பார்க்காமலே..

நகரின் பிசியான ரோட் சைட் கார் பார்க்கிங். அந்த ஏரியாவை சேர்ந்த கல்லூரி மாணவன் (முதலாம் ஆண்டு) பிரபு ஒரு காரை நோக்கி வருகிறான். அது அகலமான Rear View Mirror உள்ள பணக்காரத்தனமான கார். அதே சமயத்தில் ரொமாண்டிக்காகவும் இருந்தது. ‘படக்’ என அடிப்பது இல்லாமல் வழுக்கிக் கொண்டு மூடும் திறக்கும். அதை நேராக்கிக் குனிந்து அவசர அவசரமாகத் தலைசீவி மிகமிகமிகமிகமிகமிக… அழகாக்கிக் காத்திருக்கத் தொடங்குகிறான். இன்று எப்படியும் அவள் காதலில் விழுந்துவிடுவாள். நினைப்புப் புல்லரித்தது. காலம் 1975-78க்குள் ஏதோ ஒரு வருடம். அது ஒரு கனாக்காலம் என்று சொல்வார்கள் இன்றைய பெரிசுகள்.

அவள் யார்? இந்த வழியாகத் தினமும் டியூஷன் வகுப்பிற்குச் செல்லும் +2 படிக்கும் பெண். பெயர் ஸ்வேதா. half sareeயில் இன்றைய ஸ்ரீதிவ்யா மாதிரி மலர்ச்சியாகச் சூட்டிகையாக இருப்பாள். அய்யங்கார் பெண். பாவாடை தாவணியில் என்று விவரித்தால் கொஞ்சம் தரத்தில் குறைகிறது. அதனால் மாற்றாக half saree. பின் பக்கம் வி ஷேப்பில் தாவணி வைத்திருப்பாள். இந்த ஸ்டைல் அப்போது கோயம்புத்தூர் பக்கத்தில்  கல்லூரி மாணவிகளிடையே பிரபலம்.

அவள் வரும் அறிகுறி தெரிகிறது.

நிழல் உருவ பிரபுவைத் தூரத்திலிருந்து பார்த்துவிட்டாள். மூன்றாவது நாளாகத் தனக்காகக் காத்திருப்பதின் சிலிர்ப்பு மின்னலாக மனதில் கீறியது. நேருக்கு நேர் இன்று பார்த்தே ஆக வேண்டும். ரவுடி மூஞ்சிகளிடம் விழுந்துவிடக் கூடாது. இதன் தாக்கம் அதிகமாகி ஆவலை அடக்கி, முடியாமல் முகத்தில் அது பரவி வெட்கமாகியது. தலை குனிந்து நமுட்டுச் சிரித்தபடி ஸ்வேதா அந்தக் காரை நெருங்குகிறாள். கிட்டே வரவர ஸ்வேதா உடல்மொழியில் வெட்கத்தில் நெளியும் குறுகுறுப்புத் தெரிகிறது. அதை மாற்ற ஏதோ வேறு பக்கம் பராக்குப் பார்ப்பது மாதிரி நடித்து அவனைக் கடக்கிறாள். பிரபுவிற்கும் ஏமாற்றம். முகத்தை க்ளோசப்பில் பார்த்தால் இம்பிரஸ் ஆவாள் என்பது நடக்காமல் போகிறது. அடுத்துக் கொஞ்ச தூரம் போய்த் திரும்பிப் பார்ப்பாள் என்று கணித்ததும் ஏமாற்றம். இது 1975-80ன் பிரபஞ்சத்தில் அபூர்வமான நிகழ்வு. திரும்பிப் பார்த்திருந்தால் ‘ லவ் இஸ் கன்பார்ம்டு’. மூன்று நாள் செண்டிமெண்ட்டும் ஆதரவாக இல்லை.

எல்லாம் சேர்ந்து மனதை நெருடிக்கொண்டே இருந்தது. மறு நாள் அதே நேரம். அதே பிரபு & அதே ஸ்வேதா. ஆனால் பிரபு ரொம்பத் தூரத்தில் மறைந்து நிற்கிறான். நேற்றைய நிகழ்வின் தாக்கம். டியூஷன் முடிந்து திரும்பி அந்தக் காரை நோக்கிப் புன்னகையுடன் வருகிறாள். நெருங்கியவுடன் சுற்றும் முற்றும் பார்க்கிறாள். ஆளைக் காணவில்லை. கண்ணாடியை நேராக்கிக் குனிந்து “வெவ்வவ்வேவே” முகத்தை அஷ்ட கோணலாக்கிக் குறும்பு கொப்பளிக்க அழகு காட்டுகிறாள். உள்ளங்கையை மடக்கி நாக்கைத் துருத்திக் குறும்புடன் ஏதோ சொல்லிவிட்டுக் கண்ணாடியை மடித்துவிட்டு நடக்க ஆரம்பிக்கிறாள். பிரபு பீதியில் சட்டென்று மறைகிறான்.

அடுத்த வினாடியில் காரின் அந்தக் கதவு படக்கென்று திறக்கப்படுகிறது. டிரைவர் சீட்டிலிருந்து கிஷோர் என்கிற ஸ்மார்ட் லுக்கிங் பணக்கார சிட்டி கல்லூரி மாணவன் எழுந்து பரவசமாகி அவளைப் பார்க்கிறான். அந்தச் சமயத்தில் அவளும் எதேச்சையாகத் திரும்பிப் பார்க்க கிஷோர் ஜெண்டிலாகக் கை அசைக்கிறான். அவளும் புன்சிரிப்பில் மென்மையாகக் கை அசைக்க அதில் பெண்மையின் நளினம் வெளிப்படுகிறது. இன்று பிரபுவைப் பார்த்துவிட்ட திருப்தி. கிஷோருக்கோ இன்ப அதிர்ச்சி. என்னை வாட்ச் செய்திருக்கிறாள். தெரியாமல் இருந்திருக்கிறேன். அடுத்த பத்து நாளில், இருவர் இடையே யதார்த்தமான டீசண்டான நட்பாகிப் பேசிச் சிரித்து நடந்து காதலாகிறது. கல்யாணத்தில் முடிகிறது.

இந்தக் காதலின் நினைவாக ஒரு பொருளைப் பாதுகாத்து பிரேம் போட்டு வைத்திருந்தான் கிஷோர். அது 100 ரூபாய் அபராதம் கட்டிய ரசீது. தண்டம் (அபராதம்) இல்லை பொக்கிஷம். ஸ்வேதாவைப் பார்த்த அடுத்த நாள் கட்டியது. தடையை மீறிப் பயன்படுத்திய Sun/tint film. கார் கண்ணாடிகளில் ஒட்டி இருந்தால் உள்ளே இருப்பதைப் வெளியில் இருந்து பார்க்க முடியாது. உள்ளே இருந்து வெளியே பார்க்கலாம். பிரபு? இருவருக்கும் அப்படி ஒரு ஆள் இருப்பதே தெரியாது.

Author

Related posts

அசுரவதம்: 12 – காம நெடுங்கதவின் திறப்பு

கொங்கு வட்டாரவழக்கு – 11: பொழையாக்குப்பா

வழி நடத்தும் நிழல்கள்