சில பெண்கள் தான் அழகாக இருக்கிறார்கள். அவர்களில் சரிதா ஒருத்தி. சில பெண்கள்.. ஏன் எவ்வளவோ பெண்கள் சாதாரணமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களில் நான் ஒருத்தி. அழகு என்றால் அகத்தழகு அது இது என்று புத்தகங்களில் எழுதுகிறார்களே அது இல்லை. நான் சொல்வது அழகு. வெளியில் கண்ணுக்குத் தெரியும் அழகு.
ஹல்லோவ்… என்ன ஆரம்பத்திலேயே நான் புலம்புகிறேன் என்கிறீர்களா!
ம் என்ன செய்ய.. செய்ய வைத்து விட்டாளே அவள்..
என்னைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லையே.. என் பெயர் ஷிவானி நாராயணன். ம்ஹூம் அந்த பிக்பாஸ் ஷிவானிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. நான் சுமார்தான் என்று முன்பே சொல்லிவிட்டேன். ஆனால் எனக்கு வாய்த்த கணவர் சுந்தர்ராஜப் ப்ரசன்ன வெங்கடேச மூர்த்தி (அவர் அப்பா தீவிர பெருமாள் பக்தர்) அலையஸ் கோபி.(இன் ஷார்ட் ஃபார்ம்). ஆஃபீஸ் கொலீக்ஸ்க்கு சுந்தரா. நானும் அவரை கோப்பி (கொஞ்சல்) கோப்பூ (கோபம்) யாராவது வெளியாட்கள் உறவினர்கள் வந்தால், “ஏன்னா..” எனக் கூப்பிடப் பழகிவிட்டேன்..
இந்த வளசரவாக்கம் பஞ்சாயத் ஆஃபீஸ், யெஸ் நார்த் ஆர்காட் ரோட்டில்தான்.. அதிலிருந்து கொஞ்சம் இடதுகைப் பக்கம் போனால் சிற்சில தனியார் வங்கிகள் வரும். அதில் ஒரு வங்கியில் கோபி அஸிஸ்டெண்ட் வைஸ் ப்ரஸிடெண்ட். கொஞ்சம் ஜல்லியடிக்கிற வேலைதான்.
வெய்ட் வெய்ட் ஏன் ஷிவானி நாராயணன் என் பெயர் எனக் கேட்கிறீர்கள் தானே? நாணு என் அப்பாவின் பெயர். ஃபேஸ் புக்கிற்காக வைத்தது)
ம் என் அழகைப் பற்றி நான் என்றும் கவலைப் பட்டதில்லை, பிறந்து வளர்ந்து படித்தது சென்னை என்பதால். டோண்ட் கேர் சென்னை கேர்ள் நான் (சமயத்தில் ஆயில் ஆஃப் யூலே, ஃபேர் அண்ட் லவ்லி யூஸ் பண்ணிப்பேனாக்கும்) சமர்த்தாய் எம்.எஸ்.ஸி மேத்ஸ் பண்ணி வேலை எதுவும் கிடைக்காததால் வீட்டிலேயே ட்யூஷன் எடுத்துச் சம்பாதித்துக் கொண்டிருந்த என்னை, கொஞ்சம் சனிப்பெயர்ச்சியோ குருப்பெயர்ச்சியாலேயோ கோபி கொத் எனக் கொத்திக் கொண்டு விட்டார். (அப்பா அம்மா கொடுத்த சீர் வரிசை லிஸ்ட் எல்லாம் சொல்லமாட்டேன்)
ஆக எங்களுக்குக் கல்யாணம் ஆகி பத்து வருடங்கள் ஆக, நடுவில் குட்டியாய் ஒரு நந்தினி என்னும் பெண்குழந்தை பெற்று, அதை பி.எஸ்.பி.பி இல் (பத்மா சேஷாத்ரி ஸ்கூல்) சேர்த்து ஸ்மூத்தாகச் சென்று கொண்டிருந்த என் வாழ்வில் ஏன் சரிதா வரவேண்டும்?
