புத்தகம் பெயர்: ரஹால்களை உடைக்கும் இபிலிசுகள்
ஆசிரியர்: அ. கரீம்
வகை: கவிதைத் தொகுப்பு
பதிப்பகம்: மௌவல் பதிப்பகம்
காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் மதம் மற்றும் சமூக அநீதிகளாலும், அவற்றின் அடக்குமுறைகளாலும் துரதிர்ஷ்டவசமாகப் பாதிக்கப்படுவது என்னவோ சாமானிய மனிதர்கள்தான்.
அதிகாரத்தின் அத்துமீறல்களைக் கண்டு, இயலாமையில் திண்டாடிக் கொண்டிருக்கும் மக்கள் குரலின் சாட்சியமாய் நிற்கும் கவிஞர் கரீமின் படைப்புகளின் மீது அளவு கடந்த மரியாதை தோன்றுகிறது. அவரது ஒவ்வொரு படைப்பும் அதற்கான நோக்கமும் பெரும் தாக்கத்தை உருவாக்குகின்றன. காலம் முழுக்க உண்மையின் சாட்சியங்களாய் இவை எதிரொலித்துக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கான அர்ப்பணிப்போடு தன் களத்தில் தனித்துச் செயலாற்றுகிறார் கரீம்.
புதிதாக வெளிவந்திருக்கும் அவருடைய, ”ரஹால்களை உடைக்கும் இபிலிசுகள்” (ரஹல் என்பது புனித குர்ஆனை வைத்து ஓதும் அழகிய மரப்பலகை. “இபிலிசுகள் ” என்றால் சாத்தான்கள் என்பது பொருளாகும். இந்தத் தலைப்பே எப்பேர்ப்பட்ட பதட்டத்தை நிலையாக்கியிருக்கிறது) கவிதைத் தொகுப்பில் சில கவிதைகள் மிகுந்த அதிர்வைத் தருகின்றன.
போர் முழக்கங்களின் தீப்பிழம்பில், காந்தலாய்க் கருகி வறண்ட ஈரமற்ற நிலம் துளிர்க்க இன்னும் எத்தனை யுகமாகும்.
ஒவ்வொரு முறையும் மத ரீதியான அடக்குமுறைகளைச் செய்திகளாய்க் கடந்தும் கடக்கமுடியாலும் நீடித்துகொண்டிருப்பது மனச்சோர்வைத் தருகிறது.
இந்தக் கவிதைகள் தீராவலிகளையும், ஆற்றாமைகளையும் மிக எளிய நடையில் முன் வைக்கின்றன.
போர் நிலம்
உடலின் கிடைத்த பாகங்களை எடுத்துக்கொண்டு
ஒவ்வொருவரும் அவரது
பெயரைச் சொல்லி அழுது தேம்புகிறார்கள்
மருத்துவமனை கட்டிடத்தின் மீது
விழுந்து தெறித்த குண்டுகள்
எந்த வயதையும்
கணக்கில் கொள்ளாமல்
துண்டுதுண்டாகச் சிதறவிட்டது
கடைக்குப் போய்த் திரும்பும் போது
சாக்லேட் வாங்கி வரச்சொன்ன
குழந்தையின் தலையை
அழுதபடியே தேடுகிறாள் அம்மா
இந்த வரிகளை, கண்ணீர் மல்க நடுங்கித்தான் வாசிக்க முடிந்தது. கவிதைகளில் சில காட்சிகளை மனம் காண்கையில் மூச்சு முட்டுகிறது. ஏதுமறியாத பச்சிளம் குழந்தைகள் பலியாகும் தாங்கொணாத்துயரத்தில் அச்சம் கொள்கிறது.
வாப்பாவின் கடையில்
மிட்டாய் வாங்கி வருவதாய்
சொல்லிப்போன மகனை
அடித்து இழுத்து வருகிறார் மாமன்
உங்களுக்கு கொஞ்சமாவது
அறிவிருக்காவென்று
உச்ச சத்தத்தில் வீட்டில் கடிந்து செல்கிறான்
“பாய் கடையில் பொருள்களை வாங்காதே” என்று
ஒட்டபட்ட சுவரொட்டிகளின் பசையில்
கைப்படாத இவனது ரேகைகளும்
மானசீகமாய் நெளிகிறது
உற்றுப்பாருங்கள்
உங்களது ரேகைகளும் நெளியக்கூடும்.
இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வே இக்கவிதையின் நிகழ்களமாக இருக்கிறது. அவர்களது வாழ்க்கை முறைகளையும், எதிர்கொள்ளும் அவலங்களையும் தொடர்ந்து சமூக மதக்கட்டமைப்புகள் தரும் அவமானங்கள், புறக்கணிப்புகள் என பெரும் ஆயாசமாக இருப்பதையே கூறுகிறது.
“முஸ்லீமுக்கு வீடு கொடுக்கிறதில்ல” என்பதை முகத்துக்கு நேராகவே சொல்லுமளவுக்குப் பழக்கப்பட்டுவிட்டார்கள். இன்னும் வாடகைக்கு வீடு தேடுவதிலிருந்து அத்தனை அடிப்படை தேவைகளுக்குமே போராடத்தான் வேண்டி இருக்கிறது.
இந்தப் பிரபஞ்சம் எல்லோருக்குமானது. சகமனிதனை நேசிக்கும் பாங்கில்லாத அப்படிப்பட்ட மனிதர்கள் காட்டும் கோர முகம் பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. எத்தனை காலம் இதுபோன்ற படைப்புகளைச் சாட்சியாக்குவது? என்ற கேள்விக்கு நம்மை உட்படுத்துகிறது.
சில கவிதைகள் அவர் எதிர்கொண்ட அனுபவங்களாகவும், சில கவிதைகள் இத்தொகுப்பின் நோக்கத்திலிருந்து சற்று மாறுபட்டும் நிற்கின்றன.
கரீமின் படைப்புகள் மொத்தமும், சம காலத்தில் வாழும் மனிதர்களின் வாழ்வாதாரம் இன்னும் அதே நிலையில்தான் தொடருகிறது என்பதைத்தான் சொல்லிக்கொண்டே இருக்கிறது. நாம் வாழும் காலத்திலேயே இந்தச் சம்பவங்களோடுதான் வாழ்கிறோம்.