நாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 1

This entry is part 1 of 4 in the series நாணலிலே காலெடுத்து

நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
– கண்ணதாசன்


அத்தியாயம் ஒன்று

தானப்ப முதலித் தெருவில் வீட்டின் வாசலில் மூர்த்தி சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டுத் திரும்பிய போது வாசலிலேயே நின்றிருந்தாள் பாட்டி.

கண்களில் கவலை.

“என்ன பாட்டி. இங்க நிக்கறேள்?. அம்மா ரிப்பன் பக்கோடா பண்ணினாளாம். உங்களுக்குக்கொடுத்துவிட்டு வரச் சொன்னாள்.”

“அவளுக்கு வேறு வேலையில்லை” என்று முணுமுணுத்தபடியே மூர்த்தி நீட்டிய பையை வாங்கிக்கொண்டு “உள்ளே வாடா” என்றாள் பாட்டி.

அவன் உள்ளே நுழைந்ததும் கையைப் பிடித்துக் கொண்டு “டேய். மூர்த்தி எனக்குக் கொஞ்சம் பயமா இருக்குடா” கண்ணில் கொஞ்சம் கலக்கம் இருந்தது.

“என்ன பாட்டி. என்ன விஷயம்னு சொல்லுங்க”

“இன்னும் சித்ராவைக் காணோம்டா.. வழக்கமா நாலு நாலேகால்க்கெல்லாம் வந்துடுவா. இப்போ அஞ்சே கால் ஆகுது. உன் அத்தை இருக்காளே அவ பாட்டுக்கு மேட்னி ஷோ போய்ட்டா சாந்தி தியேட்டருக்கு. “கை கொடுத்த தெய்வமாம். படம் முடிச்சுட்டு அவ ஸ்னேகிதி வீட்டுக்குப் போய்ட்டு வரேன்னு சொன்னா. நானும் மூணரை மணிலேர்ந்து காப்பி டிகாக்‌ஷன் போட்டு வெச்சுட்டு குழந்தை வரும் வரும்னு பாத்துக்கிட்டு இருக்கேன். இன்னும் காணோம்டா. பொட்டைப் புள்ளைங்கள்ளாம் படிக்கலேன்னு யார் அழுதா?!. நீன்னா பரவால்லை. இப்போ பியூசி படிக்கறே. சித்ராவுக்கு எதுக்கு பத்தாவதெல்லாம்?. பாரு. எனக்கு வயத்துல புளியைக் கரைக்குது. இது அப்பன் என்னடான்னா பிஸினஸ் பிஸினஸ்னு வெளியூர் போயிருக்கான்.” ஒரு பிலாக்கணமே பாடி விட்டாள் பாட்டி

“பாட்டி கவலைப்படாதே. இப்போ வந்துடுவா. ஏதாவது ஸ்பெஷல் க்ளாஸா இருக்கும்” என்றான் மூர்த்தி.

”அப்படி விட்டுற முடியுமா. செல்லம் என் ராஜால்ல நீ. சைக்கிள்ள ஒருமிதி மிதிச்சு கேப்ரன் ஹால் ல போய்ப் பாத்துட்டு வந்துடறயா?”.

“சரி” என்று பாட்டியிடம் சொல்லி விட்டு சைக்கிளில் ஏறி ஒரு இரு நூறு மிதி மிதித்ததில் கேப்ரன் ஹால் வந்தது. பள்ளியின் வாசல் கேட் பாதி மூடியிருக்க வாட்ச்மேன் மட்டும் உட்கார்ந்திருந்தான். மூர்த்தியைத்
தடுத்தான்.

“யாருப்பா நீ? யாரைப் பார்க்கணும்?”

“என் பெயர் மூர்த்தி. என் ரிலேட்டிவ் சித்ரா 10 th B பார்க்கணும்.”

“எல்லோரும் போயாச்சே அப்பவே.” வாட்ச்மேன் தலையைச் சொறிந்தான்.”இன்னிக்கு ஸ்பெஷல் க்ளாஸ் கூட இல்லியே” தொடர்ந்தான்..

ஆமா என்ன பேர் சொன்னே..?

“சித்ரா”

“ஒல்லியா வெடவெடன்னு புடலங்காய்க்கு பாவாடை சட்டை தாவணி போட்ட மாதிரி சித்த செவப்பா இருக்குமே அதா?”.

