இந்த இதழ் சிறார் இலக்கியச் சிறப்பிதழாக வெளிவருகிறது என்பதால் சிறுவர் இலக்கியத்தைப் பற்றித்தான் எழுத வேண்டுமென நினைத்திருந்தேன். ஆனால் இந்தச் சிறப்பிதழை அறிமுகப்படுத்தி ஷாந்தி மாரியப்பன் எழுதிய குறிப்பைப் பார்த்த பொழுது என் எண்ணம் மாறிவிட்டது. “பண்புடன் மின்னிதழின் குழந்தைகள் தினச் சிறப்பிதழ், வருகிற நவம்பர் 14ம் தேதி சிறார் இலக்கியச் சிறப்பிதழாக மலர இருக்கிறது”. இதுதான் அவர் எழுதிய குறிப்பு.
குழந்தைகள் தினம், சிறார் இலக்கியம் என்ற இரு விதமான பயன்பாடு என் கவனத்தை ஈர்த்தது. இன்றைக்குக் குழந்தை என்ற சொல்லின் பன்மை என்னவென்று கேட்டால் குழந்தைகள் என்றுதான் சொல்கிறோம். ஆனால் தொல்காப்பியத்தில் சொல்லி இருப்பதன்படி ‘கள்’ என்ற பன்மை விகுதி அஃறிணைப் பொருட்களுக்குத்தானே தவிர உயர்திணைகளுக்குக் கிடையாது. சில மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் தொல்காப்பியத்திற்கு எழுதப் பட்ட உரைகளில் இது தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் பன்மை விகுதியைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.
எடுத்துக்காட்டாக குளம் – குளங்கள், குட்டை – குட்டைகள், வீடு – வீடுகள், குதிரை – குதிரைகள் என அஃறிணைப் பொருட்களுக்குப் பன்மையை உணர்த்த ‘கள்’ என்ற விகுதியைச் சேர்த்துக் கொள்ளலாம். கொள்ளலாம் என்று சொல்லக் காரணம் அப்படிச் சேர்த்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் அஃறிணைப் பொருட்களுக்குக் கூட இல்லை. பறவை பறந்தன என்று சொல்லும் பொழுது பின்னால் வரும் வினைமுற்று கொண்டு இங்கு பறவை என்பது பன்மையைக் குறிக்கிறது என்று உணர்ந்து கொள்ளலாம். நற்றிணையில் கலந்தன கண்ணே, நெகிழ்ந்தன வளையே என்றெல்லாம் வரிகள் உண்டு. இங்கு கண்ணும் வளையும் பன்மையைத்தான் குறிக்கின்றன என்பதும் நாம் உணர்ந்து கொள்ளக்கூடியதுதான். ஆனால் இன்றைக்குப் பறவை பறந்தன, வளை நெகிழ்ந்தன என்று எழுதினால் நமக்குத் தவறாகப் படும் வகையில் பறவைகள், வளைகள் என்று எழுதுவது நமக்குப் பழக்கமாகிவிட்டது.
சரி, அஃறிணைப் பொருட்களுக்குக் கள் விகுதியைச் சேர்த்துக் கொள்ளலாம். உயர்திணைக்களுக்கு என்ன சொல்ல? மேலே சொன்ன சொற்களையே எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகள் என்று எழுதியதையேதான் சிறார் என்பதும் சொல்கிறது ஆனால் இதில் கள் விகுதி இல்லை. எனக்குக் குழந்தைதான் வேண்டும் என்றால் அதற்குச் சரியான சொல் குழந்தையர். மன்னன் – மன்னர், கவிஞன் – கவிஞர். இப்படி அர், ஆர் என்று சேர்ப்பது உயர்திணைப் பன்மையைக் குறிக்க ஒரு வழி.
பெண் என்பதற்குப் பன்மை பெண்டிர். இன்று இதன் பயன்பாடு அரிதாகிவிட்டது, பெண்கள் என்றே எழுதுகிறோம் பேசுகிறோம். ஆனால் இதே பொருளில் இருக்கும் மகளிர் என்ற சொல்லை நாம் இன்னமும் கூடப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
மார் என்ற ஒரு விகுதியும் இருக்கின்றது. அண்ணன் – அண்ணன்மார், பாட்டி – பாட்டிமார், நாயன் – நாயன்மார் என்று இன்றைக்கும் கூட இந்தப் பன்மை விகுதி புழக்கத்தில் இருக்கிறது. இதையும் போக அர் ஆர் என்று ஜோடியாக இருப்பதைப் போல, இர் என்ற விகுதியுடன் ஈர் என்ற விகுதியும் இருந்ததாக உரைகள் சொல்கின்றன.
