மனதில் ஒளிந்திருக்கும் நரகாசுரன்களை அழிப்போமா?

 விடிந்தால் தீபாவளி.. ஊரே உற்சாகத்துடன் பரபரவென்று இருக்கிறது. இரவு நெடு நேரம் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தாலும் எப்பொழுது விடியும், புதிய ஆடை உடுத்தி பட்டாசுகளை வெடிக்கலாம் என்று சிறார்களும், மாமனார் வீட்டு உபசரிப்பில் மயங்கியபடி இளம் மனைவியைச் சுற்றி வரும் புது மாப்பிள்ளைகளும், கண்கவர் ஆடைகளில் வலம் வந்தாலாவது தான் விரும்புபவள் கடைக்கண்ணால் தன்னைப் பார்க்க மாட்டாளா! என ஏங்கும் இளைஞர்களும், பட்டாம்பூச்சிகளாய் வண்ண வண்ண உடைகளில் மினுமினுக்கும் புன்னகையுடன் கைகளில் இனிப்புகள் ஏந்தி காண்போர் மனதைக் கொள்ளை கொள்ளும் டீன்ஏஜ் பெண்களும், சிறார்களை எச்சரித்தபடி பெரியவர்களும் என தீபாவளியின் பரபரப்பு ஆங்காங்கே தெரிந்தாலும் ஏதோ ஒன்று விடுபட்டிருப்பது போலவே மனதுக்குள் நெருடுகிறது .

அது என்ன என்று தெரிந்து கொள்ளுமுன் மனது புலம்பிய (என்) கவிதையை வாசிக்க வேண்டுகிறேன்.

அன்று

விடிந்தால் தீபாவளி வீடு நிறைய கூட்டம்

கைகளில் மருதாணியும் கண்களில் குறும்புமாக 

அத்தை மகள் மாமன் மகனின்

அன்பான ஸ்பரிச மோதல்கள்

வகைவகையான பலகாரம் வாழ்த்து சொல்ல வந்த

வஞ்சனை இல்லா மனிதர் கூட்டம்

தாத்தா பாட்டி நடு நாயகம்

அம்மா மட்டும் வியர்வை வழிந்த முகத்துடன்

சமையலறைப் பின்கட்டில்

வெடி வெடித்து இனிப்பு உண்டு கொண்டாட்டம் ஆரம்பம்

அம்மாவின் கரம்பற்றிப் புதுசு உடுத்த வைத்து

அப்பாவுடன் சேர்த்து நின்று ஆசி வழங்க வேண்டினோம்

அந்த நேரம் அம்மா முகத்தில் தெரிந்த நிறைவு.. ஆஹா !

இன்று

அலுவலகம் விட்ட விடுமுறையில்

காதல் கணவரின் கரம்பற்றி அலங்காரமாய் வெளியில் சுற்றி

ஒற்றைப் பிள்ளை கேட்டதெல்லாம் வாங்கித் தந்து

ஒப்புக்கு வெடி வைத்து கடையில் வாங்கிய

ரெடிமேட் பலகாரங்களுடன் வீட்டுக்கு வரும்

ஒன்றிரண்டு பேரை ஆயாசமாய் வரவேற்று

புதுச் சேலை கசங்காமல் போட்ட மேக்கப் கலையாமல்

கொண்டாடினேன் தீபாவளியை

ஏனோ அம்மாவின் நிறைவு மட்டும் இல்லை

என் வீட்டிலும் என் அகத்திலும்…

என் மனதில் எழுந்த நெருடலுக்கான பதிலை இந்தக் கவிதை மூலம் தெரிந்து கொண்டிருக்கலாம். இதுதான் இன்றைய குடும்பத் தலைவிகளின் நிலைமை. வாழ்வில் “விரக்தி” என்னும் நரகாசுரன் இங்கே ஒளிந்து உள்ளான்.

அடுத்து ஒரு வீட்டில் நடந்த காட்சி “என்னோட சுடி டாப்ஸை  எடுக்காதேன்னு எத்தனை தடவை உனக்கு சொல்றது”

“அப்படித்தான் எடுப்பேன், எடுத்தா என்ன செய்வாய்?”

“உன் பல்லை உடைப்பேன்”

”உடைத்துத்தான் பாரேன்”

“என்னடி திமிரா பேசுற? அக்காங்கற மரியாதை இல்லாம..?”

“நீ மட்டும் ரொம்ப ஒழுங்கா? நேத்து அந்த ரகு கூட சுத்துனத அம்மா கிட்ட சொன்னா தெரியும்” அவ்வளவுதான்.. “ஆ  அம்மா..” தலையில் ரத்தம் வழிய தங்கை நிற்க பத்ரகாளியாய் ஆவேசம் ஆனாள் அக்கா.

