மலையாள மூலம்: பாபு பரத்வாஜ் (பிரவாசிகளுடே குறிப்புகள் புத்தகத்திலிருந்து)
முதல் மாதச் சம்பளத்தில் ஹஸன் ஒரு பெட்டி வாங்கினான். அங்கு லேபர் கேம்பில் உடன் வேலை செய்பவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. “எதற்காக இவ்ளோ பெரிய பெட்டி? 2, 3 மாசம் தொலைவில் இருக்குற ஊருக்குப் போக, இப்பவே எதுக்காகப் பெட்டி வாங்கின? ஒருவேளை, காலத்தால தீர்க்கவே முடியாத கடைசிப் பயணமா இது? அப்படி ஒரு பயணத்துக்கு முன்னாடி இந்தப் பெட்டியை எப்படி உன்னால் நிறைக்க முடியும்?”
இவர்களது ஆச்சரியங்களையும் பரிகாசங்களையும் பார்த்தும், கேட்டும் ஹஸன் தலை குனிந்து சிரித்துக்கொண்டான். மறுநாள் முதலே, ஹஸன் சின்ன சின்ன லொட்டுலொடுக்கு சாமான்களை வாங்கிப் பெட்டியை நிரப்பத் தொடங்கினான். ஒருபோதும் தீர்ந்துவிடாத பசியோடு, பெட்டி மறுபடியும் மறுபடியும் வாய்திறந்தே கிடந்தது.
தனது சொந்த பந்தங்களையோ, நண்பர்களையோ.. யாரையும் விட்டுப்போகாதவாறு அவர்களது பெயரையும் அவர்களுக்கு வேண்டிய பொருட்களையும் எழுதி வைத்திருந்தான். இதற்காகவே வாங்கியிருந்த டயரியில், ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு ஏட்டை ஹஸன் விட்டுவைத்திருந்தான்.
வாங்கிய பொருட்களுடன் இனி வாங்கவேண்டிய பொருட்களும், வாங்க வாய்ப்பிருக்கும் பொருட்களும் எழுதப்பட்டிருந்தன. அதுமட்டுமல்ல.. கடிதங்களூடாக சொந்தங்கள் மற்றும் நண்பர்களுடைய ஆசைகளுக்கும் அந்த டயரியில் இடமிருந்தது.
நான் படித்ததிலேயே மிகவும் ஆத்மார்த்தமாகவும், சுவாரசியமாகவும், புல்லரிக்கக்கூடியதாகவும் அந்த டயரிக்குறிப்புகள் இருந்தன. வாங்கவேண்டிய பொருட்களின் பட்டியலில் அப்படி என்ன புல்லரிப்பு இருக்க முடியுமென ஆச்சரியம் வேண்டாம். சில உதாரணங்கள்.
1977 ஆகஸ்ட் 18
‘ஜாபர்
டேய்.. திருட்டு ராஸ்கல், உனக்கேத்த பேஜ் இதுதாண்டா..
நீ ஒரு பீடை மாசம்டா.
யா அல்லா.. அவன் என்ன எழுதி இருக்கிறான்! அவன் எழுதிய பொருளை வாங்கவேண்டுமென்றால் நான் இரண்டுமாதம் இந்தப் பாலைவனத்தில் காயவேண்டும். அதனால் நான் அவனுக்கு ஒரு நெயில் கட்டர் மட்டும் வாங்கலாம். இல்லையென்றால் ஒரு பேனா வாங்கினால் என்ன? அவன் இல்லையென்றாலே எழுதுவதில் தீவிரமாய் இருப்பான். பேனா சட்டைப்பையில் குத்திக்கொண்டு கர்வமாய் அனைத்துமறிந்தவன் போல நடிப்பது மட்டும்தான்.
ஒரு பேனா வாங்கிக் கொடுப்பது ஒரு பிரதியுபகாரம்தான். சிறுவயதில், அவனுடைய பாவா ரங்கூனிலிருந்து கொண்டு வந்த ஒரு பேனாவை ஸ்கூலுக்கு எடுத்து வந்தான், மூன்றாம் வகுப்பில் படிக்கையில். மூன்றாம் வகுப்பில் பென்சில்கூட அவசியமற்ற காலமது. பந்தா காட்டுவதற்காகவே அந்தப் பேனாவை எடுத்து வந்தான். நான் ஒரு வேடிக்கைக்காக அந்தப் பேனாவை வாங்கி எனது பாக்கெட்டில் குத்திக் கொண்டேன். உடனே என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டான். பேனா அவனிடமிருந்து எப்படியோ தொலைந்து போனது. நான்தான் அந்தப் பேனாவைத் திருடினேன் என்று மாஸ்டரிடம் பிராது சொன்னான் அவன். ராமன்குட்டி டீச்சரிடம்தான். எதற்காகவும் கேள்வியும் பதிலும் இல்லாத ஒரு ஆள் அவர். கட்டியிருந்த வேட்டியை நீக்கி பின்புறத்திலேயே பிரம்பால் அடித்தார். அடியைவிடவும் வேதனையாக இருந்தது ஆடையை நீக்கியது. அன்று, உள்ளே எதுவும் போட்டிருக்கவில்லை. பொதுவாக யாராவது அடிபடுகிறார்களென்றால் பரிதாபப்படுகின்ற பெண்கள் முகத்தை மூடிக்கொண்டு கலகலவென்று சிரித்தார்கள்.’
