நாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 2

This entry is part 2 of 4 in the series நாணலிலே காலெடுத்து

இன்னொருத்தி நிகராகுமோ…
எனக்கின்னொருத்தி நிகராகுமோ…
இடி இடித்தால் மழையாகுமோ…
பேதைப் பெண்ணே இன்னொருத்தி நிகராகுமோ
இந்த மின்னலுக்கு அஞ்சேனடி…
வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி…
– கொத்தமங்கலம் சுப்பு


அத்தியாயம் இரண்டு


மூர்த்தி அலுவலகத்தில் நுழைந்த போது முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டான்.

என்ன செய்வது. பதவி, தொழில் அப்படி. அந்த ட்ராவல் ஏஜென்ஸியில் அவன் சீஃப் அக்கெளண்டண்ட். கொஞ்சம் லேசாய்ச் சிரித்தால் போதும். அதையே சாக்காய் வைத்துக் கொண்டு உதவி எதிர்பார்ப்பார்கள். “சம்பள அட்வான்ஸ் வேண்டும்”; “இந்த ஏர்லைன் டெபிட் நோட் தவறானது. நான் சரியான கோட் போட்டுத்தான் டிக்கெட் எழுதினேன். என் மிஸ்டேக் இல்லை”; இப்படிப் பல.

இதற்காகவே சிடுசிடுவென இருக்க வேண்டியதாய் இருக்கிறது. அக்கெளண்ட்ஸ் என்றாலே விற்பனையில் இருப்பவர்களுக்கு ஒரு மெல்லிய கேலி இருக்கிறது. கம்பெனியைக் கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வது அக்கெளண்ட்ஸ் தான் என பலருக்குப் புரிவதில்லை.

ஆயிற்று இந்த துபாய் ட்ராவல் ஏஜென்ஸியில் சேர்ந்து இரு வருடங்கள் ஆகப் போகிறது. நினைத்துப் பார்த்தால் வியப்பாய் இருக்கிறது.

அன்று அம்மாவின் அழுகைக்கப்புறம் மூர்த்தி தீவிரமானான் படிப்பில்.  பியூசி முடித்து பின் பிஎஸ்ஸி மதுரைக் கல்லூரியில் முடித்து சி.ஏ ஒரு ஆடிட்டரிடம் சேர்ந்தான். அவன் சி.ஏ இண்ட்டர் முடிக்கையில் தான் சித்ராவிற்கும் கல்யாணம் ஆயிற்று.

இடைப்பட்ட நாட்களில் சித்ராவுடன் பேசுவதைத் தானாகவே குறைத்துக் கொண்டான் மூர்த்தி. சித்ராவின் பார்வையில் ஒரு மெல்லிய ஏக்கம் இருப்பதாகப் பட்டது மூர்த்திக்கு. பத்தாம் வகுப்புக்கு மேல் அவளைப் படிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டாள் பாட்டி. மாமாவும் ஜாதகக் கட்டை உடனே எடுத்தாலும் கூட நான்கு வருடம் கழித்துத் தான் அவளுக்கும் கல்யாணம் ஆனது.

கல்யாணத்திற்குச் சென்றிருந்தான் மூர்த்தி. வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்ததாலோ என்னவோ கொஞ்சம் சதை போட்டிருந்தாள் சித்ரா. மாப்பிள்ளை அழைப்பின் போது அவளைத் தனிமையில் எதேச்சையாகச் சந்திக்க முடிந்தது.

கல்யாண சத்திரத்தின் ஒரு அறையில் மணப்பெண் அலங்காரங்களுடன் இருந்தாள் அவள். எதற்கோ அந்தப்பக்கம் வந்த மூர்த்தியைப் பார்த்தவுடன் கூப்பிட்டாள்.

“என்ன சித்ரா?”.

யாரும் இல்லையே எனப் பார்த்துவிட்டு, “ரொம்ப தாங்க்ஸ்டா!”.

”எதுக்கு?”.

“இல்லை. அன்னிக்கு ஒரு அடாலஸண்ட் ஸ்டேஜ்ல இருந்தேன். ஒரு உத்வேகத்தில..”

“ நீ என்ன சொல்றேன்னே புரியலை” என்றான் மூர்த்தி.

