நேற்று என் தோழியர் வட்டத்தில் இருவர் எனக்கு போன் செய்து, “ராதா, நீயும் அனிதாவும் ஜீ தமிழ் நடத்தும் “தமிழா!தமிழா” ப்ரோக்ராம்க்குப் போய் இருக்கலாம்டீ” என்றார்கள். (ஆமா!! நம்மை யார் கூப்பிடுவார்கள்)
(தனிக்குடித்தனம் கூட்டுக்குடும்பம் டாப்பிக்காம்.. அதில், பெண்கள் மாமியார் கேரக்டர் முகத்தில் கரி பூசி, வெச்சு செய்கிறார்களாம்) ச்ச்சே! வேறு ஒரு குரூப்பில் என் எழுத்தின் ரசிகை ஒருவர் (பார்ரா) எனக்கு போன் செய்து, “மேடம் தமிழா! தமிழா! பார்த்துட்டு இருக்கும்போது உங்க ஸ்வீட்டி மாமியார் தான் ஞாபகம் வந்தார்.. உங்களை மாதிரி மாமியாரும் மருமகளும் இருந்தா எவ்வளவு நன்னாயிருக்கும்” என்றார். என் எழுத்தை விட, என் மாமியாரை அனைவருக்கும் பிடித்த காரணம் ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’.. அது மாமியாருக்கும் மருமகளுக்கும் இருக்க வேண்டிய பொதுவான வார்த்தை.
இதன் நடுவில் என் பெண் போன் செய்து பேச ஆரம்பித்தாள்.. என்ன சொன்னாள்? என்று நான் கடைசியில் உங்களுக்கும் சொல்கிறேன்.
அந்தக் கால மாமியார் மருமகள், உறவுகளுக்குள் சில பல விரிசல்கள் பேச்சு வார்த்தைகள், சண்டை சச்சரவுகள் இருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த மாமியார்களையும் சாடுவது ஓரங்கட்டுவது எந்த விதத்தில் ஞாயம்? எப்பொழுதும், இப்பொழுதும் பெண்ணைப் பெற்றவர்களைக் குறை கூறுவதும் தவறு, பிள்ளையைப் பெற்றவர்களும் நிறையவே மாறி உள்ளனர். மாமியார் கொடுமையெல்லாம் மலையேறிப் போச்சு! சமீபகாலமாக மாமியார் மருமகள் நிறைய பேர்கள் மிக ஒற்றுமையாக அன்யோன்யமாகத்தான் இருக்கிறார்கள்.
கடனை உடனை வாங்கி, காலா காலத்தில் பெண்ணுக்குக் கல்யாணம் செய்யும் பெற்றோர்கள், பெண் கணவனுடன், புக்கத்து மனிதர்களுடன் நிம்மதியாக சந்தோஷமாக இருப்பதையே விரும்புவார்கள், எதிர்பார்ப்பார்கள். பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்த தாய், பெண்ணுக்கு நல்ல புத்திமதியே சொல்லி அனுப்புவாள். எந்தத் தாயும் மாமியாருடன் சண்டை போடு, தனிக்குடுத்தனம் போ! வேலை செய்யாதே எனச் சொல்லி அனுப்ப மாட்டாள்.
“ஒற்றுமையா இரு, பட்டுப் பட்டுன்னு பேசாதே, கார்த்தால வேகமா எழுந்துக்கோ, மாமியாருக்குக் கூடமாட ஒத்தாசை செய், மாமியார் சொல் பேச்சு கேட்டு நட, இனி அவர்தான் உனக்கு அம்மா, நான் உங்க மன்னிக்கு அம்மா. 35 வருடம் முன்பு என் சின்ன நாத்தனாருக்குத் திருமணமாகும் பொழுது என் மாமியார் சொன்ன சொல் இது. என்றும் இன்றும் என் காதில் ரீங்காரமாய்.
என் பெண் திருமணமாகிப் புக்கம் போகும் பொழுது, நான் எந்த அட்வைஸ்சும் செய்யவில்லை, எதையும் சொல்லிக் கொடுக்கலை. “எல்லாம் தெரியும்” என நான் நினைத்தேன், அதேதான் அவளின் பதிலாக இருக்கும். மாமனார், மாமியார், மச்சினன், மாமியாரின் அம்மா அப்பா என கூட்டுக் குடும்பம்தான் அவளது. அதென்னவோ! மாமியார் என்றாலே ராங்கிக்காரியாகஸ் சித்தரித்து, சிம்ம சொப்பனமாக நினைத்து எழுதி, பேசுகிறார்கள். சில உண்மைகள் இருக்கலாம், ஆனால், பல மிகைப்படுத்தப்பட்டவைகளே அதிகம்.
