பரிசோதனை

ஆச்சரியமாகத் தான் இருந்தது.

ஒரு புறம் பச்சைப் பசேல் மற்றும் செம்பழுப்புப் புதர்கள், மறுபுறம் சரேலெனக் கொஞ்சம் கொஞ்சமாய் உயர்ந்து இருக்கும் மலை, அதிலும் ஆங்காங்கே பச்சைச் செடிகள், இடையில் கொஞ்சம் கண்விழித்துப் பார்க்கும் பாறைகள். நடுவில் செம்மண் சாலை. ஒரு கார் அல்லது பஸ் போகலாம். எதிரில் இன்னொன்று வந்தால் சிரமம்தான்.

சென்னையிலிருந்து தள்ளி நெடுஞ்சாலையிலிருந்து உள்ளே பிரிந்த சாலையில் நுழைந்தால் இப்படி ஒரு காட்சியா? தனது சுஸுகி காரை ஓட்டிய வண்ணம் யோசித்தான் விஸ்வநாதன். சாலையில் நுழையும்போது செம்பாக்கம் 10 என செம்மண் படிந்த குட்டிக் கல் பார்த்தது நினைவில். ஆயிற்று.. கூகுள் கடவுள் இருக்க என்ன பயம்? 20 நிமிடமா? சென்று கொண்டிருந்த போது எங்கிருந்தோ கூட்டமாய்ப் பட்டாம்பூச்சிகள் வலமிருந்து இடம் போயின. போகும் வழி முழுவதும் அப்படித் தான்.

கார்க் கண்ணாடியில் அடிபடக்கூடாதே என்ற கவலையில் மெதுவாகவே ஓட்டினான் விஸ்வநாதன். வெளியில் பெளர்ணமி நிலா போல் பளபளப்பாக வெயில் காய்ந்து கொண்டிருந்தது. கார் செல்லச் செல்ல, சிற்சில வீடுகள், பெட்டிக் கடை, குட்டி சோகையான டீக்கடை தென்பட்டன. கொஞ்சம் மக்களும்தான்.

எங்கும் கேட்காமல் சில பல வீடுகளைக் கடந்து, காண்பித்த 200 மீட்டரில் திரும்பி, ஒரு தெருவில் நுழைந்து இறுதிக் கோடி வீட்டின் பக்கம் போகையிலேயே அந்த நபர் தெரிந்தான். மயிற்கண் பழுப்பு நிற வேஷ்டி. கொஞ்சம் பஞ்சகச்சம் போலக் கட்டியிருந்தான். மேலே வெற்று மார்பு, பூணூல். அங்கே பூசியிருந்த விபூதிக் கோலங்கள். நெற்றியிலும் குட்டியாய்.

விஸ்வநாதன் காரை நிறுத்தி இறங்கியதும் சிரித்து, ” வா..ங்க” என ஆரம்பித்தவன், அவனது பார்வையில் சட்டென்று மாறி, ” வா.. விஸ்வநாதா, வழி எல்லாம் ஈஸிதானே?”

காரிலிருந்து இறங்கிய விஸ்வநாதன் நீல ஜீன்ஸ் அணிந்திருந்தான். வெள்ளையில் பச்சை இலைகள் பொறித்த அரைக்கை சட்டை, முகமெல்லாம் முடி எனச் சொல்லும் அளவுக்கு தாடி, காடு போலத் தலையிலும் அடர்த்தி முடி, கண்களில் கறுப்புக் குளிர்க் கண்ணாடி.

இறங்கியவன், “கரெக்டா வந்துட்டேனா சேகர குருக்களே?”

சேகர் சிரித்து, ‘வா’ என்று திண்ணையைத் தாண்டி வீட்டினுள் அழைத்துச் சென்று அமர வைத்தான்.

