மோடி செய்த மோதி

முன் குறிப்பு : இது அரசியல் பதிவு… இல்லை!

எழுதுவது குறித்து ஒரு நண்பரோடு பேசிக் கொண்டிருந்தேன். பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும் முறை பற்றிப் பேச்சு திரும்பியது. ஒலிக்கும் முறையிலேயே தமிழில் எழுதுகிறோம் என்பதால் அச்சொற்களின் உச்சரிப்புக்கு எவ்வளவு நெருக்கமாகச் சொல்ல முடியுமோ அப்படி எழுதுவதுதான் சரி என்பது என் எண்ணம். ஆனால் இதில் சில இடைஞ்சல்கள் இருப்பதாக நண்பரின் கருத்து. ஓர் உதாரணத்தோடு தன் தரப்பை முன்வைத்தார்.

அவர் சொன்ன உதாரணம் பிரதமர் மோதி. தமிழில் மோதி என எழுதினால் மோதுதல் என்ற பொருள் வருமே. அதனால் அதனைத் தவிர்த்து மோடி என எழுதுகிறேன் என்றார். அவரது பெயரின் சரியான உச்சரிப்புக்கு மோதி என்று எழுதுவதே நெருக்கம் என்பது என் கட்சி.

முதலில் மோதி என்ற பெயரைப் பார்க்கலாம். குஜராத்தில் இருக்கும் சமூகங்களில் ஒன்று மோத் என்று அழைக்கப்படும் சமூகம். மோதேரா என்ற இடத்தில் இருந்து வந்தவர்கள் என்பதாலும் மோதேஸ்வரி மாதா என்ற தெய்வத்தை வணங்குபவர்கள் என்பதாலும் இவர்களுக்கு மோத் என்ற பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள். இன்று இந்து, முஸ்லீம், பார்ஸி என பல்வேறு சமயங்களைச் சார்ந்தவர்களும் மோதி என்ற பெயரைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். மோதி என்ற பெயருக்கு இனிமை, களிப்பூட்டுவது (Sweet, Delightful) என்பது பொருளாம்.

இவர்கள் வணிகச் சமூகம். குறிப்பாக மளிகைப் பொருட்கள் விற்பனை, தானிய வியாபாரம் போன்றவை இவர்களது பாரம்பரிய வணிகம். எல்லா சமூகங்களைப் போலவே இன்று எல்லா துறைகளிலும் மோதி என்ற பெயர் கொண்டவர்கள் இருக்கிறார்கள். இந்திய பிரதமர் நரேந்திர மோதி இச்சமூகத்தைச் சார்ந்தவர் என்பது அவரது பெயரால் எளிதில் புரிந்து கொள்ளலாம். ஆனால் மகாத்மா காந்தியும் மோத் சமூகத்தைச் சார்ந்தவர்தான் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருந்திருக்காது.

இருக்கட்டும். நாம் மோடிக்கு வருவோம். மோதி என்ற சொல் தமிழில் இருப்பதால் குழப்பம் வரும், எனவே மோடி என எழுதுகிறேன் என்பது நண்பரின் விளக்கம். ஆனால் மோடி என்ற தமிழ்ச் சொல்லும் இருப்பதை அவர் ஏனோ மறந்துவிட்டார். மோதி என்ற சொல் புழக்கத்தில் இருக்கும் அளவிற்கு மோடி இல்லை என்பதும் காரணமாக இருக்கலாம்.

மோடி என்ற சொல்லுக்கு அகராதி பல பொருள் தருகின்றது. காட்சி (Show, Exhibition), மேட்டிமை (Pride), செருக்கு (Arrogance), ஆடம்பரம் (Pomp), கம்பீரம் (Majestic), பிணக்கு (Quarrel), வசியம் (Enchantment), வஞ்சகம் (Deceit), விதம் (Manner), மொத்தம்(Wholesale), காளி (Goddess Kali) என இந்த ஒரு சொல்லுக்கு அத்தனை விதமான பயன்பாடுகள் இருக்கின்றன. இருந்தாலும் இன்று இச்சொல்லை யாரும் பயன்படுத்துவதில்லை என்பதால் மோடி என்பது தமிழ்ச்சொல் என்பதே பொதுவாகத் தெரியாத நிலை.

மோடி என்ற சொல்லை இன்றைக்கு மோடி வித்தை, மோடி மஸ்தான் என்ற ஒரு பயன்பாட்டில்தான் பார்க்கிறோம். இச்சொல்லுக்குக் காட்சி, வசியம் என்ற பொருள் இருப்பதைப் பார்த்தோம். மஸ்தான் என்பது முகமதிய ஞானிகளுக்கான பட்டம். ஒரு வேளை சித்து விளையாட்டுகள் செய்து காட்டிய ஞானிகளால் மோடி மஸ்தான் என்ற பதம் வந்திருக்கலாம். யாரோ ஒருவர் இந்த மோடி அரேபியச் சொல் அதனால்தான் மஸ்தானோடு இணைந்து வருகிறது என்று பேசிய காணொளியைப் பார்த்தேன். அது முற்றிலும் தவறு.