இப்பொழுது வேறு ஒரு குழப்பம் வருகிறது. உயர்வினைக் குறிக்கவும் அர் விகுதியைப் பயன்படுத்துகிறோம். ஆசிரியன் என்பதில் மரியாதை சேர்க்க ஆசிரியர் என்று எழுதுகிறோம். சொல்லித் தருபவர் பலர் வந்தால் எப்படிச் சொல்ல? ஆசிரியர் வந்தார் என்றால் ஒருவர் வந்தார் என்றும் ஆசிரியர் வந்தனர் என்றால் பலர் வந்ததையும் தெளிவாகவே சொல்ல முடிகிறது. ஆனால் பல இடங்களில் இந்தக் குழப்பம் வராமல் தவிர்ப்பதற்காக கள் விகுதியைச் சேர்க்கத் தொடங்கினர். ஆசிரியர் வந்தனர் என்பதை ஆசிரியர்கள் வந்தனர் என்று சொன்னால் நமக்கு இயல்பாக இருப்பதாக இன்று தோன்றுவதற்கு இந்தப் பயன்பாடுதான் காரணம்.
இது சமீப காலத்தில் நிகழ்ந்த மாற்றம் இல்லை. கலித்தொகையில் ‘ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள்‘ என்ற வரி வருகிறது. அரசனை மரியாதை காரணமாக அரசர் என்று சொல்லிவிட்டால் அரசர் ஐவர் இருப்பதை அரசர்கள் என்பதாகச் சொல்வது அன்றே தொடங்கிவிட்டது. சிலப்பதிகாரம், தேவாரம், திவ்யப் பிரபந்தம் என பழந்தமிழ் இலக்கியங்களில் உயர்திணை பன்மைக்குக் கள் விகுதி சேர்க்கும் பழக்கம் அப்பொழுதே வந்துவிட்டதைப் பார்க்கலாம். இதற்கு மாறாகப் பேச்சு வழக்கில், நாலு மாடு வந்தது என்று அஃறிணைப் பன்மைக்கும் கூடக் கள் விகுதியை விடுத்துச் சொல்லும் வழக்கமும் இருக்கிறது.
இன்றைக்கு பெற்றோர்கள் என்ற சொல்லாக்கம் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. நம்மைப் பெற்றவர் பெற்றோர். அது அப்பா அம்மா என இருவரையும் குறிக்கும் சொல்தான். ஆகவே என் பெற்றோர்கள் என்பதில் கட்டாயம் கள் விகுதி சேர்க்க வேண்டியதில்லை. ஆனால் மாணவர் அனைவரின் பெற்றோரையும் குறிக்க வேண்டுமானால் பெற்றோர்கள் எனச் சொல்லலாம். ஆங்கிலத்தில் இதற்கு அழகான ஓர் உதாரணம் இருக்கிறது. மீன் என்பதைச் சொல்ல Fish எனும் பொழுது மீன்கள் என்பதையும் Fish என்ற சொல்லைக் கொண்டே குறிக்கிறார்கள். ஆனால் பலவகையான மீன்களைக் குறிக்கும் பொழுது Fishes என்ற பதம் பயன்படுகிறது.
ஒரு முறை பேருந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது அந்தப் பேருந்தினுள் ஒட்டப்பட்டிருந்த விளம்பரப் பதாகையைப் படித்தேன். பள்ளிக்கூடம் ஒன்றிற்கான விளம்பரம். அவர்கள் பள்ளியைப் பற்றி நல்லபடியாகச் சொல்லிவிட்டு கடைசியாக இப்பொழுது எங்கள் பள்ளியில் இப்பொழுது மாணவர்கள் மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது எனப் போட்டிருந்தார்கள். நானும் அதை உரக்கப் படித்துவிட்டேன். மொத்தப் பேருந்தும் சிரித்தது. அங்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்பதே போதும். இது போல தப்பர்த்தம் கொள்ளக்கூடிய வகையில் அமையும் சொற்களைப் பயன்படுத்தும் பொழுது அங்கு சரியான பன்மை வடிவங்களைப் பயன்படுத்தினால் குழப்பங்களைத் தவிர்க்கலாம்.
ஆடவர், பெண்டிர், குழந்தையர், சிறார், மாந்தர் என்ற சொற்களை இன்று நாம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், மாந்தர்கள் என்று எழுதிப்பழகிவிட்டோம். இதனைத் தவறு எனச் சொல்லி மாற்றுவது என்பது நிகழக்கூடியது இல்லை. ஆனால் கள் என்பது மட்டுமில்லாமல் அர், ஆர், இர், ஈர், மார் என்ற விகுதிகளும் நம்மிடையே உள்ளன என்பது தெரிந்தால் நம் மொழி வளம் கூடும். அதனால் அவற்றைத் தெரிந்து கொண்டு பயன்படுத்தத் தகுந்த வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது பயன்படுத்துதல் நலம்.
பிகு: இது ஓர் அறிமுகப் பதிவுதான். இந்தப் பதிவில் சொல்லப்பட்டு இருப்பவை தாண்டி, ஒருமை பன்மையையும் உணர்த்த வேறு வழிகள் உண்டு.
– இலவசக்கொத்தனார்.