ஒரு காட்டிலே, மரங்களுக்கு இடையிலே கொஞ்சம் இடைவெளி இருந்தது. அங்கு மரமும் இல்லை, செடியும் இல்லை. புல்கூட முளைக்காமல் வெளியிடமாய் இருந்தது.
பறவைகள் எல்லாம் அந்த இடத்தைச் சுற்றியுள்ள மரங்களில் கூடு கட்டி, அங்கு அமர்ந்து பறவையாகக் கூவிக்கொண்டிருக்கும். காலை நேரத்திலே அவை கூவத் தொடங்கி மாலையிலே இருட்டாகும் வரை அவற்றின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கும்.
ஒரு நாள் காலையில் அந்தப் பறவைகள் விழித்து எழுந்ததும் ஓர் அதிசயமான காட்சியைக் கண்டன. அந்த வெளியிலே ஒரு பெரிய முட்டை ஒன்று காணப்பட்டது. அத்தனை பெரிய முட்டையை எந்தப் பறவையும் அதுவரை பார்த்ததும் இல்லை. அதுமட்டும் அல்லாமல் அந்த முட்டை ஒரே மஞ்சள் நிறமாக இருந்தது. அதுவும் ஓர் ஆச்சரியம்.
அந்தப் பறவைகள் எல்லாம் ஆந்தையிடத்திலே போய் அதைப்பற்றிச் சொல்லின. ஆந்தைதான் அந்தப் பறவைகளுக்கு அதிபதி. அதற்கு மூளை அதிகம் என்று அந்தப் பறவைகள் அதையே அதிபதியாக ஏற்றுக்கொண்டிருந் தன.
ஆந்தை தன் பட்டுபோன்ற இறக்கைகளை அடித்துக் கொண்டு, சத்தமில்லாமல் பறந்து வந்து, மஞ்சள் முட்டையைப் பார்த்தது. அதற்கும் ஆச்சரியம் தாங்க
வில்லை.
உடனே அது குயிலைப் பார்த்துக் கேட்டது.
“குயிலே, உனக்குத்தான் கூடு கட்டத் தெரியாது. இது உன்னுடைய முட்டையா?” என்று கேட்டது.
அதற்குக் குயில் கூ… கூ என்று இனிமையாகப் பாடிக்கொண்டு, ‘இது என்னுதல்ல என் முட்டை வெள்ளையாய் இருக்கும். இது மஞ்சள் முட்டை” என்று சொல்லிற்று.
பிறகு, ஆந்தை காக்கையைப் பார்த்து, “காக்கையே, உன் முட்டையைக் குயில் உன் கூட்டிலிருந்து தந்திரமாக எடுத்துவந்து இங்கே போட்டுவிட்டதா? நன்றாகப் பார்” என்று ஆணையிட்டது.
காக்கையும் நன்றாகப் பார்த்துக் கா.. கா என்று கத்திக்கொண்டே, ‘இது என்னுதல்ல-என் முட்டை வெள்ளையாய் இருக்கும். இது மஞ்சள் முட்டை-என்னுதல்ல” என்று சொல்லிற்று.
அந்தச் சமயத்திலே, பக்கத்தில் இருந்த தண்ணீர்க் குட்டையில் நீந்திக்கொண்டிருந்த வாத்து, இந்த முட்டையைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதைப் பார்க்க வந்தது. அதைக் கண்ட ஆந்தை, “குள்ள வாத்தே, இந்த முட்டை உன்னுடையதா? உனக்குத்தான் அடைகாக்கத் தெரியாதே. நீ எங்கே இந்த முட்டையைப் போட்டாய்?” என்று கேட்டது.
குள்ள வாத்து, ‘குவாக் குவாக்’ என்று கத்திவிட்டு, ‘இது என்னுதல்ல – என் முட்டை வெள்ளையாக இருக்கும். இது மஞ்சள் முட்டை – என்னுதல்ல” என்று சொல்லித் தலையை ஆட்டிற்று.
