ஜப்பானியச் சிறுவர் கதைகள் 12 – மொழியாக்கம்

This entry is part 11 of 11 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

டெங்குவின் மந்திர அங்கி (天狗の隠れ蓑)

முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஹிக்கோய்ச்சி என்னும் குறும்புக்கார இளைஞன் வசித்து வந்தான். அவன் பல குறும்புகள் செய்து ஊர்மக்களைக் கேலி செய்து விளையாடுவான். என்றாவது ஒரு நாள் ஹிக்கோய்ச்சி தங்களிடம் மாட்டுவான் என ஊர்மக்கள் நினைத்தனர். அவன் வாழ்ந்த ஊருக்குப் பக்கத்தில் ஒரு மலை இருந்தது. அந்த மலையில் டெங்கு என்னும் குண்டுமூக்குப் பூதம் வசித்தது. அந்தப் பூதத்திடம் ஒரு மந்திர அங்கி இருந்தது. அந்த அங்கி வைக்கோலால் செய்யப்பட்ட அங்கி. ஜப்பானிய மொழியில் அந்த அங்கியின் பெயர் காக்குரேமினோ. அதை அணிந்துகொள்பவர் மற்றவர் கண்களுக்குத் தெரியமாட்டார், மாயமாக மறைந்துவிடுவார்.

குண்டுமூக்குப் பூதத்தை ஏமாற்றி அந்த மந்திர அங்கியை எடுத்துக்கொள்ள ஹிக்கோய்ச்சி திட்டமிட்டான்.

ஒரு நாள் மூங்கில் குழாய் ஒன்றை எடுத்துக்கொண்டு பூதம் வசிக்கும் மலைக்குச் சென்றான். அங்கே நின்றுகொண்டு மூங்கில் குழாய் வழியாகப் பார்த்து, “ஆஹா! தூரத்தில் உள்ளவையெல்லாம் எவ்வளவு அருகில் தெரிகின்றன!” எனத் தனக்குத் தானே சத்தமாகப் பேசினான். உண்மையிலேயே அந்தக் குழாய் வழியாக எதுவும் அருகில் தெரியவில்லை. அது அவன் பூதத்தை ஏமாற்றுவதற்குப் போட்ட திட்டம்.

அவனுடைய திட்டத்தை அறியாத பூதம் அவன் அருகே வந்து நின்றது.

“டேய் ஹிக்கோய்ச்சி, இங்கு வந்து என்ன விளையாடுகிறாய்?” எனக் கேட்டது.

“ஏ குண்டுமூக்குப் பூதமே, நான் இந்த மூங்கில் குழாய் வழியாகத் தூரத்தில் இருப்பதை அருகில் பார்க்கிறேன்” என்றான்.

“அப்படியா? எனக்குக் காட்டு, நான் பார்க்கிறேன்” எனப் பூதம் சொன்னது.

பூதத்துக்கு எதுவும் சரியாகத் தெரியவில்லை.

“பூதமே, இந்தக் குழாயைக் கையில் வாங்கி ஒழுங்காகக் கண்ணில் வைத்துப் பார், தெரியும்” என்றான்.

பூதம் தன் கையில் மந்திர அங்கியை வைத்திருந்தது. மூங்கில் குழாயை வாங்கிக் கண்ணுக்கு அருகில் வைத்துப் பார்க்க நினைத்தது. அதனால், தன் கையில் இருந்த மந்திர அங்கியை ஹிக்கோய்ச்சியிடம் கொடுத்துவிட்டு மூங்கில் குழாயை வாங்கிக்கொண்டது.

குழாயைக் கண்ணுக்கு அருகில் கொண்டு சென்று அதன் வழியே பூதம் பார்த்தது. அதற்கு எதுவும் அருகில் தெரியவில்லை. எல்லாக் காட்சிகளும் அப்படியே இருந்தன.

“டேய் ஹிக்கோய்ச்சி, இதில் எதுவும் அருகில் தெரியவில்லையே” என்று கேட்டபடி அவனைத் தேடியது.

அதற்குள் அவன் மந்திர அங்கியை எடுத்துக்கொண்டு மலையிலிருந்து கீழே இறங்கித் தப்பித்து ஊருக்குள் ஓடிவிட்டான். தான் ஏமாற்றப்பட்டதை குண்டுமூக்குப் பூதம் புரிந்துகொண்டு வருத்தப்பட்டது.

மந்திர அங்கியை அணிந்து ஊருக்குள் சென்ற ஹிக்கோய்ச்சி ‘சாகே’ என்னும் ஜப்பானிய மது விற்கும் கடைக்குள் நுழைந்தான். அவன் மந்திர அங்கி அணிந்திருந்ததால் அவனை யாராலும் பார்க்க முடியவில்லை. அவன் வேண்டிய அளவுக்குச் சாகே என்னும் மதுவைக் குடித்தான். அங்கிருந்து தள்ளாடித் தள்ளாடி வீட்டுக்குச் சென்றான். மந்திர அங்கியைக் கழற்றி மாட்டிவிட்டுப் படுத்தவன் சோர்வாக நீண்ட நேரம் உறங்கினான்.