காரணம் என் அபிலாஷைதான்..
நாங்கள் இருந்த ஃப்ளாட் நெசப்பாக்கத்தில் வாடகை ஃப்ளாட். சொந்தமாக ராமாபுரத்தில் ஒரு டூ பெட்ரூம் வாங்கினோம். அதன் வேலைகள் எல்லாம் முடியும் நிலையில் இருந்த போது கிச்சனைப் பார்த்தால் மேக்கப் போடாத சரோஜா தேவியைப்போல வெளிறி இருந்தது.
”கோப்பி”
”சொல்லு ஷிவா”
”நாம ஏன் மாடுலர் கிச்சன் போடப்படாது புது ஃப்ளாட்டுக்கு?!”
”லாமே..பட் இன்னும் மூணு வர்ஷா கழிச்சு டியர்”
’ஓ நோ.. நீ என் செல்லமோன்னோ.” எனக் கொஞ்சம் லேக்டோ கேலமைன் முகத்தில் போட்டுக் கொண்டு, லிப்க்ளாஸ் போட்ட உதடுகளினால் செல்ல முத்தா கொடுக்க (நந்து ஸ்கூல் போயிருந்தாள்) கோபி கொஞ்சூண்டு மயங்கி ஓகே சொன்னது.
பின் என்ன? நான்தான் எனது அக்காவின் பெண் சுரபி அண்ணா நகரில் டெண்ட்டிஸ்ட்.. அவளிடம் பேசி, யார் பெஸ்ட் மாடுலர் எனப் பார்த்தால் – யூரேகா இண்ட்டீரியர்ஸ் டெக்டரேடர்ஸ் என்று சொன்னாள். அதிலிருந்து எங்கள் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தவள்தான் சரிதா.
”ஹாய் மேம், சார். அயாம் சரிதா.. யூரேகா இண்ட்டீர்யர்ஸ் சீனியர் டிஸைனர். இவர் ஷண்முக சுந்தரம். ஓனர் ஆஃப் தி கம்பெனி” எனச் சொல்லி என் கையையும், கோபி கையையும் பிடித்துக் குலுக்க கோபி ஜுரம் வந்த கோழி போல் கொஞ்சம் கையை உதறினார். அவரது கண்ணோ, என்ன தான் பாலை ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்திருந்தாலும் அது கொதித்தபோது கேஸ் ஸ்டவ்வில் சிந்தியிருந்த கொஞ்சூண்டு பாலைக் கண்டுவிட்ட பூனையின் கண்களைப் போலப் பளபளத்தது எனக்கே தெரிந்தது.
காரணம் சரிதா அணிந்திருந்த உடை. டார்க்ப்ரெளன் சுடிதார் டாப். அதில் குட்டைக் கை, கீழே அவள் உடலின் நிறத்தில் வீக்கோ டர்மரிக் வானிஷிங்க் க்ரீமின் கலரில், லைட் யெல்லோ பாட்டம். சிக்கெனப் பிடித்திருந்தது. மேலே அவள் தக்கனூண்டு மெல்லிய செய்ன் அணிந்திருக்க, நடுவில் ஒரு குட்டி டாலர். அதில் என்க்ரேவ் செய்யப் பட்ட ஆஞ்சனேயர் கண்மூடி ராமா ராமா என ஆடிக் கொண்டிருந்தார்.
இருவரையும் அமர வைத்து முதலில் கோபி கேட்ட கேள்வி என்ன தெரியுமோ!
“எத்தனை நாளில் செய்து முடிப்பீர்கள்? ஓ இது தான் நீங்கள் கொண்டு வந்திருக்கும் டிசைனா! சிம்னி வைப்பீர்களா அல்லது விண்டோஸே போதுமா?”
