“போலிஸைப் பத்திதான் உனக்குத் தெரியும். போலிஸிங் பத்தி என்ன தெரியும் உனக்கு?”
இதுதான் ரோந்து என்ற மலையாள படத்தின் ஒரே வரி கதை
இரவு காவலுக்காக ‘ரோந்து’ செல்லும் இரு காவலாளிகளுக்கு இடையில் நடக்கக்கூடிய உரையாடல்கள், அவர்கள் இருவரும் சேர்ந்து சந்திக்கின்ற பல்வேறு சம்பவங்கள், இவற்றிற்கிடையில் தனிப்பட்ட முறையில் இவர்களது குடும்பச் சூழல், காவல்துறை இயங்குகின்ற முறை என்று பல்வேறு விஷயங்களை ஒரு கோட்டில் அழகுற கோர்த்திருக்கிறார்கள்.
‘ஒரே இரவில் இத்தனை சம்பவங்களா?’ என்று மலைக்க வைக்கும்படியாகத் திரையில் பல விஷயங்கள் தென்பட்டாலும் அவையெல்லாம் பார்வையாளர்களைப் படத்தோடு ஒன்ற வைப்பதற்கான முகாந்திரங்கள் என்பதைத் திரை மொழி சொல்லிவிடுகிறது
காவல்துறையில் இருந்து திரைப்படத்துறைக்கு வந்தவர் இந்தப்படத்தின் இயக்குநர் என்பதால் காவல்துறை சார்ந்த எல்லா விவரங்களையும் மிகத் தெளிவாகப் படத்தில் கையாண்டு இருக்கிறார் இயக்குநர் ஷாஹிர் கபீர். ஜோஸஃப், நாயாட்டு, ஆஃபிஸர் ஆன் ட்யூட்டி படங்களும் இவரது இயக்கத்தில் வந்தவைகள்தான்.
படத்தில் இரண்டு காவலர்களையும் அறிமுகப்படுத்தும் விதமே வெவ்வேறாக இருக்கிறது. ஒருவரது குடும்பத்தை நேரடியாக அறிமுகப்படுத்தும் இயக்குநர் இன்னொருவரின் குடும்பத்தை அந்தk கதாபாத்திரத்தின் வழியாகவே நமக்கு அறிமுகம் செய்கிறார் – அதுவும் திரைப்படத்தின் கிட்டத்தட்ட கடைசிக் காட்சிகளில்
இதற்கிடையில் ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஓர் இளைஞனை காதலித்து வீட்டை விட்டு ஓடி விட்டதால் அதன் மூலம் காவலர்களுக்கு ஏற்படுகின்ற சிக்கல்கள். அதில் உயர் அதிகாரிகளின் குறுக்கீடுகள். அதன் மூலம் அந்த இரு காவலர்களுக்கும் நேர்கின்ற சூழல் எல்லாமே படத்தில் மிகத் தெளிவாக இடம் பிடித்திருக்கிறது.
25 வருடங்களுக்கு மேலாகக் காவல் துறையில் இருக்கும் துணை ஆய்வாளராக திலீஷ் போத்தன் அமர்க்களப்படுத்தி இருக்கிறார். சக காவலர் மீது எரிந்து விழுவதாக இருந்தாலும் சரி, தன்னைச் சிக்கலில் மாட்ட வைக்க உயரதிகாரி முயல்கையில் அந்த இறுக்கத்தை உணரும்போதும் சரி, தன் மனைவி மீதான காதலை வெளிப்படுத்தும் போதும் சரி. அவரது உடல் மொழியும் முகபாவங்களும் அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை அவர் தவற விட்டுவிடவில்லை என்பதை உணர்த்துகிறது. போலவே, அவருடன் ‘ரோந்து’ பணியில் ஈடுபடும் ஓட்டுநராக வலம் வரும் ரோஷனும் திலீஷ் போத்தனின் எல்லா உணர்ச்சிகளையும் தாங்கும் கடைநிலைக் காவலராக சிறப்பாகச் செய்திருக்கிறார்.
இப்போதெல்லாம் ‘பறவைப் பார்வை’யில் கேரளத்தின் பசுமையைக் கண்களுக்குள் கொண்டு வந்து விடுவதை எல்லா ஒளிப்பதிவாளர்களும் ஒரு கடமையாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்திலும் ‘தெய்வத்தின் சொந்த நாட்டின்’ அழகைப் பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் கூட சிறப்பான ஒளிச்சட்டகங்களின் மூலம் திறம்படக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
மொத்தமாகவே இரண்டு காவலர்கள் மட்டுமே முதன்மை கதாபாத்திரங்களை ஏற்று இருப்பதால் மற்றவர்களுடைய பங்கு மிகக் குறைவாகவே இருக்கிறது என்ற போதும் பாத்திரங்களை ஏற்று நடித்தவர்கள் தங்கள் பங்கிற்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
படத்தின் ஓட்டத்திற்குத் தேவையான இசை பின்னணியாக வந்ததில் பெரிய குறையாக ஏதுமில்லை.
காவல்துறையினர் சந்திக்கின்ற பல்வேறு விதமான இன்னல்களையும், அவர்களது தொழில் சார்ந்த மனநிலையையும், அவர்களுக்கிடையே இருக்கும் சிறு சிறு பிணக்குகளையும் இணக்கங்களையும் அழகாகத் திரைக்கதையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.
கூடவே, காவல்துறை அதிகாரம் என்று வரும்போது எப்படி நடந்து கொள்ளும் என்பதையும் ஒற்றை வரியில் கேள்வியாக்கியிருக்கிறார். அந்தக் கேள்விதான் இந்தத் திரைப் பார்வையின் முதல் வரி
‘ரோந்து” நட்சத்திர பட்டாளங்களோ பெரிய தலைகளோ இல்லாமல் நல்ல கதையும் திரைக்கதையும் மட்டுமே ஓரளவு நல்ல படத்திற்குப் போதுமானவை என்பதை நிரூபித்திருக்கும் இன்னொரு “மலையாள”த் திரைப்படம்.
1 comment