நவராத்திரியும் நவரத்தின மாலையும்

உனக்குப் பிடித்த பண்டிகை என்ன? என்று சிறுவயதில் என்னை யாராவது கேட்டிருந்தால் கண்டிப்பாக நவராத்திரி என்று சொல்லி இருப்பேன். ஏனென்றால் பொம்மைகள் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். நான் மருத்துவராகி இருபது வருடங்கள் கழிந்து விட்டன. குழந்தைகள் கல்லூரி வாசலைத் தொட்டிருக்கிறார்கள். இப்போதும் கூட என் மனதிலும், வீட்டிலும் பொம்மைகளுக்கென்று தனியாக இடம் உண்டு.

“ஓ! அதெல்லாம் உங்க பிள்ளைகளோட பொம்மைகளா?” என்று கேட்கிறீர்களா? முழுக்க முழுக்க என்னுடையவை தான். சிறுவயதில் எங்கள் ஊரில் எனக்குத் தெரிந்து எங்கள் வீட்டில் மட்டும்தான் கொலு வைப்பார்கள். அப்பாவுக்குக் கொலு என்றால் மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டில் இருந்த கொலு பொம்மைகள் எல்லாம் எங்கள் தாத்தா சேகரித்தவை. எப்போதோ சிறந்த கைவினைக் கலைஞர்களால் செய்யப்பட்டவை. எங்கள் அப்பா அவற்றைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள். மிதமான வண்ணங்களுடன், லட்சணமான முகங்களுடன் இருக்கும். அதுவும் பார்வதி தேவி குழந்தை முருகனை இடுப்பில் வைத்துக் கொண்டிருக்கும் சிலை எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தக் கொலு பொம்மைகளில் இருக்கும் பெண் சிலைகள் எல்லாரும் நம் வீட்டுப் பெண்கள் போல் சற்றுப் பூசிய உடல்வாகுடன், லேசான தொப்பையுடன் இருப்பார்கள். நம் அம்மாக்கள் கட்டும் புடவை போலவே புடவை கட்டிக் கொண்டிருப்பார்கள். ஆண் பொம்மைகளும் கூட இயல்பானவையாகவே இருக்கும்.

 ஆண்டுகள் கடந்து வந்த மண் பொம்மைகள் அல்லவா, கை கால் என்று ஆங்காங்கே உடைந்திருந்தாலும் பார்ப்பதற்கு உருவம் அழகாக இருக்கும். பழமையான பொம்மைகள் தவிர அவ்வப்போது எங்களுக்குப் பரிசாகக் கிடைக்கும் பொம்மைகள், எங்காவது கண்ணில் படும் பொழுது நாங்கள் வாங்கும் பொம்மைகள் என்று ஆண்டுதோறும் கொலு பொம்மைகளின் வரிசையில் புதிய பொம்மைகள் சேரும்.

ஒரு முறை கணிதப் பாடத்தில் நூறு மதிப்பெண் எடுத்ததற்காக சந்தனத்தால் ஆன சிறிய யானை பொம்மை ஒன்றை எங்கள் கணித ஆசிரியை எனக்குக் கொடுத்தார். அது நவராத்திரி சமயம். பெருமையாக அதையும் கொண்டுபோய் எங்கள் வீட்டு கொலுவுக்கு நடுவில் வைத்து விட்டேன். அந்த நவராத்திரி முடிந்தவுடன் அது அட்டைப் பெட்டிக்குள் போய்விட்டது.

 எனக்கானால் வருத்தமான வருத்தம். திடீரென அந்த யானையைப் பார்க்க வேண்டும் போலவே இருக்கும். இனிமேல் அடுத்த வருடம்தான் எடுக்க முடியும் என்று சொல்லிவிடுவார்கள். ‘அடடா அந்த யானையை நாமே வைத்திருக்கலாமே.. கொடுத்திருக்க வேண்டாமே’ என்று நினைப்பேன். இது போலவே வெளியூர் போய்விட்டு வருகையில் அடம் பிடித்து வாங்கிய செட்டியார் பொம்மை, மிகச்சிறிய தங்க நிற மயில் பொம்மை, இன்னொரு சந்தன மயில் இவையெல்லாம் எங்கள் வீட்டுக் கொலுவுக்கு என்னுடைய பங்களிப்புகள்.

சற்று வளர்ந்த பின் அந்த செட்டியார் பொம்மையைத் தனியாக ஒரு பலகையில் உட்கார வைத்து, அதற்கு முன் நான்கைந்து கிண்ணங்களில் அரிசி, பருப்பு, உளுந்து வைத்து ஒரு சிறிய பெட்டிக்கடையை அமைப்பது என் பொறுப்பாக இருந்தது. தென்காசியில் யாரோ ஒருவருடைய வீட்டு கொலுவில் தோட்டம் அமைத்திருப்பதாகச் சொன்னவுடன் ஒரு முறை சிறிய தோட்டம் போட்டோம்.