இதெல்லாம் நான் கேட்டதாக்கும். கோபி கேட்டது “இந்த டாலர் ஜி.ஆர்.டிங்களா? ஆஞ்ச்சி ஷிவூக்கு ரொம்பப் பிடிக்கும்”
எனக்கு எப்படி இருக்கும்?! சொல்லுங்கள்.
ஷண்முகம் தான் முகத்தை – காதல் டூயட் பாடும் வேளைகளில் இருக்கும் சிவகுமார் முகபாவங்களைப் போல, பரப்ப்ரும்மமாய் வைத்துக் கொண்டு இறுக்கமாய் இருந்தார் (முதலாளி ஆச்சே)
ஒரு வழியாய் டிசைன் ஃபைனலைஸ் பண்ணி, மொத்த வேலைக்கு நாலரை லட்சம் என முடிவு செய்ய வைத்து, பின் புது ஃப்ளாட்டில் வேலை ஆரம்பித்த போதுதான் வினை.
பகல் வேளைகளில் கார்ப்பெண்ட்டர்கள் வந்து அளவெடுத்து, கிச்சனுக்குத் தேவையான பாக்ஸஸ் எல்லாம் ஃப்ளாட்டிலேயே செய்தனர். எனில் நான் போய் ஒரு விஸிட் மட்டும் அடித்து வந்துவிடுவேன். இவர் பாங்க் முடித்து டொர்ர்ர் என்று அவருடைய பைக்கில் சென்று பார்த்து வருவார்.. என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
மீ பாவம்ங்க..
ஒரு நாள் ஈவ்னிங் என் புது ஃப்ளாட்டுக்குப் போனால் கதவு பெப்பரப்பா எனத் திறந்திருந்தது..
உள்ளே சென்றால்.. (ம்ஹூம் நீங்கள் நினைப்பது போல் அடல்ட் விஷயம்தான் ஆனால் அவ்வளவு டூ மச் கிடையாது) கிச்சனைச் சுற்றி க்ரானைட் எல்லாம் பதிப்பிக்கப்பட்டிருக்க அதில் இன்னும் பாக்ஸஸ் வைக்கப் படவில்லை.
அதில் கனகாரியமாய் வெளிர் கால்களை ( நற நற) வைத்து நின்றிருந்தாள் சரிதா. கீழே டி.கே .என். என் கோபிதான் தேன் குடித்த நரி போல் அவளைப் பார்ப்பது அவரது ஃபோட்டோ க்ரோமாட்டிக் ப்ளாக் க்ளாஸஸ் வழியாக எனக்குத் தெரிந்தது..
கொஞ்சம் சீலீங்கைத் தொட்டு (அணிந்திருந்தது ஸ்லீவ் லெஸ் சுடி – இன்னுமொரு நற நற) “இதுல இங்க ஆரம்பிக்கும் டாப் டெகரேஷன்ஸ்” என ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். டொப்பென்று கை வழுக்கி அவர் மேலே விழப் பார்க்க, அவரோ சட்டென்று பின்னால் போக சமாளித்து கீழே குதித்தவள் என்னைப் பார்த்தாள்.
“வாங்க ஆண்ட்டி..”
‘ம்ம்.. நல்லா டி வி சீர்யல் மாதிரி பண்றாங்கப்பா’ என மனதில் நினைத்துக்கொண்டே ஹாய் என்றேன், அப்போதே தீர்மானித்தேன்.
அண்ணா நகர், சாந்தி காலனி க்ளினிக். எதிரே டாக்டர் சுரபி. டெண்ட்டிஸ்ட், என் அக்காவின் பெண்..
சுரபி குட்ட்டிக் கண்களால் என்னைப் பார்த்தாள்..
”சொல்லு சித்தி.. ஒன் மூஞ்சி ஏன் பேஸ்த் அடிச்சு இருக்கு. நைட் நெட்ஃப்ளிக்ஸ்ல கொரியன் ஹாரர் மூவி ஏதாவது பாத்தியா?”
