ஒரு பள்ளி ஆசிரியையின் பசுமையான அனுபவங்கள்

செய்யும் தொழிலே தெய்வம்.

முதன் முதலில் எல்கேஜி வகுப்புக்கு ஆசிரியையாகப் பணியில் சேர்ந்த பொழுது பதட்டமாக இருந்தது. என் தோழிகள் எல்லாம் கிண்டல் பண்ணினார்கள். ஆனால் அவர்களைச் சமாளிக்க எவ்வளவு பொறுமை வேண்டும் என்று காலப்போக்கில் கண்டுணர்ந்தேன்.

ஆசிரியப் பணி என்பது வெறும் சம்பளம் வாங்கிச் செல்லும் பணி அல்ல, அது ஒரு சேவை. ஒரு பெரிய எதிர்காலமே நம் கண் முன் இருக்கிறது. அவர்களை ஆற்றல் மிக்கவர்களாக மாற்றும் பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் உண்டு. வெறுமனே பாடம் நடத்தி மார்க் போடுவது மட்டும் ஆசிரியர் வேலை அல்ல. அவர்களிடையே தென்படும் சிறுசிறு மாற்றங்களையும் கண்காணித்துக் கொள்ள வேண்டும்.

முதலில் குழந்தைகளுக்கு நம்மைப் பிடிக்க வேண்டும், நம் மீது நம்பிக்கை வேண்டும். அதற்கேற்ற உடல் மொழி, பேச்சு, முக பாவங்கள் ரொம்ப முக்கியம். குழந்தைகள் அழுதாலோ பிடிவாதம் பிடித்தாலோ, ஒவ்வொரு குழந்தைக்குத் தக்க சற்று மாற்றி யோசிக்க வேண்டும். எல்லோருக்கும் ஒரே பார்முலா உபயோகப்படாது.

முரண்டு பிடித்த, பிடிவாதம் பிடித்த ஒரு சிறு பையனைச் சமாளிக்க மிகவும் கஷ்டப்பட்டேன். திடீரென ஒரு நாள், ‘நீதான் இந்த வகுப்பு கேப்டன்’ எனச் சொல்லி அவனை என்னருகே அமர வைத்து வகுப்பைக் கவனிக்கும் சிறு சிறு வேலைகள் கொடுக்கத் தொடங்கியதும் நன்கு மாறிவிட்டான். அவன் பெற்றோருக்கு அவ்வளவு சந்தோஷம்.

ஒரு ஆசிரியர் என்றும் கற்றுக்கொள்பவரே

பெயருக்குப் பின்னே பற்பல பட்டங்கள் போட்டுக் கொள்வதால் மட்டுமே எல்லோரும் சிறந்த ஆசிரியர் ஆகிவிட முடியாது. குழந்தைகளின் உடல் நலத்தையும் மன நலத்தையும், மற்றவர்களுடன் அவர்கள் பேசுவது பழகுவதையும் கவனிக்க வேண்டும்.

எங்கள் பள்ளி கிரௌண்டில் நிறைய செடிகள் வைத்து ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு செடி என்று பிரித்துக் கொடுத்து இருந்தோம். தினமும் இரண்டு பேர் அவரவர்கள் செடிக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று சொன்னவுடன் அவர்கள் மகிழ்ச்சியைப் பார்க்கணுமே! ரொம்ப சந்தோஷமாகப் போய்த் தண்ணீர் ஊற்றி விட்டு அதைப் பார்த்து, ரசித்து வந்து வர்ணிப்பார்கள். “மிஸ், இன்னைக்கு இரண்டு இலைகள் புதுசா இருக்கு, ரொம்ப காய்ஞ்சி போயிருக்கு..” என்ற ரீதியில்.