மூர்த்திக்குச் சிரிப்பு வந்தது. புடலங்காய்க்கு பச்சை தாவணி மஞ்சள் ரவிக்கை அணிந்து பார்த்தான்.

“சிரிக்காதீங்க தம்பி.. இந்த ஸ்கூல்ல எவ்வளவோ புள்ளைங்க படிக்குது.. இப்படித் தான் ஞாபகம் வச்சுக்க முடியும்..அந்தப் புள்ள தானப்ப முதலி தெருல்லருந்து தானே வருது.”

மூர்த்தி தலையாட்டினான்.. “ஆ. பார்த்தியா கரெக்டா சொல்லிட்டேன். அது போறதைப் பார்க்கலியே. ஒரு வேளை சினேகிதி வீட்டுக்குப் போயிருக்கோ என்னவோ. அதோட இன்னொரு பொண்ணு வரும் பேர் தெரியாது. கொஞ்சம் குண்டா இருக்கும். அதோட வீடு ஆரப்பாளையம் க்ராஸ் ரோட்ல இருக்குன்னு பேசிக்கிட்ட ஞாபகம்.”

இந்தப் பொண்ணு எப்படி?. பூசணிக்காய்க்கு தாவணி போட்ட மாதிரியா இருக்கும் எனக் கேட்க நினைத்து “ஆமா இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டான்.

“எல்லாம் இங்க அங்க, மரத்தடில்ல பஸ்ஸ்டாப்புலன்னு பேசிக்குதுங்களே. நானும் சுத்திச் சுத்தில்ல வந்துக்கிட்டு இருக்கேன். நீ ஒண்ணு செய் தம்பி. க்ராஸ் ரோட் பக்கம் போய்ப் பாரு. கெடைக்கலேன்னா வீட்டுக்குப் போய்ப் பாரு. அங்கிட்டும் வரலைன்னா ரெண்டு மணி நேரம் கழிச்சு இங்கிட்டு வா. ஹெட்மிஸ்ட்ரஸ் வீட்டில சொல்லிடலாம்” என்றான் வாட்ச் மேன்.

அங்கிருந்து கிளம்பி ஆரப்பாளையம் க்ராஸ் ரோட் வந்து சைக்கிளை ஓரிடத்தில் நிறுத்தி போகிற வருகிறவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் மூர்த்தி. 12ஏ ஆரப்பாளையம் மஹால் எனப் போட்டு ஒரு பஸ் வந்து சென்றது. யாரிடம் விசாரிப்பது?. என்ன சொல்லி விசாரிப்பது? கறுப்பா குண்டா கேப்ரன் ஹால்ல படிக்கிற பெண்ணோட வீடு எங்கேன்னா?. ஆள் தெரியாமல் கேட்டால் போச்சு. அடித்து உதைத்து விடுவார்கள் மதுரைக் காரர்கள். “சரி, குறுக்கே போகும் இந்த சாலை வழியாக மெஜுரா கோட்ஸ் போய் வீட்டிற்குச் சென்று பார்க்கலாம் – என முடிவு செய்து சைக்கிளை மிதித்துப் பாதி தூரம் சென்றால் ஒரே கூட்டம். ரிக்‌ஷாக்களும் சைக்கிள்களும் ஸ்கூட்டர்களும் பாத சாரிகளும் – அருகில் இருந்த பரமேஸ்வரி தியேட்டரில் அப்போது தான் படம் விட்டிருப்பார்கள் போல. ஒரு வழியாக நெரிசலில் விலகி கொஞ்ச தூரம் செல்கையில் பச்சை மஞ்சள் உருவம் கண்ணில் பட்டது. அருகில் சென்றால் சித்ரா!. கூட இன்னொரு கஷ்கு முஷ்கு பெண்.

சைக்கிளை நிறுத்தி “அடிப் பாவி” என்றான் மூர்த்தி. சித்ரா அவனைப் பார்த்துக் கல்மிஷமில்லாமல் சிரித்து “டேய் மூர்த்தி நீயாடா” என்று விட்டு அருகில் இருந்த க.கு பெண்ணிடம்,”மாலினி. நான் மூர்த்தியோட வீட்டுக்குப் போய்க்கறேன். நீ உன் வீட்டுக்குப் போய்க்கோ” என விடை பெற்று சைக்கிள் கேரியரில் ஒரு குட்டி ஜம்ப் செய்து உட்கார்ந்தாள்.

