’பண்புடன்’ குழுமத்தாரிடமிருந்து எனக்கு இரண்டாவது அழைப்பு. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 2012ல் புத்தாண்டுச் சிறப்பிதழைத் தொகுத்து அளிக்கும் வாய்ப்பு அமைந்தது. அடுத்து, தற்போது 2026ம் ஆண்டில் “இந்தப் புத்தாண்டில் ஒரு சிறப்பிதழை ஒருங்கமைக்க இயலுமா?” என்று, ‘பண்புடன்’ பத்திரிகையாசிரியர் ஆசிஃப் மீரான் கேட்டபோது எனக்கு முதலில் புலன்பட்டது, இந்த இடைப்பட்ட காலவெளியில் தமிழ்ப் பத்திரிகையுலகு அடைந்திருக்கும் பெரும் உருமாற்றம்தான். இப்படியொரு சிறப்பிதழ் தொகுப்பதற்கான சவால்கள், இன்றைக்கு வேறு தளத்தில் இருக்கின்றது. 2012ம் ஆண்டு இதழில் தங்கள் எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர்கள் பலர் இன்றையக்கு அபரிமிதமான வளர்ச்சியுடன் தனிப்பெரும் ஆளுமைகளாக வலம் வருகையில், இப்பொழுது படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்குமான எழுத்து வெளி, பெரும் மாற்றங்களை அடைந்திருக்கின்றது.
எட்டுத்திக்கிலும் விரிந்து பரந்திருக்கும் தமிழ்ச்சமூகம், தாங்கள் குடிகொண்ட நிலங்களில், தமிழ்மொழியின் எல்லைகளை எவ்வகையில் விரித்து, புதிய பரிணாமங்களைக் கட்டியெழுப்பியிருக்கிறது என்பதைக் கண்டுணரும் சிறு தொகுப்பாக இந்த இதழ் அமைந்திருக்கின்றது.
இந்திய மொழி இலக்கியங்களில் வங்கமும், ஹிந்தியும், ஓரளவிற்கு உருதுவும் மலையாளமும் பெற்றிருக்கும் உலகளாவிய அடையாளத்தை எட்டிப்பிடிக்கும் நெருக்கத்தில் தமிழிலக்கியத்தின் நாளைய சாத்தியங்கள், சவால்கள், முன்னகர்வுகள் பற்றி முக்கிய விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்திய மொழிகளின் இலக்கியங்கள் கடந்த இருபது ஆண்டுகளில் உலக அரங்கில் புதிய அலைகளை உருவாக்கி வருகின்றன. ஆங்கில மொழிப் புனைவிலிருந்து தனித்துவமான கலாச்சார அடையாளங்களுடன் உருவாகும் இம்மொழிகளின் குரல், இன்று பன்முகச் சிந்தனைகளின் கட்டாய அங்கமாக மாறியுள்ளது. அந்தப் பின்னணியில் தமிழ்ப் பண்பாடு சார்ந்து எவ்வகையான முயற்சிகள் இன்றைய தேவையாக இருக்கின்றது என்ற கேள்வி காலத்தின் தேவையாக இருக்கிறது.
சர்வதேச அரங்கிற்கான மொழிமாற்றக் கதவுகள் தமிழ்ப் படைப்புகளுக்கு முழுமையாகத் திறக்கப்படவில்லை. அமைப்பு ரீதியாக, இந்தக் கட்டமைப்பு விரிவாக உருப்பெற வேண்டிய காலம் இது. அங்கீகாரம் பெற்ற மொழியாக்கக் குழுமங்கள், பல்கலைக்கழக அமைப்புகளின் பயிற்சி முறை, ஆய்வு நல்கைகள், வெளிப்படைத்தன்மை கொண்ட தரவரிசைக் கட்டமைப்புகள், சர்வதேச இலக்கிய அரங்கின் தொடர்புவலைகள், போன்றவற்றை உருவாக்குதல் அவசியம்.
இந்திய துணைக்கண்டத்தின் பல மொழிகளுக்கிடையே, தமிழ் தனக்கென தனித்துவமான, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியுடனான, பண்பாட்டுச் சிந்தனை மரபு கொண்டு விளங்குகிறது. சங்ககாலத்திலிருந்து தொடங்கி, பக்திக் காலம், நவீன இலக்கியம், மற்றும் பின்நவீனப் படைப்புகள் வரை, தமிழ் இலக்கியத்தின் பரிணாமம் மிகப் பெரிய பரப்பில் விரிந்து கிடக்கிறது.
