நாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 5 (a)

This entry is part 5 of 6 in the series நாணலிலே காலெடுத்து

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.

– கண்ணதாசன்


அத்தியாயம் ஐந்து (a)


அறை தூய்மையாய் இருந்தது. சுவரில் இரண்டு குழந்தைகளின் படங்கள் தொங்க விடப் பட்டிருந்தன. இந்தப் பக்கம் ஒரு எலும்புக் கூட்டின் வரைபடம் ப்ளஸ் பாகங்கள்.

நாற்காலியில் டாக்டர் வசுமதி அமர்ந்திருந்தாள். கோல்ட்ஃப்ரேம் கண்ணாடி. மிளகு உப்பு கலந்தாற்போன்ற தலைமுடி, வெள்ளைக் கோட்டிற்கு உள் இருக்கும் கருஞ்சிவப்பு சேலை.

எதிரே அமர்ந்திருந்த கீர்த்தியை உற்றுப் பார்த்தாள்.

“மூன்று வருஷமா ஏன் இந்தியாக்கு வரலை?”.

“டாக்டர்..இவர் வேலை மாறிவிட்டார். அது மட்டுமல்ல..” குரல் கம்மியது கீர்த்திக்கு. கண்கள் கலங்கின. வெளிறியிருந்தது முகம்.

“தெரியும். மூணு வருஷத்துக்கு முன்னால போன யோகிதாவ நினச்சுண்டே இருக்கீங்க. மூர்த்தி எங்கே?”.

“அவர் வெளியே நண்பரைப் பார்க்கப் போயிருக்கார் டாக்டர்”.

“அதுவும் நல்லது தான். ஹேய் நான் உன்னோட ஃபேமிலி டாக்டர். யோவிற்கும் நான் தான் டெலிவரி பார்த்தேன் நினைவிருக்கில்ல. ஒரு ஃபோனாவது பண்ணக்கூடாது. துக்கம் விசாரிக்கப் பண்ணின போது பேசினது. அப்புறம் உனக்குத் தோணவே இல்லை பார்த்தியா?”.

“டாக்டர். அப்படில்லாம் இல்லை”.

“என்ன இல்லை.. உன்னோட மாமனார் மாமியார் தான் கிடந்து புலம்பறாங்க. அவங்க அங்க வந்து உங்களைச் சொல்லி இப்போது லீவ்ல கூட்டி வந்திருக்காங்க இல்லியா?”.

“…”

“என்ன வாழ்க்கை வாழறீங்க. மூர்த்தி ஆஃபீஸ் போறாராம். நீ யந்திரமா டிஃபன் லஞ்ச் டின்னர் லாம் செய்யறியாம். பேசறதே கம்மியாய்டுத்தாம். வாட்ஸ் திஸ் கீர்த்தி?”.

“யோ வை மறக்க முடியலை டாக்டர்”.

“இந்த பார். பிறப்பு, இறப்பு எல்லாம் நம் கையில் இல்லை. ஆண்டவன் கொடுத்துட்டான் அவன் எடுத்துண்டுட்டான். அம்புட்டு தான். நாம் நம்ம வாழ்க்கையைக் கண்டின்யூ பண்ணனும் இல்லையா?’

“…”

“ஒரு வகையில மூர்த்தி வராதது நல்லது தான். அவர் என்ன புதுக்கம்பெனில ஸாரா ஸோரென்ஸன் நு ஒரு பொண்ணோட இழையறாராமே. உன் மாமனார் தான் சொன்னார்.”

“சேச்சே. அப்படில்லாம் இல்லை டாக்டர்” மறுதலித்தாள் கீர்த்தி. கண்களில் மெலிதான பயம்.

“உன் கண்ணுல தெரியுது கீர்த்தி. மறக்கறது கஷ்டம் தான். வீ ஹேவ் டு லீட் எ நார்மல் லைஃப். புரிஞ்சுதா?”.  புரிஞ்சுதாவில் ஒரு அழுத்தம்.

“டாக்டர்”.

“இப்ப என்ன ஆச்சு உனக்கு, மூர்த்திக்கு. ஸீ யூ ஹாவ் டு கம் அவுட் ஆஃப் எவ்ரி திங்க்..|”.

“என்னாலயும் மூர்த்தியாலையும் முடியலையே டாக்டர். நடு ராத்ரி அவர் எழுந்து அழுதுண்டு இருக்கார்.”

” ஆனா காலைல ஆஃபீஸ் போறார் தானே. ஸீ உனக்கென்ன வயசா ஆகிடுத்து. அழகா கொப்பும் கொலையுமாத் தானே இருக்க?”.

“வாழ்க்கையில இண்ட்ரஸ்ட் போய்டுத்து டாக்டர்”.

“உதைப்பேன்” என்றாள் டாக்டர் வசுமதி. “சரி. சொல்லு. உனக்கும் மூர்த்திக்கும் இண்டிமேட் ரிலேஷன்ஷிப் எப்படி இருக்கு?”.

“……”

“நினச்சேன். கீர்த்தி. தமிழ்ல ஒரு சொலவடை உண்டு. குழிப்பிள்ளை மடியிலேன்னு. ஸோ யூ ஹாவ் டு கோ டு யுவர் நெக்ஸ்ட் எபிஸோட் ஆஃப் லைஃப்”.