“நீ எம்டன் டா” என்றாள் சித்ரா சிரிப்புடன். “இருந்தாலும்- மறுபடியும் தாங்க்ஸ் ரொம்ப நாகரீகமா அதை எடுத்துண்டதுக்கு. அதை எல்லாம் மறந்துடுடா மூர்த்தி!”

“கண்டதையும் நினச்சு மனசைக் குழப்பிக்காதே சித்ரா. ஆல் தி பெஸ்ட்” எனச் சொல்லி விலகினான் மூர்த்தி. மறக்க வேண்டுமாம். சுலபமாகச் சொல்கிறாள் இவள். முதல் முத்தத்தை அவ்வளவு சுலபமாக மறக்க முடியுமா என்ன?

அதன் பின் அவளைப் பார்ப்பதற்கு வாய்ப்பே ஏற்படவில்லை. கல்லூரி முடித்து சில வருடங்களிலேயே சி.ஏ முடித்து அதே ஆடிட்டரிடம் இரு வருடங்கள் ப்ராக்டீஸ் பண்ணிவிட்டு வேலை கிடைத்ததும் துபாய் வந்தான் அவன்.

அலுவலகத்தில் கீழே கெளண்ட்டர் (விமான டிக்கட்டுகளின் ரிசர்வேஷனுக்கானது) ஏழு பேர் (ஐந்து ஆண்கள் இரண்டு பெண்கள்)மெளனமாக எதிரே இருந்த டெர்மினலைப் பார்த்து விரல்களினால் விளையாடிக் கொண்டிருக்க அவர்கள் காதுகளில் டெலிஃபோன் ஒட்டி இருந்தது.  ஓரமாய் கூண்டுக்குள் அமர்ந்திருந்த காஷியர் கருணா இவனைப் பார்த்து முறுவலித்தான். தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த அனிதாவும் கவிதாவும் ஓரக்கண்ணால் இவனை ஒரு பார்வைபார்த்துவிட்டு தங்களது தொலைபேசிப் பேச்சைத் தொடர்ந்தார்கள்.

மூர்த்தியின் அலுவலகம் துபாயில் கராமா என்ற இடத்தில் அமைந்திருந்தது. அவனது ட்ராவல் ஏஜென்சிக்கு ஐக்கிய அரபுக் குடியரசு முழுவதும் கிளைகள் இருந்தன. இவன் தான் அனைத்துக்கும் பொறுப்பு.

 ஐக்கிய அரபுக் குடியரசுகளில் துபாய் கொஞ்சம் கூடுதல் அழகு. பிரம்மச்சாரிகளுக்குச் சொர்க்கம் போல. சந்தோஷமாகவும் இருக்கலாம். பணமும் சேர்க்கலாம்.

மூர்த்தி முதல்மாடியில் தன்னறையை அடைந்து அமர்ந்து தான் அன்று பார்க்கவேண்டிய காரியங்களை மடமடவென எழுதிக் கொண்டான். மார்ச் இருபது 1989 என ஆரம்பித்து வேலைகளை முடித்து நிமிர்ந்த போது சில மணி நேரங்கள் சென்றிருந்தன.

கீழே இறங்கலாம் எனக் கால்வைத்த போது கீழிருந்து பெண்களின் வாக்குவாதம் கொஞ்சம் உரக்கவே கேட்டது. வேறு யார் அனிதாவும் கவிதாவுமாய்த் தான் இருக்கும். இருவரும் எலியும் பூனையும் போல. வேலையில் எப்போதும் போட்டி பொறாமை சண்டை தான்.

கவிதா ராமச்சந்திரன் தமிழ்ப் பெண். பாண்டிச்சேரி. முப்பத்தெட்டு வயது. ராமச்சந்திரன் ஒரு ஆயில் கம்பெனியில் வேலை பார்க்கிறார். நல்ல காசு. இரண்டு ஆண் குழந்தைகள். வீட்டில் சும்மா இருக்க போரடிக்கிறது என இங்கு சேர்ந்திருந்தாள்.தனது தொடர்புகளை வைத்து ட்ராவல் ஏஜென்ஸிக்கு நிறைய பெரிய கம்பெனிகள் பிடித்திருந்தாள். எல்லாரும் நல்ல பிஸினஸ் அவளுக்குக் கொடுத்து வந்தார்கள். எப்போதும் பிஸி. வேலையில் புலி. இரண்டு தொலைபேசிகளில் பேசி, க்ளையண்ட்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வாள் அவள்.