இரு பக்க பெற்றோர்களும், பெண்களும், ஆண்களும் நல்லவர்களே. தாய்மை உணர்வு இயற்கையிலேயே பெண்மையின் வரம் . பிள்ளையை, பெண்ணை பெற்றெடுக்கும் ஒரு தாயே மற்றொரு தாயை குறை கூற கூடாது.
ஒரு சின்ன நிகழ்வு சொல்கிறேன். என் தோழி உமாவும் அவள் கணவரும் யு.எஸ்சிலிருக்கும் அவர்களின் சின்ன மகன் வீட்டிற்குப் போன வாரம்தான் சென்றார்கள். ஆறு மாதம் கழித்துதான் இந்தியா திரும்புவார்கள். சென்னையில் இருக்கும் பொழுது நாங்கள் இருவரும் வாட்ஸப் பிரண்ட்ஸ் கூட . அடிக்கடி பேசிக் கொள்வோம்.
அமெரிக்கா சென்றாலும், ஆப்ரிக்கா சென்றாலும் தமிழ்நாட்டுப் பெண்களின் சுறுசுறுப்பு ஒரே மாதிரிதான், அதே ரொடீன்தான். அமெரிக்காவில் இருந்தாலும் காலை நாலு மணிக்கு எழுந்து குளித்து, தன் பிள்ளை மருமகளுக்கு பிரேக் பாஸ்ட், லஞ்சுக்கு சாதம் கறி, குழம்பு ரசம் எல்லாம் செய்து பேக் செய்து வைத்து. பிறகு நேரே தன் ரூமுக்குச் சென்று படிக்க ஆரம்பித்து விடுவாள் . என்ன படிப்பாள்? கதையா? தினசரி பேப்பரா? என்றுதானே கேட்கிறீர்கள்?. அதெல்லாம் இல்லை, எக்ஸாமிற்குப் படிப்பாள்.
“ஓ” மேற்கொண்டு படிக்கிறாள் உன் தோழி. இதிலென்ன அதிசயம்? நல்லதுதானே? ரொம்ப பில்டப் கொடுக்காதே ராதா”! என நீங்க சொல்றது கேட்கிறது. இருங்க! இருங்க. என் தோழி பி.எஸ்சி படித்துள்ளாள். இப்போ அவள் படிப்பது மேல் படிப்பு இல்லை, கீழ் படிப்பு. ஆமாம் 4 வதும் 5 வதும் படிக்கிறாள். ஐந்தாவது பாடப் புத்தகத்தில் ஆங்கிலம், ஹிந்தி, மேத்ஸ், சயின்ஸ் ஜாகரபி எல்லாம் தினமும் எல்லாப் பாடமும் தலா ஒரு புத்தகம் படித்து முடித்து, எக்ஸாம் பேப்பர் போன்று ரெடி செய்து கேள்வி பதில், பொருத்துக, கோடிட்ட இடம் நிரப்புதல், சரியான பதிலைத் தேர்ந்தெடுத்தல் எல்லாம் A4 ஷீட் பேப்பரில் கையால் அனைத்தும் எழுதி வைத்து விடுவாளாம். பிறகு 8 மணிக்கு Zoom செஷன், இதெல்லாம் முடிய மணி 12 ஆகிவிடும். பிறகு கணவருடன் லஞ்ச். உமாவின் கணவர் A4 ஷீட் அனைத்தையும் ஒவ்வொன்றாகப் போட்டோ எடுத்து, அதை PDF ஆக மாற்றி இந்தியாவுக்கு அனுப்ப, இங்கு இந்தியாவில் இருக்கும் பெரிய பிள்ளை, A4 sheet ல் Print-out எடுத்து Work sheetடாக தன் இரு பிள்ளைகளுக்கும் கொடுப்பார். தினமும் காலை 8 மணி, சனி ஞாயிறு US இரவு 9 மணிக்கு Zoom Section ஆரம்பமாகும். இந்தியாவில் இரவு 7 மணிக்கு உமாவின் பேரன்கள் இருவரும் Zoomமில் ஆஜர். முதலில் தினமும் ஸ்வாமி ஸ்லோகம் பிறகு பேப்பரில் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் எழுதனும், Maths போடனும், இந்தி படிக்கணும். இதைக் கண்காணித்து, பாடம் சொல்லிக் கொடுத்து, உமா படுக்கப் போக இரவு மணி 11 ஆகிவிடும்.