அப்போதெல்லாம் எங்கள் வீட்டிலும், பக்கத்து வீட்டிலும் நிறைய பத்திரிகைகள் வாங்குவார்கள். நவராத்திரிக்கு முந்தைய வாரங்களில் அவள் விகடன், சிநேகிதி போன்ற இதழ்களில் ‘முப்பது வகை நவராத்திரி பிரசாதம்’ என்றோ, ‘முப்பது வகை சுண்டல்’ என்றோ தவறாமல் குட்டி இணைப்புகள் போடுவார்கள். அதை எடுத்துக்கொண்டு எங்கள் அம்மாவிடம் வந்து கொடுப்பேன். எங்கள் அம்மா  லேசாகப் புரட்டிவிட்டு வைத்து விடுவார். பின் எப்போதும் போல பாசிப்பயறு சுண்டல், கொண்டைக்கடலை சுண்டல் மட்டுமே வைப்பார். சமயங்களில் அவலும் கடலையும்தான். கோவிலில் கொடுக்கும் பிரசாதங்கள், சினிமாவில் காட்டும் பிரசாதங்கள் போல் எல்லாம் நம் வீட்டிலும் கிடைக்காதா என்று சுற்றிச் சுற்றி வருவேன். ஆனால் பாவம் அம்மா, அவர் பள்ளிக்குப் போய்விட்டு வருகையிலேயே மணி ஐந்தே கால் ஆகிவிடும். அதன் பின் விதவிதமாகச் செய்வது கடினம் அல்லவா.. சரி இருக்கட்டும் என்று நினைத்துக் கொள்வேன். ஒரு முறை அம்மா எலுமிச்சம்பழத்தை கரைத்து வெல்லம் போட்டு பானகம் தயாரித்தார்கள். எல்லாவற்றையும் விட அதன் ருசி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தினமும் அதையே வேண்டும் என்று கேட்டேன். ‘அவசரத்துக்கு செஞ்சேன், வழக்கமா அதெல்லாம் செய்ய மாட்டாங்க’ என்று சொல்லிவிட்டார் அம்மா.

 அப்போதெல்லாம் எனக்கு இன்னொரு மிகப்பெரிய சந்தேகம். சினிமாக்களிலும் கதைகளிலும் நவராத்திரியை வேறு மாதிரி காட்டுகிறார்களே.. சில இடங்களில் கோலாட்டம் எல்லாம் ஆடுகிறார்கள். எங்கள் வீட்டிலும் ஒரு ஜோடி கோலாட்டக் கம்புகள் உண்டு. நம் வீட்டிலும் அது போல் கோலாட்டம் எல்லாம் வைக்க மாட்டார்களா என்று நினைப்பேன். நவராத்திரி வெள்ளிக்கிழமைகளின் போது தூர்தர்ஷனில் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் சினிமாக்களில் இடம்பெற்ற நவராத்திரி பாடல்களை ஒளிபரப்புவார்கள். இந்தப் பெண் பாடும் போது பின்னணியில் இசை ஒலிக்கிறதே, அதை யார் வாசிக்கிறார்கள், நம் வீட்டில் அப்படிப் பாடலாமா? நமக்குத் தெரியாமலேயே உள்வீட்டில் யாராவது உட்கார்ந்து கொண்டு வாசிப்பார்களா.. என்றெல்லாம் மிகச் சிறிய வயதில் கேள்வி கேட்டு அம்மா அப்பாவை துளைத்தெடுத்த ஞாபகம் இப்போது மிக லேசாக வருகிறது. 

நான் படித்த பள்ளி குற்றாலத்தில் இருந்தது. திருக்கோவில் நிர்வாகத்துடன் இணைந்த பள்ளி அது. அங்கே காலையில் பிரார்த்தனை வகுப்புகள் அரை மணி நேரத்திற்கு மேல் நடக்கும். எல்லா மதப் புத்தகங்களும் அங்கே வாசிக்கப்படும். இந்து மதத்தில் உள்ள பாடல்களைக் கூடுதலாக சொல்லித் தருவார்கள். ஒருசில ஆசிரியர்கள் மிக இனிமையாகப் பாடி அழகாகச் சொல்லித் தருவார்கள். ஒவ்வொரு வகுப்பில் நுழைந்தவுடனும் ஸ்லோகா புக் என்று ஒன்று அச்சிட்டுத் தருவார்கள். கடவுள் வாழ்த்து துவங்கி தேசபக்திப் பாடல் வரை அதில் இருக்கும். வருடம் முழுவதும் நன்கு பழகிய சின்னச்சின்ன பாடல்களாக பாடச் சொல்பவர்கள், நவராத்திரி சமயத்தில் ‘லலிதா நவரத்தின மாலை’ என்று அழைக்கப்படும் ‘மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே’ பாடலை சொல்லித் தருவார்கள். மிகச் சிறந்த வரிகளைக் கொண்ட பாடல் அது. ஒன்பது கண்ணிகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் எட்டு வரிகள். ஒவ்வொரு கண்ணியிலும் உள்ள வரிகளில் ஏதாவது ஒன்றில் முத்து, வைரம், மாணிக்கம் என்று ஒரு நவரத்தினத்தின் பெயர் வந்துவிடும்.

