முத்ரிகா பேருந்தும் முறையில்லா பயணங்களும்
அண்ணனுடன் பத்ரிநாத் சென்ற விவரங்களைக் கூறும் முன், நான் தினமும் பணிக்குச் சென்ற சின்னப் பயணங்களின் இடர்களைச் சொல்ல நினைக்கிறேன். 90-களின் ஆரம்பத்தில் டெல்லி மக்கள் பொதுப் போக்குவரத்தையே அதிகம் சார்ந்திருந்தார்கள். அதில் ரிங் ரோட்டில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் முத்ரிகா பேருந்துகள் முக்கியமானவை. சஃப்தர்ஜங் மருத்துவமனை, அதன் எதிரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS), மெஹ்ரோலியில் உள்ள காசநோய் மருத்துவமனை மற்றும் பிரகதி மைதான் போன்றவை முக்கியமான பேருந்து நிறுத்தங்கள்.
எங்கள் வீட்டின் அருகிலேயே பேருந்து நிறுத்தம் இருந்தது. என்னை அங்கே விட்டுவிட்டு அண்ணன் வேறு திசையில் தன் அலுவலகம் நோக்கிச் சென்றுவிடுவார். முதலில் வந்த பேருந்து ஏறவே முடியாதபடி கூட்டமாக இருந்தது; ஆனால் அடுத்தடுத்து வந்த பேருந்துகளில் சில ஆண்கள் மட்டும் ஏற முடிந்தது. பல பெண்கள், நடுத்தர வயதினர் மற்றும் குழந்தைகளைச் சுமந்துகொண்டு நின்றிருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். வந்த பேருந்துகள் நிறுத்தத்தில் நிற்காமல் சற்றுத் தள்ளியே வேகத்தைக் குறைக்கும். பெண்கள் ஓடிவருவதைக் கண்டு பலர் சிரிப்பார்கள்; அதில் முதியவர்கள் கீழே விழுவதும் உண்டு.
இதில் நானும் விதிவிலக்கல்ல. அப்போது எனக்குச் சேலை கட்டித்தான் பழக்கம் என்பதால், ஓடிவந்து பேருந்தில் ஏறிப் பழக்கம் இல்லை. ஒருமுறை தடுமாறிக் கீழே விழுந்தபோது அவமானமும் கோபமும் ஒருங்கே வந்தது. அந்த வார இறுதியில் அண்ணனுடன் சென்று சுரிதார் வாங்கியது ஒரு தனிக்கதை. ஆனால், விதிகளைப் பின்பற்றாத போக்குவரத்துக் கழகத்தால் பெண்களும், முதியவர்களும் அல்லல்படுவதும், விருப்பப்பட்ட உடைகளை அணிய முடியாமல் போவதும் என்ன நீதி? பல ஏழை மக்களால் தினமும் ஆட்டோவில் செல்ல முடியாது; பிறகு எதற்குப் பொதுப் போக்குவரத்து?
இளம் பெண்ணான என்னாலேயே முடியாதபோது, முதியவர்களால் எப்படி முடியும்? இருபது நிமிடத்தில் நடந்தே சென்றுவிடலாம் என்று தோன்றினாலும், நடக்க முடியாதவர்களின் நிலை என்ன? இந்தக் கேள்வி என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. ஒருவழியாக ஆய்வகம் சென்று பணிகளைத் தொடங்கிவிட்டேன். அங்கே இன்னொரு சிக்கல்; நான் மருத்துவத் துறையில் ஆராய்ச்சி செய்ததால், வாரத்திற்கு இரண்டு நாட்கள் மெஹ்ரோலியில் உள்ள காசநோய் மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளைக் கவனிக்க வேண்டும்.
இரத்த மாதிரிகளை எடுத்துவர ஐஸ்கட்டிகள் நிரம்பிய பெட்டியை எடுத்துச் செல்ல வேண்டும். பேருந்தில்தான் செல்ல வேண்டும் என்பதால், ஓடிச் சென்று ஏறுவதை நினைத்தாலே கலக்கமாக இருந்தது. என் உதவியாளர் ரத்தன்லால் உடன் வந்தாலும் எனக்கு நடுக்கமாகவே இருக்கும்.