ஆந்தை இப்படியே அங்குக் கூடியிருந்த பட்சிகளை, மணிப்புறா, மைனா முதலிய எத்தனையோ பறவைகளைக் கேட்டது.
ஒரு பறவையும் அது தன்னுடையதென்று சொல்லவில்லை.
ஆனால், எல்லாப் பறவைகளும் அந்த மஞ்சள் முட்டையின்மேல் அன்பு கொண்டன. ஒவ்வொன்றும் அடை காப்பது போலே அதன் மேல் உட்கார முயற்சி செய்தன.
அந்த முட்டை மிகவும் பெரிதாக இருந்ததால் எந்தப் பறவையாலும் அதன்மேலே உட்கார்ந்து அடை காக்க முடியவில்லை. அதனால் எல்லாப் பறவைகளும் சேர்ந்து, ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கத்தில் உட்கார்ந்து அந்த முட்டைக்குச் சூடு உண்டாகும்படி செய்து பார்த்தன.
பறவை அடை காக்கும்போது எப்படி முட்டைக்குச் சூடு கொடுத்து அதற்குள்ளே குஞ்சு வளர்வதற்கு உதவி செய்கின்றதோ.. அதேபோல, எல்லாப் பறவைகளும் சேர்ந்து சூடு உண்டாக்க முயற்சி செய்தன. அவைகள் இரை தேடக்கூடச் செல்லவில்லை.
அந்த மஞ்சள் முட்டையின் மேலே அவைகளுக்கு அத்தனை அன்பு உண்டாகிவிட்டது. ராப்பகலாக நான்கு நாள்கள் இப்படிப் பல பறவைகள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு, அந்த முட்டையைச் சூழ்ந்து அமர்ந்திருந்தன.
ஐந்தாம் நாள் காலையிலே பொழுது விடிகின்ற சமயத்திலே, அந்தப் பறவைகள் காட்டுன்ற அன்பைப் பார்த்துவிட்டு, அந்த முட்டையிலிருந்து ஒரு தேவதை வெளிப்பட்டது. முதலில் தேவதை சிறியதாக இருக்தது. பிறகு அது கொஞ்சம் பெரிதாயிற்று. அதைச் சுற்றித் தங்க நிறமான ஒளி வீசிற்று. அப்பொழுது அந்தத் தேவதை இனிமையாகப் பாடிக்கொண்டு நடனம் ஆடிற்று.
“கூட்டு முயற்சியால் நான்வந்தேன்–
உங்கள் கூட்டு முயற்சியால் நான்வந்தேன்“
என்று அந்தத் தேவதை பாடிக்கொண்டே அழகாக ஆடிற்று,
பறவைகளுக்கெல்லாம் ஒரே ஆனந்தம். அவைகள் ஒவ்வொன்றும் ஓங்கிய குரலில் கூடவே பாடத் தொடங்கின.
“கூடி உழைத்தால் கோடி இன்பமாம்-
அன்பாய்க் கூடி உழைத்தால் கோடி இன்பமாம்” என்று அவைகள் பாடின். மயில் அதற்கு ஏற்றவாறு ஆடிற்று.
இப்படி வெகு நேரம் அந்தப் பறவைகள் மகிழ்ச்சியோடிருக்கும்படி அந்தத் தேவதை ஆடிவிட்டு மறைந்துவிட்டது. மஞ்சள் முட்டையும் மாயமாக எங்கேயோ போய்விட்டது.
பறவைகள் பிறகு குதூகலத்தோடு, தமது கூட்டு முயற்சியால் கிடைத்த இன்பத்தை அனுபவித்துவிட்டு, இரை தேடச் சென்றன.
இன்னும் ஒரு தடவை அந்த மஞ்சள் முட்டை அங்கே காணப்படுமா என்று தினமும் பார்த்தன. ஆனால், அதன் பிறகு அந்த மஞ்சள் முட்டையைக் காணவே இல்லை.