நாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 4

This entry is part 4 of 4 in the series நாணலிலே காலெடுத்து

வாழாத மனிதரையும் வாழவைக்கும் சேயல்லவோ
பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ
தாழம் குடை அல்லவோ தள்ளாடும் நடையல்லவோ
மாலைப் பொழுதல்லவோ வந்தாடும் செண்டல்லவோ
முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
– கண்ணதாசன்


அத்தியாயம் நான்கு


“மூர்த்தி சார். உங்களுக்கு லைன் ஒன்” என்றாள் செகரெட்டரி.

”ஹல்லோ. மூர்த்தி ஹியர்”

“டாடி..ஈ..” குரல் கூச்சலிட்டது. யோகிதா. அவன் மகள்.செல்லப் பூ. ஆறு வயதுச் சுட்டி.

“யோ. நீ எப்படி இருக்க. ஸ்கூல் விட்டு வந்துட்டியா?”

“வந்துட்டேன் டாடி. இந்த ஷ்ரவன் அதான் என் ஃப்ரண்ட் இல்ல இப்ப அவன் என் எனிமி. என் நோட்ட எடுத்துட்டுத் தரமாட்டேன்னுட்டான்.”

“ நீ என்ன செஞ்ச?”

“ நன்னா நாலு கிள்ளு கிள்ளி பிராண்டி விட்டுட்டேன். தானாக் கொடுத்துட்டான்.கொழுப்பு தானே டாடி அவனுக்கு.” வாய் வாய் உடம்பு முழுக்க வாய். விட்டால் பேசிக்கொண்டே போவாள்.

”உனக்குத் தான் கொழுப்பு ஜாஸ்தி” என்றான் மூர்த்தி விடாமல்.

“போ டாடி. நீ எப்போதுமே இப்படித் தான் . நான் கூப்புட்டதே வேற ஒன்றுக்குத் தான்”

“என்ன யோ?”

“எனக்கு ஜுரம் அடிக்குது டாடி. நான் டயர்டா இருக்கேன்னு அம்மா ஃபீல் பண்றா” தொடர்ந்து கீர்த்தியிடம் அவள் சொல்வது ஃபோனில் கேட்டது. “அம்மா. டாடிய ஆஃபீஸ்ல டிஸ்டர்ப் பண்ணி இந்த விஷயம் சொல்லாதேன்னு சொன்னியே. சொல்லிட்டேன்!”.

மூர்த்தி பதற்றமானான். “யோ. அம்மா கிட்ட கொடு. கீர்த்தி.என்ன ஆச்சு?”.

“கவலைப் படாதீங்க லேசா வெதவெதன்னு இருக்கு உடம்பு. நீங்க வந்ததும் டாக்டர் கிட்ட போகலாம்னு சொல்லிக்கிட்டிருந்தேன். அதுக்குள்ள இவ பண்ணிட்டா”.

“ நான் உடனே வரணுமா?”.

“வேண்டாம். நான் பார்த்துக்கறேன்” ஃபோனை வைத்தான் மூர்த்தி. யோ. என் செல்ல யோ பட்டு யோ. இதுக்கு ஒண்ணும் உடம்புக்கு வரக் கூடாது. வந்தாலும் சீக்கிரம் சரியாகி விடணும்.

யோகிதா என்றால் wild, enchantment என மேனகா காந்தி எழுதிய புக் ஆஃப் நேம்சில் படித்திருந்தான் மூர்த்தி. அது அவனுக்கு மிகவும் பிடித்துப் போக பிறந்த குட்டிப் பூவிற்கும் அதே பெயர்.

நல்ல அறிவுள்ள சுட்டிப் பெண். வளர வளர பண்ணுகிற விஷமத்திற்குக் கணக்கில்லை. அதையும் மீறி சின்னவயசிலேயே ஒருவித பெரிய மனுஷித் தனம் வந்திருந்தது யோவிற்கு.

ஆறு மாதங்களுக்கு முன்னால் ஆஃபீஸில் இருந்து சீக்கிரமாகவே வந்துவிட்டான் அவன். ஜுரம். கீர்த்தி கொடுத்த கஷாயம் குடித்துப் படுத்தும் விட்டான். யோகிதா ஸ்கூலில் இருந்து வந்ததும் மூர்த்தி இருப்பதைப் பார்த்தது. “அப்பாக்கு என்ன ஆச்சு. ஏன் படுத்திண்டு இருக்கார்?’

“ஜுரம்டி. நீ எதுவும் படுத்தாதே!”

