தமிழே அமிழ்தே – 4

This entry is part 4 of 10 in the series தமிழே அமிழ்தே

கடந்த பதிவில் சில மயங்கொலிச் சொற்களைச் சிந்திக்கச் சொல்லியிருந்தேன்.

அவை:

கட்டடம் என்றால் கட்டப்பட்ட இடம் – வீடு என்று பொருளாகும். கட்டிடம் என்றால் வீடு முதலியன கட்டுதற்குரிய இடம் (Plot, Site) என்றாகும். (தமிழறிஞர் பா. வரதராசனாரும் இதனைச் சுட்டியுள்ளார் )

நிலவில் முதலில் காலடி வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கிடம் ‘எந்தா சாரே, சாய் வேணோ?’ என்று மலையாள நாயர் கேட்டதாக ஒரு நகைச்சுவை உண்டு. தமிழில்தான் தேநீர் என்கிற அழகிய சொல் உண்டு. சிலர் தேனீர் என்று எழுதுகின்றனர், தேநீர் என்பதே சரி. எனினும் ஆக்கும் கரங்களையும் வாய்க்கும் மனநிலையையும் வைத்து தேநீர் தேனீர் ஆவதும் உண்டு.

எத்தனை, அத்தனை, இத்தனை ஆகியன எண்ணிக்கையைக் குறிக்கும் போது வருவன.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா! (பாரதியார்)

போலவே, இத்துணை அத்துணை, எத்துணை ஆகிய சொற்களும் அளவைக் குறிப்பனவே. எனினும் குறிப்பானதல்லாத, தோராயமாக அளவு சொல்ல வேண்டுகிற இடங்களில் இச்சொற்கள் வரும்.

“எத்துணை அழகு இந்த முத்தாரம்”

செல்வமற்ற நிலையைக் குறிக்க ஏழ்மை என்று சிலர் எழுதுகின்றனர். உண்மையில் ஏழ்மை என்பது ஏழு என்கிற என்னோடு தொடர்புடையது. ஒருமை, இருமை, மும்மை என்பது போல, ஏழுக்கு ஏழ்மை. செல்வமற்ற நிலையைச் சொல்ல ஏழைமை என்பதே சரி.

அப்பாவி என்கிற வடமொழிச் சொல்லை மிகவும் சூதுவாதற்ற என்னும் பொருளில் பயன்படுத்துகிறோம். இச்சொல்லைத் தமிழாகக் கொண்டால் அந்தப் பாவி என்ற பொருளில் எதிர்நிலையில் ஆகிவிடும். வடமொழியில்தான் ஒரு சொல்லை எதிர்நிலையிலாக்க சொல்லுக்கு முன் ‘அ’ சேர்க்கப்படும். தமிழிலேயே நாம் வெள்ளந்தி என்று சொல்லலாம்.


ஒரே பொருளைத் தரும் சொற்களின் நுண்ணிய வேறுபாட்டையும் அறிந்து பயன்படுத்த வேண்டும்

ஈ, தா, கொடு

<ஈ, தா, கொடு எனும் மூன்றும் முறையே இழிந்தோன், ஒப்போன், மிக்கோன் இரப்புரை>
என்கிறது நன்னூல்

தம்மின் பெரியோரிடம் இரந்து கேட்டுப் பெறுவது ஈ என்றாகும்.
(இறைவா! எமக்கு நீள்ஆயுள் ஈந்தருள்வாயாக ).

சமமானவரிடம் கேட்பதற்கு, ‘தா’ எனலாம்.
(நண்பா, எனக்குப் பத்து ரூபாய் கடனாகத் தா )

உயர்ந்தவர் சிறியவரிடம் கேட்டல் ‘கொடு’

(தம்பி, உன் எழுதுகோலைக் கொடு )

திருமண அழைப்பிதழ்களில் மணமகன்/ள் பெயருக்கு முன் திருநிறைசெல்வன்/வி திருவளர்செல்வன்/வி என்று குறிப்பிடுவது வழமை. இது பற்றி வாட்ஸ்அப்-பில் அண்மையில் கூட சிலர் திரித்து, இதில் ஒற்று மிகுந்து திருநிறைச் செல்வன், திருவளர்ச் செல்வன் என்று எழுதவேண்டும் என்றும் இன்னும் பலவாறாகவும் குழப்பியிருந்தனர். இவை முக்காலமும் உணர்த்தும் வினைத்தொகை என்பதால் வலி மிகாது என்பதை உணர வேண்டும்.

உயர்மட்டக் குழு என்று எழுதுகிறார்கள். இது High level committee என்பதன் நேரடியான பெயர்ப்பு. உண்மையில் உயர்நிலை குழு என்றெழுதுவதே சரி.

(தொடர்வோம்)

Series Navigation<< தமிழே அமிழ்தே – 3தமிழே அமிழ்தே – 5 >>

Author

  • எழுத்தாளர், வெண்பா வித்தகர், தமிழ் ஆர்வலர், மேனாள் தலைவர் - ரியாத் தமிழ்ச் சங்கம்.

Related posts

ஒரு டீ சொல்லட்டுமா ஸாப்!

ப்ரியன் கவிதைகள்

லக்கீ..

1 comment

ஜமீல் December 22, 2025 - 8:45 pm
தேநீர் தேனீர் விளக்கம் படித்தேன் தேன் + நீர் தேனீர் என்று அழைக்காமல் தேனீக்கள் இருந்து எடுக்கும் நீர் தேன் ஆனது எப்படி என்று ஒரு சந்தேகம்....!
Add Comment