இந்தப் பரிணாம வளர்ச்சியின் அடுத்தக் கட்டமாக உலக அரங்கில் தமிழ் இலக்கியம் எத்தகைய நிலையைத் தேர்ந்திருக்கின்றது என்பதை அமெரிக்காவிலிருந்து சொல்வனம் பத்திரிகையின் ஆசிரியர் நம்பி கிருஷ்ணனும் (நகுல்வசன்), இந்தியாவிலிருந்து பதாகை பத்திரிகையின் ஆசிரியர் நடராஜன் பாஸ்கரும் (நட்பாஸ்) சிறப்பு உரையாடலில் பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்தியப் பின்புலத்து இலக்கியங்கள் படைப்புரீதியாக எத்தகைய முன்னகர்வுகளைக் கொள்ள வேண்டும், எப்படியான நுட்பங்களைக் கைக் கொள்ள வேண்டும் என்பதை, சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க படைப்பாளுமையாக விளங்கும் எழுத்தாளர் விவேக் ஷாண்பக், நமது சிறப்பிதழுக்காக, எழுத்தாளர் கணேஷ் வெங்கட்ராமனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சுட்டிக் காட்டுகிறார். யக்ஷகாணம் மூலம் புனைவுலகிற்கு ஈர்க்கப்பட்ட விவேக் ஷாண்பக், இலக்கியத்தின் மாயவசீகரம் எப்படி தொடர்ந்து தன்னை ஈர்த்துக் கொண்டு வருகிறது என்பதைப் பற்றியும், உலக அரங்கில் இந்திய இலக்கியத்தின் பிரதிநிதித்துவம் பற்றியும் விரிவாகக் குறிப்பிடுகிறார்.
தமிழ் இலக்கியங்கள் உலக அரங்கில் போதுமான அளவிற்கு காட்சிப்படுத்தப் படவேண்டிய கனவைப் பற்றி ஜா ராஜகோபாலன் உத்வேகத்துடன் விவரிக்கின்றார். இலக்கிய வாசிப்பு எனும் அறிவார்ந்த செயல்பாடு, உல்களாவிய இலக்கியப் போக்குகள், நவீன தமிழிலக்கியத்திற்கான சந்தைகள், இலக்கிய வகைமைகளில் மாற்றங்கள், அரசு போன்ற அமைப்புகளின் ஆதரவு, தன்னார்வல இலக்கிய குழுக்களின் தேவை என்று பல தளங்களில் அலசுகிறார்.
தமிழ்ப் பதிப்பகங்கள் எப்படித் தங்களை உலக அரங்கிற்காக தயார் படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றியும், அதன் தனித்துவச் சவால்கள் பற்றியும், காலச்சுவடு ஆசிரியர் கண்ணன் சுந்தரம் அவர்களின் உரையின் எழுத்து வடிவம் இடம்பெற்றிருக்கிறது. காலச்சுவடு பதிப்பகம் கடந்து வந்த பாதையை ஒட்டி, தமிழ் இலக்கியம் எல்லைகளைக் கடந்து செல்லும் பயணத்தைக் காண முடிகிறது. காப்புரிமைப் பரிமாற்றம், மொழிபெயர்ப்புகள், புத்தக உருவாக்கத்தின் தொழில்நுட்பங்கள், அச்சு வணிகம், என்று பல்வேறு தளங்களில் தமிழிலக்கியத்தின் வளர்ச்சியைப் புரிந்து கொள்ளலாம்.
விரிவான உலக வாசகர் பரப்பை எட்டுவதற்கு அவசியமான மொழிபெயர்ப்பு முயற்சிகளின் நுணுக்கங்களைப் பற்றியும், மொழிகளிடையே பிரதிகள் அடையும் உருமாற்ற ரசவாதத்தைப் பற்றி, ஸ்க்ரோல் தளத்தில் வெளியான எழுத்தாளர் அம்பையின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் இடம்பெற்று இருக்கிறது. இந்தச் சிறப்பிதழுக்காக அக்கட்டுரையைத் தமிழில் மொழியாக்கம் செய்தவரும் அம்பை அவர்கள்தான். படைப்பின் பூடகத்தையும், படைப்பாளியின் உயிர்த்தலையும், மொழியாக்க நுணுக்கங்கள் கொண்டு எவ்வாறாக இலக்கு, மொழிக்குக் கடத்தப்பட வேண்டும் என்று விவரிக்கிறது கட்டுரை.
