சின்ன வேஷம்

சின்னது, நடுத்தர அளவு, பெரியது எனக் கலந்துகட்டி இருக்கும் உருளைக்கிழங்கு மூட்டையை டபக்கெனத் திறந்து உருட்டி விட்டாற்போலச் சின்னப் பையன்கள், பெண்கள், கொஞ்சம் வளர்ந்தவர்கள், கொஞ்சம் உயரமானவர்கள் என மாணவ மாணவிகள் பள்ளிக்கூடத்தில் பரவி இருந்தார்கள். என்ன… நோ யூனிஃபார்ம். ஏனெனில் பள்ளி ஆண்டு விழா. கூடவே அவர்களது பேரண்ட்ஸ் எனத் தமிழில் சொல்லப்படும் பெற்றோர்கள் எனச் சென்று கொண்டிருக்க, பாவனி தனது ஹூண்டாய் வென்யூவை உள் செலுத்தி கார் நிறுத்தத்தில் நிறுத்திப் பின் கதவைத் திறந்தாள்.

படக்கெனக் குதித்து இறங்கினான் ரோஹித். ஆறாம் வகுப்பு மாணவன். பாவனியின் பையன். கண்களில் மெலிதாய்ப் பயம்.

“நல்லாச் செய்வேனா மம்மி?”

“டேய் பயப்படாதே. உனக்கோ டயலாக்லாம் கிடையாது. கூட்டத்தோட வாயசைக்கிறது தானே… ஓடு, போய் மேக்கப் போட்டுக்கோ” என அனுப்பி விட்டு, வென்யூவிலேயே சற்று நேரம் அமர்ந்திருந்தாள் பாவனி.

ரோஹித்திற்குப் பள்ளியின் ஆண்டு விழாவில் ‘பக்த பிரகலாத்’ நாடகத்தில் வேஷம். சின்ன வேஷம் தான். பையன் குண்டாக இருப்பதைப் பார்த்து அசுர வேஷம். நடுவில் சில காட்சிகள் மற்றும் கடைசித் காட்சி மட்டும் தான். வசனம் எல்லாம் கிடையாது. கும்பலோடு கும்பலாய் இருக்க வேண்டும். அதற்கே ஏகப்பட்ட ஆர்ப்பாட்டம். ஒருவழியாய் ஆபிஸ் முடித்து வீட்டிற்குச் சென்று வென்யூவை எடுத்து இவனைப் பள்ளியில் விட்டாகி விட்டது.

”இவனுக்குச் சின்ன வேஷம். ஆனால் நான் போடுகிற வேஷம்… இவனைப் பார்த்துச் சிரித்து நம்பிக்கை ஊட்டும் படி பேசி, போனில் பேசிய நாகாஸை வீட்டிற்குச் சென்று உடை மாற்றி நேரே பள்ளிக்கு வரச் சொல்லி… அவன் அடித்த ஜோக்கிற்கெல்லாம் நிஜமாகச் சிரிப்பது போல் பாவ்லா செய்து… ம்ம் பாவனி, நீ நல்ல நடிகைடி நீ!”

காலையில் அவள் வேலை செய்யும் கீர்த்தி ஸ்கேன்ஸ் லேப் சென்ற போது, டாக்டர் முகுந்த் கூப்பிட்டு அனுப்பினார். நார்மலாகக் கூப்பிட மாட்டார். மேலே சென்றால் அவளை அமர வைத்துச் சில நொடிகள் மௌனித்தார்.

“சார் என்ன விஷயம்? நான் கீழே போகட்டா? பேஷண்ட்ஸ்லாம் இருக்காங்க.”

“ஐயம் ஸாரி டு ஸே பாவனி… உனக்கு ரிஸப்ஷனில் உட்காரத் தகுதியில்லை!”

“சார்… சார்… ஏதாவது கம்ப்ளெய்ண்ட்ஸ்?” பாவனியின் குரல் தடுமாறியது.

“அதெல்லாம் இல்லை. போர்டுல ஆட்குறைப்பு செய்யறாங்க இந்த லேப்ல. ஸோ… இன்னும் டிஸ்கஷன்ல இருக்கு. நாளைக்கு முடிவு தெரியும்.”