ஹஸனின் டயரியில், எல்லாப் பக்கங்களும் இப்படியே சம்பவங்களால் நிறைந்திருந்தன.
சுவாரசியமும் இனிமையும் நிறைந்த இரண்டு வார்த்தைகளுடனேயே இருந்தது.
டிசம்பர் 27
‘ஸைனபா.
பால்தானோ.. தேன்தானோ கல்பிலே பைங்கிளிக்கு
சக்கரை பாகு நீ
ஸைனபா..
யா அல்லாஹ். . ஆமினாவுக்குத் தெரியக்கூடாது. ஸைனபா.. இந்த டிசம்பர் குளிரில் விறைத்துக் கிடக்கட்டும் உனது பெயர். நான் உனக்கொரு சேலை வாங்கியிருக்கிறேன். விடலைப்பருவத்தில், நீ தந்த ரகசிய முத்தத்திற்காகத்தான் அந்தச் சேலை. நிறைய மயிலிறகுக் கண்களோடு அழகான சேலை. இதை நான் ஆமினாவுக்குக் காட்டமாட்டேன்.’
ஹஸனின் டயரிக்குறிப்புகள் மொத்தமும் எழுதினால் அது ரசனைமிகுவான வாழ்க்கைச்சரிதமாகும். இது டயரிக்குறிப்புகளில்லை. உண்மையில் பரிசுப்பொட்டலங்களால் தனது வாழ்க்கையை இணைத்துக்கொள்ளுகின்ற ரேகைகளாகும் அவை. அந்த ரேகைகளில் ஹஸன் தனது கிராமத்தினர்களால் தொலைவிலிருந்தும் நேசிக்கப்படுகிறான்.
ஹஸன் தினமும் சேகரிக்கின்ற பொருட்களூடாக அவன் மனதால் தனது கிராமத்துக்குத் திரும்புகிறான்.
ஆனால், இதற்கிடையில் ஒரு பெயர் மட்டும் விட்டுப்போயிருக்கின்றது. அது அவன் மனைவி ஆமினா. இருந்தாலும் அவன் தினமும் மனதில் சொல்லிக் கொண்டிருக்கவேண்டும். ‘ஆமினா.. உனக்காக நான் என்னையே கொண்டு வருவேன். வரும்போது என்ன வாங்கி வரவேண்டுமெனக் கேட்கும்போது நீ சொன்னாயே உங்களை.. உங்களைக் கொண்டு வந்தால் போதுமென்று’
முதல் தடவை ஹஸன் ஊருக்கு போய் திரும்பும்போது, கொண்டுபோன பொருட்கள் லிஸ்ட்டில் குறித்துவைத்திருந்த முழுவதையும் கொடுக்க முடியவில்லை. இருப்புக்கு மீறிச் செலவான அக்கௌண்டைப்போல ஆகிவிட்டான். முதலில் வந்த உறவினர்கள், வாங்கி வந்திருந்த பொருட்களை அவர்களே தேர்ந்தெடுக்கத் தொடங்கினர். என்ன பலன்! எல்லோரிடமும் மனஸ்தாபம்தான். அதிகப் பொருட்களை அள்ளிக்கொண்டவர்களுக்குதான் அதிக மனஸ்தாபம். ஒவ்வொரு தடவை திரும்பும்போதும் அடுத்தமுறை வரும்போது எதுவும் கொண்டுவரக்கூடாதென்று நினைத்தான். ஆனால், அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அவனால் ஒருபோதும் முடியாது. எல்லாக் கடிதங்களின் நலன்விசாரிப்புகளுக்குப்பின், தேவைப்படுகின்ற பொருட்களின் பெரிய வரிசை இருக்கும். ‘பணம் வாங்க உனக்குக் கஷ்டமாய் இருக்குமென்று தெரியும். இருந்தாலும் அது சரியாய் வராது.பணம் எவ்வளவு என்றாலும் தருகிறேன்’ என்றொரு ஒரு வீண் வசனமும் அதில் இருக்கும். பணம் வாங்கவோ, கேட்கவோ ஹஸனுக்கு இதுவரை முடிந்ததில்லை. பணம் தரவேண்டிய நினைவை மறக்க எல்லோருக்கும் சட்டென முடிகிறது. என்றாலும் சிலர் விலை கேட்பதுண்டு. சிலர் பணமும் தந்துவிடுவார்கள். செலவு செய்த தொகையைவிடவும் ஹஸன் குறைவாகவே கூறினான். ஆனால் இரட்டிப்பு விலை சொல்லியிருக்கின்றான் என்றுதான் பொருட்களை வாங்கியவர்கள் நினைத்தனர். அதையே ஊரில் அனைவரிடமும் கூறவும் செய்தனர். ஆமினா, ஹஸனை குறை கூறிக் கடிதம் எழுதுவாள். ’எதுக்காக நம்மகிட்ட இல்லாத பணத்தைச் செலவு செஞ்சி வாங்கிக் குடுத்தீங்க? தேவை இல்லாம ஊர்க்காரங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறீங்க’.