முகம் முழுக்க கவலை அப்பிக் கொள்ள அவன் தலைமாட்டிலேயே உட்கார்ந்து கொண்டதாம். கீர்த்தி அவன் கண் விழித்தவுடன் சொன்னாள். “சாப்பிடவே மாட்டேன்னு அடம்ங்க. அப்புறம் நீ சாப்பிட்டாத் தான் அப்பாக்கு தேவலையாகும்னு சொன்னதுக்கப்புறம் தான் ரெண்டு வாய் சாப்பிட்டது. வழக்கமா ப் பேசற பேச்செல்லாம் பேசாம உங்களையே பார்த்துண்டு இருந்தது.  அப்பாக்குத் தேவலையாய்டுமாம்மா எனப் பல தடவை கேட்டது”

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த யோ வைப் பெருமையுடன் பார்த்தான் அவன். அவனுக்கு நான்காம் நாள் தான் ஜுரம் தேவலையாயிற்று. நான்கு நாட்களிலும் யோகிதாவிடம் இருந்து ஒரு சப்தமும் எழும்பவில்லை. யோகிதா ஸ்கூல் போன பிறகு தான் கண் விழித்தான் அவன்.

 கீர்த்தி சொல்லித் தான் தெரிந்தது. “ரொம்பச் சமர்த்தா இருக்குங்க. கண் முழுக்கக் கவலை. எனக்குக் கூட இல்லை. இது படறது. வழக்கமா சாமி கும்பிட்டுட்டுப் போடின்னு கத்துவேன். அலட்சியமா கேக்காம போகும். இப்போ மூணு நாளா தானா பூஜை ரூமுக்குப் போய் பெருமாளையே பார்த்துண்டு நிக்கறது.” என்றாள் கீர்த்தி.

அன்றிரவு அவன் அருகில் வந்தது யோ. “டாடி பெருமாள் கிட்ட நான் ஒண்ணு கேட்டிருக்கேன்”

“என்ன?”

“உன் ஜுரம் எனக்கு வரணும்னு. நீ  கஷ்டப் படக்கூடாது”

“உனக்கும் உடம்புக்கு வந்து நான் கஷ்டப் படணுமாக்கும். சும்மாத் தூங்குடி” சீறினாள் கீர்த்தி.

“வெவ்வெவ்வெவ்வே” காட்டி அடிக்க வந்த கீர்த்தியிடம் இருந்து தப்பி பின் மாட்டி அடிவாங்கித் தூங்கியது யோ.

இது மட்டுமில்லை. போன லீவில் சென்னை சென்றிருந்த போது தாத்தா பாட்டியிடம் விளையாடிக் கொண்டிருந்தாள். பக்கத்து மெகானிக் கடையில் ஒரு சிறுவன் ரிப்பேர் செய்வதைப் பார்த்தது யோ.

“இவனுக்கு ஸ்கூல் கிடையாதா பாட்டி. ஏன் அவன் ட்ராயர் கிழிஞ்சுருக்கு?”.

“அது அப்படித் தான் செல்லம். அவன் வேலை பார்க்கறானோல்லியோ. அதான்.ஸ்கூலுக்குப் போகலை” என்றாள் பாட்டி.

“ஏதாவது ஏதாவது நல்ல டிரஸ் வாங்கித் தரலாம் பாட்டி” சொன்னது மட்டுமல்ல செய்தும் விட்டாள் யோ. “உன் குழந்தைக்கு, என் பேத்திக்கு பெரிய மனசு தான் போ” என்றாள் அம்மா கிளம்பும் போது.

“விஷமத்திலும் சளைத்தவளில்லை யோ”. காரை பர்துபாயில் உள்ள வீட்டை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்த போது நினைத்தான் மூர்த்தி.

ஒரு தடவை யோகிதா விளையாடப் போயிருக்கிறாள் என அறிந்து சமையலறையில் இருந்த கீர்த்தியை ஓரங்கட்டிக் கொஞ்சிக் கொண்டிருந்த போது க்கும் என்ற சத்தம். திரும்பினால் யோ. இருவரும் வெட்கத்துடன் விலகினர்.

யோ திரும்பியது. முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டது.ஹாலில் சோஃபாவில் போய் உட்கார்ந்து கொண்டது. பேசவில்லை.

இருவருக்கும் காரணம் புரியவில்லை. பேசிப் பார்த்தார்கள். கொஞ்சிப் பார்த்தார்கள். ம்ஹூம் பேசவில்லை. வாய் மட்டும் கோணியது.

“ஏய். என்னடி சொல்லு?” கீர்த்தி எரிச்சலைந்து கேட்க கோபத்துடன் பதில் வந்தது. “ எனக்கு நீங்க ரெண்டு பேரும் கிஸ் கொடுத்தீங்களா?, நீங்க மட்டும் கொடுத்துக்கறீங்க?!’. இருவருக்கும் சிரிப்பு வந்து முத்தமழையால் நனைத்து விட்டனர். அந்த சமயம் தானா மூர்த்தியின் அப்பா ஃபோன் செய்யவேண்டும். மானத்தை வாங்கி விட்டாள் யோ.

“தாத்தா. எனக்கு அப்பாம்மா கிஸ் தரமாட்டேங்கறா. அவாளே கொடுத்துக்கறா. நீ தர்றயா?”.

