ஜப்பானிய சிறுவர் கதைகள் 14 – மொழியாக்கம்

This entry is part 13 of 13 in the series ஜப்பானியச் சிறுகதைகள்.

தனாபதா (たなばた)

முன்னொரு காலத்தில் ஜப்பானியக் கிராமத்தில் ஒரு இளைஞன் வசித்து வந்தான். அவன் வயல்களில் வேலை செய்வான். ஒரு நாள் அவன் வயல்வெளியில் தன் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினான். வழியில் குளத்தின் கரையில் அழகிய ஆடை கிடந்தது. அது சிறகுகளால் ஆன ஆடை, மிகவும் அழகாக இருந்தது. அதை எடுத்துத் தன்னுடைய கூடைக்குள் போட்டுக்கொண்டு அவன் நடந்தான்.

அப்போது ஒரு பெண் குரல் கட்டளையிட்டது. “இளைஞனே நில்!”

“யாரேனும் என்னை அழைத்தீர்களா?” என அவன் திரும்பிப் பார்த்தான்.

“ஆம், நான்தான் உன்னை அழைத்தேன். இங்கே குளக்கரையில் என்னுடைய சிறகு ஆடையை வைத்துவிட்டு நான் குளத்தில் இறங்கினேன். இப்போது என் சிறகு ஆடையைக் காணவில்லை. நீ பார்த்தாயா?” என அந்தப் பெண் கேட்டாள்.

சிறகு ஆடையைக் கூடைக்குள் போட்டுவிட்டதால், அவன் அவளிடம் சொன்னான்: “இல்லையே நான் அப்படி எந்த ஆடையையும் பார்க்கவில்லையே” என்றான்.

அவன் சொன்ன பொய்யை அவள் நம்பினாள்.

“நீ யார்?” என அந்த இளைஞன் கேட்டான்.

“என் பெயர் தனாபதா. நான் வானத்தில் வாழ்கின்ற தேவதை. பூமியைச் சுற்றிப் பார்க்க வந்தேன். காணாமல்போன அந்தச் சிறகு ஆடை இருந்தால்தான் என்னால் பறந்து மீண்டும் வானத்துக்குப் போக முடியும்” என்றாள்.

அவன் தன்னுடைய கூடைக்குள் அது இருப்பதை அவளிடம் சொல்லவில்லை. “சரி வா” என்று அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அவளுக்குத் தெரியாமல் அந்த ஆடையைப் பரணில் மறைத்து வைத்தான். வானத்துக்குச் செல்ல முடியாத தனாபதா அந்த இளைஞனின் வீட்டில் தங்கினாள். சில நாள்கள் கழித்து தனாபதாவும் அந்த இளைஞனும் திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

ஒரு நாள் இளைஞன் வேலைக்குச் சென்றிருந்தபோது தனாபதா வீட்டைச் சுத்தம் செய்தாள். பரணில் ஏறிப் பழைய பொருள்களை எடுத்து ஒவ்வொன்றாகச் சுத்தம் செய்தாள். அப்போது கூடைக்குள் இருந்த சிறகு ஆடையைப் பார்த்தாள். அதை எடுத்துத் தூசி தட்டித் தான் அணிந்துகொண்டாள். அவன்தான் அந்தச் சிறகு ஆடையை ஒளித்துவைத்திருப்பான் என்று புரிந்துகொண்டாள்.

சிறகு கிடைத்ததும் பழையபடி அவள் தேவதையாக மாறினாள்.

மாலையில் வீட்டுக்கு வந்த இளைஞன், தனாபதாவைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். அவளுடைய சிறகு ஆடையை ஒளித்துவைத்தது அவளுக்குத் தெரிந்ததால் வருத்தப்பட்டான். தனாபதா வானத்தில் பறந்துகொண்டே இளைஞனிடம் பேசினாள்.

“இளைஞனே, நீ என்னைப் பார்க்க விரும்பினால், வைக்கோல்களால் ஆயிரம் செருப்புகள் செய்து மூங்கிலைச் சுற்றிப் புதைத்து வை.”

இதைச் சொல்லிவிட்டுப் பறந்து வானத்தில் மறைந்தாள்.

தனாபதா சொன்னதைக் கேட்டு இளைஞனும் வைக்கோல்களைக் கொண்டுவந்து செருப்புகளைச் செய்து ஒவ்வொன்றாக மூங்கிலைச் சுற்றிப் புதைத்தான். அவன் தனாபதாவை நினைத்துக்கொண்டே அவசரமாகச் செருப்புகளைப் புதைத்தான். அதனால், 999 செருப்புகளைப் புதைத்துவிட்டு 1000 செருப்புகளைப் புதைத்ததாக எண்ணிவிட்டான்.