ஆனால் ஹஸனுக்கு ஹஸனாகாமல் ஒரு நாளாவது இருக்கமுடியுமா? அவன் தினமும் அங்காடிக்குள் சுற்றித்திரிந்து, பொருட்கள் வாங்கிப் பெட்டியை நிறைத்துக்கொண்டிருந்தான். புதுச்சிலுவையில், அவன் அவனையே ஆணிகளால் அறைந்து கொண்டிருந்தான்.
ஆமினாவுக்காக ஹஸன் ஒன்றும் வாங்கவில்லையா? உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இரண்டு வருடங்களாக இந்தப் பாலைபூமியில் தன் உடலை வாட்டியவன். அவனது உடல் காதல் சூழல் நிறைந்த மற்றொரு உடலுக்குள் பிரவேசிக்கும்போது அந்த உடலின் ஆழ்மையான தாபங்களின் அந்தரங்கத்துக்கு உகந்ததாக எதுவும் வாங்கிச் சேர்த்திருப்பான் என நினைத்துக்கொள்ளலாம்.
ஆமாம்… ஆமினாவின் பெயரை எழுதியிருக்கவில்லையென்றாலும் நிறையப் பொருட்கள் வாங்கி இருந்தான் ஆமினாவுக்காக. தனது கணக்கில் வராத பரிசுகள். அவளுக்காக வாங்கிச் சேர்த்தவைகளை எழுத வெட்கமாக இருக்கலாம் ஹசனுக்கு.
அவளுக்காக என்று தன்னிடம் உறுதிப்படுத்திக்கொண்டு அவன் வாங்கிய சில ஸ்ப்ரேக்கள், பிரியங்களால் வழியும் காதலின் உடற்சேட்டைகளுக்கு வீரியம் தருவதாக இருந்தன. ஆனால், அதெல்லாம் தெளித்த முதல் நாள் விடுப்பு இரவில், ஒருபோதும் அவனது உடல் தாபத்திற்கு முன்போல் காதலை ஒரு போதும் உணர்த்த முடிந்ததில்லை.
”என்னாச்சு.. ஏன்.. ஏன் சோர்வா இருக்கீங்க? முதல்ல இப்படியெல்லாம் இல்லயே!.. உங்களுக்கு நான் வேணாமா?!”
அந்த இரவில் முதல் ஸ்பரிசங்களுக்குப்பின் ஆமினா கேட்டாள்.
”ஒண்ணுமில்ல… எனக்கு உன்கிட்டப் பேச நிறைய இருக்கு. இன்னைக்கு ராத்திரி விடியறவரைக்கும் பேசலாம்.”
ஆமினா அதையும் நம்புவாள்.அவனது முதலிரவும் இப்படியெல்லாமாகவே இருந்தது.
அந்தத் தப்பித்தலுக்கிடையில் அவன் அவதிப்பட்டுக்கொண்டிருந்தான். என் உடம்புக்கு என்னவாயிற்று?
இந்தக் குறிப்புகள் ஹஸனின் டயரியில் முடியப்போவதில்லை. பெட்டி கட்டுபவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றார்களே. அந்தப் பெட்டி வியப்புகளும், வேடிக்கைகளும், சந்தோஷங்களும் நிறைந்ததாகும்.
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இப்படிப்பட்ட பெட்டிகள் சுலபமாக வந்துகொண்டிருந்தன.
அப்படி ஒரு பெட்டியின் வருகை, ஊரில் காட்சிப் படலமாகவே இருந்தது. அன்றெல்லாம் பத்திரமாகப் பெட்டியை நிரப்பிக்கொடுப்பதற்கு மற்ற வேலையாட்களும் இருந்தனர். ஒருவன் ஊருக்குப் போவதாய் இருந்தால் கடிதங்களும் பரிசுகளுமாய் நிறையப் பேர் வந்துவிடுவார்கள்.
ஹஸனைப் போன்றவர்கள், பெரிய சுமைகளோடுதான் வந்திறங்குவார்கள். சாபங்களைப் பெற்றுக்கொண்டுதான் திரும்புகிறார்கள். ஹஸனுக்கு இந்தச் சம்பவங்களைக் கொண்டுதான் டயரி எழுதும் நிமித்தமாகிப் போனது. மற்றவர்களுக்கு ஓர் உழைப்பாளி. அவனது கடமை நிறைந்த ஸ்தானத்திலிருந்து நண்பர்களுக்கும், சொந்த பந்தங்களுக்கும் சேகரித்து வருகின்ற வியப்புகள்.
எனக்குத் தெரியும்.. உற்றார் உறவினருக்கு அன்பாகக் கொடுப்பதற்காக உதவிகளை வாங்கும்போது ஒரு யாத்ரீகன் ஆத்ம திருப்தியை அனுபவிக்கின்றான். என்றாலும், மனிதத்தன்மைகள் மெல்ல மெல்லப் பாழாகிவிடுவதையும் நானறிவேன்.
1 comment