“தாராளமா கண்ணு உனக்கில்லாததா?” என்று சொல்லி அப்பா சிரிக்கும் சத்தம் வெளியில் கேட்டது. “அவங்கிட்ட கொடும்மா நான் பேசறேன்.” என்றவர் மூர்த்தி ஃபோனில் வந்ததும்,”என்னடா கொஞ்சம் பார்த்து நடந்துக்கப் படாதா. குழந்தை இருக்குல்ல” எனக் கடிந்து கொண்டார்.

காரை நிறுத்திப் படியேறி தனது ஃப்ளாட்டில் நுழைய ஹாலிலேயே ஃஸோஃபாவில் சுருண்டு படுத்திருந்தது யோ.  பக்கத்தில் கவலையாய்க் கீர்த்தி. “வாங்க திடீர்னு ஜுரம் ஜாஸ்தி ஆகிடுத்துங்க. டாக்டர் கிட்டக் கூட்டிப் போய்டலாம்”. தொட்டுப் பார்த்தான். சுட்டது.

குழந்தையை எடுத்துத் தோளில் போட்டுக் காரை எடுத்து குவைத் ஹாஸ்பிடலுக்குச் செல்ல எமர்ஜென்ஸி வார்டில் யோவை சோதித்த அமெரிக்க டாக்டர் உடனே அட்மிட் செய்யச் சொல்ல, அட்மிட் செய்து இரவு கண்விழித்துக் காத்திருக்க காலையில் நிலமை இன்னும் கீழே சென்றது.

காலையில் வந்த டாக்டர் கண் விழிப் படலத்தைத் திறந்து பார்க்க மஞ்சளாக இருந்தது. “சிவியர் ஜாண்டிஸ் என்று நினைக்கிறேன். கவலைப் படாதீர்கள் ட்ரிட்மெண்ட் கொடுக்கலாம்”.

அதன் பிறகு யோ கண்விழித்துப் பார்த்தது ஒரே ஒரு தடவை தான். சோர்வாய் மூர்த்தியையும் கீர்த்தியையும் பார்த்துச் சிரிக்க முயன்று கண்கள் செருகி மூடிக் கொண்டது.

அன்று- அந்தச் செவ்வாய்க் கிழமை மதியம் இரண்டரை மணிக்கு யோகிதா என்ற அழகான சின்ன புஷ்பம் வாடிப் போனது.

கீர்த்தி கதறிய கதறலில் எல்லாருக்கும் அழுகை வந்தது. வந்திருந்த கவிதா, அனிதா அவளை அணைத்துக் கொண்டார்கள்.

துபாயில் ஒரு வழக்கம். யாராவது மரித்தால் போஸ்ட்மார்ட்டம் செய்து போலீஸ் க்ளியரன்ஸ் வாங்கி பிறகு தான் மற்றவைசெய்ய முடியும் அந்தக் காலத்தில். சாதாரண மரணத்திற்கும் ஆக்ஸிடெண்ட் மரணத்திற்கும் ஒரே ரூல் தான்.

“ நோ என் பூவைப் பிய்க்காதீர்கள்” மூர்த்தி குலுங்கி அழுது கத்தினான். மற்றவர்கள் தேற்றினார்கள். ஃபோனில் அவன் பெற்றோர் அழுதார்கள். “ நாங்க உயிரோட இருக்கோமில்லை. இப்ப ஏன் யோவை எடுத்துக்கணும்?”

“இந்தியாவிற்கெல்லாம் கொண்டு வரவேண்டாம். எங்களால் தாங்க முடியாது. அங்கேயே..” முடிக்க முடியாமல் ஃபோனில் குமுறினாள் அம்மா.

பொட்டலமாகக் கொடுத்த குழந்தையை எடுத்து ஸோனாப்பூர் என்ற இடத்தில் இருக்கும் காட்டிற்குக் கொண்டு போனான் மூர்த்தி. “ நானும் வருவேன்” என கீர்த்தி அழுது அரற்றியதால் – கவிதா, அனிதா அவளைக் காட்டின் வாசலிலேயே காரில் உட்கார்த்தி விட்டனர்.

முகம் முழுக்க அழுகையுடன் மூர்த்தி பட்டினத்தார் தன் தாய்க்குப் புலம்பியதைப் போல யோவிற்காகப் புலம்பினான்.

“ வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்

வந்தாளோ என்னை மறந்தாளோ – சந்ததமும்

உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்துஎன்

தன்னையே ஈன்றெடுத்த தாய்

“இவள் என் மகளில்லை. என் இன்னொரு தாய் போலத் தான், எனக்காக உருகினாளே. இப்போது என்ன அவசரம் இவளுக்கு. ஏன் சீக்கிரம் போக வேண்டும்?”

மூர்த்தி நெருப்பு வைக்க…

… புஷ்பம் பற்றி எரிந்தது.

Series Navigation<< நாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 3

Author

Related posts

நல்லாச்சி -4

அசுரவதம் : 4 – மாயமான மாரீசன்

நல்லாச்சி -3