இணையத்தில் தமிழ்க்குழுமங்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து “பண்புடன்” என்ற சொல்லுக்கென்று ஒரு தனி அடையாளம் இருக்கிறது.
குழும உறுப்பினர்களுக்குக் ‘கட்டற்ற சுதந்திரம்’ என்ற தாரக மந்திரத்துடன் கூகுள் குழுமத்தில் ஆரம்பிக்கப்பட்ட ”பண்புடன்” குழுமம், பல்வேறு விவாதங்களை, மோதல்களை, கதைகளை, கவிதைகளை, கட்டுரைகளை, உள்ளடக்கிய சான்றாய் நம்முன்னே கிடக்கிறது.
சமீபகால சமூக ஊடகப் பயன்பாடுகளாலும் , ‘ரீல்ஸ்’கள் உள்ளிட்ட விழிய ஊடகங்களின் பயன்பாட்டாலும் தமிழ்க்குழுமங்கள் சீண்டுவாரற்றுப் போய் விட்டன. இந்தச் சூழலில்தான், ‘பண்புடன்’ மின்னிதழை ஏன் மீண்டும் தூசி தட்டக் கூடாது?” என்ற நண்பர்களின் யோசனையை அடுத்து அதற்கு மீண்டும் உயிர் கொடுக்கத் தீர்மானித்தார்கள் நண்பர்கள்.
‘பண்புடன்’ மின்னிதழும் தமிழ் இலக்கிய உலகிற்குப் புதிதில்லை தான். 2010களில் சில உற்சாகமிக்க உள்ளங்களால் தொடங்கப்பட்டு, கவிதைகள், கட்டுரைகள், கதைகள், விமர்சனங்கள், பயணக்கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என எல்லா வடிவங்களும் இடம் பெற்ற மின்னிதழ்கள், பரந்துபட்ட பாராட்டுகளைப் பெறவே செய்தது.
ஆனால் சில காலம் செயல்பட்ட பின்னர், அந்த இதழின் ஆசிரியர் குழுவினர்களால் தேவையான நேரம் ஒதுக்க இயலாமையால் முடங்கிப்போனது. அதற்காகவே காத்திருந்தது போல பண்புடன்.காம் இணைய முகவரியும் கையை விட்டுப் போனது. ஆனால் ‘பண்புடன்’ மின்னிதழை மீட்க வேண்டுமென்ற எண்ணம் முகிழ்த்ததும் நண்பர்கள் மீண்டும் சுறுசுறுப்படைந்தார்கள். என்றாலும் சில தொழில் நுட்பக் குறைபாடுகள், வடிவமைப்பு, சோதனை ஓட்டங்கள் என்று எதிர்பார்த்ததை விடவும் ‘பண்புடனின்’ வெளியீடு தள்ளிப் போனது.
என்றாலும், எல்லாத் தடைகளையும் தாண்டி 2025 ஜூலை 2ஆம் தேதி முதல், பண்புடன் மின்னிதழ் புதுப் பொலிவுடன், புது ஆசிரியர் குழுவுடன், மறு பிறப்பைக் காண்கிறது. இது புதிய தலைமுறையின் எண்ணங்களை, பழைய தலைமுறையின் அனுபவங்களை, எல்லா யுகங்களையும் இணைக்கும் முயற்சி.
பண்புடன் கூகுள் குழுமக் கொள்கை போலவே, ‘ இது குறிப்பிட்டவர்களுக்கானது’ என்று எந்தக் கட்டுப்பாடுகளையும் வரையறுக்கவில்லை. எந்த இலக்கிய வடிவமும் மறுக்கப்படுவதில்லை. இதுதான் இலக்கியம் என்று முத்திரை பதிக்கும் எண்ணமும் இல்லை. பண்புடன் மின்குழுமம்போல இது அனைவருக்குமானது. எல்லோரும் தங்கள் பங்களிப்பைத் தரலாம்.
‘பண்புடன்’ மின்னிதழ் மாத இதழாக ஒவ்வொரு மாதமும் இரண்டாம் தேதியன்று வெளிவரும். தொடர்கள் அல்லது இன்றியமையாத விசயங்கள் இருந்தால் அவை அவ்வப்போது பதிவேற்றப்படும். இதனை இலவசமாக வாசிக்க முடியும்.
எங்களின் ஒரே எதிர்பார்ப்பு – வாசித்து விட்டுப் பகிருங்கள், விமர்சியுங்கள். படைப்புகளை அனுப்புங்கள். உங்கள் சொற்கள் எங்கள் இதழுக்குத் திரும்ப வரட்டும். எழுதுங்கள். உங்கள் குரல் எங்காவது ஒருவர் மனதையாவது தொட்டுவிடும்.
தொடர்ந்து பயணிக்க உங்கள் அன்பும், ஆதரவும் உடனிருக்கட்டும்.
இப்படிக்கு,
ஆசிரியர் குழுவினர்
1 comment