மருத்துவர் பக்கம் -9 : பக்கவாதம் – முன்னெச்செரிக்கையும் தீர்வும்

This entry is part 7 of 9 in the series மருத்துவர் பக்கம்

எனது நெருங்கிய நண்பர் , Dr. பிரதீப் MS., Mch ( Neurosurgery) ,சென்னை ஐஸ்வர்யா மருத்துவமனையில் முதுநிலை மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்து வருகிறார்.

அவரது ஆதங்கம் யாதெனில் இங்கு பக்கவாதம் வந்த பிறகு அதற்கு செய்ய வேண்டிய காப்பாற்றும் (RESCUE) நடவடிக்கைள் குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் பக்கவாதத்தை தடுக்கும் பல ( PREVENTION) சிகிச்சைகள் நம்மிடையே இருக்கின்றன. அது குறித்து நீயும் நானும் ஒரு கட்டுரை இயற்றி வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சமூகத்துக்கு புதிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற அவரது சிறப்பான எண்ணத்தை ஏற்று, அவர் ஆங்கிலத்தில் இயற்றிய கட்டுரையை எனது பாணியில் தமிழில் மொழிபெயர்த்து இங்கு அனைவரும் பலன் பெறத் தந்திருக்கிறேன்.

கட்டுரை இதோ உங்களுக்காக…

இதயத்திற்கு ஸ்டெண்ட் பொருத்த முடியுமென்றால், மூளையில் முடியாதா என்ன??? உலக பக்கவாத விழிப்புணர்வு நாளான இன்று, கோல்டன் ஹவரைத் தாண்டி நாம் சிந்திக்கும் நேரம் வந்து விட்டது – இதன் மூலம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று கூறினால் நம்புவீர்களா?

பக்கவாதத்தைப் பற்றி உரையாடல்கள் மருத்துவமனைகளிலோ, மீடியாக்களிலோ, பொதுமக்களிடையேவோ எழும் போதெல்லாம், பக்கவாதம் ஏற்பட்ட பிறகு என்ன செய்ய வேண்டும்? என்பதைச் சுற்றியே இருக்கிறது.

பக்கவாதம் ஏற்பட்ட முதல் நான்கு மணிநேரங்களில் ரத்தக் கட்டியை கரைக்கக் கூடிய மருந்தை வழங்க வேண்டிய “கோல்டன் ஹவர்” குறித்தும் 24 மணிநேரங்களுக்குள் ரத்தக் கட்டியை நீக்க வேண்டிய சிகிச்சைகளை செய்ய வேண்டும் என்பது குறித்தும் மாநகர வாசிகளுக்கேனும் நன்றாகத் தெரிந்திருக்கிறது.

பக்கவாதத்தின் அறிகுறிகளான முகம் ஒருபக்கம் தொங்கிப்போதல், பேச்சுக் குளறல், கை கால்களில் திடீர் மந்த நிலை/ வலிமை குறைவை உணர்தல் ஆகிய அறிகுறிகள் வந்தால் உடனே அவசர சிகிச்சைக்கு விரைந்திட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்து காணப்படுகிறது.

எனினும் 80% பக்கவாதங்களைத் தடுக்கக் கூடிய ஒரு உண்மையைப் பற்றி மிகக் குறைவான உரையாடல்களே நடந்து வருகின்றன.
உங்களுக்குத் தெரியுமா?

பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் பக்கவாதம் ஏற்படும் முன்பு , மூளை அந்த நோயருக்கு சில எச்சரிக்கை சமிக்ஞைகளை எழுப்புகிறது.இதை மினி ஸ்ட்ரோக் அல்லது குறைந்த அளவிலான பக்கவாதம் என்று அழைக்கிறோம். இந்த சிறிய நிகழ்வானது, பெரிய நிகழ்வு நடப்பதற்கு சில நாட்கள் முதல் சில வாரங்கள் முன்னமே ஏற்பட்டுகிறது. இதைத் தவறவிடாமல் இனங்கண்டு சிகிச்சை எடுப்பது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் பக்கவாதத்தில் இருந்து காக்கும் அரிய வாய்ப்பாக அமைகிறது. ஆயினும் இது குறித்த விழிப்புணர்வுக் குறைபாட்டால் பல நேரங்களில் இந்த வாய்ப்பு பறிபோய் விடுகிறது.

அடைப்பு எங்கே நேர்ந்தால் என்ன?
இதயத்தில் நடந்தாலும், மூளையில் நடந்தாலும், அடைப்பு என்பது அடைப்பு தான்…

ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்படும் போது, உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு இதயத்தின் ரத்த நாளங்களில் அடைப்பு இருக்கிறதா என்பதை அறியும் ஆஞ்சியோகிராம் செய்யப்படுகிறது.

