் தெரியாது. எப்படித் தாங்குவாள்? அவகிட்ட சொல்லா்தீங்க. சீதா கண்டிப்போடு சொன்னாள்.

ஒருவரின் அன்பு பிரிவில்தான் புரியும் என்பார்கள்.இது மனிதர்களுக்குப் பொருந்தும்.விலங்குக்கும் பொருந்தும்?

லட்டு பிரியப்போகிறான் என்று நினைத்தபோது குழப்பமும் பதற்றமும் ஒருசேரத் துரத்தியது.

அரிசி ஆலைத் தொழி்லின் பொருளாதாரச் சிக்கல்கள், இடர்கள் வரும்போதெல்லாம் லட்டுவைப் பார்த்து இப்படித்தான் அடிக்கடிப் பேசுவேன்…

பிறந்தா உன்னை மாதிரி பொறக்கணும்டா. நெல் அவிக்க , காய வைக்க, ஜலி்க்க, அரைக்க, அரிசி மூட்டையைத் தூக்க.வேலைக்கு ஆள்கள் வரலையேன்னு கவலை இருக்கா ?

கரன்ட் பில் யூனிட்டுக்கு அதிகம் ஏத்திட்டாங்களேன்னு கவலை இருக்கா?

அரிசிக் கடைக்காரர் கடன் பாக்கியைத் தரலையேன்னு கவலை இருக்கா ?

இரண்டு மாசமா அரிசி ஆலை சங்கத்துக்குச் சீட்டுப் பணம் கட்டவில்லையேன்னு கவலை இருக்கா?

பேங்குக்கு இந்த மாதக் கடன் பாக்கியை எப்படிக் கட்டறதுன்னு கவலை இருக்கா?

கார்த்திகாவை என்ஜினியரிங் படிக்க வைக்க யாருகிட்ட கடன் வாங்கலாம்?வட்டி கம்மியா யாரு தருவா?ங்கற கவலை இருக்கா?

உனக்கு என்ன புள்ளையா குட்டியா?

லட்டுவிடம் என் இயலாமைகளைப் பகிர்ந்து சிரித்துக்கொண்டே உரையாடுவேன். அவன் தலையை ஒரு பக்கம் சாய்த்துப் பார்ப்பான்.எல்லாம் புரிந்தது போல தன் கூர்மையான சிறிய பற்கள் தெரியும்படி வாயைப் பிளந்து சிரிப்பான்.

நான் நல்ல மனநிலையில் இருக்கும்போது அவனை பார்த்துப் பாட்டெல்லாம் பாடுவேன்.அவனுக்குத் தெரிந்த மொழியில் திருப்பி ஊளையிடுவான்.இதைப் பார்த்த கார்த்திகாவும் சீதாவும் தலையில் அடித்துக்கொண்டு “என்ன..முதல் மரியாதை சிவாஜியும் ராதாவும் எசப்பாட்டு பாடுறீங்களா?” என்று சொல்லிச் சிரிப்பார்கள்.

மட்டன் எலும்பைக் கொடுத்தவுடன் வாயில் கவ்விக் கொண்டு ஓடியது; நாற்காலிக்கு அடியில் பதுங்கியது; படிக்கட்டில் தாவியது;வீட்டின் காலிங் பெல்லை அடித்தவரைப் பார்த்துக் குரைத்தது;தெருநாய் குரைக்கும்போதெல்லாம் வெளியில் வரப் பயந்துகொண்டு வீட்டிற்குள்ளிருந்தே வடிவேலு போல வீரத்துடன் குரைத்தது;கார்த்திகாவுக்கு காய்ச்சல் என்றால் சோகமாக தன் முகத்தைக் கவிழ்த்தது.இப்படி லட்டுவைப் பற்றிய எல்லா நினைவுகளும் சூறாவளிப் போல சுற்றிச் சுற்றி அடி்த்தது.

லட்டு என் உடம்பில் ஏறித் தவழ்ந்தபோதெல்லாம் கார்த்திகா ஆறுமாதக் குழந்தையாக தவழ்ந்த அதே உணர்வுதானே இப்போதும் வந்தது.ஆம் அதே ஸ்பரிசம் .அதே வருடல்.

பிறகு ஏன் லட்டுவைக் குழந்தையாக நினைக்க மனம் வரவில்லை. ஏன் கொலை செய்யத் துணிந்தேன்?

-&-

மறுநாள் காலை சரவணக்குமாரை அழைத்தேன்..