இச்சம்பவத்தில் கையில் கிடைத்ததை எடுத்து அடித்த அந்த அக்காவின் மனதில் “கோபம்” என்னும் நரகாசுரனும், அக்காவின் மேல் குறை சொல்லி அவள் கோபத்தைத் தூண்டிய தங்கையின் மனதில் “வெறுப்பு” என்னும் நரகாசுரனும் ஒளிந்து உள்ளான். (அந்தக் காலத்தில் அக்கா போட்டுத் தந்த பழைய ஆடையை ஆசையுடன் அணிந்து மகிழ்ந்தது நினைவில்).

 இது ஒரு சின்ன உதாரணம்தான். ஆனால் இந்த அசுரர்கள் நம் வாழ்வில் புகுந்து படுத்தும் பாடு இருக்கிறதே. அவர்களின் பிடியில் சிக்காத மனிதர்களே இல்லை எனலாம். ஆனால் இவர்களையெல்லாம் அழித்து, தன்னையே வென்ற மனிதர்களே மகான்களாகிறார்கள். நாம் மகான்கள் ஆக வேண்டாம். நம்மால் இவர்கள் இல்லாமல் வாழமுடியாது. ஏனெனில் காலம் அப்படி.. அட்லீஸ்ட் நாம் இவர்களைக் கண்டுகொள்ளாமல் சாதாரண மனிதர்களாக வாழ முயற்சித்தால் என்ன ?

 இன்றைய செய்தித்தாள்களில் 90%  முறையற்ற உறவுகளும், விபத்துகளும், கொலைகளும், தற்கொலைகளும், தாக்குதல்களும்தான் செய்திகளாக ஆக்கிரமிக்கின்றன. இவற்றிற்கெல்லாம் என்ன காரணம்? அலைபேசியிலும் டெக்னாலஜி தரும் செயற்கை நுண்ணறிவிலும் மனித வாழ்க்கை கட்டுப்பாடுகளற்ற சாலையில் பயணித்து கொண்டிருப்பது தான். இந்தப் பயணம் சென்று முடிகிற இடம் ஆபத்தாகத்தானே இருக்கும்?

வெறும் பணம் மட்டுமே வாழ்க்கை என்று எண்ணி, உறவுகளுடனான உன்னத நேரங்களை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம். அன்று வாழ்வின் பாதுகாப்பான பயணத்துக்கு வேகத்தடைகளாகச் சில பழக்கவழக்கங்களை ஏற்படுத்திய பெரியவர்களை இன்றுள்ள அவசர வாழ்வின் வேகத்தடைகளென எண்ணி முதியோர் இல்லங்களில் விடும் நிலைமையை என்ன சொல்ல?

 வேகமான உணவு, வேகமான பயணம், வேகமான வாழ்க்கை இவை வேகமான மரணத்தையே வரவழைக்கும். சாட்சியாக  இயற்கையே நம் வேகமான போக்கிற்குத் தடையாகத் தந்த கொரோனாவை மறந்து விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நம் கடமை. அதிலும் தற்போது சினிமா மோகம் இளையவர்களிடையே அளவுக்கு அதிகமாகப் புரையோடிப் போகிறது. இதற்குப் பெற்றோரும் ஒரு காரணம் என்பது வருத்தம் தரும் விஷயம். பெற்றோர் எவ்வழியோ அவ்வழியேதான் பிள்ளைகளும் பயணிப்பார். அது நல்லது என்றாலும் தீயது என்றாலும்.

குறிப்பாக அவசரமின்றி நிதானமாக வாழ்வை அதன் போக்கில் அனுபவிக்கவே நமக்கு இந்த மனிதப் பிறவி கிடைத்துள்ளது. வசதிகள் மட்டுமே வாழ்க்கை ஆகாது. பிறருக்கு நாம் செய்யும் சிறு உதவியினால் எழும் மன நிறைவுதான் உண்மையான வாழ்வின் அர்த்தம்.

ஒரு நரகாசுரன் அழிந்ததற்காக வருடத்தில் ஒருநாள் மகிழ்வுடன் தீபாவளி கொண்டாடும் நாம், நம் மனதில் உள்ள காமம், குரோதம் ,பகை, பொறாமை ,கோபம்.  வெறுப்பு போன்ற வாழ்வைச் சீரழிக்கும் பல நரகாசுரர்களை அழித்தால் தினம் தினம் தீபாவளியாக மகிழலாமே .

அனைவருக்கும் ஆண்டு முழுவதும் அன்பில் மகிழ்ந்து கொண்டாடும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Author

Related posts

நாள்: 20

நாள்: 19

வழி நடத்தும் நிழல்கள்