“தேங்க்யூ சார்” என இயந்திரமாய்ச் சொல்லி கீழே வந்து, அமைதியாய்ப் பேஷண்ட்ஸிற்கு கைட் பண்ணி வெவ்வேறு செக்‌ஷனுக்கு அனுப்பி வேலையில் மூழ்கினாலும், மனத்தின் கீழே வலி. ஏன்? ஏன்? என்னாச்சு? கார்ப்பரேட் கல்ச்சர், கம்பெனி நாகரிகம் என்பது இதுதானோ? இரக்கமற்ற தன்மை.

படக் படக்கெனப் பொழுது வேகமாகத்தான் போனது. ஐந்து மணிக்குப் போன் பண்ணி டாக்டரிடம் ரோஹித்தின் ஆண்டு விழா பற்றிச் சொல்லி, அவர் ‘ஸீ யூ டுமாரோ’ என்றதை “ஓகே சார்” எனப் பதிலிறுத்து, இதோ ரோஹித்தின் பள்ளி.

”ஹாய் பாவனி” – டட்டட் எனப் பைக்கில் வந்து இறங்கினான் நாகராஜ்.

“என்ன இங்கேயே இருக்க? ஸாரி… ஓலா கிடைக்கவே இல்லை. அதான் பைக். எங்க ரோஹித்?”

“உள்ள போயிருக்கான்.”

“ஆக்சுவலா எனக்குக் கொடுத்திருக்கலாம் அசுர வேஷம். உனக்கு தேவ மங்கை.”

“யோவ், சும்மா வாய்யா” எனக் கூட்டிச் சென்று ஆடிட்டோரியத்தில் புகுந்தாள்.

நிகழ்ச்சிகள் ஆரம்பித்திருந்தன. சில பேச்சுகள் எனக் கால் மணி நேரம் கழிந்த பின் ஆரம்பித்தது பிரகலாத நாடகம்.

வழக்கமான கதை தான். காட்சிப்படுத்திய விதம் புதுமையாக இருந்தது. ரொம்ப வளர்த்தாமல் இரணிய கசிபுவின் அட்டகாசம் எனத் காட்சிகள், பிரகலாதன் பிறந்து வளர்வது, அவன் படிப்பது, ரிஷிகளின் கம்ப்ளெய்ண்ட் டு இரணிய கசிபு – பையன் நாராயணா சொல்கிறான் என வேக வேகமாக வசனம், காட்சிகள் என அரை மணி நேரம் ஓடியதே தெரியவில்லை. ஓரிரண்டு காட்சிகளில் அசுர வேஷத்தில் ரோஹித் நிற்பதைப் பார்த்து நாகாஸ் எக்ஸைட் ஆனான். “பாரேன், ராட்சசி! உன்ன மாதிரியே உன் பையன் இருக்கான்!” – சொல்லிப் பாவனியிடமிருந்து ரியாக்‌ஷன் எதுவும் வராமல் போக நாடகத்தைக் கவனித்தான்.

பாவனிக்குத் தேவை சோக எண்ணங்களைப் புதைக்க ஒரு வடிகால். தவிர, நரசிம்மன் அவளுக்கு இஷ்ட தெய்வம் என்பதால் அதிலேயே ஒன்றியிருந்தாள்.

இறுதிக் காட்சி…

”எங்கடா உன் விஷ்ணு இருக்கான்?” என அசுர வேஷமிட்ட பிளஸ் ஒன் மாணவன் கேட்க, ஆறாம் வகுப்பு பிரகலாதன்… “சாணினும் உளன்” என ஆரம்பித்து “இன்னின்ற தூணினும் உளன், நீ சொன்ன சொல்லிலும் உளன், இத்தன்மை காணுதி விரைவில்” எனப் கம்ப ராமாயண வரிகளை நிறுத்திச் சொல்ல, அரங்கத்தில் ஆரவாரம்.

அசுர இரணியன் “அப்படியா” எனச் சொல்லி உறுமி, “இந்தத் தூணிலா இருக்கிறான்?” என மீண்டும் கர்ஜித்து (பிளஸ் டூ மாணவன் நன்றாகப் பண்ணியிருந்தான்), கோபத்தின் உச்சியில் பிரகலாதனையும் அவன் நின்றிருந்த தூணையும் விட்டு மேடை ஓரத்திற்கு நடக்க ஆரம்பிக்க, ஆரம்பித்தது பின்னணியில் தமிழாசிரியையின் பாட்டு.