“அம்மா இல்லை. தங்கை வீட்டில் ஒரு ஃபங்க்‌ஷன். சென்னை போயிருக்கிறார்கள். உங்களுக்கு.. உனக்கு ஒரு காஃபி போடட்டா? இது என்ன முகம் முழுக்க இப்படி? தவிர அழுக்கான கார்? ஏன்?”

“உனக்குத் தெரியாதா சேகரா? சரி.. நான் கொல்லைப்புறம் போய், உங்கள் பாஷையில் காலலம்பி முகமலம்பி வருகிறேன். காஃபி ஓகே. பட், நோ ஷூகர் ” சொன்ன விஸ்வம், சரசரவென சாரைப் பாம்பாய் அந்த எட்டுக் கட்டு வீட்டின் பின்புறம் சென்றான்.

சில நிமிடங்களில் ஈர முகத்துடன் வந்தவன் முன் நீட்டப்பட்டது சிவப்புத் துண்டு. துடைத்துக் கொண்டு கையால் தலையைக் கோதிவிட்டுக் கொண்டு, வெகு நறுமணமாய் டபரா டம்ளரில் ஆழ மர நிற காஃபியைச் சுவைத்துக் குடித்து , “இப்போ எங்கே சேகரா?”

“கோவிலுக்குப் போறோம். இரண்டு தெரு தள்ளி இருக்கு. காலைலயே பூஜை முடித்து விட்டேன். உங்களுக்காக.. உனக்காக வெய்ட்டிங் விசு. அதற்கப்புறம் பூட்டி விட்டு, ஏரியைக் கடந்து, மலை மேல் சற்றே ட் ரெக்கிங் “

“தமிழ் உனக்கு நிறையத் தடுமாறுகிறது சேகரா! ரிலாக்ஸ்.. வா போகலாம் “

*

இரண்டு தெருக்கள் தாண்டித்தான் கோவில் இருந்தது, தெருக்களில் அவ்வளவாய் நடமாட்டமில்லை. வீட்டுத் திண்ணைகளில் சில பெரியவர்கள் ஏதோ பேசிக் கொண்டிருக்க, இவர்கள் கடந்தார்கள்.

“உன் அப்பா குமாரசாமி எப்படி இருக்கிறார் விசு? “

“அவருக்கென்ன?! ரிடயர்ட் லைஃப். என்ஜாயிங். இப்போது பிரபந்தத்தைக் கையில் எடுத்திருக்கிறார். கையில் என்ன பை சேகரா?”

“கோவிலில் தரிசனம் முடித்துப் போட்டுக் கொள்ளச் சட்டை. மலை ஏற வேண்டாமா?”

“இப்போதே உனக்கு தலை ஸால்ட் அண்ட் பெப்பராக மாறி விட்டது சேகர். ஏன் திருமணம் செய்யவில்லை?”

“எனக்கு இந்த வம்பில்லாத கிராமம், கோவில், சிவன், அம்பாள் போதும். வம்பிற்கு இருக்கவே இருக்கிறது செல்ஃபோன்” சிரித்தான் சேகர்.

தெருக்கள் முடிந்தவுடன் ‘ப்ஹா’ எனப் பரந்து விரிந்த வெளி. அங்கே அந்தச் சின்னக் கோவில். அந்த வெட்டவெளி எதிரே ஒரு ஆலமரம். அருகிலேயே ஒரு மேடை. அதை விட மரத்துக்குத் தள்ளி அந்தச் சின்ன ஏரி சொல்ப நீருடன் மென்காற்றுடன் சலசலத்து அமைதியாய் இருந்தது. ஏரியின் அக்கரையில் மலை – அடிக்கும் பசுமை நிறத்திலிருந்தது.

விஸ்வம் வியந்து கொண்டே சேகரைத் தொடர்ந்து கோவிலை அடைந்தான். சேகர் கோவிலைத் திறந்தான். ஆதிகாலக் கோவில்தான், அழகான பழமைச் சிற்பங்கள் தூண்களில் இருக்க.. கொஞ்சம் வளைந்தால் சிவன் சன்னதி. பின் உள்ளே சென்று திரும்பினால் சிரித்திருக்கும் அம்பாள் சன்னதி. மற்றும் நவக்கிரகங்கள்.