”என்னடி சினிமாவா?. பாட்டின்னா அங்கிட்டு கவலைப் பட்டுக்கிட்டு இருக்கா வா. வா சொல்றேன்” என்ற படி சைக்கிளை மிதித்தான் மூர்த்தி. “பாவி வாட்ச்மேன். ஒல்லின்னு சொன்னானே. இந்த கனம் கனக்கிறாளே!”.

“ஆமாம் மூர்த்தி. மாலினிக்கு உடம்பு முடியலைன்னு ஸ்கூலுக்கு வரலை. எனக்கும் போரடிச்சுது. மத்யானம் ஸ்கூலுக்கு லீவ் போட்டுட்டு அவளைப் பார்க்கப் போனேன். இந்திப் படம் பார்க்கலாம்னு அவ தான்கூப்பிட்டா. பாட்டிக் கிட்ட ஸ்பெஷல் க்ளாஸ்னு நானே வந்து சொல்றேன்னா. அதான்.”

“இரு. இரு. போய் நான் சொல்றேன் பாரு”.

“டேய் ப்ளீஸ்டா” மூர்த்தி இரண்டு வயது பெரியவன் என்றாலும் டா போடுவது தான் அவள் வழக்கம்.

வீட்டிற்கு வந்து பாட்டியிடம் சென்று சின்னதாய் அணைத்து “ஸ்பெஷல் க்ளாஸ்” புளுகை அவிழ்த்துவிட்டாள் சித்ரா. “மூர்த்தி கேட்லயே நின்னுக்கிட்டிருந்தானா. அவனோடயே வந்துட்டேன் பாட்டி”. மூர்த்தி எதுவும் சொல்லவில்லை.

பாட்டிக்குச் சித்ராவைப் பார்த்ததுமே எல்லாம் மறந்து விட்டது. “என் ராஜாத்தி. போய் முகம் அலம்பிக்கிட்டு வா. சூடா பஜ்ஜி போட்டு வச்சுருக்கேன்!”

அம்மா கொடுத்த ரிப்பன் பகோடா எங்கே எனக் கேட்கவேண்டும் போல இருந்தது மூர்த்திக்கு. கேட்கவில்லை. பிறகு தருவாளாய் இருக்கும்.

துணி எடுத்து பாத்ரூம் செல்கையில் சித்ரா “மூர்த்தி, இங்கே வா” எனக் கூப்பிட்டாள்.

மூர்த்தி அருகில் சென்றவுடன் “பாத்ரூம்ல சோப் மேல இருக்கு பாரேன். எடுத்துக்கொடேன்” என மூர்த்தி உள் நுழைந்து சற்று எம்பி உயரத்தில் இருந்த சோப்பை எடுக்க எத்தனிக்கையில் சுற்றுமுற்றும் பார்த்து – பாட்டி சமையலுள்ளில் இருக்கிறாள் – என ஊர்ஜிதம் செய்து கொண்டு உள்ளே வந்து அவன் கன்னத்தில் பச்சக் என முத்தம் கொடுத்து “தாங்க்ஸ்டா மூர்த்தி” எனச் சொல்லிக் கண்ணடித்தாள் சித்ரா. மூர்த்தி தடுமாறினான்.

மிதந்த வண்ணம் சோப்பை எடுத்து சித்ராவிடம் கொடுத்து, மிதந்து கொண்டே பாட்டியிடம் சென்று போய்விட்டு வரேன் சொல்லி மிதந்தவண்ணம் சைக்கிள் எடுத்தான். சாலையில் எல்லாரும் சிரித்துக் கொண்டே சந்தோஷமாகப் போனார்கள். ட்ராஃபிக் கான்ஸ்டபிள் சிரித்துக் கொண்டே ஸ்டாப் சொன்னார். நடந்து கொண்டிருந்த அம்மா அடம்பிடித்த குழந்தையை சிரித்துக் கொண்டே “சனியனே” எனச் சொல்லி அடிக்கக் குழந்தையும் சிரித்துக் கொண்டே அழுதது!