ஒரு நாள் என் வகுப்பில் ரெண்டு குழந்தைகள் வேறு ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றி விட்டார்கள். உடனே ஆளாளுக்கு என்னிடம் புகார் சொன்னார்கள். நானும் யோசிக்காமல், “என்னடா, நம்ம செடிக்குத் தண்ணீர் ஊற்றலயா?” எனக் கேட்டதும் அவள், “மிஸ்.. அதுவும் ரொம்ப வாடிப் போயிருந்தது. அதான் அதுக்கு முதலில் தண்ணீர் ஊற்றினேன். எல்லாம் நம்ம செடிதானே மிஸ்?” என்றவுடன் ரொம்ப வெட்கமாகிப் போனது.

குழந்தைகளிடம் இருந்து நிறையப் படிக்க வேண்டி இருக்கிறது. ஐந்தாம் வகுப்பு வரை இப்படியே நாம் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதும், அவர்களுக்குப் புதுப்புது விஷயங்களைக் கற்றுக் கொடுப்பதுமாகப்போகும்.

உளவியலும் உடலியலும்

ஆறாம் வகுப்பு வந்த உடனேயே அவர்களுக்குள் நிறைய மாற்றங்கள் உடல் அளவிலும் மனதளவிலும். எட்டாம் வகுப்பு வரை இது தொடரும். மாணவிகள் மாணவர்களைப் பார்த்து சிரிப்பதும், ஆசிரியைகளை விட ஆசிரியர்களைப் பார்த்தாலே உற்சாகம் பொங்குவதுமாக இருக்கும். ரொம்ப கவனமாகக் கையாள வேண்டிய பருவம் இது.

இந்தச் சமயம் சோசியல் மீடியாக்களின் உபயோகம் அதிகரிக்கும். பக்குவமாகப் பேச வேண்டும். பாடங்களை நடத்தும்போதே அதற்குத் தொடர்புடைய வரலாற்று அறிவியல், உலக அறிஞர்கள் என பலர் வாழ்வில் நடந்த சம்பவங்களைச் சுவையாகக் கூறினால் மிகவும் ரசிப்பார்கள். நம்மை ஒரு தோழி/தோழர் போல பார்க்க ஆரம்பிப்பார்கள்.

நிறையப் பெண் குழந்தைகள் வயதுக்கு வருவது இந்தப் பருவத்தில்தான். அதிலும் பள்ளியிலேயே நடந்து விட்டால் ஆசிரியர்கள் அவர்களை கழிப்பறைக்குக் கூட்டிக்கொண்டு போய் நாப்கின் உபயோகப்படுத்துவது பற்றி எல்லாம் சொல்லிக் கொடுத்து, ஒரு தாயின் பணியைச் செய்ய வேண்டும். அவர்கள் பெற்றோர் வரும் வரை பக்குவமாக உடலின் மாற்றங்களை எடுத்துச் சொல்லித் தைரியமூட்ட வேண்டும்.

நீங்கள் ஒரு ஆசிரியர்

ஒன்பதாவது பத்தாவது வகுப்பு மாணவ மாணவிகள் மனதளவிலும் உடலளவிலும் சற்று முதிர்ச்சி அடைந்து இருப்பார்கள். ஆசிரியர்களை நண்பர் போல் அல்லாமல் ஆசிரியர்களாகவே பார்ப்பார்கள். ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் ஒரு இடைவெளி விழும் காலம் இது. ஆனாலும் ஒரு தேர்ந்த ஆசிரியர் இதை இலகுவாகச் சமாளிப்பார். இப்போது ஆசிரியர் இன்றைய தேதிக்கு அப்டேட் ஆவது மிகவும் அவசியம். திரைப்படங்கள், பாடல்கள், விளையாட்டுகள் பற்றி எல்லாம் இன்னும் தெரிந்து இருக்க வேண்டும். மாணவர்களை விட மாணவிகள் சற்று அழுத்தமானவர்கள்.