“டாக்டர். ஆர்வம் இல்லைன்னு சொல்றேன்ல. அவருக்கும் தான்.”

“உன்னை என்ன பண்றதுன்னு தெரியலை. இந்த பார். நீ எனக்கும் குழந்தை தான். சின்ன வயசுலருந்து உன்னைப் பார்த்திருக்கேன். சரி. நான் நாலுவருஷம் முன் துபாய் வந்தப்ப அதிரசம் பண்ணிக் கொடுத்தயே. இட் வாஸ் ஆஸம்”.

“தாங்க்ஸ் டாக்டர்” மெலிதாகப் புன்னகை. கீர்த்தி.

“ஹச்சோ சிரிக்காதடியம்மா.. முத்து கொட்டிடப் போவுது. சொல்லு அதோட ரெஸிப்பி”.

மெல்லச் சொன்னாள் கீர்த்தி. “குட். எனக்குப் பண்ணித் தர்றயா ஊருக்குப் போறதுக்கு முன்னாடி.”.

“ப்ச். மூட் வருமான்னு தெரியலை டாக்டர்.”.

“ஏ ஏன்?.”

“என்னோட அதிரசம் மண்ணில விழுந்து மறஞ்சுடுத்து டாக்டர் மூணுவருஷம் முன்னாடி” கீர்த்தியின் கண்களில் நீர் துளிர்த்தது.

“ஹச்சோ வேதாளம்.” தலையில் கை வைத்தார் வசுமதி. “என்ன சொன்ன. மூட்?. எல்லாத்துக்கும் வேண்டும் டியர். வாழ்க்கைக்கும். இன்னும் பத்து நாள் இருப்பேளா?” என்றவர் சில விவரங்களை கீர்த்தியிடமிருந்து அறிந்தார்.

“ஸோ இது பெர்ஃபெக்ட் டைம். நான் உங்க ரெண்டு பேரையும் டெஸ்ட்லாம் செய்யப் போவதில்லை. என்ன பண்றீங்க. நல்ல சீஸன் முன்னார்ல.. ஜோன்னு கொட்டி குளிரா இருக்காம். நீங்க ஒரு வாரம் அங்க போய் இருந்துட்டு வாங்க..” என்றவர் ஃபோனைச் சுழற்றினார்.”யெஸ். சுஜிதா. நான் டாக்டர் வசுமதி பேசறேன். முன்னார்ல அந்த ரிஸார்ட்டில் ஒரு லக்ஸரி ரூம் ஒரு வாரம். அண்ட் நாளைக்கு ஈவ்னிங்க் கொச்சின் ஃப்ளைட் அண்ட் கார் அரேஞ்ச் பண்ணிடு”  ஃபோனை வைத்து “சொல்லியாச்சு. மூர்த்தி வந்ததும் எனக்கு ஃபோன் பண்ணச்சொல்லு. டீடெய்ல்ஸ் தர்றேன்”.

எழுந்து ஆதுரமாய் அவள் தோளின் மேல் கை வைத்தார் டாக்டர் வசுமதி.”சியர் அப் மை சைல்ட். யூ ஹாவ் டு கம் ஹியர் அகென்ய் ஃபார் யுவர் செகண்ட் டெலிவரி!”.

“டாக்டர்..”

“சொல்றதக் கேள். இல்லன்னா மூர்த்தி ஸாராவோட போகறதுக்கு வாய்ப்பு நீயே க்ரியேட் பண்ணாத..”.

“டாக்டர்” கீர்த்தியின் குரல் நடுங்கியது.”பயமா இருக்கில்ல.. இதத் தான் பெண்களோட குணத்தில் ஒண்ணான பயிர்ப்பும்பாங்க உள்ளுணர்வு. ஸோ  அது வந்துடுச்சுன்னா நீ மாறத்தான் வேண்டும். போய்ட்டு வா. எல்லாம் நல்லபடியே இருக்கும்”.

“தாங்க்ஸ் ஃபார் டாமில் க்ளாஸ் டாக்டர்” கீர்த்தி மெலிதாய்ச் சிரிக்க, “இப்பத் தான் நீ என்னோட கீர்த்தி. சென்று வென்று வா மகளே!”

முன்னாரில் – அதாவது மூணாறில் அழகான ஹோட்டல் ரூம் இயற்கையான சூழல். டாக்டர் வசுமதி சொல்லியிருந்ததாலோ என்னவோ ஸ்டாஃப் யாரும் அவர்கள் தனிமையைத் தொந்தரவு செய்யவில்லை. நல்ல வசதியும், இடங்களைப் பார்ப்பதற்கு ஏற்பாடும் செய்திருந்தனர். மூர்த்தியும் கீர்த்தியும் மெய் மறந்தார்கள்.

மூன்று மாதம் கழித்து துபாயில் இருந்து வந்த ஃபோன் காலை எடுத்த டாக்டர் வசுமதி,”கங்க்ராட்ஸ் கீர்த்தி. ம் டெலிவரிக்கு இங்கயே வந்துடு. மன்த்லி செக்கப் போய் எனக்கு அப்டேட் பண்ணு” என்றார்.

Series Navigation<< நாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 4நாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 5 (b) >>

Author

Related posts

நாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 5 (b)

பயம்

உலகின் சின்னஞ்சிறு காதல் கதை