பறந்து போ – திரையனுபவம்!

parandhu-po

’பறந்து போ’ இயக்குநர் ராமிடமிருந்து வந்திருக்கும் ஒரு வித்தியாசமான படம். பொதுவாக தீவிரத்தன்மை கொண்ட படங்களையே பெரும்பாலும் தந்து வந்த அவர் மிக மென்மையான,  குதூகலமான ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தைத் தந்து பார்வையாளர்களை  ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

நடுத்தர வர்க்கம் என்றோர் இனமுண்டு, அதற்கேயுரிய பல கல்யாண குணங்களும் உண்டு. அவற்றில் முக்கியமானது அவர்களின் பிள்ளை வளர்ப்பு சார்ந்த மூடநம்பிக்கைகள்.  பெரும்பாலானவர்கள் தனக்கு கிடைக்காத எல்லாமும் தன் பிள்ளைக்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சொல்லப் போனால் தான் எண்ணி ஏங்கியவற்றை விட உயர்ந்த விஷயங்களைத் தன் குழந்தைக்குத் தந்துவிட வேண்டும் என்று துடிப்பார்கள்.

அந்த நோக்கத்தில் தவறில்லைதான். ஆனால், தான் விரும்பிய – விரும்பும் எல்லாமே தம் பிள்ளைக்கும் பிடித்தமானதாக இருக்குமா, அவர்களுக்குத் தேவைப்படுமா என்பதை யோசிக்கும் பெற்றோரின் எண்ணிக்கை இங்கு மிகவும் குறைவு.

தங்களது வாழ்க்கையில் இன்பம் என்பது தங்களை ஒத்தவர்கள் செய்யும் எல்லாவற்றையும் தாங்களும் செய்வது(peer pressure) என்றே நினைத்து பொருளியல் சிக்கல்களுக்குள் சிக்கி, வாழ்க்கையைத் தொலைத்துவிடுவதே நடுத்தர வர்க்கத்தின் மிகப் பெரிய சாபக்கேடு.

உண்மையில் குழந்தை வளர்ப்பு இவ்வளவு சிக்கலானதா, இவ்வளவு செலவேறியதுதானா என்று யோசித்துப் பார்த்தால் இல்லை என்பதுதான் விடை. குழந்தைகளுக்குத் தேவைப்படுவது வயதுக்கு ஏற்ற சத்தான உணவு. உடற்பயிற்சி -அதனை அவர்கள் சக குழந்தைகளுடனான விளையாட்டில் இருந்தே பெற முடியும், தரமான கல்வி ஆகியவை மட்டுமே.

இதில் கல்வி என்பது நமக்கு வளர்ந்த பின்பு ஏதேனும் ஒரு வேலைக்குச் செல்வதற்கான திறன்களை வளர்த்துக் கொள்ளுதல் என்றே பொருள்படுகிறது. அதனால்தான் மிக மிக அதிகக் கட்டணம் கொண்ட பள்ளிகளை பலரும் நம் பிள்ளைகளுக்காக தேர்ந்தெடுக்கிறோம்.

அப்படியே ஒவ்வொரு விஷயத்திலும் விலையும் தரமும் நேர் விகிதத்தில் இருக்குமென்பது நம் சமூகத்தின் நம்பிக்கை. அதுவும் மிகையான ஒரு நம்பிக்கை மட்டுமே.

நடுத்தர குடும்பங்களில் குழந்தைகள் எல்லாம் கிடைத்தும் எதுவுமே கிடைக்கப் பெறாதவர்களாக இருப்பதையும், பெற்றோர் சக்திக்கு மீறிய அழுத்தங்களை சுமந்து திரிபவர்களாக இருப்பதையும் மிகச் சிறப்பாக சித்தரிக்கும் படம்தான் ‘பறந்து போ’.

அதற்காக அது எந்தவிதத்திலும் சோகத்தை வலிய ஏற்படுத்துவதாகவோ அல்லது பிரச்சனைகளுக்கான தீர்வுகளைச் சொல்கிறேன் என்று அறிவுரை மூட்டைகளை நம் முதுகில் சுமத்துவதாகவோ இல்லை.