அப்போதெல்லாம் ஏழை மக்கள் சிகிச்சைக்காக AIIMS மற்றும் சஃப்தர்ஜங் வருவது வழக்கம். மருத்துவமனையின் பின்புற வளாகத்தில் கூடாரங்கள் அமைத்துத் தங்கியிருக்கும் நோயாளிகளின் உறவினர்களுக்குச் சரியான கழிப்பிட வசதிகள் இருக்காது. அவர்கள் குளிர்காலத்தில் மிகவும் அல்லல்படுவார்கள். பொதுக் கழிவறைகள், குளியலரைகளைப் பயன்படுத்திக்கொள்வார்கள். அவர்கள் நம்பி இருந்ததும் பொதுப்பொக்குவரத்தைத்தான்.
சிகிச்சை முறைகளில் அப்போதெல்லாம் ஏற்றதாழ்வுகள் இருந்ததில்லை. ஆனால் வரிசையில் நின்று அனுமதி வாங்கவதற்கு காத்திருக்க வேண்டும். அனுமதி வாங்கிவிட்டால், எந்தக் குறையும் இருக்காது. அலைக்கழிக்கமாட்டார்கள்.
நான் பணியில் சேர்ந்து இரண்டு வாரங்களே ஆகியிருந்த நிலையில், AIIMS முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டது என் துறைத்தலைவருக்கே ஆச்சரியமாக இருந்தது. ஒரு ஜூனியர் ஆராய்ச்சி மாணவி இவ்வளவு பெரிய கழகத்தின் தலைவியைச் சந்திப்பது எளிதான காரியமல்ல. கடிதம் எழுதியும் பதில் இல்லாததால், ஒருநாள் அவர் அறைமுன் காத்திருந்து அனுமதி பெறாமலேயே உள்ளே நுழைந்தேன்.
பேருந்து விவகாரம், முதியவர்கள் படும் இன்னல்கள், மருத்துவமனைக்கு வரும் அவப்பெயர் ஆகியவற்றை விளக்கி, அதற்கான தீர்வுகளையும் ஒரு கோப்பாகச் சமர்ப்பித்தேன். மேலும், நான் கொண்டு வரும் காசநோய் இரத்த மாதிரிகள் சிதறினால் நோய் பரவும் அபாயம் இருப்பதைச் சுட்டிக்காட்டி, பொதுப் போக்குவரத்தையே நான் நம்பியிருப்பதையும் விளக்கினேன். “உன்னைப் பணிநீக்கம் செய்யக்கூடும் என்று அச்சமாக இல்லையா?” என முதல்வர் கேட்டார். “என் மீது தவறு இல்லாதவரை நான் எதற்கும் அஞ்சுவதில்லை” எனப் பதிலளித்தேன். ஆனால் அண்ணனோ, “இது புதுதில்லி, கவனமாக இரு” என்று என்னை எச்சரித்தார்.
டெல்லி போக்குவரத்துக் கழகம் என்பது ஒரு ஊழல் சாம்ராஜ்யம்; இருப்பினும் முதல்வர் அந்தச் சின்ன வேண்டுகோளை முன்வைக்க முடிவு செய்தார். அதற்குள்ளாக மருத்துவர்கள் சங்கப் பிரதிநிதிகள் தலைவருக்கும், ஜக்வீர் சிங் என்ற ஆராய்ச்சி மாணவருக்கும் இந்தச் செய்தி சென்றிருந்தது. அன்று மாலையில் ஜே.என்.யு (JNU) சங்கத் தலைவருடன் ஒரு சந்திப்பும் நிகழ்ந்தது. இது ஒரு தற்காலிகத் திட்டமாகவே முன்வைக்கப்பட்டது; ஒருவேளை இதில் பலன் கிடைக்காமல் போனால், அடுத்தகட்டமாகப் பெரிய அளவில் பேரணி ஒன்றை நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஒரு மாதம் காத்திருந்தோம்; அதன் பிறகு பேருந்துகள் நிறுத்தத்தில் சரியாக நிற்கத் தொடங்கின. அதை எதிர்பார்க்காத மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள், நானும் தான்.