”அதெல்லாம் இல்லை” – என்றேன்..
“பின்ன பல் கூச்சமா.. அதான் வேண்டேஜ் டூத் பேஸ்ட் ஃபோன்ல சொன்னேனே சித்தி.. இன்னும் போகலையா.. ஆ காமி டெஸ்ட் பண்றேன்”
”பல் கூச்சம்லாம் இல்லை.. கூச்சம் மானம் எல்லாம் போயிண்டே இருக்கு சுரபி”
சுரபி சீரியஸானாள்.. என் முகத்தைப்பார்த்தாள்.. நான் நடந்ததைச் சொல்ல கேட்டாள்.. பின் சிரிக்க ஆரம்பித்தாள்..
“சித்தி.. நம்ம கோப்பு சித்தப்பா அப்படில்லாம் இல்லை..சாது.. இன்ஸ்டால அமலா பால் மாளவிகா மோகனன் பூஜா ஹெக்டேனு பார்த்து ஜென்ம சாபல்யம் அடையற ஆளு.. ஃபேஸ் புக்ல கூட கொஞ்சம் பார்ப்பார்.. அவ்வளவு தான் நேத்துக்கூட ஷாகுந்த்லம் சமந்தா போஸ்டர் எனக்கு வாஸ்ஸப்ல அனுப்பிச்சுருந்தார்.. இன்னொஸண்ட் யூ நோ..அவராவது லவ் பண்றதாவது “ என்றாள் சுரபி
”போடி.. உனக்குத் தெரியாது.. சரிதாவும் கோபியும் என்னோட புது மாடுலர் கிச்சன்ல கோபி – கிருஷ்ணன் ட்ரஸ் சரிதா கோபிகா ட்ரஸ்ஸுல பாக்ஸ் பாக்ஸா ஆடறாங்கடி.. ஈவன் கிச்சன் சிங்க் மேலல்லாம் குட்டியா மாறி டான்ஸ் பண்றாங்க.. திக்குன்னு முழிச்சுக்கிட்டேன் தெரியுமா”
மேலும் சிரித்தாள் சுரபி “பழைய ரஜினிகாந்த் படம்லாம் பார்த்திருப்ப . உனக்குக் கனா வந்திருக்கும்”
“ஹேய்.. என்றேன் நான். ”சிரித்தது போதும். எனக்கு ஹெல்ப் பண்ணுவியா மாட்டியா”
“ஒய் நாட்? சொல்லு நான் என்ன பண்ணனும்”
“ஒரு ஒரு” என் உதடுகள் தாளத்தில் நடுங்கின” ஒரு கொலை பண்ண ஐடியா கொடேன்”
“கொலையா..சரிதாவையா.. இட்ஸ் டூ மச் சித்தி நான் வேணும்னா சித்பா கிட்ட பேஸ்றேன்” எனச்சொல்ல அவள் அறையில் இருந்த ட்யூப்லைட் அணைந்தது. பின் மிளிர்ந்தது..
“இந்த அண்ணா நகரே இப்படித் தான் சித்தி. கரெண்ட் போகும் வரும்” என சுரபி சொல்லிக் கொண்டிருக்க எனக்குள் பிலிப்ஸ் பல்ப் எரிந்தது.
“இப்படிச் செஞ்சா என்ன?”
“எப்படி”
“உனக்கு யாராவது ரெளடிஸ் தெரியுமா. அல்லது உன் அப்பா அதாவது என் அத்திம்பேர்க்கு.?.”