நன்றாகப் படிக்கும் மாணவரை விட, கொஞ்சம் அதிரடியாக விளையாட்டுப் போக்கில் இருப்பவர்களைக் கூப்பிட்டு கொஞ்சம் அறிவுரைகள் சொல்ல ஆரம்பித்தால், மனதில் உள்ளதை எல்லாம் அப்படியே கொட்டி விடுவார்கள். ஓரளவு மாறவும் செய்வார்கள்.

இந்தப் பள்ளி எங்களுக்கானது

பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் மாணவிகள் நிறைய நிறைய மாறி இருப்பார்கள். பெற்றோர்களின் அதிகக் கண்டிப்பு, அதிகச் செல்லம், கேட்டவற்றை உடனே வாங்கிக் கொடுப்பது, சோசியல் மீடியாக்களில் அவர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்ற கவனம் இல்லாதது ஒரு மாணவனை மாணவியை எவ்வளவோ மாற்றிவிடும். இவர்களிடம் அறிவுரையோ, அதட்டலோ, கோபமோ, கண்டிப்போ எடுபடாது.

கொஞ்சம் சிரித்தபடியே அவர்கள் போக்கில் போய் அவர்களைப் பேசச் செய்ய வேண்டும். இந்த வயதில் காதல் அவர்களைப் பாடாய்ப்படுத்தும். கல்வியின் அருமையை, சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறி அவர்கள் லட்சியம் கனவு பற்றிப் பேச வேண்டும். என்ன இருந்தாலும் அவர்கள் வளர்ந்த குழந்தைகள்தானே. இவர்களுக்கும் ஆசிரியரைப் பிடித்து விட்டால் அவர்கள் சொல்வதைக் கொஞ்சம் கேட்க ஆரம்பிப்பார்கள்.

புத்தகங்களின் மகத்துவம் பற்றி, வாசிப்பு பற்றி, விளையாட்டு மற்றும் கலைகள் பற்றிப் பொதுவாகவே எல்லா வகுப்பினரிடமும் அவர்களுக்குப் புரியும் வண்ணம் உரையாட வேண்டும்.

அடுத்த முக்கியமான ஒன்று உணவுப் பழக்கம். பெற்றோர்களுக்கு இணையாக ஆசிரியர்களுக்கும் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதில் அக்கறை இருக்கிறது. எல்லாவற்றுக்கும் பொறுமை மிக மிக அவசியம்.

எந்தப் பணியையும் ரசித்துச் செய்யும் போது, அதிலும் ஆசிரியருக்கு உண்டான பொறுப்பை உணர்ந்து ரசித்து, மாணவர்கள் உலகத்தில் நாமும் ஒருவராய் இருக்கும் ஆசிரியர்களுக்கு மனதளவில் என்றும் வயதாவதே இல்லை. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் நிச்சயம் அவர்களை மாணவர்கள் மறக்க மாட்டார்கள்.

இன்றைய உலகில் மாணவர்களைச் சுற்றி இருக்கும் அத்தனை தேவையில்லாத விஷயங்களைக் கடந்து ஒரு நல்ல சமூகப் பொறுப்பான அவர்கள் கனவுகளை அடையத் துடிக்கும் மாணவர்களாக உருவாக்குவது எவ்வளவு பெரிய பேறு.

Author

  • சிவகாசியில் வசிக்கும் கல்பனாரத்தன் ஆங்கில ஆசிரியை. தமிழ் மீதும் காதல் கொண்ட தீவிர வாசிப்பாளர். சமூக ஆர்வலரும்கூட! கவிதையும், சிறுகதையும் இவரது படைப்புலகம். இவரது ஒருபக்க சிறுகதைகள், கவிதைகள் பல வாரஇதழ்களிலும் வெளிவந்து பரிசுகளும் வென்றுள்ளன. ‘கந்தகப்பூக்கள்’ என்னும் இலக்கிய அமைப்பில் இணைந்து செயல்பட்டுவரும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு, ‘மனம் உதிரும் காலம்’.

Related posts

அனைவரும் சமம்

வாழ்த்துகிறோம்

தேசிய கீதம்