999-வது செருப்பைப் புதைத்துவிட்டு, அவன் ஆயிரம் செருப்புகளைப் புதைத்ததாக நினைத்ததும், ஒரு மூங்கில் வேகமாக வளர்ந்தது. அது ஆயிரம் மடங்கு உயரமாக வளர்ந்தது போல் தெரிந்தது. இளைஞன் மூங்கிலில் ஏறி வானத்துக்குச் சென்றான். ஆனால், அவனால் வானத்துக்கு அருகில் மட்டுமே செல்ல முடிந்தது.

1000 செருப்புகளைப் புதைக்காமல் 999 செருப்புகளைப் புதைத்ததால் வானத்தை எட்ட இன்னும் ஒரு உயரம் குறைவாக இருந்தது. தனாபதா பறந்து வந்து அவனைப் பார்த்தாள்.

“அடடா, நீ ஒரு எண்ணிக்கை குறைவான உயரத்தில் இருக்கிறாயே” என்றாள். அவன் முழுவதுமாக வானத்துக்கு வர உதவி செய்தாள். அதற்குள் தனாபதாவின் அப்பா அங்கு வந்துவிட்டார். அவருக்குத் தனாபதா இளைஞனை வானத்துக்கு வரவைத்தது பிடிக்கவில்லை.

“இவன் ஏன் இங்கு வந்தான்?” எனக் கோபமாகக் கேட்டார்.

“இவன் இங்கு தங்கிவிட வந்தான்” எனத் தனாபதா பதில் சொன்னாள்.

“அப்படியானால் நான் சொல்லும் வேலையை இவன் செய்ய வேண்டும். இந்தத் தர்பூசணித் தோட்டத்தை இவன் காவல்காக்க வேண்டும். எவ்வளவு தாகம் எடுத்தாலும் தர்பூசணிப் பழத்தைச் சாப்பிடக்கூடாது” எனக் கட்டளையிட்டார்.

தனாபதாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என நினைத்து இளைஞனும் தர்பூசணித் தோட்டத்தைக் காவல்காத்தான்.

ஒரு நாள் ஆனது, இளைஞன் தன்னுடைய தாகத்தைப் பொறுத்துக்கொண்டான். இரண்டாம் நாளும் பொறுத்துக்கொண்டான். மூன்றாம் நாள் அவனால் தாகத்தை அடக்க முடியவில்லை. அதனால், ஒரு தர்பூசணியை உடைத்துச் சாப்பிட்டுத் தன் தாகத்தைத் தணிக்க நினைத்தான்.

அப்படி நினைத்து அவன் தர்பூசணியை உடைத்ததும் அதற்கு உள்ளே இருந்த தண்ணீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. ஆற்றின் ஒரு கரையில் இளைஞன் இருந்தான், மறுகரையில் தனாபதா ஓடிவந்து நின்றாள். அவர்களால் ஆற்றைக் கடக்க முடியவில்லை.

அங்கு வந்த தனாபதாவின் அப்பா, “தர்பூசணியைத் தாகத்துக்காகச் சாப்பிடக்கூடாது என்று சொன்னேனல்லவா?” எனக் கோபித்துக்கொண்டார். “இனி எப்போதும் இருவரும் சேர்ந்து வாழ முடியாது. தனித்தனியாகத்தான் இருக்க வேண்டும்” என்றார். தனாபதாவும் இளைஞனும் வருத்தப்பட்டனர். இளைஞன் தன் தவறுகளை எண்ணி மிகவும் வருந்தினான்.

கடைசியாகத் தனாபதாவின் அப்பா ஒரு சலுகை கொடுத்தார். ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும் தனாபதாவும் இளைஞனும் சந்தித்துக்கொள்ளலாம் என்றார். ஆண்டு முழுதும் காத்திருந்தாலும் ஒவ்வோர் ஆண்டும் சந்திக்கப்போவதற்காக அவர்கள் மகிழ்ந்தனர்.

அந்த நாள் ஜூலை 7-ஆம் தேதி ஆகும்.

தனாபதாவின் நினைவாக, ஏழாவது மாதம் ஏழாம் தேதி விண்மீன் விழா என்னும் ‘தனாபதா விழா’ ஜப்பானில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

Series Navigation<< ஜப்பானிய சிறுவர் கதைகள் 13 – மொழியாக்கம்

Author

Related posts

உன் உழைப்பால் சிகரம் தொடு!

சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 7

நல்லாச்சி – 24