மிருதங்கமா, கீபோர்டா இல்லை ட்ரம்ஸா? என எல்லாம் கலந்த கலவையில் கம்பராமாயணப் பாடலைத் தழுவி,

ஆசையும் பிறந்து அங்கே ஆண்டவன் அறிய எண்ணி
ஓசையாய் நன்று சொல்லி ஒலிபல எழுப்பி ஓடி
விசையென வேகங் கூட்டி மேவியே தூணை எற்ற

பாடிய ஆசிரியை இவ்வரிகளைப் பாடி முடிக்கையில் – இசை கொஞ்சம் உச்சஸ்தாயிக்குச் செல்ல – ஓரத்திலிருந்து திரும்பி வெறியுடன் வந்த இரணிய கசிபு மாணவன் ஆங்காரத்துடன் தூணினை அறையும் போது ஆசிரியையின் குரல்:

திசைகளைக் கிழித்து அங்கே சிரித்தது செங்கட் சீயம்

பின் வண்ணக் கலவைகளின் ஒளி… கூடுதலாகத் தூணின் பிளவு. நரசிங்கம் வெளியில் கண்கள் சிவக்க வந்து அந்த இரணியனை அள்ள, ஒலிகள் மேலெழப் பார்த்தவர்கள் கொஞ்சம் உறைந்துதான் போனார்கள். தத்ரூபம். நாகாஸ் திரும்பாமல் பாவனியின் கைகளைப் பற்ற, பாவனியின் கண்களில் நீர் வழிந்தது.

நரசிங்க உறுமல் ஒலிகளால் மேலும் கூட, அரங்கில் சிவப்பு ஒளியில் நரசிம்ம மாணவன் இரணியனை மடியின் மீது வைக்க, இசையின் ஒலி அடங்கியது. பின் அசுர தேவர்கள் மேடைக்குக் கை கூப்பி வருகையில் ஆசிரியையின் பாட்டொலி – பிரகலாதன் வாயசைப்பு:

எனக்கொரு துன்பம் என்றால் இங்கு நீ வந்தாய் அன்றோ
தனக்கென நானும் ஏதும் சாற்றிலேன் சிம்ம மூர்த்தி
வணங்குவோம் உம்மைத் தானே வண்ணமாய் நாங்கள் இன்று
பிணக்கமும் கோபமும் விட்டுப் பேதையர்க்கு அருளைச் செய்வாய்…

எனப் பாட, உறுமிய சிங்கம் செவ்வண்ண நிறம் மாறி நீல நிறத்தில் அடங்க, மற்றவர்கள் வணங்கி நிற்கத் திரையும் விழுந்தது. ஓரிரு வினாடிகளில் அரங்கில் மௌனம். பின் பலத்த கரகோஷம்.

பள்ளித் தலைமை நன்றி சொல்லி தேசிய கீதம் பாடி முடிய, வெளியில் மௌனமாக கார் அருகில் வந்த பாவனி, “வண்டியை நீ எடு நாகாஸ். பைக்கைக் காலையில் நான் வந்து எடுத்து லேப் போய்க்கறேன். (வேலை இருக்குமா? என மன ஒலி – மைண்ட் வாய்ஸ்)”

நாகாஸும் ஏறி உட்கார்ந்து ஸ்டார்ட் செய்ய, ரோஹித் மேக்கப் கலைக்காமல் அசுர விக் மட்டும் எடுத்துச் சாதாரண பேண்ட், ஷர்ட்டுடன் ஏறினான்.

“எப்படி இருந்துச்சு மம்மி, டாடி?”

“ஜோர்டா. நீயும் தான் நல்லா பண்ணே. ஸ்டேஜ் பயம்லாம் இல்லாம” என்ற நாகாஸ், வண்டியைப் புறப்படச் செய்தபடி, “பாவனி, கம்பராமாயணப் பாடலைத் தழுவி டீச்சர் பாடச் சொல்லச் சிலிர்த்துச்சு எனக்கு. அப்படியே கம்பராமாயண கிளாஸ் முன்னாடி போனேனோன்னு தோணுச்சு. என்னோட குருநாதர் அந்த ஒரிஜினல் பாட்டைப் படிச்சதக் கேட்கணும் நீ. ‘சிரித்தது செங்கண் சீயம்’ சொல்றச்சே சிங்கம் மாதிரி கர்ஜித்திருப்பார். அதெல்லாம் நினைவுக்கு வந்தது.”