மிர்ச்சி சிவா எப்போதும் போலவே நடிப்பது போல நடித்திருக்கிறார். ஆனால் அதுவே அந்த பாத்திரத்துக்கு நியாயம் செய்வதாக அமைந்திருக்கிறது. பெற்றோர் இருவரும் பணி நிமித்தமாக வெளியில் செல்லும்போதெல்லாம் பூட்டிய வீட்டுக்குள் சிறையிருக்க நேரிடும் சிறுவன். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சாலை வழிப்பயணமாக நெடுந்தூரம் செல்கிறான். அப்பயணத்தில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தந்தையிடமிருந்து தப்பி ஓடுகிறான். மலை, குளம், என எல்லா இடங்களிலும் தந்தையைத் தன்

பின்னால் துரத்தி வரச் செய்கிறான். ஒரு கட்டத்தில் தந்தையுடன் தாயும் சேர்ந்து கொண்டு அவனை துரத்திச் செல்கிறார்கள். அவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வழியாக சமாதானப்படுத்துகிறார்கள். இதுதான் கதை.

இந்த படம் கதைக்கு பதில் கதாபாத்திரங்களின் குணச்சித்திரங்களின் வழி பயணிக்கிறது. அதேநேரம் எந்த கதாபாத்திரத்தின் மீதும் தீர்ப்பு எழுதாமல், யாருக்கும் அறிவுரை  சொல்லாமல், நடுத்தர வர்க்க வாழ்வின் அபத்தப் போக்கின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை படமாக்கியிருக்கிறார் ராம்.

ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுக்குத் தர வேண்டிய பொருட்களில் மிகவும்  விலையுயர்ந்த பொருள் தங்களின் நேரம்தான் என்பதைப் புரிந்து கொள்ள இந்தப் படம் உதவும்.

நாயகனின் பள்ளிப்பருவத் தோழியாக அஞ்சலி, அவரது கணவராக வருபவர் என இருவரது கதாபாத்திரப் படைப்பும் ஒரு குறுங்கவிதை. சாலையோர மண்டபத்தில் படுத்திருக்கும் முதியவர் எம்பரர் என்று தன் பெயரைச் சொல்வது, நாயகியின் கடையில் வேலைக்கு வரும்  மைனா, அவரது ஆண் நண்பர் குருவி என கதாபாத்திரப் பெயர்களே கூட  அவ்வளவு அழகு.

குட்டிக்குட்டி கவிதைகளை இணைத்து ஒரு பெரிய கவிதையை வடித்திருக்கிறார் ராம். கடைசியில் கிராமத்துக்குத் திரும்புவோம் என்று ஹீலர்களின் மொழியில் படத்தை முடித்துவிடுவார்களோ என்று ஒரு சிறு பதற்றம் வந்தது. ஆனால் கிராமங்களில் இருக்கும் சிக்கலையும் செறிவான ஒரு வசனத்தின் மூலம் கடத்திவிட்டார்கள்.

கண்ணுக்கு இதமான ஒளிப்பதிவு, காதுக்கு இனிய இசை, தொய்வில்லாத திரைக்கதை, இனிப்புப் பண்டத்தில் கிடைக்கும் முந்திரி பாதாம் போல படம் முழுக்க விரவியிருக்கும் விரசமில்லாத நகைச்சுவை என பல பாராட்டத்தக்க அம்சங்கள் கொண்ட படம் இது.

குறைகளும் உண்டு என்றாலும் அனைவரும் அரங்கிற்கு சென்று படம் பார்த்து ஆதரவளிக்க வேண்டிய முக்கியமான பேசுபொருளைக் கொண்டிருக்கிறது – ‘பறந்து போ’.

Author

Related posts

விமர்சனம் : The Hunt –  Rajiv Gandhi Assassination Case

ரோந்து – திரை விமர்சனம்