“விஜய நகர ஆட்சியின்போது கட்டப்பட்டது இந்தக் கோவில் என்பார்கள். ஏதோ கொஞ்சம் பராமரித்துக் கொண்டு வருகிறார்கள். சிவராத்திரி என்றால் கூட்டம் அம்மும். மற்றபடி இந்த ஊர்க்காரர்கள்தான் சாயந்திரம் வருவார்கள்”. கோவிலைப் பூட்டியபடியே சேகரன் சொன்னான். பூட்டி விட்டு, சட்டையை மாட்டியவாறு பார்த்தால், விஸ்வநாதன் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.

பார்த்த இடம் ஆலமரம், அந்தப் பக்கப் பலகையில் அமர்ந்திருந்த அந்தப் பெண் தெரிந்தாள். பெண் என்பது தவறு. பச்சைப் பாவாடை, மஞ்சள் சட்டை. பலகையில் வைக்கப் பட்டிருந்த தோள் பையில் புத்தகங்கள் இருந்தன. அவளும் படித்துக் கொண்டிருந்தாள்.

“விசு. என்ன பிரமிச்சுப் பார்க்கறே? இது நம்ம செல்லீ. செல்வாம்பிகையோட சுருக்கம். செல்லீ செல்லீ..” சேகரன் அழைக்க அவள் நிமிர்ந்து பார்த்து ஓடி வந்தாள்.

அருகில் வர அவளது கருநிறம் தெரிந்தது. படிய வழித்து வாரிய தலை, குறு குறு கண்கள், நெற்றியில் குங்குமம், கூடிய விரைவில் பருவம் வந்து விடுமெனச் சட்டை சொல்லியது.

“சேகரண்ணா.. நீங்க சொல்லிக் கொடுத்த ஸம்ஸ்ல எட்டு போட்டுட்டேன். ரெண்டு வரலை” எனச் சொல்லிய வண்ணம் மூச்சிறைத்தவள் விஸ்வநாதனைப் பார்த்தாள்.

“இது உங்க ஃப்ரெண்டா? எதுக்குப் பூச்சாண்டியாட்டம் இருக்கார்?!”

சேகர் சிரித்தான், “விசு.. இது செல்லி. டவுன்ல ஒன்பதாம் க்ளாஸ் படிக்கறா. படு சுட்டி படிப்பில. இவளுக்கும் இன்னும் சில பசங்களுக்கும் நான் இங்க்லீஷ், மேத்ஸ் சொல்லித் தரேன்” என்றவன் “செல்லி. உன் ப்ரேக்ஃபாஸ்ட் பொங்கல் ” எனப் பாத்திரத்தை நீட்டினான்.

“இவ வீடுதான் மலை மேல இருக்கு. யெஸ். பழங்குடிப் பொண்ணு இது. அங்குதான் நாம போறோம்” என்றான் சேகர்.

“எதுக்கு இவ்வளவு? நீங்க சாப்பிட்டீங்களாண்ணா? சார் நீங்க?” விசு வேண்டாமென மறுக்க “சரி.. எங்க அய்யனுக்குக் கொடுத்துடறேன்” என்றவள், “நானும் வரணுமா? இன்னிக்கு சண்டே. நாளைக்கு மண்டே டெஸ்ட் இருக்கே. படிக்கணுமே”

“செல்லி.. சும்மா வா, நாங்க திரும்பிக் கொண்டு வந்து விட்டுடறோம்”

“கொஞ்சம் இருங்க. சைக்கிளைக் கோவில் மண்டபத்துல விட்டுட்டு வந்துடறேன்” என்று சென்றாள் செல்லீ.

ஏரியில் கொஞ்சம் இறங்க, பரிசல் ஒன்று கண்ணில் பட்டது. ஒரு வயதான ஆள், “என்ன செல்லி. குருக்களோட இருக்கறது யாரு?”