“சித்ரா இந்த மாதிரி எல்லாம் செய்ததில்லையே. ஏன் இப்படிச் செய்தாள்? அவள் செய்தாள் என்றால் எனக்கு ஏன் இப்படி சந்தோஷமாக இருக்கிறது?” என யோசித்த படியே ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரத்தில் இருந்த தனது வீட்டின் வாசலிலில் சைக்கிளை நிறுத்தினான் மூர்த்தி.

உள்ளே நுழைந்தால் அம்மா கதை படிப்பதை நிறுத்தி “ஏண்டா மூர்த்தி. ஏன் இவ்வளவு நேரம்?”.

மூர்த்தி எல்லாம் சொன்னான் – பாத்ரூம் சம்பவத்தைத் தவிர.

“ஆமா. இவளோட அழகான கிளி கொஞ்சற பேத்திய யாராவது கடத்தவா போறா? அதுக்கு நீயும் அலைஞ்சியாடா?. உனக்கு ஒரு வாய் காப்பி கொடுத்தாளாடா?”

“இல்லைம்மா!”

“அதானே பார்த்தேன். எங்க கொடுப்பா? எங்க அம்மாவுக்கு எப்போதும் ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு” அம்மாவின் கண்களில் நீர் துளிர்த்தது.

“என்னம்மா. என்ன ஆச்சு?. “ மூர்த்தி பதறினான்.

“ஒண்ணுமில்லைடா” கண்ணைத் துடைத்துக் கொண்டாள் அம்மா. “என்ன இருந்தாலும் அவ மாப்பிள்ளை – உங்க அப்பா -மாசச் சம்பளக் காரர் தானேன்னு அவளுக்கு என்னமோ இளப்பம். பையன் என்னவோ பிஸினஸ் பிஸினஸ்னு சம்பாதிக்கறோன்னோல்லியோ. என்னமோ இவளுக்குத்தான் செய்யறா மாதிரி. எல்லாம் மன்னிக்குல்ல செய்யறான். நகை நகையா செஞ்சு ஒளிச்சு ஒளிச்சு வச்சுண்டுருக்கா மன்னி. அவளையும் தாங்கத்தான் செய்வா என் அம்மா”.

“என்னம்மா சொல்ற நீ?”

“ஏண்டா. இவ்வளவு தூரம் போயிருக்க நீ. உனக்கு ஒரு காஃபி கொடுத்தாளாடா? பஜ்ஜி சாப்பிடுன்னு சித்ராவைச் சொன்னான்னு சொன்னியே. உனக்குக் கொடுத்தாளா? ரிப்பன் பக்கோடா வாயிலேயே
போட்டுக்கொண்டு இருக்க மாட்டாளே. கர்வம். கர்வம். இவளுக்குப் பிடிக்குமேன்னு கொடுத்தேனே. என்னைச் சொல்லணும்”.

மூர்த்தி மெளனமாய் நின்றான்.

“மூர்த்தி. நீ படி நன்னா. ஆனா நிறைய சம்பாதிச்சு இவங்க முன்னால நின்னு காண்பிக்கணும்.”

அம்மாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

மூர்த்திக்குச் சித்ராவின் புதிய மயக்கம் கரைந்து போக அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டான்.

Series Navigationநாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 2 >>

Author

Related posts

நாணலிலே காலெடுத்து – அத்தியாயம் 4

நல்லாச்சி -4

அசுரவதம் : 4 – மாயமான மாரீசன்

5 comments

Vasu July 2, 2025 - 9:09 am
Antha kaala Madurai appadiye... Super start.
ஜெயராமன் ரகுநாதன் July 2, 2025 - 10:23 am
நாணலிலே காலெடுத்து அமர்க்களமான ஆரம்பம்! கதை சல்லுனு காவேரி ஆறு மாதிரி ஓடுகிறது.
Ramasamy July 2, 2025 - 11:00 pm
அருமையான ஆரம்பம் சார். மதுரைய கண் முன்னாடி கொண்டுண்டு வரேள். ரொம்ப பிடிச்சிருந்தது.
யசோதா சுப்பிரமணியன் July 8, 2025 - 9:26 pm
மிகவும் அருமை சார். நல்ல சரளமான.. இயல்பான நடை வர்ணனை. அட்டகாச ஆரம்பம்
யசோதா சுப்பிரமணியன் July 8, 2025 - 9:26 pm
மிகவும் அருமை சார். நல்ல சரளமான.. இயல்பான நடை வர்ணனை. அட்டகாச ஆரம்பம்
Add Comment