அனிதா ஜோஸப் மலையாளி. 23 வயதிருக்கும். கணவர் ஜோசப் இன்னொரு கம்பெனியில் அக்கெளண்ட்ஸ் வேலை. இவளும் வேலையில் பிஸி தான். இவளது காண்டாக்ட்ஸால் நிறைய – பணம் கொடுக்கும் பாஸஞ்சர்கள் கம்பெனிக்குக் கிடைத்திருந்தது. இவளது இளமை அழகின் மேல் கவிதாவிற்கு மெல்லிய பொறாமை உண்டு. அனிதாவிற்கு ஒரு பையன் மட்டும். கவிதா நிறைய கம்பெனி வியாபாரங்கள் கவனிக்கிறாளே என அனிக்குப் பொறாமை. எனில் ரிசர்வேஷன் கெளண்ட்டரில் யாரும் இல்லாத நேரத்தில் -தீக்குச்சி – பெட்டி; பஞ்சு நெருப்பு போல மெல்லிய உரசல் வந்தாலும் பற்றிக் கொண்டு எரியும்.

மூர்த்தி கீழே வந்த போது கேஷியர் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தான். குறும்புக் காரன் அவன்.

கேஷியர் மூர்த்தியைப் பார்த்து நமட்டுச் சிரிப்புச் சிரிக்க மூர்த்தி – அனிதா, கவிதா இருந்த இடத்திற்குச் சென்றான். இருவரும் பின்னால் திரும்பி அங்கிருந்த சுதாகரனிடம் ஸீரியஸாகச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

“பாருங்க சார். இவ என்னோட கேஷ் க்ளையண்ட்டை எப்படி ஹேண்டில் பண்ணலாம். என்னோட பிஸினஸ அவ எப்படி எடுத்துக்கலாம்?’ இது அனிதா.

“ நான் என்ன செய்யறது சுதா. க்ளையண்ட்டைக் காக்க வைக்க வேண்டாம்னு தான் டிக்கட் இஷ்யூ பண்ணினேன். 4000 திர்ஹாம்” – கவிதா.

”பொய். அவளோட கம்பெனி க்ளையண்ட்டோட தான் பேசிக்கிட்டிருந்தா. என்னோட பேஸஞ்சர் எனக்காகக் காக்கணும்னா இருந்துட்டுப் போறாங்க. இவ கம்பெனி க்ளையண்ட்டை எனக்குத் தந்தாளா என்ன.?”

“ஓ தந்தேனே. ஒரு பெரிய டெபிட் நோட் தான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் இருந்து வந்தது” – கவிதா.

“பாருங்க. நான் ஒழுங்கா டிக்கட் எழுதலைங்கறா” – அனிதா.

அந்தப்புறம் இருந்த ஆண்கள் பரப் பிரம்மம் ஜெகன்னாதம் போல டெர்மினல் பார்த்து தம் வேலையைச் செய்து கொண்டிருந்தனர்.

சுதாகரன் புன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருக்க மூர்த்தி அருகில் செல்கையில் டெலிஃபோன் கூவ கவிதா பாய்ந்து எடுத்தாள்.

“குட்மார்னிங். ..ட்ராவல்ஸ்..” பேசப் பேச தொலைபேசியை நழுவ விட்டாள். கண்ணில் நீர் நிரம்பியது. அனிதா பதறினாள்.

“என்ன ஆச்சு கவிதா சேச்சி?”  நழுவ விட்ட ரிஸீவரை எடுத்து மறுமுனையில் இருந்தவரிடம்  விபரம் அறிந்தாள் அனிதா. அதற்குள் மற்றவர்கள் கவிதாவைச் சுற்றிவிட்டனர்.

அனிதா ஆங்கிலத்தில், “சுதாகர். கவிதாவின் கணவருக்கு ஆக்ஸிடெண்ட்டாம். அல் மக்தும் ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கிறார்களாம். சேச்சி. கவலைப் படாதீர்கள்” எனச் சொல்லி விட்டு பட்டன்களை ஒற்றி, “ஜோஸப். அனியானு. .. இங்க கவிதாவின் ஹஸ்பெண்ட்டிற்கு” என விஷயம் சொல்லி “டாக்டர் செரியனைப் பாருங்க. இருக்காரான்னு. நான் லைன்லயே இருக்கேன். என்ன இருக்காரா? சொல்லிட்டீங்களா. சரி நாங்க இப்ப கிளம்பறோம்”. போனை வைத்தாள்.

