ஜப்பானிய சிறுவர் கதைகள் 10 – மொழியாக்கம்

  1. வெட்டுநாக்குக் குருவி (舌切り雀)

முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஒரு கிழவரும் கிழவியும் வாழ்ந்துவந்தனர். கிழவர் மிகவும் நல்லவர், மற்றவர்களுக்கு உதவி செய்வார். கிழவி கோபக்காரர், எல்லாரிடமும் கோபமாகப் பேசுவார், மற்றவர்களுக்கு உதவி செய்யமாட்டார். காலையில் கிழவர் வனத்துக்குள் சென்று நிலத்தைக் கொத்தி விதைவிதைப்பார், மரத்திலிருந்து விழுகின்ற சுள்ளிகளை எடுத்துக் கட்டி எடுத்துவருவார்.

ஒருநாள் வனத்துக்கு உள்ளே நீண்ட தூரம் கிழவர் சென்றுவிட்டார். அங்கே உடைந்து கீழே விழுந்த கிளைக்கு உள்ளே ஒரு குருவி சிக்கியிருப்பதைப் பார்த்தார்.

“அடப்பாவமே. நீ எப்படி இங்கே மாட்டினாய்?” எனக் கேட்டார். குருவியை கிளையின் கீழே இருந்து விடுவித்தார்.

“அடடா!! உனக்குக் காயம் பட்டிருக்கிறதே. நீ என்னுடைய வீட்டுக்கு வா” என்று கூறி அந்தக் குருவியைத் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றார். அதனுடைய காயத்துக்குக் கட்டுப்போட்டுத் தன்னுடன் வைத்துக்கொண்டார். குருவிக்கு அரிசியை உணவாகக் கொடுத்தார்.

கோபக்காரக் கிழவிக்கு, கிழவர் செய்தது பிடிக்கவில்லை.

“நமக்கு இருக்கும் அரிசியை ஏன் குருவிக்குக் கொடுக்கிறீர்?” எனக் கிழவரைப் பார்த்துக் கிழவி சத்தமிட்டார். கிழவர் கிழவியின் குரலைக் காதில் கேட்காதது போல இருந்தார். குருவியை நன்றாகக் கவனித்துக் கொண்டார். கிழவரின் அன்பால் குருவி சீக்கிரம் குணமடைந்தது.

குருவி குணமடைந்த பின் கிழவர் வனத்துக்குச் சென்றார். செல்லும்போது கிழவியிடம் குருவிக்கு வேளாவேளைக்குச் சாப்பாடு கொடுக்கும்படி சொன்னார்.

“தெரியும்.. தெரியும். கொடுத்துர்ரேன்” என்று சொல்லிக் கிழவரை அனுப்பி வைத்த கிழவி, குருவிக்குச் சாப்பாடு கொடுக்கவில்லை. குருவிக்குப் பசியெடுத்தது. அங்கும் இங்கும் ஓடி சாப்பிட ஏதாவது கிடைக்குமா எனப் பார்த்தது. அப்போது கூடத்தில் வைக்கப்பட்டிருந்த கோப்பையில் கஞ்சியைப் பார்த்தது. குதித்துக்குதித்து வந்து அந்தக் கஞ்சியைக் குடித்தது. பசியாக இருந்ததால் கஞ்சி மொத்தத்தையும் குருவி குடித்துவிட்டது.

கூடத்துக்கு வந்த கிழவி குருவி கஞ்சியைக் குடித்து முடிப்பதைப் பார்த்தார். அவருக்குக் கோபம் வந்தது.

“மன்னித்துவிடுங்கள், பசியெடுத்தது குடித்துவிட்டேன்” எனக் குருவி கிழவியிடம் மன்னிப்புக் கேட்டது. கிழவியின் கோபம் குறையவில்லை.

“இரு.. இரு.. உனக்குத் தண்டனை கொடுக்கிறேன்” என்று சொல்லி, குருவியின் நாக்கில் கத்தரிக்கோலால் கீறினார். பயந்துபோன குருவி வனத்துக்குள் பறந்து சென்று மறைந்தது.

மாலையில் வீட்டுக்குத் திரும்பிய கிழவர் ‘குருவி எங்கே?’ எனக் கேட்டார். ‘அது கஞ்சியைக் குடித்ததால் நாக்கில் கீறல் போட்டேன், அது வனத்துக்குள் பறந்துவிட்டது’ எனக் கிழவி சொன்னார். அதைக் கேட்டுக் கிழவர் வருத்தப்பட்டு அழுதார். ஒரு குருவியை இப்படி வதைத்துவிட்டோமே என நினைத்து அதைத் தேடி வனத்துக்குள் சென்றார்.