“கொஞ்சம் ஃப்ரீயா விடு சித்தி.. இப்ப என்னதான் செய்யணும்ங்கற”
“இந்தச் சரிதா எனக்கே எனக்கான ஒன்லி ஒன் கருவேப்பிலைக் கொத்து கோபிய லவட்டப் பாக்கறா..கோபி மயங்கினதுக்கு என்ன காரணம்..அவளோட அழகு ..அந்த அழகையே ஒழிக்கணும்”
”ஹச்சோ” என்றான் சுரபி அழைத்து வந்திருந்த ஆட்டோ ட்ரைவர் ராமபத்ரன். வழக்கமாய் இருக்கும் ரெளடிகளைப் போல பரட்டைத் தலை தாடி எல்லாம் இல்லாமல் மொழுமொழு ஷேவ் செய்து நெற்றியில் குங்குமத் தீற்று.. ப்ரெளன் சட்டை.. பேண்ட்.
“என்னங்க.. டாக்டர் நம்ம பொண்ணு..சின்னவயசுலருந்து ஸ்கூல்ல விட்டு வாரேன். ஏதோ கொஞ்சம் மிரட்டல் கட்சிக்கூட்டம், தேர்தல் டயத்துல ஸ்பீக்கர்னு சம்பாதிச்சுகினு இர்க்கேன்.. ஆஸிட் அடிக்கணுமா.. வேணாங்க கேஸ் ஆகிடும்..அப்புறம் உங்களுக்கு துட்டும் ஜாஸ்தி ஆகிடும்” என்றான்
“ஏங்க உங்களுக்கெல்லாம் ராம பத்ரன்னு யார் பேர் வச்சா?”
“ஏன் என் அப்பாரு தான். ரெளடி பேரு ராமபத்ரன்னு க்ரேஸி மோஹன் காலத்துலருந்தே இருக்கு. வேணும்னா பத்ருடுன்னு கூப்பிடுங்க தெலுகு வில்லன் பேராட்டம் இருக்கும்”
“சரி பத்ருடு..ஆஸிட்லாம் வேண்டாம்.. எங்கயாவது அவ போறச்சே எப்படிப் பண்ணுவேன்னு தெரியாது..மொகத்துல ஒரே குத்து குத்திடு.. அவ உதடு கிழியணும் பல் உடையணும்.. அப்ப அழகு கம்மியாய்டும்ல”
“அப்படிப் பண்ணிட்டு என்னோட விஸிட்டிங் கார்ட அவகிட்ட கொடுத்துடு. பல் ட்ரீட்மெண்ட்டுக்கு என் கிட்டதான் வரணும்” என்றாள் சுரபி..
“ஓகேங்க.. இதுக்கு ரேட்டு என்னன்னா” என்று அமெளண்ட் சொன்னவன், போட்டோ வாங்கிக் கொண்டு “ஒரு வாரத்துல பண்ணிடுவேன்.. நீங்க ஒடனடியா ஜி பே பண்ணிடுங்க” என்றான். இதப்பார்டா..
**
பத்ருடு செய்துவிடுவான் என்ற நம்பிக்கையில் நான் வழக்கம்போல வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நந்தினியை ஸ்கூலில் விடுவது, புது ஃப்ளாட் சென்று மாடுலர் கிச்சன் வொர்க்ஸ் பார்ப்பது, ஒரு வியாழக் கிழமை நந்து கம்ப்பெல் பண்ண அந்தப் படத்திற்கு அவளைக் கூட்டிச் சென்றேன்.
படம் போர் தான் ஆனால் எனக்குள் டென்ஷன் ஏற ஆரம்பித்தது.. வெளியே வரும் போது நந்து வேறு, “மம்மி ஒரு பாய் ரெண்டு கேர்ள் நல்லாத் தான் இருக்கும்ல.. இந்தப் படத்துல வர்ற ஒரு கேர்ள் வயசானவ உன்னை மாதிரி.. இன்னொண்ணு நன்னா தகதகன்னு மின்றாங்க” எனச் சொல்ல இன்னும் ஏறியது..