வளைகுடா வானில் சிறகசைத்தபடி செல்லும், புலம்பெயர் எழுத்தாளர்களின் பங்களிப்பை, அழகிய பட்டியலோடு பகிர்ந்திருக்கிறார் பண்புடன் பத்திரிகையாசிரியர் ஆசிஃப் மீரான். புலம்பெயர் வாழ்க்கையின் பெரும் அழுத்தங்களுக்கிடையில், தங்கள் படைப்பூக்கத்தை அணையாது காத்து வரும் தமிழ்ச்சமூகத்தின் ஒரு குறும்பதிப்பாக அமைந்திருக்கிறது.
தென்னிந்திய மொழிகளின் இலக்கிய முன்னகர்வுகள் பற்றி அண்மையில் லண்டனில் எழுத்தாளர் ஜெயமோகன் தலைமையில் கூட்டம் நடத்திய ரா கிரிதரன், இங்கிலாந்தின் தமிழ்ச்சமூகத்தின் எழுத்துச் செயல்பாடுகள் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஆங்கில இலக்கிய உலகிலும் ஒரு குழுவாக இணைந்து வாசிப்பதிலும், விவாதிப்பதிலும் தங்கள் ரசனையைக் கூர் தீட்டிக் கொள்வதைப் பற்றி விவரிக்கிறது. கிரிதரனின் அடுத்தக் கட்ட இலக்கிய பங்களிப்புகளுக்காக உலக அரங்குக் காத்திருக்கின்றது.
அறிவியலாளராக, நவீன தொழில்நுட்பங்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் பணியை செவ்வனே செய்து வரும் வெங்கட்ரமணன், கனடாவின் பன்முகக் கலாச்சாரத்தினூடே, ஈழத்து எழுத்தாளர்களின் பங்களிப்பையும், தமிழ் சிற்றிதழ் மரபையும், அதன் வழியே வளர்ந்து வந்த பெரும் படைப்பாளிகள் தொடர்ச்சியையும், உலகளவில் படைப்பாளிகளுக்கான அங்கீகாரங்கள் வழங்கும் இலக்கியத் தோட்டம் அமைப்பையும், பல்கலைக் கழகங்களில் தமிழுக்கான இருக்கைகள் உருவாக்கிய செயல்பாடுகளையும், பற்றி வெங்கட் துல்லியமாகவும் விரிவாகவும் பதிந்திருக்கிறார்.
நவீன இலக்கிய மரபில், கிராஃபிக் வகைப் படைப்புகளுக்கான தேவையும், ஏற்பும் எப்படியாக இருக்கப் போகின்றது என்பதைப் பற்றி, கிங் விஸ்வா ஒரு விரிவான கட்டுரை எழுதியிருக்கிறார். காட்சி வடிவ கதை நிகழ்த்தலின் பரிணாமம் எவ்வளவு வீச்சுடன் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை, சிறந்த விளக்கங்களுடன் தொகுத்திருக்கிறார். அண்மையில் வெளியாகியிருக்கும் “சாம்பலின் சங்கீதம்” போன்ற நூல் தமிழின் கிராஃபிக் பனுவல்களின் அடுத்தக்கட்ட வளர்ச்சியைக் குறிக்கின்றன. இந்தக் கட்டுரையை பெற்று அளித்த எதிர் பதிப்பகத்து ஆலோசகர் கார்த்திகை பாண்டியன், இந்தச் சிறப்பிதழ் ஒன்று கூடி நிகழ்ந்ததற்கு, ஒரு முக்கியக் காரணம்.
இந்தச் சிறப்பிதழை தொகுத்து வழங்கும் வாய்ப்பை நல்கிய பண்புடன் குழுமத்தார்க்கும், தொடர்ந்து என்னை அன்புடன் உற்சாகப்படுத்திக் கொண்டு வந்த பண்புடன் ஆசிரியர் ஆசிஃப் மீரான் அவர்களுக்கும், விவேக் ஷம்பக்குடன் தொடர்பு கொண்டு பேட்டி தந்துதவிய கணேஷ் வெங்கட்ராமனுக்கும், படைப்புகள் தந்துதவிய ஏனைய படைப்பாளிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி.
அடுத்த பரிணாமத்தின் விளிம்பில் காத்திருக்கும் தமிழிலக்கிய உலகை, எட்டுத்திக்கிலுமான தமிழ்ச் சமூகத்தினரை ஒன்றிணைத்து கட்டியெழுப்புகிறது, காலத்தின் அழைப்பு.