இந்தச் சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்தே புழங்கி வரும் ஒரு சொல். 12ஆம் நூற்றாண்டில் அடியார்க்கு நல்லார் எழுதிய சிலப்பதிகார உரையில் “மோடி முன்றலையை வைப்ப ரேமுடி குலைந்த குஞ்சியை முடிப்பரே ஆடி நின்றுகுரு திப்பு துத்திலத மம்மு கத்தினி லமைப்பரே” எனக் குறிப்பிடுகிறார். இது கவிச்சக்கரவிருத்திச் செய்யுள் என்ற தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள் எனப் பொதுவாக அறியப்படுகிறது. இங்கு மோடி, காட்சி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

அதே காலத்தில் ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட தக்கயாகப்பரணி என்ற நூலில் மோடி என்ற சொல் வேறு பல பொருள் வருமாறு கையாளப்பட்டுள்ளது. உதாரணமாக “நெடுங்குன் றேழும் பிலமேழு நேமிக் கிரியுங் கடலேழும் ஓடுங்கும் பாகத் துறைமோடி யுறையுங் காடு பாடுவாம்” என்ற இடத்தில் மோடி உறையும் காடு எனச் சொல்லும் பொழுது காளி என்ற பொருளில் பயன்படுத்துகிறார். பின்னொரு இடத்தில் “ஓன்றுபேருவகை சென்றுகூறுகென

வோடிமோடிகழல்‌ சூடியே” என்னும் பொழுது பெருமை உடையவளின் பாதங்களைப் போற்றி என்று பயன்படுத்தி இருக்கிறார்.

பணவிடுதூது என்ற நூலில் “அப்போதிலொதரு மோடியுமாய் வேறே முகமு மாய்” என்னும் பொழுது விதம் என்னும்படியாகவும், விறலிவிடு தூது என்ற நூலில் “ஊடலாய்ப் போவாரை மோடி திருத்துவார்” என்கையில் பிணக்கு என்ற பொருளில் சொல்லி இருக்கிறார்கள். இப்படி கலிங்கத்துப்பரணி தொடங்கி, நீலகேசி, சூளாமணி, தேவாரம், திருப்புகழ் என தமிழ் இலக்கியங்களில் மோடி என்ற சொல் இவற்றில் பல முறை, பல்வேறு பொருள் வரும்படி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இவர்களை எல்லாம் சொல்லிவிட்டு பாரதியைச் சொல்லாமல் விட முடியுமா? கண்ணன் பாட்டுத் தொகுப்பில் “நின்றன் மோடி கிறுக்குதடி தலையை, நல்ல மொந்தைப் பழைய கள்ளைப் போலே” என்றும் “மோடியிரை தேடி வாடியலையும் மொந்தையர் மாடியிலே” என்றும் பாரதியும் மோடியைப் பாடல்களிலே சேர்த்திருக்கிறான்.

தற்காலத்திற்கு வந்தோமேயானால் 1955ஆம் ஆண்டு (1955 எல்லாம் தற்காலமா எனக் கேட்கக்கூடாது. 12ஆம் நூற்றாண்டிலிருந்து வரும் பொழுது அப்படித்தான்!) வந்த அனார்க்கலி என்ற திரைப்படத்தில் “ராஜசேகரா என்னை மோடி செய்யலாகுமா” என்ற ஒரு பாடல் இடம்பெற்றிருக்கிறது. என்னை மயக்கி கவர்வது சரியா என்று கேட்பது வசியம் செய்து மயக்குவது சரியா என்ற பொருளில் இருக்கிறது. கர்நாடக சங்கீதத்தில் சுப்பராம ஐயர் என்பவர் இயற்றிய “யாருக்காகிலும் பயமா” எனத் தொடங்கும் பதம் என்ற வகைப் பாடலில் “போருக்குள் விஜயனென் மோடி லிங்கதுரை” என்று வரும் வரியில் இச்சொல் கம்பீரம் என்ற பொருளில் வருகிறது. இன்றும் கூட கிராமப்புறங்களில் மோடியாய் வாங்கினேன் என்பார்கள். அதற்கு மொத்தமாக வாங்கினேன் என்பது பொருள்.

இப்படி மோடியால் மோடி (வசியம்) செய்யப்பட்டு, எம் தமிழின் மோடியை (கம்பீரத்தை) கண்டு வியந்து, இத்தனை மோடியாய் (விதமாய்) ஒரு சொல்லைப் பயன்படுத்த முடிந்த அதன் வளத்தினால் மோடி (செருக்கு) கொண்டிருக்க, நண்பரோடு பேசியது ஒரு வாய்ப்பானது!

–இலவசக்கொத்தனார்

Author

Related posts

நாள்: 21

நாள்: 20

நாள்: 19

1 comment

முத்து October 24, 2025 - 8:08 pm
மோடிகளிடம் மோதி மோடி செய்வது பற்றி: ஆங்கிலத்தில் "சரியான பெயர்ச் சொல்" (roper Noun -Google translation) என்றால், முதல் எழுத்து "பெரிய எழுத்தாக" இருக்கும்; ஆகவே தமிழர் யாரும் மோதவோ மோடி செய்யவோ மாட்டார்கள். தமிழில் அந்த வசதி இன்மையால் "மோதியார்" அல்லது "மோடியார்" என்று எழுதினால் இந்தக் குழப்பம் இருக்காது.
Add Comment