“அது.. தாத்தா, அவங்க சினேகிதமாம். ம்.. மூணு நா முன்னால பெஞ்ச மழையால நம்ம செம்பாக்கம் ஏரிலயும் தண்ணி இருக்குல்ல “

”ஆமாம்” என்ற பரிசலில் அனைவரும் அமர்ந்தபின் தள்ள.. இருபது நிமிடங்களில் அக்கரை. இறங்கியவுடனே மலை. மெல்ல மெல்ல ஏறினார்கள்.

”கொஞ்சம் ஏற்றம் தானில்லை?” – விசு கேட்டான்.

“ஆமாம், ஒன்றரைக் கிலோ மீட்டர். ஆனா ஏறிடலாம்” என்ற சேகர் “செல்லி போன வருஷம்வரை, இதுல எறங்கி.. பரிசலக் கடந்து மெய்ன் ரோட் போய், அங்கிட்டிருந்து ஏதாவது மாட்டுவண்டி புடிச்சு மெய்ன் ரோட்ல இருக்கற ஸ்கூல் போவா. அங்க அஞ்சு க்ளாஸ் தான் இருந்துச்சு. அதுக்கப்புறம் பஸ்ல திருவள்ளூர்தான். சார்ஜ் கொடுக்க கட்டுப்படி ஆகாதுன்னு நிறுத்தப் பார்த்தா. நான்தான் கொடுக்கறேன்னு சொல்லிப் போக வெச்சேன் போன வருஷம் வரை “

“அப்புறம்?” விஸ்வநாதன் கேட்டான்.

“அதுவும் ஒரு வழில்ல சேகரண்ணாதான் காரணம். எங்க வூட்டுல, பொட்டப் புள்ளைக்குப் படிப்புல்லாம் எதுக்கு?ன்னு நிப்பாட்டறதா இருந்தாக. இவர் போராடிச் சம்மதிக்க வெச்சதுமில்லாம எனக்குக் காலேஜ் வரைக்கும் படிக்கறதுக்கு வழி பண்ணிட்டாரு “

“ஸ்காலர்ஷிப்பா?”

“அப்படின்னும் வெச்சுக்கலாம். சென்னைல ஒரு பெர்ரிய நடிகர், ஏழப்பட்டவுகளப் படிக்க வைக்கிறாராம். அதுல சொல்லி – அவங்க ட் ரஸ்ட்லருந்து ஆட்கள் வந்து, என் நிலமையைப் பார்த்து என் மார்க்கைப் பார்த்து செலக்ட் பண்ணினாங்க. நீங்க பார்த்தீங்களே சைக்கிள், அதுவும் அவங்க கொடுத்ததுதான். யூனிஃபார்ம் போக மத்த துணிங்களும் அவங்கதான் கொடுத்தாங்க, கொடுப்பாங்க” திரும்பிச் சட்டையைத் தொட்டுக் காட்டினாள் செல்லி. “இங்க்லீஷ், மேத்ஸுக்கு சேகரண்ணா. மத்த சப்ஜெக்ட்ஸுக்கு வேற அண்ணா, அக்காக்கள்” எனச் சொல்லி முடித்து நடக்க, முக்கால் மணி கழித்து அந்தக் குடிசைகள் தென்பட்டன.

முப்பது நாற்பது குடிசைகள். அரை வேட்டி கட்டிய ஆடவர், பழைய புடவைகளில் பெண்கள், கிழவிகள், கண் சுருக்கம் விழுந்த தாத்தாக்கள்.

