நான் தான் சாய்வு தளம் (Ramp) பேசுகிறேன்.. என்ன?! என்னை பார்த்தா உங்களுக்கு புதுசா இருக்கா…
ஆமா! உங்க எல்லாருக்குமே நான் புதுசா தான் இருப்பேன். ஆனா, மாற்றுத்திறனாளிகளுக்கும், பார்வையற்றவர்களுக்கும், வயதானவர்களுக்கும், நான் ரொம்ப உபயோகமா இருப்பேன்.
“ஆனா நீங்க யாருமே என்னைய பயன்பாட்டுக்குக் கொண்டு வர மாட்டேங்கறீங்க!
இப்ப என்னைய பத்தி உங்க கிட்ட அறிமுகப்படுத்திக்கப் போறேன். உங்களால் நடக்க முடிவதனால் நீங்கள் மாடிப்படிகளில் எளிதாக ஏறி விடுகிறீர்கள்! ஆனால், வீல்சேல் பயன்படுத்துபவர்களால் அதுக்கு சாத்தியமில்லை! அதனால், தயவு கூர்ந்து என்னை மாடிப்படிகளுக்குப் பதிலாகவோ அல்லது அருகிலோ என்னை (சாய்வு தளம் – ramp) அமைத்திருங்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கும், வெளி இடங்களுக்குச் செல்வதற்கும், கோயில், கடற்கரை போன்ற இடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கும், ஆசைகள் விருப்பங்கள் இருக்கும்..
கடற்கரை மணற்பரப்பில் மாற்றுத்திறனாளிகளால் வீல் சேர் (wheelchair) பயன்படுத்துவது மிகவும் கடினம். தாங்கள் என்னை அங்கே பயன்பாட்டுக்கு கொண்டு வந்து இருந்தால், அவர்களும் கடலில் கால் நனைத்து, மகிழ்ந்து விளையாடுவதற்கு உபயோகமாக இருக்கும்.
வீடுகள், அரசு அலுவலகங்கள், மற்றும் வணிக வளாகங்களில் என்னை அமைத்திருந்தால், மாற்றுத்திறனாளிகளும் அவை எல்லாவற்றையும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.
எல்லாவற்றிலும் சம உரிமை, சம வாய்ப்புகளுக்கான சட்டம் இருந்தாலும் சமூகத்தில் உள்ள குறைகளால் மாற்றுத்திறனாளிகள் எல்லா தளத்திலும் முடக்கப்படுகிறார்கள். இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு மனிதரும் வித்தியாசமானவர்கள். பிறப்பில் மாற்றுத்திறனாளிகள் உடலிலோ, அறிவிலோ, சிறிது குறை இருக்கலாம்.
ஆனால், அவர்கள் கனவுகளில் அல்ல! ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு பயணிக்கும் அவர்களின் பயணத்தில் குறையா?! அல்லது குற்றமா?! இதை மறுக்கும், மறைக்கும், அரசியலிலும், சமுதாயத்திலும்தான் குறை உள்ளது.
இந்தக் குறைகள் களையப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளையும் ஒருங்கிணைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம் என்று, நாம் அனைவரும் உறுதி ஏற்போம். அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ஒளியேற்றுவோம். இந்தச் சமுதாயத்தில் அவர்களுக்கான பாதைகளை உருவாக்குவோம். மாற்றுத்திறனாளிகளை சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைக்காமல் அவர்களை இணைத்து வாழ வேண்டிய சூழ்நிலையும், உருவாக்குவோம். இது நம் ஒவ்வொரு மனிதனின் கடமை என்று உறுதி ஏற்போம்! மாற்றுத்திறனாளிகளை வளர விடுங்கள். அவர்களுக்கும், ஆசைகள் கனவுகள் உண்டு. அதற்காக வழி விடுங்கள். தடைகளை ஏற்படுத்தாதீர்கள். இந்த உலகம் அனைவருக்குமானது. மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து அவர்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம். என்று உறுதி ஏற்போம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் முன்னேற்றத்திற்கு, பாதைகளை ஏற்படுத்தித் தரும்பொழுது அவர்களும், சாதனையாளர்களே. அவர்களாலும் இந்தச் சமுதாயத்தில் அனைத்துத் தளங்களிலும் சாதிக்க முடியும்.
இந்தச் சமுதாயத்தில் நாம் அனைவரும் சமம்.
1 comment