தினமும் என் தோழியின் ரொடீயின் வேலை இது. தன் பேரன்களுக்குத்தான் படிப்பு சொல்லி தருகிறார், கரெக்ட். எவ்வளவு பாட்டி தாத்தாக்கள் இப்படி முனைப்பாக இருக்கிறார்கள்? சொல்லுங்க.
“உமா சென்னையிலிருக்கும்போதுதான் இதெல்லாம் செஞ்சே ஓகே. இப்போ யு.எஸ் போனா ஜாலியா அங்க இங்க போ, ஊரைச் சுத்திப் பார்த்து, கோவில் டிவின்னு இரு. அங்க போயும் இப்படி நாலு மணிக்கு எழுந்து, படித்து எழுதி, சமைச்சு.. அதான் உன் பேரன்கள் நல்ல ஸ்கூலில் நன்றாக படிக்கிறார்கள். எதுக்கு நீ இப்படி மெனக்கெடறே?” என்பேன்.
“இல்ல ராதா!!இந்தக் கால பிள்ளைகளுக்குப் படிப்பு அதிகம், வீட்டில் சொல்லிக் கொடுக்க ஆள் இருக்கனும், என் பிள்ளையும், நாட்டுப் பெண்ணும் காலை 8 மணிக்கு வேலைக்கு போனா இரவு 7 மணியாகும் வீடு வரா, டியூஷன் வெச்சா செலவும் அதிகம், அது மட்டுமல்ல, அவர்கள் போய் வருவதையும் கண்காணிக்கனும். நம் பேரப்பிள்ளைகளுக்கு நாம் சொல்லிக் கொடுப்பதுதான் சிறந்தது. எனக்கும் அதில் ஆர்வம், என் பிள்ளை நாட்டுப் பெண்ணுக்கும் இதில் திருப்தி, என் பேரப்பசங்களும் என் சொல் பேச்சு கேட்பார்கள், படிக்கிறார்கள். இதுதான் எனக்குச் சந்தோஷம் என முடித்தாள் உமா.
இன்றும் பல குடும்பங்களில், தன் பேரப் பிள்ளைகளுக்கு படிப்பு, பாட்டு, டான்ஸ், ஸ்லோகம், என சொல்லிக் கொடுக்கும் பாட்டி தாத்தாக்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் அன்பான சல்யூட். இதை எழுதக் காரணமாக இருந்த என் இனிய தோழி உமாவிற்கு ஒரு உம்’மா”!
“சரி.. என் பெண் போனில் சொன்னது.. “அம்மா, நீயும் நானும் ஒரு விதத்தில் லக்கி மா”
“என்னடீ லக்கீ!! உன்கிட்டே கார் கீ இருக்கு, என்கிட்டே சைக்கிள் கீ கூட இல்ல. எப்படி ரெண்டு பேரும் லக்’கீ?”
“அம்மா கடிக்காதே!!”
“சும்மா டீ !!சொல்லு,சொல்லு!”
“மாமியார் விஷயத்துல நீயும் நானும் ஒரே மாதிரிதான். பாரேன், அந்தக் காலத்தில் உன் மாமியார் ரொம்ப ஸ்வீட். நீ வேலைக்குப் போனா, உன் குழந்தைகளைப் படிக்க வெச்சு, வளர்த்து, கொடுத்துட்டா. அதே மாதிரி தான்மா என் மாமியார். சோ ஸ்வீட் லேடி. நான் வேலைக்குப் போனா, வீட்டப் பத்தி, குழந்தைகளைப்பத்தி எனக்கு ஒரு கவலையில்லை, சென்னையிலிருந்தாலும், யு.எஸ் போனாலும் ஜூமில் பாடம்,ஸ்லோகம் சொல்லித்தரார். நான் லக்கீ தானே”
“ஆமா! ஆமா! நீ லக்கி, நான் மூணு கீ. என் சம்பந்தி, என் பேரன்களின் பாட்டி, என் பெண்ணின் மாமியார் உமா. அப்போ நான் ட்ரிபிள் லக்கிதானே?ஆங்” (என் தோழி உமா என் சம்பந்தி ஆச்சே)