(இத்தொடரில் தமிழின் சில இலக்கணக் குறிப்புகள் மட்டுமின்றி இலக்கியக் குறிப்புகள் சிலவற்றையும் தர நினைக்கிறேன் )
கண் பொத்திய காதல்
காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். கண் பொத்திய காதல் என்று தலைப்பை அந்தப் பொருளில் சொல்லவில்லை.
ஆணாயினும் பெண்ணாயினும் நம் சிறுவயதில் நட்புகளிடையே உள்ள ஓர் இனிமையான பழக்கம், அமர்ந்திருக்கும் தோழன்/தோழியின் பின்னால் மெல்ல மெல்ல பூனை நடையில் வந்து அவன்/அவள் கண்பொத்தி “யாருன்னு சொல்லு?” என்று கேட்டு விளையாடுவது. (கேட்பதிலேயே கண்டுபிடித்துவிடுவோம்). இந்த இளவயது இனிய விளையாட்டை மறக்க முடியுமா?
இக்காட்சி சங்க இலக்கியத்தில் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழ்கிறது.
அவன் அமர்ந்திருப்பதைப் பார்க்கும் அவள் மெல்ல மெல்ல அடிவைத்து பின்புறமாக வந்து அவன் கண்ணைப் பொத்துகிறாள். “யார் சொல்லு?” என்றும் கேட்கவில்லை. குரலை வெளிப்படுத்தினால் கண்டுபிடித்துவிடுவானே.
அதனால் என்ன?
மலைச்சாரலில் பூத்திருக்கும் காந்தள் பூங்கொத்து போல மென்மையான கைகளின் தொடுகை (ஸ்பரிசம்) அவனுக்கு அவளை உணர்த்திவிட்டது.
பெண்ணின் தொடுகை என்பது புரிந்திருக்கும். அவன் யார் பெயரைச் சொல்கிறான் என்கிற சோதனையாகவும் அவள் அப்படிச் செய்தாளோ என்னவோ, தலைவன் மிகவும் நுண்ணறிவாளன்.
அவனுடைய மறுமொழியைப் பாருங்கள்:
மலைச்சாரலில் மணம் வீசும் காந்தள் பூங்கொத்தைப் போன்ற கைகளால் கண்களைப் பொத்தியவளே, பாயில் இனிய துணை ஆன பருத்த தோள்களையுடைய பெண்ணே, நீ அல்லாமல் வேறு யாரும் என் நெஞ்சில் அமர முடியுமா?
சிலம்புகமழ் காந்தள் நறுங்குலை அன்ன
நலம்பெறு கையின்என் கண்புதைத் தோயே!
பாயல் இன்துணை ஆகிய பணைத்தோள்
தோகை மாட்சிய மடந்தை
நீ அலது உளரோஎன் நெஞ்சமர்ந் தோரே?
ஐங்குறுநூற்றில் கபிலர் எழுதிய பாட்டு இது.
கம்பராமாயணத்திலும் இதே போன்ற ஒரு காட்சி வருகிறது. அங்கே பூப்பறிக்கும் காதலனின் கண்ணைக் காதலி வந்து பொத்தியதும் அவன் “யார்?” என்று கேட்டுவிட, இவர் கண்ணைப் பொத்த வேறு யாருக்கும் உரிமை உள்ளது போலும் என்று வருந்தி அவள் ஊடல் கொண்டாளாம்.
போர் என்று சொன்ன அளவில் பூரிக்கும் மலையைப் போன்ற திரண்ட தோளையுடைய காதலன் மலர் கொய்திருக்க, மேகம் போன்ற கூந்தலுடைய குயில் மொழி பேசும் காதலி வந்து கண்பொத்துகிறாள். அதற்கு அவன் “ஆர்?” என்று வினவ, அவள் சினந்து நெருப்பைப் போல பெருமூச்சு விட்டாளாம்.
போர்என்ன வீங்கும் பொருப்பன்ன
திரள் கொள் திண்தோள்
மாரன் அனையான்
மலர்கொய்திருந் தானை வந்தோர்
காரன்ன கூந்தற் குயில்அன்னவள்
கண்பு தைப்ப
ஆர்என்ன லோடும்
அழலென்ன வெய்து யிர்த்தாள்
இக்காலத்தில் ஒரு காட்சி:
அது ஒரு பேரங்காடி. அங்கே அவனைப் பார்த்து ஒரு பெண் கையசைக்கிறாள்: “ஹாய்”.
அவனுக்கு அவளை யார் என்று விளங்கவில்லை. அருகே சென்றவனிடம் “I think, you are the father of one of my kids” என்கிறாள்.
அவன் மிகவும் பதறிப் போய் “ஹேமா?.. பாமா?..” என்று ஒவ்வொரு பெயராகச் சொல்லி வினவ, அவள் பதறாமல் “நான் உங்கள் மகனின் பள்ளிக்கூட ஆசிரியை” என்றாளாம்.
(தொடர்வோம்)