“இவர்கள் காலகாலமாக இங்கு வசித்து வருபவர்கள். படிப்பறிவு கிடையாது. சிலர் மட்டும் ஐந்தாம் க்ளாஸ். செல்லியின் அப்பாதான் அவர்”. வெளிர் நரையுடன் இருந்த நபரைக் காட்டினான். “மலைத்தேன் எடுத்து விற்பார்கள். இல்லையேல், இந்தப் பக்கம் வரும் காட்டுப் பன்றிகள்தான் உணவு. வேறு வேலை தெரியாது. அவள் அப்பாவைக் காட்டுப் பன்றி முட்டியதில் கொஞ்சம் கால் ஊனம். கரெண்ட் இந்த கிராமத்தில் கிடையாது. அதனால், செல்லி கோவில் மண்டப விளக்கில் படித்து விட்டு அங்கேயே தூங்கி விடுவாள். துணைக்குப் பரிசல் தாத்தா இருப்பார்” என சேகரன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே செல்லி குடிசையில் இருந்து வெளி வந்து இரண்டு க்ளாஸ்களை நீட்டினாள். “சேகரண்ணா, ஃப்ரெண்ட் அண்ணா. சுக்குக் காப்பி – குடிப்பீங்க இல்லே?”

விசுக்குக் கொஞ்சம் வருத்தமும் (என்ன ஒரு கஷ்டம் இந்தச் சிறுமிக்கு!) கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது.

கிளம்புகையில் ஏதோ நினைத்துச் சில ஐந்நூறுகளைச் செல்லியின் அப்பாவின் கைகளில் கொடுத்து விட்டு நடந்தான்.


ஆயிற்று. சேகருடன் பேசியபடி மலை இறங்கியாயிற்று. பரிசல் தாத்தா நடுவில் வருவது தெரிந்தது.

“சேகரண்ணா”

செல்லிதான் கத்தியபடி மலையில் இறங்கிக் கொண்டிருந்தாள்.

சேகரும் விசுவும் திரும்பினர். செல்லி அருகில் வர கையில் ரூபாய் நோட்டுகள்.

“சேகரோட ஃப்ரெண்ட் அண்ணா. நீங்க கொடுத்ததா அய்யன் சொன்னாக. நீங்களே வெச்சிக்குங்க. வேண்டாம்”

“செல்லி வெச்சுக்கோ. ட்ரஸ் வாங்கிக்கோ, புக்ஸ், நல்ல சாப்பாடு”

“இருக்கட்டும் சார். அதான் எனக்கு ட்ரஸ்ட், கூட சேகரண்ணால்லாம் செய்யறாங்கள்ள. வேணாம்.. தப்பா நினச்சுக்காதீங்க. இப்ப கெடைக்கறது போதும். தேவப்பட்டா சேகரண்ணா மூலம் கேக்குதென். சரியா?” எனச் சொல்லி விஸ்வநாதன் கைகளில் திணித்து “சேகரண்ணா.. நா ரெண்டு மணி நேரம் கழிச்சு வரேன். அய்யனுக்குக் கால் நோவுதாம், எண்ணெய் தேய்னாக.. வரட்டா” எனச் சொல்லிச் சிட்டாய் மலை ஏறினாள் செல்லீ.

விஸ்வநாதன் திகைத்து நின்றான்.


விஸ்வநாதனின் தந்தை குமாரசாமியின் அன்றைய டைரியில் இருந்து:

எனது மகன் விசுவநாதன் (நடிகனாய் வேறு பெயர் கொண்டவன்)- தனது ட்ரஸ்ட்டின் செயல்பாடுகள் ஒழுங்காய் இருக்கிறதா? எனப் பரிசோதிக்க மாறுவேஷ மேக்கப்புடன் செம்பாக்கம் போய் வந்தானாம். அவன் சோதனை செய்யச் சென்ற பெண் அவனையே சோதித்து விட்டாளாம். “என்ன அருமையான சிறுமி!” எனச் சொல்லிச் சொல்லி மாய்கிறான். ம்.. நானும் வேண்டுவேன் இறைவனை – செல்லியின் நலங்களுக்காக.


முற்றும்

Author

Related posts

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 1 – மொழியாக்கம்

நல்லாச்சி – 18

மருத்துவர் பக்கம் -12: முதுமை போற்றுதும்