 என்னுடைய பிரியமான பொம்மைகளைப் பார்க்க ஒரு வருடம் காத்திருக்க நேர்கிறதே, அதைப் போலவே எனக்குப் பிடித்தமான அந்தப் பாடலைப் பாடவும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். ஒரு முறையேனும் இதை முழுவதுமாகப் படித்துவிட்டு நம் வீட்டுக் கொலுவில் பாடிவிட வேண்டும் என்பது என் ஆசை. நான் நல்ல வாசிப்பாளர் என்று சொல்லலாம், ஆனால் மிக மோசமான பாடகி. ஒருமுறை தேர்வுக்குப் படிப்பது போல் லலிதா நவரத்தின மாலையை மனப்பாடம் செய்து முடித்தேன். வீட்டில் கொலுவுக்கு முன்னால் பிரசாதம் வைத்து விளக்கேற்றியதும், ‘ஏதாவது சின்ன பாட்டா பாடுங்க..’ என்று அம்மா சொல்ல, நான் பெருமையாக ‘மாதா ஜெய ஓம்’ என்று ஆரம்பித்தேன். மூன்று கண்ணிகள் தாண்டுவதற்குள் அனைவருக்கும் பொறுமை போய்விட்டது. “சரி சரி நாளைக்கு மிச்சத்தைப் பாடலாம்” என்று சொல்லிவிட்டார்கள். இப்படியாக நவராத்திரியை முன்னிட்டுத் துவங்கிய அதிரடி செயல் திட்டம் பாதியில் நின்றது.

கல்லூரிக்குள் நுழைந்த நேரம். நவராத்திரி நாட்களை நான் அதிகமாக மிஸ் செய்தேன். எங்கள் சீனியர் மாணவி ஒருவர் அறையில் கொலு வைத்தார். மெஸ்சில் சொல்லி சர்க்கரை பொங்கல், புளியோதரை என்று தினம் ஒரு பிரசாதம் தயாரித்து பிரமாதப் படுத்தினார். மருத்துவக் கல்லூரி விடுதியில் இருக்கும் சுத்த லட்சணத்தில் இதெல்லாம் மிகப்பெரிய சாதனை. எங்களையும் கூப்பிட்டார். குட்டி குட்டிப் பாடல்களைப் பாடினோம். ‘மாதா ஜெய ஓம்’ பாடும் ஆசை வந்தது. சுற்றியுள்ளவர்களைப் பார்த்தேன். எப்போதடா சுண்டல் கொடுப்பார்கள் என்ற மனப்பான்மையில் உட்கார்ந்திருப்பதைப் போல் தெரிந்ததால் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்து விட்டேன்.

புகுந்த வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் இல்லை. பிள்ளைகள் புண்ணியத்தில் ஏற்கனவே வீடு நிறைய பொம்மைகள் நிறைந்து கொண்டிருந்தன‌. உண்மையைச் சொல்ல போனால் பிள்ளைகள் பெயரைச் சொல்லி பொம்மை சேர்த்துக் கொண்டிருந்தது நான்தான். ஒருமுறை கோமதி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த கொலுவைக் காட்டிவிட்டு மகன் வீட்டுக்கு கொண்டு வந்த போது என் மகள், “அம்மா நாமளும் கொலு வைப்போமா?” என்றாள். அவ்வளவுதானே, வச்சுருவோம் என்று சொல்லி விறுவிறுவென்று இருக்கும் பொம்மைகளை சேகரித்தேன். ‘கொலுவெல்லாம் வச்சா சுத்தமா இருக்கணும்’ அது இதென்று ஆளுக்கு ஓர் எதிர்மறை கருத்தைச் சொன்னதால் மீண்டும் பொம்மைகள் அவற்றின் இடங்களுக்கே போய் சேர்ந்து விட்டன.

இதோ இப்போதும் கூட கொலு வைக்கும் ஆசை மிச்சமிருக்கிறது. வாய்ப்புக் கிடைத்தால் கிளினிக்கில் கூட குட்டியாகக் கொலு வைக்கலாம். என் கலெக்ஷனில் புதிய பொம்மைகள் சேர்ந்திருக்கின்றன. வண்ண வண்ண ரப்பர் கலெக்ஷன் கூட வைத்திருக்கிறேன். இன்னும் லலிதா நவரத்தின மாலை கூட வரி மாறாமல் பசுமையாக நினைவிருக்கிறது!

Author

  • அகிலாண்ட பாரதி தமிழ் எழுத்தாளர் மற்றும் மருத்துவர் ஆவார்,  நெல்லைச்சீமை தென்காசி அருகே இடைகால் கிராமத்தில் பிறந்த இவர், மருத்துவப் படிப்பை முடித்து மருத்துவத் துறையில் பணிபுரிகிறார். பத்து நாவல்கள், பதினைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி பல பரிசுகளைப்பெற்றுள்ளார். மற்றும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சங்கரன்கோவில், உலககோப்பை, சேக்காளி மற்றும் நினைவின் வழிப்படூஉம்… போன்ற பல நூல்கள் இவர் எழுதியவற்றில் முக்கியமானவை. 

Related posts

நாள்: 20

நாள்: 19

அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு