பேபி சிட்டிங்

”மனசே சரி இல்லம்மா” என்றாள் மகள் ரீமா வருகைக்காகக் காத்திருந்த மீரா.

“ஏன் என்னாச்சு?” டிஃபன் பாக்சை அடுப்படியில் போட்டுவிட்டு வந்து அம்மாவுடன் சேர்ந்து கொண்ட ரீமா கேட்டாள். நான் நடப்பதை ஒரு வழிப்போக்கனாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“சொன்னா கேக்குறாங்களா இவங்க?. ஒரு மாசம் ஒழுங்கா இருந்தாங்க”

“யாரு நாதனா?”

‘ரெண்டு பேரும் தான். மதியம் படுக்கச்சொன்னா ஒருத்தருக்கொருத்தர் ஒரே அடிதடி”

“அப்புறம்….”

“அப்புறம் அப்பா மத்தியஸ்தம் பண்ணி தூங்க வைத்தார். நான் ஊருக்கு கிளம்பறேன்ம்மா, என்னால முடியலை”

“மூன்று மாசம்னு வந்துட்டு ஒரு மாசம் கூட முடியலை. நான் எழுந்ததும் பேசிக்கிறேன்.. நீங்க எதுவும் பேசாதீங்க மம்மி” பேச்சுக்கு அத்துடன் முற்றுப்புள்ளி வைத்தாள் ரீமா. மீரா அடுப்படியில் வேலையாக ஆகிவிட்டாள். பேரப்பிள்ளைகள் சம்பந்தப்பட்ட எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மீரா இன்று பொறுமை இழந்துவிட்டாள்.

“பிரஷர் மாத்திரையை சரியாக எடு மீரா” என்றேன் நான்.

“நீங்க பேசாம இருங்க. இன்று ஒருநாள் தூங்க வைத்தது போதுமா? தினசரி நான்தானே படறேன்”

ரீமா கிட்ஸ் அறையில் லாப்டாப்பில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தாள். மாலை பேரன் நாதன் தான் முதலில் எழுந்து அம்மாவிடம் போனான். ரீமா நாதனிடம் கிசுகிசு குரலில் ஏதோ பேசினாள். தூக்கக் கலக்கத்துடன் மீராவிடம் வந்த நாதன்,” மம்மி! சாரி மம்மி”என்றான். பேசாமல் உம்மென்றிருந்தாள் மீரா.

ரீமா மீராவை மம்மி என்று அழைப்பதால் குழந்தைகளும் மீராவை மம்மி என்றே அழைப்பார்கள். “அம்மா, மம்மி பேசமாட்டேங்கறாங்க” நாதன் ரீமாவிடம் மீண்டும் பூமராங்காக நகர்ந்தான்.

ரீமா மீண்டும் கிசு கிசுவென நாதனிடம் ஏதோ சொன்னாள்,”மம்மி, அழறான் மம்மி” என்றாள் ரீமா.

“நீங்க இரண்டு பேரும் நாளைக்கு கிளம்பறதா சொன்னேன், அழறான் மம்மி”

“வாடா செல்லமே. உன்னை விட்டுப் போவேனா நான்” என்று கூறியவண்ணம் நாதனை அள்ளி அணைத்துக்கொண்டாள் மீரா. ”தாங்க்ஸ் மம்மி” என்று மீராவுடன் ஜெல்லாகி விட்டான் குழந்தை. மஸ்கட் வெயில் வாட்டிக் கொண்டிருந்தது. தூங்கி எழுந்தவுடன் மீராவிடம் வந்தாள் குழந்தை ரோஷ்னி.

“மம்மி. காஃபி மம்மி “ தூக்கக் கலக்கத்துடன் மீராவிடம் வந்து நின்றாள் குழந்தை. மீரா எதுவும் பேசாமல் நின்றிருந்ததற்கு உள்ளர்த்தம் செய்து கொள்ளத் தெரியவில்லை குழந்தைக்கு.

“ரோஷ்னி.” ரீமா அழைத்தாள்.

“அம்மா” ரோஷ்னி ரீமாவிடம் சென்றுவிட்டாள்.

“மம்மி பேச்சை கேக்கலையா நீங்கள் இருவரும் ?”

“இல்லையே அம்மா. நாதன் தான்…”இழுத்தாள்

“மம்மி ரொம்ப அப்செட். அவங்களை தொந்திரவு செய்யாதே. நானே இனி உனக்கு வேண்டியது எல்லாம் செய்யறேன்”

”காஃபி அம்மா?” குழந்தை ஏக்கத்துடன் கேட்டாள்.

“காஃபி நான் தரேன்”

“வேண்டாம் அம்மா. நான் மம்மியிடம் சாரி கேட்டுக்கறேன்” அம்மா ரீமா போடும் காஃபியில் பால் தண்ணீராய் இருக்கும்.

“அப்புறம் இன்னொன்று ரோ. மம்மியை இனி தொந்திரவு செய்யாதே. இனி எல்லாம் நான் தான். மம்மி சமையல் கூட செய்ய மாட்டாங்க”

“ஏன்ம்மா . மம்மிக்கு உடம்பு சரி இல்லையா”

“இல்லைடா. மம்மி ரொம்ப அப்செட். மதியம் நீங்கள் இருவரும் தூங்க கஷ்டம் கொடுத்தீங்க இல்ல. அதுதான்” என்றேன் நான்.

”சாரி மம்மி” மீண்டும் மீராவிடம் வந்து நின்றாள் ரோஷ்னி.”இனிமேல் நீங்க என்ன சொன்னாலும் கேப்பேன் நான்”” கண்ணா மூச்சி விளையாடலாமா?” கண்களை அகல விரித்துக் கேட்ட ரோஷ்னியைப் பார்த்து யார் மனமும் இளகி விடும். மீராவும் இளகி விட்டாள்.

“இனிமேல் பாப்பா சமத்தா நான் சொல்றதை கேக்கணும், இல்லை மம்மி பாக்கிங் அண்ட் லீவிங்”

“சரி மம்மி” மீராவைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள் ரோஷ்னி. “இப்ப காஃபி மம்மி” நினைத்ததைச் சாதித்து விட்டாள் குழந்தை.

ஒரு மாதம் தான் ஆகிறது நாங்கள் இருவரும் மஸ்கட்டில் இருந்த மகள் ரீமா வீட்டிற்கு வந்து. ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை ஓமனில் வெயில் கொளுத்திவிடும். சர்வ சாதாரணமாக நூறு டிகிரி கடக்கும் இந்த மூன்று மாதங்களும் பள்ளிகளுக்கு விடுமுறை. மகள், மருமகன் இருவரும் வேலைக்குப் போவதால் இந்த மூன்று மாதங்களும் பிள்ளைகளை கவனித்துக்கொள்ள வேண்டும். அதற்கு தான் நாங்கள் இருவரும் மஸ்கட் வந்திருந்தோம். பேபி சிட்டிங் தான். ஆனால் மீராவிற்கு பேபி சிட்டிங் என்றால் பிடிக்காது. இந்த வருடம்தான் ரீமாவிற்கு மஸ்கட்டில் வேலை கிடைத்திருந்தது. அதற்கு முன்னால் அமீரகத்தின் அலெயினில் வேலை பார்த்துவந்தாள். ரீமாவுடன் மாப்பிள்ளையும் மாற்றல் வாங்கி வந்திருந்தார்.

ஓமனில் இந்தப் பருவநிலை கடந்த சில வருடங்களாகத்தான் நிலவி வருகிறது. அதற்கு முன்னால் ஓமனிலும் நல்ல மழை நல்ல விளைச்சல் நிலங்கள் இருந்தன. பருவநிலை மாறுபட்டு எல்லாம் வறண்டு போய் இப்பொழுது எல்லா இடங்களிலும் நம் ஊரில் பனைமரம், தென்னைமரம் இருப்பது போல் பேரீச்சம் மரங்கள் தான். இப்பொழுதும் குறிப்பிட்ட சில மாதங்களில் சலாலா போன்ற குறிப்பிட்ட சில இடங்கள் பசுமையாக இருக்கின்றன. மற்ற இடங்கள் எல்லாம் வறண்ட நிலங்களும் மஸ்கட், நிஸ்வா போன்ற ஊர்களில் கான்கிரீட் கட்டிடங்கள் கொண்ட பாலைவனங்களுமாகவே இருக்கின்றன.

சென்னையை விட்டுக் கிளம்புமுன் மீரா அக்கம் பக்கம் எல்லாம் சொல்லிவிட்டுத்தான் கிளம்பினாள், ”ரீமா மஸ்கட் கூப்பிட்டு இருக்கிறாள். மூன்று மாதம் போய் வரேன்”

“என்ன விஷேசம்?”

“பிள்ளைங்களுக்கு லீவு. அதுதான்”

“பேபி சிட்டிங்கா!!. நல்லா போயிட்டு வாங்க” என்றார் பக்கத்து வீட்டு பர்வதம் மாமி.

“பேபி சிட்டிங் இல்லை மாமி. குழந்தைகளுடன் நேரம் கழிக்கப் போகிறேன், விளையாடப்போகிறேன், கதை சொல்லப் போகிறேன், அவர்கள் சொல்லும் கதைகளை கேட்கப் போகிறேன், தூக்க மாத்திரை போடாமல் தூங்கப்போகிறேன்”

“போயிட்டு வந்து சொல்லு, ஏண்டா போனோம்னு ஃபீல் செய்வே”

”அது உங்க வீட்டில் மாமி. எனக்கு மாதம் மூணும் நாளாய் பறந்துவிடும்”

”திரும்பி வந்ததும் பேசிக்குவோம். பை த பை மஸ்கட்டில் குங்குமப்பூ அல்வா நல்லா இருக்கும், அரை கிலோ வாங்கிட்டு வா.. பைசா கொடுத்துடறேன்”

மீராவுக்குத் தாளவில்லை. “மாமிக்கு எரிச்சல், பேபி சிட்டிங்காமில்லே பேபி சிட்டிங். மஸ்கட் அல்வா உங்களுக்குக் கிடையாது மாமி” அன்று முழுதும் பொரிந்து தள்ளிவிட்டாள் மீரா. பிள்ளைகளுக்குத் தேவையென பார்த்துப் பார்த்து பொருட்கள் வாங்கினாள். உடைகள், பலகாரங்கள், புத்தகங்கள். கடைசியாக வாழைப்பூ, வாழைத் தண்டு, முருங்கைக் கீரை, முருங்கைக் காய்.

”இது எல்லாம் பிள்ளைங்களுக்கு நல்லது. மஸ்கட்டில் கிடைக்கறது இல்லையாம்”

“நாட்டுக் கொய்யா ரோஷ்னிக்கு ரொம்பப் பிடிக்கும்”

“நெய், நாலு லிட்டர் வாங்கிக்கங்க. நாதன் வளரும் பிள்ளை” அனுமதிக்கப்பட்டிருந்த எடைக்கு மேலேயே போய் விட்டது.

“சர்வ தேசவிதிகள்படி எண்ணெய் நாலு லிட்டருக்கு மேல் அனுமதி கிடையாது. எடுத்து விடுங்கள் எடை கணிசமாகக் குறையலாம்” விமானநிலையத்தில் அதிகாரி அறிவுரை வழங்கினார்.

“பரவாயில்லை. இருக்கட்டும். அதிக எடைக்கு பணம் செலுத்தி விடுகிறோம். என்னங்க சரி தானே?”

நான் சரியெனத் தலையாட்டினேன். நான் உப்புக்கு சப்பாணிதான். வீட்டு விவகாரங்கள் எல்லாம் மீரா மேற்பார்வையில் தான்..

விமானத்தில் ஏறி உட்கார்ந்ததில் இருந்து ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை என்னைக் கேட்டுத் துளைத்துவிட்டாள், ”மஸ்கட் எப்ப வருங்க? மஸ்கட் எப்ப வருங்க?” பிள்ளைகளைப் பார்க்கணும்”
வீட்டிற்கு வந்தவுடன் குழந்தைகளுக்கு தான் கொண்டு வந்திருந்த அனைத்தையும் வரிசைப்படுத்தி குழந்தைகளின் முகமலர்ச்சி பார்த்துப்பார்த்து சந்தோசம் கொண்டாள் மீரா.

“இந்தா நாதா.. உனக்குப் பிடித்த ஆரஞ்ச் பர்ஃபி. ரோஷ்னி உனக்கு அதிரசம்”

ரீமாவும் மாப்பிள்ளையும் வேலைக்குக் கிளம்பியவுடன் குழந்தைகளைக் குளிப்பாட்டி உணவு கொடுத்து பின்னர் அவர்களுடன் ஒரே விளையாட்டுதான். த்ரோயிங் த பால், ஃபையர் இன் த மௌண்ட்டன் ரன் ரன் ரன், ம்யூசிக்கல் சேர், ஸ்நேக் அண்ட் த லாடர், இத்யாதி, இத்யாதி. அது மட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கு தினசரி அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ற உணவு. நெய் ரோஸ்ட், வதக்கு சட்னி, இன்னொரு நாள் பணியாரம். மீரா இல்லாத பொழுது இவை எல்லாம் குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை, தினமும் இட்லி தான். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது இன்று வரை. இன்று மதியம் உணவு உண்டு படுக்கும் பொழுதுதான் நாதனுக்கும் ரோஷ்னிக்கும் உலகப் போர் ஆரம்பமானது. என்ன சொல்லியும் கட்டுப்படவில்லை. மீரா பொறுமை இழந்து விட்டாள். நான் தலையிட்டு இரு குழந்தைகளையும் படுக்க வைத்தேன்.

மீராவிற்கு குழந்தைகள் அவள் பேச்சுக்குக் கட்டுப்படாமல் என் பேச்சுக்கு கட்டுப்பட்டதில் மேலும் கோபம்.

“செய்வதெல்லாம் நான். என் பேச்சு கேட்கிறாங்களா பாருங்க” மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொண்டவள் தான்.. ரீமா வரும் வரை இறங்கவே இல்லை. அன்று இரவு உணவின் பொழுது மாப்பிள்ளையிடம் ரீமா சொல்லிக்கொண்டிருந்தாள்,” இன்று குழந்தைகள் மம்மியைப் படுத்தி எடுத்து விட்டார்களாம். மம்மி கிளம்பறேன்னு இருந்தாங்க. நான்தான் சமாதானம் செய்தேன்”

மாப்பிள்ளை கேட்டுக்கொண்டே இருந்தார். அவர் இன்னொரு உப்புக்கு சப்பாணி.

இரவு படுக்கையில் படுத்திருந்த மீராவை நாதன் வந்து அழைத்தான், ” மம்மி வாங்க விளையாடலாம்”

“எனக்குத் தூக்கம் வருது”

“இப்ப தூங்கற நேரம் இல்லை மம்மி. விளையாடும் நேரம்.. கம்”

“ஆக்டோபஸ் ரத்தம் என்ன கலர்?”

“வெள்ளை” என்றேன் நான், வித்தியாசமாய் இருக்கட்டுமே என்று.

“தாத்தாவுக்கு ஒண்ணும் தெரியாது. ப்ளூ தாத்தா” என்றான் நாதன்.

மீரா பாதி படுக்கையில் இருந்து எழுந்துவிட்டாள்.

“ஃபெப்ரவரி, மார்ச்சில் ஒரு முறை வந்து ஜூன் ஜூலையில் வராதது எது?”

நான் பேசாமல் இருந்தேன். இன்னொரு முறை பல்ப் வாங்க நான் தயாரில்லை.

மீராவுக்கும் தெரியவில்லை. முழித்தாள்

“ட்ரை மம்மி” ரோஷ்னி நாதனுடன் சேர்ந்து கொண்டாள்.

“தெரியலையேடா கண்ணே”

“இங்கிலிஷ் லெட்டர் A மம்மி” குழந்தைகள் கைகொட்டி சிரித்தன. மீரா படுக்கையில் இருந்து எழுந்துவிட்டாள். நான் படுக்கையில் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டேன்.”இனி தூங்கினாற் போலத் தான்”

பக்கத்து அறையில் இருந்து ரீமா எட்டிப் பார்த்தாள்.

“மம்மி.. ஆல் ஃபைன் தானே? நாளை ஊருக்கு போகலை இல்ல?”

“போகலெ. போகலெ. நீ போ” என்று அவளை அனுப்பி விட்டாள் மீரா. அதற்கப்புறம் கண்ணாமூச்சி ,அன்று அனைவரும் படுத்த பொழுது இரவு மணி பன்னிரண்டு ஆகிவிட்டது. நாலு நாட்கள் கழிந்தன, மாலையில் வேலை முடிந்து ரீமா அசதியாக வீடு திரும்பினாள். நான் லாப்டாப் பார்த்துக் கொண்டிருந்தேன், மீரா அடுக்களையில் வேலையாக இருந்தாள். குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தன. டிஃபன் பாக்சை கழுவப்போட்ட ரீமாவிடம், ” இன்றும் ஒரே பிரச்னை. நாளை எங்க ரிட்டன் டிக்கெட் போட்டிடும்மா. பேபி சிட்டிங் என்னால் முடியல்ல.” என்றாள் மீரா பரிதாபமாக.

ரீமா எவ்வளவு சொல்லியும் குழந்தைகள் எவ்வளவோ கெஞ்சியும், கொஞ்சியும் மீரா தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. ஒரு நல்ல நாளில் மஸ்கட்டில் இருந்து கிளம்பினோம்.விமானத்தில் ஏறி அமர்ந்து விமானம் மேகப்பொதிகளிடையே சஞ்சரித்துக் கொண்டிருந்த பொழுது மீரா என்னிடம் கேட்டாள்,

“தப்பு பண்ணிட்டமோ. இன்னும் ஒரு மாதம் கழித்து கிளம்பியிருக்கலாமோ?”

Author

Related posts

அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு

கொங்கு வட்டாரவழக்கு – 11: பொழையாக்குப்பா

வழி நடத்தும் நிழல்கள்

1 comment

Antonyanbarasu October 17, 2025 - 3:09 pm
குழள் இனிது யாழ் இனிது என்பர் மழலை சொல் கேளாததோர்
Add Comment