அடைப்பின் தன்மையைப் பொருத்து ஸ்டெண்ட் வைக்கப்படுகிறது. அனைவருக்குமே இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படலாம் என்பதும், அந்த அடைப்புகளை ஸ்டெண்ட் கொண்டு சீர் செய்யலாம் என்பதும் தெரிந்திருக்கிறது. மூளையிலும் இதயத்தைப் போன்றே ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இந்த அடைப்புகள் “மூளைக்குள்ளும் மூளைக்கு வெளியேவும் ஏற்படும் ரத்த நாள கொழுப்பு படிதல் நோயின் காரணமாக கொலஸ்ட்ராலானது ரத்த நாளங்களின் சுவர்களில் படிந்து நாளடைவில் அடைப்பை ஏற்படுத்தி எப்படி இதயத்தின் ரத்த ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அதே போன்று மூளைக்கும் ரத்த ஓட்ட பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இரண்டுக்குமான முக்கிய வித்தியாசம் – வலி மட்டுமே. இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால் நெஞ்சு வலிக்கும். மூளையில் அடைப்பு ஏற்படும் போது வலி இருப்பதில்லை.

இதனால், பெரும்பான்மையினர் மூளை ரத்த நாள அடைப்பை புறக்கணித்து தவற விட்டு விடுகின்றனர். சில நிமிடங்களே நேரும் – கை கால் வலிமைக்குறைபாடு, கண் பார்வை குறைபாடு, பேசுவதில் சிரமம் போன்றவை நம் கவனத்தைக் கூடப் பெறாமல் “இதனால் எந்த பிரச்சனையுமில்லை” என்று அசட்டையாகக் கடந்து செல்லப்படுகிறது . நாம் சரியான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறுவதால், பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் பக்கவாதம் ஏற்பட்டுவிடுகிறது.

ஆசியாவில் அதிகம் நிலவும் அதே சமயம் அதிகம் கவனிக்கப்படாத பிரச்சனை உலகம் முழுவதுமே பக்கவாதம் ஏற்படும் விதம் பகுதிக்கு ஏற்ப மாறுபடுகிறது. மேற்கத்திய நாடுகளில், கழுத்து ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது தான் பக்கவாதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

ஆசியாவிலோ, மூளைக்குள் இருக்கும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது ( மூளைக்குள் இருக்கும் ரத்த நாளங்களில் அடைப்பு நோய்) தான் பக்கவாதத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆசிய மக்களில், மூளைக்குள் இருக்கும் ரத்த நாளங்களில் அடைப்பு நோயானது- 30-50% ரத்த நாள அடைப்பு சார்ந்த பக்கவாதங்களுக்கு காரணமாக உள்ளன. இதுவே மேற்கத்திய மக்களில் இது வெறும் 5-10% மட்டுமே.

ஆய்வுகளின் முடிவுகள் படி, நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, புகை, அதிக கொலஸ்ட்ரால் ஆகிய பிரச்சனைகள் இருப்பவர்களுள் நான்கில் ஒருவருக்கு அதிகப்படியான அளவில் மூளை ரத்த நாள அடைப்பு அறிகுறிகள் ஏதுமின்றி இருக்கிறது என்று குறிப்பிடுகின்றன.

இதய ரத்த நாள அடைப்பை ஏற்படுத்தும் ரத்தக்கொதிப்பு, அதிக கொலஸ்ட்ரால் ஆகியன மூளை ரத்த நாளங்களிலும் அடைப்பு ஏற்படுத்தும். ஒரே வித்தியாசம் யாதெனில், பெரிய சிக்கல் வரும் வரை மூளை அமைதியாக வாய்மூடி இருக்கும் என்பதாகும்.

நவீன மூளை ஸ்கேன்கள் மூலம் ரத்த நாளக்கட்டிகளை முன்கூட்டியே அறிய முடியும். சிடி ஆஞ்சியோகிராம், எம் ஆர் பெர்ஃப்யூசன் ஸ்கேன், ஸ்பெக்ட் (SPECT), டி.எஸ்.ஏ (DSA) ஆஞ்சியோகிராம் ஆகியன அடைப்பு எங்கு இருக்கிறது? எத்தனை தீவிரமாக இருக்கிறது? எவ்வளவு ரத்த ஓட்டத்தை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது? ஆகியவற்றைத் துல்லியமாகக் காட்டக் கூடியவையாக இருக்கின்றன.

இதய ரத்த நாளங்களை படம் போட்டுக் காட்டக்கூடிய ஆஞ்சியோ கிராம்கள் போலவே, மூளையின் ரத்த நாள அமைப்பை வெட்ட ளிச்சமாக்கி துல்லியமாக பூடம் போட்டுக் காட்டக் கூடியவை – மூளை ஆஞ்சியோகிராம்கள். இவற்றின் உதவி கொண்டு மருத்துவர்கள் மூளை ரத்த நாளங்களில் அபாயகரமான அடைப்புகளை பக்கவாதம் ஏற்படும் முன்னமே இனங்காண முடிகிறது.

சிறந்த அதே சமயம் எளிமையான சிகிச்சை முறைகள் உங்களுக்காக….

