தொப்புள் கொடி பந்தம்

“ரோஜா, மல்லி, செம்பருத்தி, துளசி என, கண்ணுக்குக் குளுமையாய்க் காட்சியளிக்கும் நந்தவனமாகத் தோட்டம், எங்க வீட்டு காம்பவுண்டில் இருந்தாலும்… காலையில் எழுந்து, ஜன்னல் வழியாகத் தோட்டத்தைப் பார்த்தால், “பருத்தி” மரம்தான் தெரியும்… ஏதாவது காய்கறித் தோட்டம் போடலாம் எனப் பந்தல் அவரை விதையை நான் நட… பருத்தி மரத்தைச் சுற்றி அவரைக்கொடி படர்ந்தது… பட்டை பட்டையாய் அவரை காய்த்துத் தொங்கியது… என் முதல் குழந்தை பத்தியச் சமையலில் தினமும் எனக்கு ‘அவரைக்காய் கறி’தான்… பருத்தி காய்த்து வெடிக்க முடியாமல் அவரைக்கொடி மறைக்கிறது… வெயிலே இல்லை பருத்திக்கு… எனச் சாக்குச் சொல்லி… ‘அவரைக்கொடியை’ வெட்டி எறிந்துவிட்டான் மச்சினன்…”. ‘மன்னி, அவரைக்காய் கறியிலிருந்து உங்களுக்கு விடுதலை’ன்னு சொன்னது, மாமியார் காதில் விழவில்லை…

மாமியார், மாமனார், மச்சினர், ஓர்ப்படிகள், நாத்தனார் எனப் பெரிய கூட்டுக் குடும்பம் எங்களுடையது… என் ஓர்ப்படியின் சீமந்தம்… சமையலுக்கு வாங்கி வந்த காய்கறிகளில் முளையுடன், முற்றிய, நான்கு சீமைக் கத்தரிக்காய்கள் இருந்தன, சமையலுக்குச் சரிப்படாது… சரி என்ன பண்ணலாம்? மச்சினரும், நானும், வீட்டின் நான்கு புறமும் மண்ணில் அதை நட்டு விட்டோம். பெரிய வீடுதான்… நீர் வசதி, நில வசதி இருந்ததால்… ஒரே வாரத்தில் நான்கு செடிகளும் துளிர் விட்டு, இலைகள் பச்சை பசேலென வளர்ந்தன. அனைவரும் தினமும் காலையில் துளிரும் செடியைப் பார்த்து ரசிப்போம். நாலாபுறமும் கயிறு கட்டி மொட்டை மாடியில் செடிகளைப் படர விட்டதில், பச்சை பசேலென வீட்டைச் சுற்றிச் சீமைக் கத்தரிக்கொடிகள் (‘சௌசௌ’).

சீசன் ஆரம்பித்ததும், பூப் பூத்துக் காய்க்க ஆரம்பித்தது… குபு குபுவென எக்கச்சக்க காய்கள். வீட்டில் சீமைக் கத்தரி சாம்பார், கறி, கூட்டு, மோர்க்குழம்பு, பஜ்ஜி, போண்டா என ஒவ்வொரு நாளும் சமையலில் சீமைக் கத்தரியின் ஆதிக்கம்தான். தினம்தினம் பறித்தாலும் கூடை நிறைய வரும் காய்களை, எதிர் வீடு, பக்கத்து வீடு மட்டுமல்லாது தெருவிற்கே கொடுத்தாலும் வீட்டில் எங்கு நோக்கினும் காய்கள், காய்கள்தான்… “ஒரே தரம் நாலு காய்களா? மண்ணில் நடுவதா? மன்னிக்கும் மச்சினனுக்கும் வேற வேலை இல்லை” என்று மாமியார் செல்லமாய் அலுப்பார்… என் ஆபீஸ் வேனிட்டி பேக்கில் தினமும் ஆறு சீமைக் கத்தரிக்காய் பயணிக்கும்… தினமும் காலையில் பாட்டுப் பாடியபடி காய்களைப் பறிக்க மாடியேறும் மாமனாரை என் மச்சினன், “அப்பா ஏற்கனவே காய் காய்ச்சல் அதிகம்… இதில் நீ பாட்டுப் பாடியபடி மாடி ஏறாதே… அதைக் கேட்டு இன்னும் அதிகமாய்க் காய் காய்க்கப் போகுது” எனக் கூறித் கிண்டலடித்து அனைவரையும் சிரிக்க வைப்பான்… ஆபீஸ் முடிந்து மாலை வீடு வந்ததும் கதவிடம் நின்றபடி, “அம்மா இன்று டிபன் சீமைக் கத்தரியில் பண்ணுவதாக இருந்தால் சொல்லிடு! நான் இப்படியே ஓடிப்போய் ஹோட்டலில் சாப்பிடுகிறேன்” என்பான்.

“அதெல்லாம் இல்லை உள்ளே வாடா” என்பார் வெகுளியாக… “பாயாசம், கேசரி, வடாம் மட்டும் நீ செய்யலை” என அம்மாவைக் கலாய்ப்பான்… அந்தக் காலத்தில் யூடியூப் இருந்திருந்தால் இதெல்லாமும் செய்திருப்பார் மாமியார்…

“கன்னடக்காரர்கள்” என இக்காயை அதிகம் சமையலில் உபயோகப்படுத்துவதில்லை… குளுமையாம்!! “டீச்சருக்குக் கொடு” என எங்கள் வீட்டுக் குழந்தைகள் பையிலும் காய்களை நிரப்பி அனுப்புவார். வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்குத் தாம்பூலத்துடன் ‘கேரி பேக்கில்’ சீமைக் கத்தரியும் ஆறு போட்டுக் கொடுத்தனுப்புவார்… சேலம், திருச்சி, நாமக்கல் என ஊரிலிருந்து வரும் உறவுகளுடன் பயணித்தது எங்க வீட்டு காய்.

இப்படி பல்பு பல்பாய்க் காய்த்து, எங்களுடன் இரண்டறக் கலந்த சீமைக் கத்தரி… சீசன் முடிந்ததும் படிப்படியாய்க் காய்ப்பது குறைந்து, நின்றும் போனது.

அடடா!!! “என்னமாய்க் காய்க்கும்!!!! பல்பு கணக்காய்க் காய்த்துத் தொங்குமே!! காய் தித்திப்பாய், ‘சூப்பர் டேஸ்ட்டாய்’ இருக்கும்” என வாடிய கொடியைப் பார்த்து நாங்கள் வருந்தாத நாளில்லை.

ஒரு கட்டத்தில் வீட்டை விற்று, நாங்கள் அனைவரும் தனிக்குடும்பமாக வாழ்ந்தாலும்… அனைவரும் ஒன்று சேரும் சமயம் இன்றும் சீமைக் கத்தரியின் காய்ச்சலைப் பற்றியும், அன்று என் மச்சினன் கூறிய “ஜோக்ஸ்”, மாமியாரின் வெகுளித்தனம் பற்றியும் சிலாகித்துப் பேசுவோம். எங்கள் பேரக்குழந்தைகளிடம் பகிர்ந்து கொண்டு மகிழ்வோம்.

“தொப்புள்கொடி” பந்தம் போல், செடி கொடிகளின் பந்தமும் நம்மைச் சந்தோஷப்படுத்தியது… எங்கள் குடும்பத்து “ஆட்டோகிராஃப்”… இது உணர்வுபூர்வமான “மலரும் நினைவுகள்”.

Author

Related posts

என்ன செய்ய?

வரலாற்றில் பொருளாதாரம் – 23

சமன்பாடில்லா சமவெளிப் பயணங்கள்: 10