சொல்லுடா முருகேசா. எப்போ உங்க ஊர் வெர்ட்னரி ஆஸ்பிட்டலுக்குப் போகப் போற?

இல்லைடா. நான் போகலை.

ஏன்? என்னாச்சு.

இல்லைடா. லட்டுவுக்கு ஸ்பைனல் சர்ஜரி பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்கப்பறம் அவன் கண்டிப்பா நடப்பான்தானே?

டேய். உறுதியாலாம் சொல்லமுடியாதுடா. சர்ஜரி பண்ணிட்டு உச்சா கூட போக முடியாத நாய்களும் நிறைய இருக்கு.70 சதவிகிதம் நடக்கலாம். நடக்காமலும் போகலாம்.

என்னடா இப்படி சொல்ற.

டேய். உன் பணக்கஷ்டம் புரியுது. நாளைக்கு சர்ஜரி முடிச்சிட்டு ஏன் லட்டு நடக்கமாட்டேன்ங்கிறான்னு என்கிட்ட சண்டைக்கு வரக்கூடாது பாரு. அதுக்காக சொல்றேன்.முயற்சி பண்ணுவோம். அதுக்கப்பறம் கடவுள் விட்ட வழி.

சரி. என்ன ஆனாலும் பரவாயில்லை.நான் ஒன்றரை லட்சம் ரெடி பண்ணிட்டேன். உன் ப்ரண்ட் மயிலாப்பூர் டாக்டர்கிட்ட கொஞ்சம் பேசு. நான் நாளைக்கு லட்டுவைத் தூக்கிட்டு சென்னை வந்துடறேன்.

வெரி குட்.நீ ஒரு உயிரைக் காப்பாத்திட்ட.

-&-

உங்களைப் புரிஞ்சுக்கவே முடியலீங்க.பணக்கஷ்டத்தால லட்டுவைக் கொல்லனும்னு நினைச்சீங்க.கடைசியில எப்படி மனசு மாறினீங்க?சீதா கேட்டாள்.

நேத்து நைட் எனக்குத் தூக்கமே வரலைடி.இறந்துபோன எங்க மாமாதான் அடிக்கடி கனவுல வந்தார். இறப்பதற்கு முன் பதினைந்து வருடங்கள் பக்கவாதத்தால் அவதிப்பட்டார்.கடைசிவரை எங்க அக்கா அவருக்குத் துணையா நின்னு காப்பாத்தினாங்க..

ஓருவேளை எனக்கும் அந்த மாதிரி பக்கவாதம் வந்தால் நீ தூக்கிப் போட்டுட்டு போயிடு்வியா? இல்லை… நான் லட்டுவை கொல்ல நினைச்ச மாதிரி பாத்துக்கமுடியலைன்னு கொன்னுடுவியா?

சீ. என்னப் பேச்சு பேசுறீங்க.முதல்ல வாயைக் கழுவுங்க.

ஏய். எதுவும் நடக்கலாம். எனக்கு ஹார்ட் அட்டாக் வரும்னு உன்கிட்ட சொல்லிட்டா வந்துச்சு.

சே..திரும்பத் திரும்ப அதையே சொல்லி என்னை அழ வைக்காதீங்க. பயமுறுத்தாதீங்க.ப்ளீஸ்.

சாரி. மன்னிச்சுடுடி.

சரி. பணத்துக்கு என்ன பண்ணுவீங்க?

சேலத்து அரிசிக் கடைக்காரர்கிட்ட வட்டிக்கு கேட்டிருக்கேன். மூனு வட்டிக்கு கம்மியா முடியாதுன்னுட்டார். சரின்னு சொல்லிட்டேன்.

அதெல்லாம் ஒன்னும் வேணாம். எங்க அம்மா கார்த்திகாவுக்குப் போட்ட அஞ்சு பவுன் செயினைத் தரேன். அதை பேங்க்ல அடகு வச்சி கடன் வாங்கிக்கீங்க.பேங்க் வட்டி கம்மியாதான் இருக்கும்.

ஏய். குழந்தைச் செயின்டி. அதைப் போய் அடகு வைக்கனும்னு சொல்ற?கிறுக்குப் பிடிச்சிருக்கா?

பரவாயில்ல. லட்டுவும் நமக்கு குழந்தைதான். நீங்க டென்சன் ஆவாம தைரியமா இருங்க.அது போதும். என்று இறுக்கமாக என்னைக் கட்டியணைத்தாள் சீதா.

  • முற்றும்

Author

Related posts

சிறுகதைப் போட்டி – கானல், அமீரகம்

டயானா ஹேர் கட்

ஐயுறவு