வீடு வரும் வரை நாகாஸ் மற்றும் ரோஹித் பேசிக்கொண்டிருக்க, பாவனியும் இயல்பாய்க் கலந்து கொண்டு பேசினாள்.

ரோஹித் உடை மாற்றிக் குளித்து வர, மூவரும் டின்னர் உண்டார்கள் (இட்லி, சட்னி). ரோஹித்திற்கு டென்ஷனினால் உண்டான அயற்சியில் உறக்கம் வந்து அவன் அறைக்குச் சென்றுவிட, பாவனி நைட்டியுடன் படுக்கையறை வருகையில் நாகாஸ் அமர்ந்திருந்தான் கண்களில் கேள்விக்குறியுடன்.

“என்னாச்சு பாவனி?”

“ஒண்ணுமில்லையே” – வெளிறிச் சிரித்தாள்.

“ஹேய் சொல்லு, உனக்கெல்லாம் வேஷம் போடத் தெரியாது. உன் முகமே சரியில்லை” எனப் பக்கத்தில் இழுத்து நாகாஸ் கேட்க, பாவனி பொங்கி விம்மி விம்மி காலையில் நடந்ததைச் சொல்லி முடித்தாள்.

நாகாஸ் சிரித்தான். “அச்சோ, இதானா ரீஸன்? சரி விடு. இது சின்ன வேலைன்னு சொல்லிக்கிட்டிருந்தேனே, உனக்கு சேஞ்ச் சீக்கிரமே கிடைக்கும்” எனச் சொல்கையில் ‘கொய்ங்க்’ என்றது செல்போன். பாவனியுடையது.

இந்த நேரத்திற்கு யாராக இருக்கும்? பார்த்தால் வாட்ஸ்அப்பில் நர்ஸ் மேரி. டாக்டர் முகுந்துடன் இருப்பவள். “ஹேய் பாவனி, ரொம்ப பயந்துக்கிட்டெல்லாம் இருக்காதே. டாக்டர் முகுந்த் கலாய்ச்சாராம். சொன்னார், உனக்கு ப்ரமோஷனல் ட்ரான்ஸ்பராம். அஸிஸ்டெண்ட் ஹெச்.ஆர் மேனேஜர் அண்ட் இன்னும் அடிஷனல் வொர்க்ஸ்… இன்னொரு பிரான்ச்ல. ஸோ சமர்த்தா நாளைக்கு வா பார்க்கலாம்.”

அவனிடம் காட்ட, நாகாஸ், “குட். அதானே ஃபேரி டேல்ஸ்ல எல்லாம் எண்ட் சுபமாத்தான் இருக்கும். நீ தான் என்னுடைய ஃபேரி… இல்லியோ?”

“யோவ்” எனக் குத்தினாள். “நானே என் ஆபிஸ் விஷயம் சொல்லலாம்னு இருந்தேன்” – சீரியஸாக முகம் வைத்துச் சொன்னான் நாகாஸ்.

“அச்சோ!”

“அச்சோவெல்லாம் இல்லை. எனக்கும் ப்ரமோஷன் கிடைச்சிருக்கு ஆபிஸ்ல. அனேகமா யூ.எஸ் போக வேண்டி இருக்கும் சில மாசம்” என்றான் நாகாஸ்.

பின் குறிப்பு:
கம்ப ராமாயணப் பாடல்

நசை திறந்து இலங்கப் பொங்கி, “நன்று, நன்று !” என்ன நக்கு,
விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன ஓர் தூணின், வென்றி
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்; எற்றலோடும்,
திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, அச் செங் கண் சீயம்.

**
மகன் இத்தனை சொல்வதைக் கேட்ட அரக்கனுக்கும் இறைவனைக் காணலாம் என்கிற ஆசை அதிகமாக வர மிகுந்த வேகத்துடன் ஓடி, இடி விழுவது போல ஒரு தூணை தன் கையால் அறைந்தான். அந்த நொடி திசைகள் எல்லாம் திறந்து அண்டம் பிளந்து கிழியுமாறு நரசிங்கம் சிரித்தது.

விருத்தத்தில் முயற்சி அடியேன்.

Author

Related posts

உன் உழைப்பால் சிகரம் தொடு!

சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 7

நல்லாச்சி – 24