இதயத்தின் அடைப்புகளுக்கு மட்டுமே சிகிச்சை என்றிருந்த காலம் மலையேறிவிட்டது. பாதிப்பை ஏற்படுத்தும் பெரிய அடைப்பைக் கண்டால் அதற்கு

  • கழுத்து ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கும் கரோடிட் எண்டார்டரெக்டமி ( CAROTID ENDARTERECTOMY) சிகிச்சை
  • அடைப்பினால் குறுகிய ரத்த நாளங்களில், பாதிப்பற்ற எளிய சிகிச்சையான “கரோடிட் ஸ்டெண்டிங்” மூலம் ஸ்டெண்ட் பொருத்தப்படும்
  • சற்று கடினமான சிகிச்சையாக இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட நோயருக்கு அனுபவமுள்ள மருத்துவரால், சிறப்பான வெற்றி சதவிகிதங்களுடன் மூளை ரத்த நாளங்களுக்குள் ஆஞ்சியோப்ளாஸ்டி எனும் ரத்தக் கட்டி கரைத்தல் சிகிச்சையும் ஸ்டெண்ட்களும் பொருத்தப்படுகின்றன.
  • இது மட்டுமன்று, தேவைப்படும் நோயர்களுக்கு, இதயத்தைப் போல பைபாஸ் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகின்றன.
    மேற்கூறிய சிகிச்சைகள் யாவும் ஏற்கனவே சிறிய அளவில் எச்சரிக்கை அறிகுறிகள் அல்லது சிறிய அளவு பக்கவாதம் ஏற்பட்டவர்களுக்கு மிகவும் உதவக்கூடியவையாக இருக்கின்றன.
  • சரியான நோயருக்கு, சரியான நேரத்தில் சரியான சிகிச்சை வழங்கப்படும் போது அவர்களுக்கு நேர இருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பக்கவாதத்தை தடுக்க முடியும் என்பது நிதர்சனம்.

மீட்டலில் இருந்து தடுத்தல் நோக்கி…

பல வருடங்களாக, பக்கவாதம் வந்தவர்களை எப்படி மீட்பது என்பது குறித்துப் பேசி வந்தோம். இனி பக்கவாதத்தை அது ஏற்படாமல் தடுப்பது குறித்து கவன ஈர்ப்பு ஏற்படுத்தும் காலம் வந்துவிட்டது. ரத்த நாள அடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பவர்கள், எப்படி தங்களின் இதயத்தின் ரத்த நாளங்களை கவனித்துக் கொள்கிறார்களோ அதே போல மூளையின் ரத்த நாளங்களையும் ஸ்கேன் செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

TIA எனும் குறுகிய கால மூளை ரத்த நாள அடைப்பு நிகழ்வுகளை அடையாளம் காணும் க்ளினிக்குகள், நவீன மூளை ஸ்கேன் வசதிகள், இதன் மூலம் கண்டறியப்படும் மூளை ரத்த நாள அடைப்புள்ள நோயர்களை உடனடியாக மூளை ரத்த நாள சிறப்பு சிகிச்சை அறுவை நிபுணர்களிடம் பரிந்துரைத்து அனுப்புவது, ரத்த நாள அடைப்பை முன்கூட்டியே சிகிச்சை அளித்து நோயரைக் காக்க உதவும்.

எப்படி இதய ஆஞ்சியோப்ளாஸ்டி சிகிச்சை மூலம் இதய நோய் சிகிச்சையில் புரட்சி ஏற்பட்டதோ.. மூளை ரத்த நாள ஆஞ்சியோப்ளாஸ்டி மற்றும் அறுவை சிகிச்சைகள், மூளை சார்ந்த குறிப்பாக பக்கவாத தடுப்பு சிகிச்சையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தவல்லவை என்றால் அது மிகையாகாது.

கட்டுரை மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய கருத்துகள்

  • விரைவாக செயல்பட்டால் பக்கவாதத்தை நம்மால் தடுக்க முடியும்
  • மினி ஸ்ட்ரோக் எனப்படும் சிறிய அளவிலான பக்கவாதங்கள் – எச்சரிக்கை மணிகள். அவற்றை புறக்கணித்து விடக்கூடாது.
  • நவீன மூளை ஸ்கேன்கள் அபாயகரமான மூளை ரத்த நாள அடைப்புகளை எளிதில் கண்டறிந்து கூறுகின்றன
  • ஸ்டெண்ட்டிங் மற்றும் அறுவை சிகிச்சைகள் பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கக் கூடியவை என்பதை மறந்து விடாதீர்கள்
  • இதய நோயைப் போலவே மூளை ரத்த நாள நோயிலும் அடைப்பு ஏற்படும் முன்னமே தடுத்திட முடியும். நோய் ஏற்படுமுன் தடுத்தலே சிறந்தது

கட்டுரையாளர்
Dr.B. பிரதீப் MS., Mch., (Neuro Surgery)
முதுநிலை ஆலோசகர்
ஐஸ்வர்யா ஹாஸ்பிடல்
சென்னை

மொழிபெயர்த்தவர்
Dr.அ.ப. ஃபரூக் அப்துல்லா MD.,
பொது நல மருத்துவர்
சிவகங்கை

Series Navigation<< மருத்துவர் பக்கம் 6:- வாயுத் தொல்லை

Author

Related posts

நாள்: 27

நாள்: 26

நாள்: 25