கவிதா அரற்றவே ஆரம்பித்திருந்தாள்.” என்ன ஆச்சுன்னே தெரியலையே. தலையிலயும் கால்லயும் அடியாம்..” எனச் சொல்லிக் கொண்டிருக்க மூர்த்தியும் காஷியரும் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். “சுதா. நானும் சேச்சியும் கிளம்பறோம். மூர்த்தி நீங்க கார் எடுக்கறீங்களா?. கவிதாசேச்சி. கறயாண்டா. டாக்டர் செரியன் ஹாஸ்பிடல்ல இருக்காம். அவர் செய்வார். வா” என்றாள்

கிளம்பி அல்மக்தும் மருத்துவமனையை  அடைந்த போது எமர்ஜென்ஸி வார்டின் வாசலில் ஜோஸப். கூடவே டாக்டர் செரியன்.

அனிதா கைத்தாங்கலாய்  கவிதாவைப் பிடித்து நடந்து வந்து டாக்டர் செரியனைக் கேள்வியாய்ப் பார்க்க அவர் கொஞ்சமே கொஞ்சம் பால் வார்த்தார். “தலையில் அடி தான். நாட் ஸீரியஸ். கொஞ்சம் ரத்தம் வருது. கட்டு ப் போட்டிருக்கோம். நாளைக்கு ஸ்கேன் பண்ணிடலாம். அண்ட் காலில் அடி. ப்ராப்ளம் இருக்காது என நினைக்கிறேன். ரெண்ட் மூணு நாள் ரெஸ்ட்டில் சரியாகிடும். எக்ஸ்ரேயில் எதுவும் பயமுறுத்தும் படியாக இல்லை”

” நான் சொன்னேன் அல்லவா” என்பது போல் அனி கவிதாவைப் பார்க்க கவிதா “இப்ப எங்கே அவர்?”

”வாங்க பார்க்கலாம்” என்றார் டாக்டர் செரியன். “ நல்லவேளை. நான் இருந்தேன். இல்லை எனில் உள்ளே விட மாட்டார்கள்”.

கவிதாவின் கணவர் தலைக்கட்டு மற்றும் கால் கட்டுடன் தூங்கிக் கொண்டிருந்தார். “கொஞ்சம் செடேட்டிவ் கொடுத்திருக்கிறார்கள். இரண்டு மணி நேரத்தில் கண் விழிப்பார். கவிதா சேச்சி. இந்த எமர்ஜென்ஸி வார்டின் பாலஸ்தீனிய சீஃப் டாக்டர் எனக்கு ஃப்ரெண்ட். இவரைப்பார்த்துக் கொள்ளச் சொல்கிறேன் . நானும் பார்க்கிறேன். ஒருவாரத்தில் சரியாகிவிடும்” என்றார் டாக்டர் செரியன்.

கணவரைப் பார்க்கப் பார்க்க கவிதாவிற்குப் பொங்கிப் பொங்கி வந்தது. அழுகையினூடே அனிதாவைப் பார்த்து, “தாங்க்ஸ் அனிதா” எனவும் அனிதாவிற்கும் கண்கள் நிரம்பி விட்டன. நாசூக்காய்க் கைக்குட்டையால் கண்ணைத் துடைத்து,”என்ன சேச்சி. தாங்க்ஸ்லாம் சொல்லிக்கிட்டு. கறையாண்டா. தைர்யமாக இருங்கள். நான் போய் உங்க குழந்தைகள் கிட்ட பேசறேன். என்ன. எந்த ஹெல்ப்னாலும் கூப்பிடுங்க” என்றாள்.

பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தி கொஞ்சம் திகைத்தான்.

Series Navigation<< நாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 1நாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 3 >>

Author

Related posts

நல்லாச்சி -4

அசுரவதம் : 4 – மாயமான மாரீசன்

நாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 4

2 comments

அனந்த் ரவி July 11, 2025 - 11:00 am
பெண்கள் புரியாத புதிர்கள்தான். மூர்த்தி திகைத்து நிற்க வேண்டியதுதான். நல்லக் கதைக் கருவை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். விறுவிறுப்பாக இருந்தது. வாழ்த்துகள் சார்.
சின்னக் கண்ணன் July 16, 2025 - 11:21 am
மிக்க நன்றிங்க
Add Comment