குருவிகள் கூட்டமாகத் தங்கும் என்பதால், அந்த இடத்தைத் தேடினார். அப்போது மூன்று குருவிகள் அந்த வழியாக வந்தன.

“குருவிகளே, உங்கள் தங்குமிடம் எங்கு உள்ளது? நான் நாக்கில் காயம்பட்ட ஒரு சின்னக் குருவியைத் தேடுகிறேன்” என்றார்.

சிறிது தொலைவில் உள்ள மூங்கில்காட்டில் தாங்கள் இருப்பதாகக் குருவிகள் சொல்லின. மூங்கில்காட்டுக்குச் செல்ல வழியும் சொல்லின. கிழவர் மூங்கில்காட்டுக்குச் சென்றார்.

மூங்கில்காட்டுக்குள் அழகிய மாளிகை ஒன்று இருந்தது. மாளிகையின் வாசலுக்குச் சென்று தான் நாக்கில் காயம்பட்ட ஒரு சின்னக்குருவியைத் தேடுவதாகச் சொன்னார். அவரைக் குருவிகள் மாளிகைக்கு உள்ளே அழைத்தன. உள்ளே சென்றவரை வரவேற்க அந்தச் சின்னக்குருவி வந்தது.

“நீ இங்கேதான் இருக்கிறாயா? உனக்காக வருந்துகிறேன்” என்றார்.

கிழவரை வரவேற்று அமரச்சொன்னது குருவி. மற்ற குருவிகள் அவருக்கு ஒரு தட்டில் சுவையான உணவை வைத்து எடுத்து வந்தன. அவர் உணவை ருசித்து அருந்தினார். அதன் பின்னர் அவரை மகிழ்விக்க குருவிகள் பாட்டுப் பாடி நாட்டியம் ஆடின. மகிழ்ச்சியாக இருந்த கிழவர், நேரமானதும் வீட்டுக்குப் புறப்படுவதாகச் சொன்னார்.

அவரை வழியனுப்பும் முன் அவர் முன்னே சில பெட்டிகளைக் குருவிகள் கொண்டு வந்து வைத்தன. ‘இவை உங்களுக்கு நாங்கள் தரும் அன்பளிப்பு, வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றன. ‘இதெல்லாம் எதற்கு?’ என மறுத்தார். மீண்டும் குருவிகள் வற்புறுத்தியதால், ஒரேயொரு சிறிய பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.

“கிழவி, நான் வனத்துக்குச் சென்று குருவியைப் பார்த்தேன். அது எனக்கு இந்தப் பரிசையும் தந்தது” என்றார்.

பெட்டியைத் திறந்து பார்த்தால், அதற்கு உள்ளே தங்க நகைகளும் வெள்ளிப் பாத்திரங்களும் நல்ல உடைகளும் இருந்தன.

“பெரிய பெட்டியை எடுத்து வந்திருக்கலாமே” எனக் கிழவி கோபப்பட்டார். தான் வனத்துக்குச் சென்று பெரிய பெட்டியை எடுத்து வருவதாகச் சொல்லிவிட்டுக் கிழவி வனத்துக்குள் சென்றார்.

வனத்தில் குருவியைச் சந்தித்துப் பொய்யாகச் சிரித்தார். பரிசுப்பெட்டி வரும் வரையில் மிகவும் நல்லவளாகக் கிழவி நடித்தார். குருவிகள் பரிசைக் கொண்டு வந்ததும், அவற்றில் இருந்த பெட்டிகளிலேயே பெரிய பெட்டியை எடுத்துக்கொண்டார். பெட்டியைக் கொடுத்த குருவிகள், ‘இந்தப் பெட்டியை வீட்டுக்குச் சென்ற பின்னர்தான் திறக்க வேண்டும்’ எனக் கட்டளை இட்டன.

குருவிகளின் கட்டளையை மீறி, வரும் வழியிலேயே கிழவி பெட்டியைத் திறந்துவிட்டார். அப்படித் திறந்ததும் அதற்கு உள்ளே இருந்து பாம்புகளும், பூரான்களும், ஒற்றைக்கண் அரக்கனும், பூதமும் வெளியே வந்தன. அவை கிழவியைப் பயமுறுத்தின. பயந்து நடுங்கிய கிழவி பெட்டியைப் போட்டுவிட்டு ஓடினார். ஓடியவர் மலையிலிருந்து சறுக்கிக் கீழே விழுந்தார்.

கோபமும் பேராசையும் கிழவிக்கு நஷ்டத்தைக் கொடுத்தன.

Series Navigation<< ஜப்பானிய சிறுவர் கதைகள் 9 – மொழியாக்கம்ஜப்பானிய சிறுவர் கதைகள் 11 – மொழியாக்கம் >>

Author

Related posts

நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 3

வரலாற்றில் பொருளாதாரம் – 18

நல்லாச்சி – 22