நல்லாச்சி – 6

This entry is part 6 of 12 in the series நல்லாச்சி

தொட்டுப்பொட்டு வைத்துக்கொள்ளலாம்போல்
கரேலென்றிருக்கும் வானத்தில்
ஆட்டுக்குட்டிகளாய்
மேய்ந்து கொண்டிருக்கின்றன மேகங்களெல்லாம்

தலைப்பிரசவம்போல்
எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடும்
மழையின் வீச்சிலிருந்து
நெல்லைக்காப்பாற்றும் முகமாய்
சாக்குப்பையில்
மரக்காலால் அள்ளி நிறைக்கிறாள் நல்லாச்சி
உழக்கு போல் ஒட்டிக்கொண்டு இழையும் பேத்தி
கேட்கிறாள்
மழை எப்போது பெய்யுமென

‘மழை பெய்யறதும் மக்க பொறக்கறதும்
மகேசன் கணக்குல்லா’
பதிலாகவும் புலம்பலாகவும்
ஒரே நேரத்தில் சொன்னபடி
மெலிதான இடிச்சத்தத்தைச் செவிமடுக்கும் ஆச்சியை
தாக்குகிறது அடுத்த கேள்விக்கணை
அதென்ன கிடுகிடுச்சத்தமென
இறைவனும் இறைவியும் தாயம் விளையாடுகின்றனர்
தாயக்கட்டைகளை உருட்டும் ஒலிதான் அதுவென
பகர்கிறாள் ஆச்சி பேத்தியிடம்

கடவுளர் சற்று வேகமாக உருட்டிவிட்டனர் போலும்
அண்டம் கிடுகிடுக்கிறது பேரிடியால்

அர்ச்சுனா.. அர்ச்சுனா என விளிக்கின்றாள் நல்லாச்சி
வாய்திறந்து அலறினால்
வாய்ப்பூட்டு நேராதென
அறிவியலை விளக்கியவள்
அர்ச்சுனனை அனைவரும் அஞ்சுவர் என
ஆன்மீகத்தையும் தெளிக்கிறாள்
கேள்வியின் நாயகியைப் பேத்தியாய் அடைந்தவள்

அடுத்து உருண்டு வந்த இடியை
அர்ச்சுனர் பேர் சொல்லி அச்சுறுத்தும்
குரல்கள் நடுவே
தனித்து மிரட்டுகிறது
‘ஆச்சி.. ஆச்சி’ என்றொரு குரல்
நல்லாச்சி வந்துன்னை
வெற்றிலையில் பாக்காய் மெல்லுமுன் ஓடிவிடென
மேலும் மிரட்டுகிறாள் பேத்தி
அந்த இடி
இங்கே எங்கேயோதான்
தலைமறைவாய்ச் சுற்றிக்கொண்டிருக்கிறதாம்
நல்லாச்சிக்கும் பேத்திக்கும் பயந்துகொண்டு
என்றாவது அது வாலாட்டினால்
நீங்கள்தான் நல்லாச்சியெனச்சொல்லுங்கள்
போதும்.

Series Navigation<< நல்லாச்சி -5நல்லாச்சி -8 >>

Author

Related posts

நாள்: 21

நாள்: 20

நாள்: 19