வீடு திரும்பியதும் யோசனை வேறு.. சரிதா வீட்டில் போய்ப் பார்த்தால் என்ன! கைப்பையைத் துழாவினால் விஸிட்டிங் கார்ட்.. சரிதா விஸ்வனாதன்.. நன்றாக பளபள என மின்னியது கார்ட் அவளைப் போல. கொஞ்சம் கசக்கி மறுபடி ஹாண்ட்பேகில் வைத்துக் கிளம்பினேன்..
*
ஆழ்வார் திரு நகரியில் கடைத்தெரு வழக்கம் போல கும்பல்தான்.. சில பல காய்கறிக் கடைகள்.. காஃபிக் கடைகள் ட்ராஃபிக் தான்..
ஸ்கூட்டியில் சென்று அட்ரஸ் பார்த்து அழைத்தால் ஒரு வழுக்கைத் தலை மனிதர் வெளிவந்தார்..
நீங்க..
நான் ஷிவானி..
அவர் முகம் ஒளி பெற்றது” ஓ வாங்க வாங்க. சரிதா சொல்லியிருக்கு. பை தி பை தாங்க்ஸ்ங்க”
”எதுக்கு?”.
”நீங்க தான் கோபி சார் கிட்ட சரிதாக்கு நல்ல பையன் பார்க்கச் சொன்னீங்களாம்.. அவரோட பேங்க்கோட டி.நகர்ல ஒரு பையன் சாந்தாராம்னு அவனோட ஜாதகம்லாம் கொண்டு வந்து கொடுத்தார்.. பொருந்தியும் இருக்கு, பார்க்கலாம்னு இருக்கேன்.. இப்பத் தான் சரிதாவும் கோபியும் போனாங்க.. என்ன சாப்பிடறீங்க”
“இல்ல இந்தப் பக்கம் வந்தேன்.. சரிதாவை பாக்கலாம்னு” சொல்லி எழுந்தேன். ஒரே குழப்பம்..
“என்னது நான் சொன்னேனா. அவராகக் கொடுத்திருப்பார்.. ஓ கோப்பி என் கோப்பி நல்ல்ல்லவர்.. நான் தான் தப்புப் பண்ணிட்டேனோ.. பத்ருடுட்ட சொல்லணுமே. ஸ்டாப் பண்ணச் சொல்லி”
ஒரு வெஜிடபிள் ஷாப் போரம் நிறுத்தினேன்..அங்கும் நல்ல கும்பல்.. ஃபோனை எடுக்க அது ஒலித்தது. பார்த்தால் பத்ருடு..
“மேடம்.. நான் ஆழ்வார் திரு நகரில்ல இருக்கேன். இங்கனக்குள்ளதான்.. அந்தப் பொண்ணப் பார்த்தேன். கூடவே இன்னொரு ஆளும் இருந்தாரு”
“சொல்லு பத்ருடு”
“ஸாரிங்க ஒரு சின்ன மிஸ்டேக் நடந்துடுச்சு. நான் நன்னா கையை மடிச்சு அந்தப் பொண் முகத்துல குத்தலாம்னு போறச்சே அது வெலகிடுச்சு.. அந்த ஆள் மேல பட்டு அவர் முகத்துல நல்ல அடி வாய் கிழிஞ்சு பல் உடைஞ்சு ரத்தம் கூட வருது பாருங்களேன்.. நான் அங்கிட்டிருந்து எஸ்கேப் ஆகிட்டென்.. அடுத்த தபா மிஸ் ஆகாது” என பத்ருடு கூறிக் கொண்டே செல்ல என் தலை சுற்றியது.
அப்படியே கீழே விழ ஸ்கூட்டியும் ஒருபக்கம் சரிந்து விழ நான் மயங்குகையில்தான் அவர்களைப் பார்த்தேன். வெஜிடபிள் ஷாப்பிலிருந்து, ‘ஹச்சோ அந்தம்மா விழுந்துட்டாங்களே’ என்று சொல்லிய வண்ணம்,
ஆறு பேர் என்னை நெருங்கினார்கள்.
1 comment