காலையில் எழுந்து அங்கியைத் தேடினான். அவன் கழற்றிப்போட்ட இடத்தில் அது இல்லை. தன் அம்மாவிடம் அங்கி எங்கே எனக் கேட்டான்.

“ஹிக்கோய்ச்சி, அது வைக்கோலால் ஆன அழுக்கு அங்கி, அசிங்கமாக இருந்தது. நான் எரித்துவிட்டேன்” என அம்மா பதில் சொன்னார்.

அவனுக்கு வருத்தம் உண்டானது. பூதத்தை ஏமாற்றிக் கொண்டுவந்த அங்கி இப்படிச் சாம்பலாகிவிட்டதே என வருத்தப்பட்டான். அடுப்புக்கு வந்து அங்கியின் சாம்பலைப் பார்த்தான். அவனுக்கு ஓர் யோசனை வந்தது.

“இது மாய அங்கியின் சாம்பலாயிற்றே, இதனைப் பூசிக்கொண்டால் மாயமாக மறைய முடியுமா?” என யோசித்தான். அடுப்பிலிருந்து சாம்பலை எடுத்துத் தன் மீது பூசிப்பார்த்தான். எங்கெங்கு சாம்பல் பூசப்படுகிறதோ, அங்கெல்லாம் உடலின் பாகங்கள் மாயமாக மறைந்தன. அவன் தன் உடைகளைக் கழற்றிவிட்டு உடம்பு முழுவதும் சாம்பலைப் பூசிக்கொண்டான். தான் மீண்டும் மற்றவர் கண்களில் படாமல் மாயமாக மறைந்துவிட்டதை நினைத்து மகிழ்ந்தான்.

ஒரு பெரிய வீட்டில் விருந்து நடந்துகொண்டிருந்தது. அவன் விருந்து மண்டபத்துக்குள் நுழைந்தான். அவன் நுழைந்தது யாருக்கும் தெரியவில்லை. அவன் தனக்குத் தேவையான அனைத்தையும் உண்ணத் தொடங்கினான். அவனைத்தான் யாராலும் பார்க்க முடியவில்லை, ஆனால் உணவு மாயமாகக் காற்றில் மறைவதை எல்லாரும் பார்த்தனர். தட்டிலிருந்து உணவு மாயமாக மேலே செல்வதும், காணாமல் போவதும் அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

உணவு சாப்பிடச் சாப்பிட, அவனுடைய வாயின் மீது பூசப்பட்டிருந்த சாம்பல் உதிர்ந்தது. விருந்து சாப்பிட்ட மக்களுக்கு அந்தரத்தில் ஒரு வாய் மட்டும் தெரிந்தது. அதற்குள் உணவு செல்வது தெரிந்தது.

அப்போது காற்று வீசியது.

ஹிக்கோய்ச்சியின் உடலில் பூசப்பட்டிருந்த சாம்பல் கொஞ்சம் கொஞ்சமாகக் காற்றில் உதிர்ந்தது. முதலில் முகத்தில் இருந்த சாம்பல் உதிர்ந்து அவன் முகம் தெரிந்தது. பிறகு, கை, கால், கழுத்து என ஒவ்வொரு அங்கமாக மக்களுக்குத் தெரியத் தொடங்கின. தன் மேல் பூசப்பட்டிருந்த மந்திர அங்கியின் சாம்பல் உதிர்வது தெரியாமல் அவன் சாப்பாட்டை ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். கடைசியில், அவனைப் பார்த்து அனைவரும் கேலியாகச் சிரிக்கும் சத்தத்தைக் கேட்டுத் தன் நிலையை உணர்ந்தான்.

ஓடி ஒளிந்துகொள்ள நினைத்தான். அதற்குள் எல்லாரும் அவனைப் பார்த்துவிட்டனர்.

“ஹிக்கோய்ச்சி, நீ இப்படிக் குறும்புகள் செய்யாதே!” எனக் கண்டித்து வெளியே அனுப்பினர்.

குண்டுமூக்குப் பூதத்தை ஏமாற்றி அங்கியை எடுத்துக்கொண்டு ஓடி வந்ததற்குத் தனக்குத் தண்டனை கிடைத்ததை அவன் உணர்ந்தான்.

(தொடரும்)

Series Navigation<< ஜப்பானிய சிறுவர் கதைகள் 11 – மொழியாக்கம்

Author

Related posts

அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 3: சபரியின் தோழி)

தமிழே அமிழ்தே – 10.

நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 4